December 27, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கடிதம்

அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் "மபொசி, காமராஜ், ராஜாஜி..." கட்டுரை படித்தேன்.

உங்களிடமிருந்து இப்படி ஒரு வரலாற்றுப் பிழை மலிந்ததும் அவதூறான சொற்கள் நிரம்பியதுமான ஒரு கட்டுரையை எதிர்பார்க்கவில்லை. திராவிடத் திரிபுக்குச் சற்றும் சளைத்ததில்லை உங்களதும். எல்லா ஆளுமைகளும் எல்லாக் காலத்தும் நனி சிறந்தோர் இல்லைதான். ஆனால் அதே சமயம் அவரவர் நிறைவேற்றிய வரலாற்றுக் கடமைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

"அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது" - என்கிறீர்கள்.

தமிழரசுக் கழகம் என்பது ம.பொ.சி. காங்கிரசில் இருந்தபோது ஒரு கலாச்சார இயக்கமாகவே துவங்கப்பட்டது என்பதும் அதன் துவக்கவிழாவில் சில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அது 'காங்கிரசால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது' என்பது உண்மையல்ல. அது உண்மையானால் வடக்கெல்லை மீட்புப் போராட்டம் உச்சத்தை அடைகையில் அதைத் தேச ஒற்றுமைக்கு ஊறு என்று கூறி,'அப் போராட்டத்தைக் கைவிடுகிறீர்களா? அல்லது தமிழரசுக் கழகத்தார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறீர்களா?' என்று காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் 1954-இல் விளக்கம் கேட்கும் நிலை வந்திருக்காது. அதற்கு முன்பும் தமிழரசுக் கழகம் குறித்து நேருவே விளக்கம் கேட்கும் நிலையும் வந்திருக்காது.

தெ.பொ.மீ., மு.வ., சஞ்சீவி முதலான தமிழறிஞர்களும் இருந்த அமைப்பு அது. கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டதும் கூட.

"குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்" என்பதெல்லாம் எவ்வளவு அவதூறான சொல்லாடல்?

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே ஆந்திரத் தனி மாநிலக் கோரிக்கை எழுந்துவிட்டது. சுதந்திற்குப் பின் வீறு கொண்டது. சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னைக்கும் உரிமை கொண்டாடினர் ஆந்திரர். சுதந்திரம் பெற்ற மறு நாளே வடக்கெல்லை காக்கத் திருப்பதி புறப்பட்டவர் ம.பொ.சி. வடவேங்கடம் வரை மீட்கப் போராடி, தணிகை வரை மட்டுமே மீட்க முடிந்தது. இதில் காங்கிரசின் பங்கோ, ராஜாஜியின் பங்கோ ஏதுமில்லை. தணிகையை மீட்க உடன் உழைத்தவர்கள் மங்கலங் கிழார், கே.விநாயகம் முதலானோர். இப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை கைது செய்யப்பட்டு, இரு முறை சிறைப்பட்டார் ம.போ.சி. அவரது தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த பழனி மாணிக்கம், திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகிய இருவர் சிறைப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தனர்.

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோது ' சென்னை மீதான உரிமை கோருவதை விட்டால் உங்களின் தனி மாநிலக் கோரிக்கைக்கு தமிழரசுக் கழகமும் போராடும்' என்றவர் ம.பொ.சி. 'தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று போராடினார் அவர். சென்னையை மீட்க ராஜாஜி உதவினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனுக்கும் இதில் பெரும் பங்குண்டு.

தெற்கெல்லைப் போராட்டத்தைத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு முன்னின்று நடத்தியது. நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி போன்றோர் முக்கியமானவர்கள். ஜீவாவின் பங்கும் குறிப்பிடத் தக்கது. இந்தியதேசிய காங்கிரஸ் கேரள காங்கிரசை ஆதரித்த போது ம.பொ.சி. திரு.த.நா.கா.வை ஆதரித்தார். அப்போதைய போராட்டத்தில் (கல்குளம்) ஈடுபட்ட 11 தமிழர்கள் பட்டம் தாணுப்பிள்ளை உத்தரவால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள வெறியர் அவர். (அச் சம்பவத்திற்காக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராம் மனோகர் லோகியா அவரிடம் விளக்கம் கேட்டார்.) தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது 'தமிழன் குரல்' இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.

1946-1965 காலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி தமிழரசுக் கழகம். தமிழரசுக் கழகம் முன்னெடுத்த தமிழ்த் தேச அரசியலையும் உட்செரித்து வளர்ந்ததுதான் அண்ணாவின் தி.மு.க. அந்த இடத்தில்தான் அது பெரியாரின் தி.க.விடமிருந்து வேறுபட்டது. 1967 காலகட்டத்தில் ம.பொ.சி.யின் நிலைப்பாட்டினால் பலர் அவரை விட்டு விலகினர் என்பது உண்மை. அதன் பாற்பட்டு எமக்கும் விமரிசனம் உண்டு. ஆனால் தமிழ்த் தேச எல்லை மீட்பில் அவர் பங்கு மகத்தானது. எல்லை மீட்பில் காமராஜருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அதீத முக்கியத்துவம் தவறானது.

ஆந்திர, கருநாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ம.பொ.சி. 'எனது போராட்டம்' என்ற அவரது தன்வரலாறு, புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இலக்கியத்தில் இன உணர்ச்சி போன்றவை முக்கியமானவை. அவற்றில் சிலவற்றையாவது வாசிக்க முயல்வீர்கள் என்று நம்புகிறேன். அவர் குறித்த செய்திகள், கட்டுரைகள் http://maposi.blogspot.com என்ற வலைப்பூவில் பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ், தமிழியம் முதலான சொற்களில் நம்பிக்கையுடைய உங்களுக்கு, தமிழர் - தமிழ்த் தேசியம் முதலான சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல்லாயிரம் வாசகர் கொண்ட தங்களுக்கு வரலாற்றுப் பதிவுகளில் கவனப்பாடு அவசியம் என்று நினைக்கிறேன். மிகை புகழோ- திருவுருவாக்கமோ, அவதூறோ - இழிவுபடுத்தலோ தவிருங்கள்.

நன்றி.

அன்புடன்,

யுவபாரதி
27.12.2010

6 comments:

Thekkikattan|தெகா said...

interesting, thanks for sharing!

Anonymous said...

சில பிரபலங்கள் சரித்திரத்தை மாற்றி எழுதுவது பெருந்தவறு. "திரும்பி வந்த திருத்தணி"என்று கொட்டை எழுத்தில் ஆந்திராவுக்குச் சென்றுவிட்ட திருத்தணியை பெற்றுக் கொடுத்தவர் ம.பொ.சி. அறிஞர் அண்ணா அவருடன் பல கருத்துக்களில் மாறு பட்டாலும் அவருக்குச் சபாநாயகர் பதவி கொடுத்து மதிப்புச் செய்தார்.காமராசர் செய்த சில தவறுகளில் ஒன்று "எந்த மாவட்டம் யாருடன் இருந்தால் என்ன? இந்தியாவில் தானே இருக்கிறது" என்ற அசட்டு இந்தியப் பற்று.

Anonymous said...

ஒரு விவாதத்தை நடத்தும் விதம் தெரியாமல் அவதூறாக பேசுவது நீங்கள் தான் , நீங்கள் என்ன சொல்லவருகிறீர்களோ அதைத்தான் ஜெயமோகன் வேறு பார்வையில் சொல்லியிருக்கிறார் ,

இதையும் படியுங்கள் http://www.jeyamohan.in/?p=6583

Anonymous said...

//உங்களிடமிருந்து இப்படி ஒரு வரலாற்றுப் பிழை மலிந்ததும் அவதூறான சொற்கள் நிரம்பியதுமான ஒரு கட்டுரையை எதிர்பார்க்கவில்லை//

உங்களது எதிர்பார்ப்பு பொய்த்ததில் வியப்படைய வேண்டாம். இவர் தனக்கு பிடிக்காத தமிழக தலைவர்களின் போராட்டங்களையும் பணியையும் திரித்து எழுதும் பணியை செய்பவர். சரியான தரவுகளை சுட்டிக்காண்பித்து யாரேனும் வினவினால் தகவல் பிழை, தான் ஒன்றும் ஆராய்ச்சியாளர் அல்ல ஒரு எழுத்தாளர் மட்டுமே என்பது போன்ற காரணங்களை காட்டி நழுவுவார். பெரும்பாலான இவரது கட்டுரைகள் முரண்கள் நிறைந்தது. விவாதிக்க வருபவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிறுமைப்படுத்தி திசை திருப்புவார். சரியாக விவாதிக்க முடியாத தருணங்களில் எதிரியை (அருந்ததி ராய்) வசை பாடி தனது இயலாமையை வெளிப்படுத்துவார். இவரை படிப்பவர்கள் இவரது நோக்கத்தை பற்றிய புரிதலுடன் படிப்பது நல்லது.

Anonymous said...

தோழருக்கு வணக்கம், தங்களின் பதிவு ( http://yuvabhaarathi.blogspot.com/2010/12/blog-post_19.html ) ஒன்று எமது தளத்தில் மீள்பதிவு செய்தோம்.

அதனை ஏற்கனவே தங்களுக்கு அறிவித்து விட்டோம்.

ஆனால் அதே பதிவு தங்களின் பெயர் விவரம் எதுவுமின்றி தடாகத்தில் வெளியாகி இருக்கிறது. இது தங்கள் அனுமதியோடு மீள்பதிவு செய்திருந்தால் சுபம். இல்லையேல் ! அவர்களிடம் நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்யலாம்..............

http://www.thadagam.com/open.aspx?id=109

இத்தகவல் தங்களின் கவனத்துக்கு மட்டுமே. நன்றிகள்

மன்னை முத்துக்குமார் said...

சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி, பிரபலங்கள் இந்த மாதிரி தவறை செய்யக்கூடாது, பாமரன் அது தான் உண்மை என்று நம்பி விடுவான்....