January 27, 2014

காலப்பருந்துக்குத் தன்னையே தந்தவன்

திருவண்ணாமலை தமுஎச சார்பில் ஒரு இலக்கியப் பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தோம். தொண்ணூற்றெட்டாம் வருடம். அக்டோபர் மாதம்.

முதல்நாள் பகலில் நான், முரளி, எஸ்.கருணா, பவா, ரேணு எல்லோரும் அலைந்து நிகழ்ச்சிச் செலவுக்காக ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம். கோணங்கியும் உடன் வந்தார். இரவு திருக்கோவிலூர் சாலையிலுள்ள அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி கைப்பந்துத் திடல். எங்களில் சிலர் எஸ்.ராமகிருஷ்ணனோடும் .தமிழ்ச்செல்வனோடும் பேசிக் கொண்டிருந்தோம். இலக்கியத்தோடு எனக்குத் தத்துவப்பித்தும் ஏறத் தொடங்கியிருந்த காலம். தொடர்ச்சியாக எஸ்.ரா.விடம் கேட்டுக் கொண்டிருந்தேன். சளைக்காமல் அவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

எல்லாம் பூர்த்தியாக வேண்டுமென்பது இயல்புக்கு வேறானது. தத்துவம் இலக்கியத்தை விடவும் உன்னதமான விஷயம் என்று தோன்றும். அப்படியொன்றும் இல்லை. தத்துவத்தால் தொலைதூரம் பயணித்து அடையும் உண்மையை இலக்கியத்தால் வெகுஎளிதில் அடைந்துவிடலாம். புங்கைமரம் பக்கவாட்டில் கிளைத்து ஓரளவு உயரத்திலேயே திருப்தியடைந்துவிடுகிறது. பனைமரத்திற்கு அது போதவில்லை. நீண்டு வளர்கிறது. புறத்தில் நீட்சி எவ்வளவோ, அந்த அளவேனும் மண்ணுக்குள் வளர்ச்சியும் அவசியமாகிறதுஎன்றெல்லாம் சொன்னார் எஸ்.ராமகிருஷ்ணன். ஜே.கிருஷ்ணமூர்த்தி, கார்லோஸ் கஸ்நாடா, சி.ஜே.யூங், ஆனந்த குமாரசாமி, போதலேர், வோரா, சட்டோபாத்யாயா ஆகியோரது சில நூல்களை எனக்குப் பரிந்துரைக்கவும் செய்தார் கிடைக்குமிடங்களும் சொன்னார். அவர் சொன்னதில் கஸ்நோடா, வோரா நூல்களை இன்னும் படிக்கவில்லை.

அதே பள்ளி வளாகத்திற்குள்தான் மறுநாள் அக்டோபர் இரண்டு காலை இலக்கியப் பயிலரங்கம். காலையில் சேலத்திலிருந்து வந்திறங்கிய பிருந்தாவையும் அழைத்துக் கொண்டு, சீக்கிரமே பள்ளி வளாகம் வந்து தமுஎச-வின் பழைய நிகழ்வுகளின் புகைப்படங்களைத் தட்டிகளில் ஒட்டினோம். காலை அரங்கில் தமிழ்ச்செல்வனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசினார்கள். மதியம் நண்பர்கள் வெண்ணிலா, முருகேஷ், நா.முத்துக்குமார், பிருந்தா, நான் என பரஸ்பரம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மாலை அரங்கில் திரைப்படம் குறித்து ஞான ராஜசேகரன் பேசினார். தோழி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்று கேமிராவை இரவல் வாங்கிக்கொண்டு அரங்கில் நுழைந்தேன். ‘ஒரு கண் ஒரு பார்வைஆவணப்படம் திரையிடத் தொடங்கினார்கள். வெளியிலிருந்துபவா……!’ என்றொரு அலறல் கேட்டது.

பதறியடித்து ஓடினோம். டி.எம்.சாரோன் விடுதிக்கு எதிரே, ஏதோவொரு லாரி மோதி சாலையில் முகம் அழுந்தக் கிடந்தான் சிபி. பவா-ஷைலஜாவின் மூத்தமகன். அருகில் பவாவின் அம்மா கதறிக் கொண்டிருந்தார். மாலையில் மடியமர்ந்து என் சட்டைப்பை பேனாவை எடுத்து என் உள்ளங்கையில் எழுதியவன். பலரும் சாலையில் திரண்டிருந்தோம். பின்னால் வெண்ணிலா வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அப்போது கவின்பாரதியை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். ‘இந்த சமயத்தில் வேண்டாம், சிபியைப் பார்க்கவேண்டாம் தோழர்என்றபடி வற்புறுத்தி அவரை அரங்கிற்குள் கொண்டு சென்று விட்டேன்.

வளர்ந்த பெரியவர்கள் விலகிச் செல்கையில் ஏற்படும் பாதிப்பு, அந்த அளவிற்கு நாம் பழகிய குழந்தைகள் வளர்ந்ததும் விலகிச் செல்கையில் ஏற்படுவதில்லை. வளர வளர அது இயல்பானது என்று மனம் பழகிவைத்திருக்கிறது போல. வளர்ச்சி என்பதே விலகலோ! ஆனால், முதல்நாள் மடியில் சுமந்தவனை மறுநாள் பெட்டிக்குள் வைத்து தோளில். நான்கு வயது கூட ஆகியிருக்கவில்லை சிபிக்கு. பிரியம் விலகாத குழந்தையாகவே சாரோன் கல்லறைத் தோட்டத்திற்குள் ஓடிவிட்டான்.

பாரதிஎன்று பேர் சொல்லியே என்னை அழைப்பான். பெரிய நண்பர்களைப் போல். அப்போது பெரும்பாலும் மாலையில் அலுவலகத்திலிருந்து நான் நேராக பவா வீடு செல்வது வழக்கம். சென்றதும் ஓடிவந்து கழுத்தைக் கட்டிக்கொள்வான் சிபி. தெளிவான அவனது மழலை மொழியில் எப்போதும் எனக்குச் சொல்ல ஏதேனும் வைத்திருப்பான். குழுவாக நண்பர்கள் வெளியில் போனாலும், அக்குழுவில் நானிருந்தால் என் கூடவே இருப்பான். உதகை மலர்க்கண்காட்சியில் பூக்களுக்கிடையில் ஒரு பூவாய்ப் பூத்திருந்த சிபியின் புகைப்படம் இன்னும் மனதில் இருக்கிறது.

அரசு மருத்துவமனையிலிருந்து வந்த அவசர ஊர்தி அவனைச் சுமந்துகொண்டு போனது. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது? பள்ளி வளாகத்திற்குத் திரும்பிவந்து பலரும் பலபக்கமும் நின்றும் அமர்ந்தும் இருந்தோம். ஒரு குரல் எழுந்தது. ‘நிகழ்ச்சி தொடருமா?’ அது பேரா.பழமலயுடையது. உடன் பேரா. மேஜர் சண்முகம். யாரும் பதில் சொல்லவில்லை. என்றாலும், ‘மௌனமாயிருக்கச் சம்மதமில்லைஎன்று தொடங்கி, ‘சாவு சாஸ்வதமானது, அதை ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும்என்ற பொருள்பட இருவரும் பேசினார்கள். சிபி மறைந்து அரைமணி நேரம் கூட ஆகியிருக்காது.

காலையில் தமிழ்ச்செல்வன் பேசும்போது சொன்னார். ‘பல்கலைக்கழகம் மாணவர்களிடமிருந்து அனைத்தையும் துடைத்து அனுப்பிவிடுகிறதுஎன்று. மாணவர்களிடமிருந்து துடைப்பவர்களை மாலை அடையாளம் தெரிந்தது.

கல்லறைத் தோட்டம் சென்றுவந்த மறுநாள் மாலை. பவா வீட்டிற்குள் நுழைந்ததும், ‘பாரதி! என் சிபியைக் காலையில் பார்த்தேன் பாரதி. நீதான் கொண்டுவந்தே. நான் வாங்குறதுக்குள்ளே யாரோ பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. எனக்கு என் சிபி வேணும். கொண்டு வா பாரதி! கொண்டு வாஎன்று கையைப் பிடித்துக்கொண்டு அழுது, கைகூப்பியபடி சுவரில் சாய்ந்தார் ஷைலஜா.


- யுவபாரதி

No comments: