January 28, 2014

கனவுகள் சுமந்து வனம் திரிபவன்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்துள்ள கோழி குத்தும் மலையைப் பார்த்த வண்ணம் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரகசியனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’. இவரது முந்தைய தொகுப்பான ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ என்பதைப் போலவே இரு எதிர்வுகளைக் கொணர்ந்து நம்முன் நிறுத்துகிறது இத்தலைப்பும். மானுடத்தின் ஒரு பகுதியை விழுங்கி இன்னொன்று ஜீவிக்கிறது என்கிற அரசியல் சொல்லாடலைத் தாங்கி நிற்கிறது.

இவரது முந்தைய தொகுப்பு பெற்றிருக்க வேண்டிய கவனத்தை நம் தமிழ்ச் சூழலில் போதிய அளவில் பெறவில்லை. உள்ளீடற்ற ஒன்றைக் கூட ஊதிப் பெரிதாக்கும் வித்தை தரித்த ஜால ஊடகங்கள் உள்வலிமை பெற்ற ஒன்றை கவனியாது கடப்பதையும் கடமையாகக் கொண்டுள்ளன எனலாம். நுகர்வுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக நூல்களும் பண்டங்களாகி விட்ட நிலையில் விளம்பர உத்திகளே எதையும் தீர்மானிக்கின்றன.

‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’ எனும் ரகசியனின் இத்தொகுப்பு நான்கு பிரதான வெளிப்பாடுகளின் பற்பல பதிவுகளைக் கொண்டது. இயற்கையோடு இயைந்த கவிமனம், அது மாநகரப் புலப்பெயர்வால் உணரும் இறுக்கம், கட்டுப்பாடுகளை மறுத்து முன்னேகும் அதன் வேட்கை, ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் நெருக்கடி உணர்ந்து அது கொள்ளும் பெருங்கோபம் (பிரமிளின் வார்த்தையில் சொன்னால் ஆத்மரோஷம்).

***

தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன பல கவிதைகள்.
குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக்கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை.
ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் ஒரு மலையின் பேரிருப்பைச் சொல்லவரும் கவி, தன்பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு தன் தகப்பன், தான் என்று வழிவழியாகத் தமக்கு, தன் கொண்டையின் மேல் நிலவை அமர்த்தி அழகு காட்டும் இம்மலை, தன் குழந்தையின் குழந்தைகளுக்கும் அப்படி அழகு காட்டும் என்கிறார் (கோழி குத்தும் மலை). நடப்பு காலத்து மலைவிழுங்கிகளின் மனதை அம்மலை உறுத்தாதவரை சாத்தியமே இது.

சிரமப்பட்டு எட்டிய அம்மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்குகையில் அது “பள்ளங்களைப் போல் உயரங்களும் ஆபத்தானவை” என்று சொல்லித் தருவதாய்ச் சொல்வது வேறு தளங்களுக்கு நகர்த்துகிறது (உயரங்களும்).
பருவத்திற்குப் பிறகு வெட்டிக் கொள்ளலாம் எனத் தான் சொல்லியும் கனிதொங்கும் கோணக்காய் மரத்தை வெட்டிவிடுகிறாள் அம்மா. “கனிகொறிக்க வரும் குருவிகளுக்கு / என்ன சமாதானம் சொல்லி அனுப்புவேன்?” எனத் தவிக்கும் உளநிலை ரகசியனுடையது (குருவிக்குச் சமாதானமில்லை). இதே உளநிலை மண்விட்டுப் பிரிய மறுக்கும் வேர்களைச் சொல்லும் கவிதையிலும் வெளிப்படுகிறது (மரம்).

***

இயற்கையோடு கலந்துணரும் காலத்தில் பல தனிமனிதத் துயர்களை உள்வாங்கி இலகுவாக்குகிறது இயற்கை. வாழ்வு தன்மையமாயச் சுருங்குகையில் தனக்கே தான் சுமையாகிறது. இதை ரகசியனுக்கு மாநகரம் கதறக் கதறக் கற்றுத் தருகிறது.
தனிமனித மற்றும் சமூகவாழ்வு சார்ந்த துன்பங்கள் பல இருப்பினும், இயற்கையோடும் உறவுகளோடும் இயைந்த தன் கிராம வாழ்வின் மனநெருக்கத்தை வாஞ்சையோடு உள்வைத்த கவிமனம், பணிநிமித்தம் வந்து சேர்கிற மாநகரத்தில் துய்க்க நேரும் ஒட்டுறவற்ற தன்மையும் அந்நியமாதலும் பற்றி இவரது பல கவிதைகள் பேசுகின்றன.

நகர நிலவைப் பாடுபொருளாய்க் கொண்ட ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது. “என் மலையின் பின்னால் / தவழ்ந்திருந்த நிலவினை / யாருமற்ற இம்மாநகர வானில் / யாரோ விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்” (நானற்ற பொழுதில் உதிரும் நட்சத்திரம்). ‘யாருமற்ற மாநகரம்’ எனும் சொல் அடையாளமின்மை, கவனப்பாடின்மை, பொருள்வயின் விரைவு என்று நகரும் மாநகர வாழ்வில் அவர் உணரும் வெறுமையை உணர்த்துகிறது. செடிக்கு ஆதாரமான வேர்களை விட்டுவிட்டு அதன் மேல் வெளித் தெரியும் இலைகளுக்கு நீரூற்றும் மாநகரம் என்றும் ஒரு கவிதையில் வருகிறது. கவிதையின் காட்சிப்படுத்தல் என்பதைக் கடந்தும் மாநகரத்தின் நுண்அரசியலை அடையாளம் காட்டும் படிமம் அது. (இலைகள் மேல் நீரூற்றும் ஊர்).

வானம் செத்துவிட்ட ஊரின் மேல் பறக்கும் விமானம், பள்ளிகள் விட்டபிறகும் எங்கோ போய்வரும் பிள்ளைகள், சாலையிலேயே பிளாஸ்டிக்கைப் போர்த்துக்கொண்டு உறங்கும் ஒரு மனிதன், நெரிசல் மிக்க சாலையில் பேருந்தின் பாதியளவுள்ள காரில் குற்றவுணர்வற்று நகரும் இன்னொரு மனிதன் எனும் ரகசியனின் காட்சிப்படுத்தல்கள் அவருக்கு மாநகரம் ஏற்படுத்தும் விலகலையும் அவநம்பிக்கையையும் திரும்பத் திரும்பப் பேசுகின்றன.

***

குடும்பம், சமூகம், சமயம், அரசு முதலான சமுதாய நிறுவனங்கள் உருவாக்கம் அகக்கட்டுமானங்களை மீறி தன்னியல்பில் நிலைகொள்ளத் தவிக்கும் வேட்கையும், அதனால் அதுபடும் வேதனையும், எண்ணற்ற படிமங்களாயும் குறியீடுகளாயும் ரகசியனின் கவிதைகளில் வெளிப்படுகிறது. தான் ஆக்கமுயலும் உலகத்தையும் காட்டுகிறது.
தோலுரித்த பசுவை வேட்டையாடும் நாய்கள், போதி மரத்தை மேயும் ஆடுகள், ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டிருக்கும் உயிர், பெருஞ்சூரியனிடமிருந்து ஆறுதல் தரும் சிறுமலர், பெயர் சூட்டாத ஆயிரம் பூக்கள் கொண்ட மலை, மழையைச் சொட்டவிட்டு அழகாகக்கும் ஓரிலை, பிரிவில் கசிந்த கண்ணீர் நிரம்பிய இளநீர் முதலான பல படிமங்கள் எழுப்பும் உணர்வுகள் இவரது கவித்துவத்தின் வலு உணர்த்துபவை.

ஒரு மனிதனின் தனிப்பயணம் அளிக்கும் நிறைவே, அதன் தடைகளைக் கடக்கவும் உந்துகிறது. “எல்லோரும் போல் இல்லாதிருப்பது / சிக்கல் நிறைந்த பயணம் / எல்லோரும் போல இல்லாத சிலரில் / சேருபவன் நான் / குடிசைகளிலிருந்து மீறிய நான் / வனம் புகுந்து வாழ்கிறேன் / பின் புலிக்கு இரையாகியோ / பழம்பருவம் கண்டோ சாவேன்” என்கிறார் ரகசியன் (சாவேன்).
***
‘ஒரு சமுதாயம் வாழ்கிறதா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.

பள்ளர், பறையர், அருந்ததியர் எனும் இனக்குழுப் பெயர்களாயினும், அந்த்யஜர் எனும் சமற்கிருதச் சொல், அதற்கிணையான கடைசியர் எனும் தமிழ்ச் சொல், இராமானுஜரின் திருக்குலம், காந்தியின் அரிஜனர், காலனி, ஷெட்யூல்டு காஸ்ட்ஸ் எனும் ஆங்கிலச் சொற்கள், அரசியல் வெளியில் உருக்கொண்டு ஆதி திராவிடர், தலித் எனும் சொற்களாயினும், ஒரே வித ஒதுக்குதலோடுதான் பயன்படுத்துகிறது பெருஞ்சமூகம். எம்மொழிச் சொற்களாயினும் இது நேர்கிறது.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் சமூக நெருக்கடி, அதன் விடுதலைக் குரலில் ஒலிக்கும் சமத்துவ நோக்கு இவற்றை உள்ளார்ந்த வீச்சுடன் பதிவு செய்கின்றன ரகசியனின் கவிதைகள்.

தாமிரபரணி, கீழவெண்மணி, பாப்பாப்பட்டி படுகொலைகளையும், திண்ணியம் வன்கொடுமையையும் குறிப்பாகச் சுட்டி, இயற்கையின் மாசுபாடுகள் குறித்து வாய்கிழியப் புலம்பும் பலருக்கு, மேற்காணும் இழிசெயல்கள் மேல் காறி உமிழ எச்சில் ஏன் இல்லை? என்று கேட்கும் ரகசியன், அதனால் ‘உங்களோடு சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டாலும், “நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை” என்கிறார் (ஒரு வரியேனும்).

நிலவு, நட்சத்திரம், மேக விலங்குகள் என இயற்கையின் அங்கங்கள் சுட்டி “இவையெல்லாம் / உனக்குப் போலவேதான் எனக்கும் / இந்நிலம்தான் / விண்மீனை விட தூரமிருக்கிறது / எனக்கு” எனும் கவிதை (தூரம் இருக்கும் நிலம்) நம் சமூகத்தின் உள்ளார்ந்த இயல்பாகவே கரடு தட்டி நிலைபெற்றுவிட்ட சாதியம் யாவர்க்கும் பொதுவான நிலத்தை பிறப்பு வழி எல்லைகட்டி ஒதுக்கி வைப்பதன் அவலத்தையே மொழிவழி காட்டுகிறது.
சாதிய இந்து மனம் தலித்துகளின் உரிமை வேட்கையை ஏற்பதில்லை என்பதோடு ஒதுக்குவதாலும் ஒடுக்குவதாலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. “உன்னை முள்போல் / குத்துகிறது என் புன்னகை / உன் நிம்மதியைக் குலைக்கிறது / என் தூக்கம் / உனக்கு நோயை உண்டாக்குகிறது / என் ஆரோக்கியம் / கண்ணீரோடும் / பசியோடும் / நான் கூனிக்குறுகி ஏவல் / செய்து கொண்டு / இருக்கவே விரும்புகிறது / உன் மனம்” (விரும்புகிறது). இன்று வரை தருமபுரிகளை நிகழ்த்துவது எது என்பதைப் பேசுகிறது இக்கவிதை.

எப்போதும் தங்கள் ஆதிக்கம் நீடிக்கவே விரும்பும் பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுமிடத்து, ‘சூத்திரர்கள் பார்ப்பனர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களது நிலைக்கு உயர்ந்து வருவதை விரும்பவில்லை’ என்பதையும் குறிப்பிடுவார் டாக்டர் அம்பேத்கர். முதுகுளத்தூர் முதல் தருமபுரி வரை ஒடுக்கும் சாதிகள் வேறுவேறு எனினும் ஒடுக்கப்படுவோர் தலித்துகளே.

ஒடுக்கப்பட்டோர் விடுதலையின்பால் நம்பிக்கை கொண்ட ரகசியனின் கவிதைகளில் வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, அறிவின் வாளில், உடைபடும் அடைப்புகள், திருடப்பட்டிருக்கும் உலகு, கொடும் விலங்கொன்று முதலான கவிதைகள் முக்கியமானவை.

***

நல்ல மொழியாற்றலும் அறச் சீற்றமும் கொண்ட ரகசியனிடம் தன் சொல்முறையில் சொற்சிக்கனமும் செறிவும் கூடிய பல கவிதைகளின் மூலம், தன் இருப்பையும் இயக்கத்தையும் வெளிப்படுத்துவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது ‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’.

-    யுவபாரதி


(நவம்பர் 9, 2014 : வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அழகிய பெரியவன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)

1 comment:

phantom363 said...

so sorry and sad to read this. a shame on all of us, non dalits, across caste lines. so sorry. i cannot say i feel your pain, because nobody but a dalit can feel his/her pain. all i can say is 'sorry' and even that sounds hollow. so, in the end, i am bereft of words. .. rajamani