May 20, 2013

கொற்றவை எனும் துர்க்கை வடிவம்

பழந்தமிழ் இலக்கியங்கள் பாலை நிலத் தெய்வமாகக் குறிப்பிடும் கொற்றவை என்பது காளியின் வடிவமே என்றே பலர் நினைத்தும் எழுதியும் வருகின்றனர். ஆனால், கொற்றவை எனப்படுவது வெட்டப்பட்ட எருமையின் தலைமேல் நின்ற கோலத்தில் காட்சிதருபவளான துர்க்கையின் வடிவம் என்பதே பொருத்தமானது.

சிலப்பதிகாரத்திலேயே கொற்றவையும், காளியும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதைக் காணலாம். மதுரைக் காண்டம் வழக்குரை காதையில் அரண்மனை வாயிலில் பெருஞ்சீற்றத்தோடு வந்து நிற்கும் கண்ணகியைப் பற்றி வாயிலோன் பாண்டிய மன்னனுக்குத் தெரிவிக்கும் பாடலில்

'அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே !'

என்று வருகிறது.

இதில் அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்பிடர்த் தலைப் பீடம் ஏறியவள், வெற்றி வேல் தடக்கையள் என்று கொற்றவை குறிப்பிடப் படுகிறாள். அதாவது பீறிட்டு எழும் உதிரம் அடங்காத நிலையிலுள்ள வெட்டப்பட்ட தலையைப் பீடமாகக் கொண்டு ஏறி நிற்பவள், வெற்றியையுடைய வேலைத் தன் வலிமை மிக்க கையில் ஏந்தியவள் கொற்றவை என்கிறது சிலம்பு. திரிசூலம் பழந்தமிழில் மூவிலை வேல் எனப்படும்.

அறுவர்க்கு இளைய நங்கை , இறைவனை ஆடல்கொண்டருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்தவள், தாருகன் பேருரம் கிழித்த பெண் என்று காளி குறிப்பிடப்படுகிறாள். அதாவது முறையே பிராமி முதலான இந்திராணி ஈறாக விளங்கும் ஆறுஅன்னையர்க்கும் இளையவளான சாமுண்டி, சிவனைப் போட்டிக்கழைத்து ஆடச்செய்தவள் (தில்லைக் காளி கதை), அச்சமூட்டும் காட்டில் - சுடுகாட்டில் - விரும்பி வாழ்பவள், தாருகனின் நெஞ்சைக் கிழித்தவள் (பத்திரகாளி கதை) காளி என்கிறது சிலம்பு.

சிலப்பதிகாரத்தின் 'வேட்டுவ வரி' என்பது பாலை நில மக்கள் கொற்றவையை வணங்கும் முறை விவரிக்கப்படுகிறது. அதில் கொற்றவையைப் புகழ்ந்து பாடுகையில்,


இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்... 

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்  
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்...

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்...


என்று பாடப்படுகிறது. இதில் திரண்ட தோள்களுடன் (அவுணன்-எருமை எனும்) இருவேறுருவில் வந்த அவுணன் தலைமிசை நின்ற தையல், கானத்து எருமை கருந்தலை மேல் நின்றவள், கை வாளேந்தி மாமயிடற் செற்றவள் (பெரும் மயிடனைக் கொன்றவள்) என்றே கொற்றவை குறிப்பிடப்படுகிறாள்.

பிங்கல நிகண்டும் சாமுண்டி, தாருகாரி, அலகைக் கொடியாள் (அலகை - பேய்) என்பவை மாகாளியின் பெயர்கள் (பா.119) என்றும், மகிடற்காய்ந்தாள், பாலைக் கிழத்தி, கொற்றவை என்பவை துர்க்கையின் பெயர்கள் (பா.124) என்றும் குறிப்பிடுகிறது.

ஆகவே, கொற்றவை என்பது காளியின் வடிவமல்ல, மகிடன் தலை மேல் நின்ற நிலையில் வணங்கப்படுபவளான துர்க்கையின் வடிவமே என்பது எம் துணிபு.


- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி...