July 26, 2016

மண்ணூறப் பெய்த மழை

பச்சைக் குழந்தைகளென அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேற்கு மலைகளில் தொத்திக் கொண்டிருந்த மேகங்கள்தான் நேற்று மாலை இரண்டு நாழிகைகளுக்குள் அப்படிக் கொட்டித் தீர்த்தன. முக்கால் மணி நேரம் என்றால் புரியும். அடுத்த அரை நாழிகையில் ஊரில் தங்காமல் ஓடியே விட்டது நீர்.

நேற்று புலம்பியது வருணனுக்குக் கேட்டதோ என்னவோ. வழக்கமாய்ப் பணி நிமித்தம் தாமதமாய் மதிய உணவு உண்கிறவன் இன்று நேரத்திற்கே உண்டுமுடித்துப் பாத்திரம் துலக்கும்போதே பார்த்தேன். சுற்றிலும் நீண்டு நெளிந்து எப்போதும் கண் நிறைக்கும் மேற்கு மலைகளைக் காணவில்லை. வானுக்கும் மண்ணுக்குமாய் அப்படி ஒரு கருந்திரை.

மூன்று மூன்றரை இருக்கும். செம்மண்வாசம் கமழ்ந்தெழுந்து சாளரம் கதவு என்று கிடைத்த வழிகளிலெல்லாம் வந்து நாசி நிறைத்தது. சிலுசிலுவெனக் காற்றோடு சிறு தூறலாய்த் தொடங்கி இலேசாய் வலுத்த சீரோடு பெய்யத் தொடங்கியது மழை.

ஐந்தரை மணிவரை அப்படியே அழுத்தமாய்ப் பெய்து கொண்டிருந்திருக்கிறது. பணி முடித்து வெளி வந்து பார்த்தால் இந்தக் கட்டடம் அந்தக் கட்டடம் என்று வளாகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் ஒண்டியிருந்து பணியாளர்களும் பொதுமக்களும் மழைபடாமல் நின்று மழை பார்த்துக் கொண்டிருந்தனர். தெற்கே கண்டமனூர் வரைக்கும் வடக்கே வைகை அணை வரைக்கும் என்று பேசிக் கொண்டனர்.

சுற்றிலும் பெரும்பாலும் கம்பும் தட்டாம்பயிறும் முருங்கையும்தான் விவசாயம். பாலங்களைக் கடக்கும் போதுதான் அதற்கடியில் இருந்தவை வைகையைச் சேரும் ஓடைகளும் சிற்றாறுகளும் என்றும் வைகையிலிருந்து வரும் கால்வாய்களும் என்றும் தெரியும். வானமாரிதான் இன்று விவசாயம்.
 
அம்மச்சியாபுரத்துக்கும் குன்னூருக்கும் இடையில் வந்து வைகையோடு சேரும் முல்லையாற்றுக் கால்வாய் இல்லையென்றால், இன்று வைகை அணையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கும் சுயமி எடுப்பவர்களுக்கும் கூட கண்ணுக்கும் காட்சிக்கும் குளிர்ச்சியாக என்ன இருக்கும். அந்தக் காலத்தில் தாய்ப்பாலுக்கு அடுத்து அந்தந்த ஊர் நீரைத்தான் மூன்று மடக்கு புகட்டுவார்கள். சின்னமனூரில் பிறந்த எனக்கு எந்த நதி நீரை அப்படிப் புகட்டியிருக்கமுடியும். முகநூலில் அவ்வப்போது வந்து அடுத்தடுத்த சில நாட்களில் கவனத்திலிருந்து விலகிப் போவதும் தன்முன்னாக்க நோக்கையும் உடன் கொண்டதுமான சச்சரவுகளில் ஒன்றானது மட்டுமில்லை முல்லைப் பெரியாற்று நீர் என்பது எனக்கு.

இரு சக்கர ஊர்தியை வளாகத்திலேயே நிறுத்திவிட்டுப் பேருந்தில் போய்விடலாம் என்ற அலுவலகத் தம்பியின் சொல்கேட்டுத் தலையசைத்தவனுக்கு அப்படி வேண்டாமே என்று தோன்றிவிட்டது. ‘வாங்க தம்பி, வண்டியிலேயே போயிடலாம்’ என்றதும், விட்டுவிடுங்கள் என்பதை வேறு சொற்களில் சொல்லி அவர் கிளம்பிவிட்டார். மற்றொருவரைக் கேட்டேன். கிளம்பிவிடலாம் என்றார். கிளம்பி விட்டோம்.

அடுத்த கிராமத்தைக் கடப்பதிற்குள்ளாகவே தெப்பலாய் நனைந்தாயிற்று. ஒக்கரைப்பட்டியைக் கடக்கும் போது கைபேசிகளின் நினைவு வந்தது. ஒரு கடையில் நெகிழி உறைகள் வாங்கிச் சுற்றி பைக்குள் திணித்துக் கொண்டு, அரைக்கால் சட்டைக் காலத்து மழை நனைவு பற்றிப் பேசித் தொடர்ந்தோம். அதற்கடுத்த கிராமத்தில் தேநீர் பருகல். மழைப் பயணம்.

அவர் நினைவில் ஊறிக்கிடந்த கிணறு, குதித்தாடிய ஓடை, நீந்திக் கடந்த நதி, நம்பியிருந்த விவசாயங்களெல்லாம் வெளிவந்தன. என் நினைவில் ஆழ்ந்துகிடந்த நான் வளர்ந்த வடமாவட்டக் கிராமத்துக் கிணறு, குளித்தாடிய மின்னிழுவை நீர்ப்பாய்ச்சி (பம்புசெட்டு), மீன் பிடித்த ஏரி, காவலிருந்த பள்ளிக் கூட நண்பனின் மல்லாட்டைக் (வேர்க்கடலை) கொல்லைகளையெல்லாம் மழை வெளிக்கொண்டுவந்தது.


ஆண்டிப்பட்டி வரைக்கும் சாலையின் இருமருங்கு மண்ணும் சிலிர்த்துக் கொண்டிருந்தது. மரமெல்லாம் அயர்ச்சி நீங்க தலை குளித்துக் கொண்டிருந்தது. இவற்றை ஒருமையில்தான் சொல்லவேண்டும். இன்னும் மண்ணுக்கு இப்படியான மழை வேண்டும். இரு சக்கர ஊர்தியை அதற்கான நிறுத்தத்தில் நிறுத்தி, அவரவர் பேருந்தில் ஏறிக்கடக்கும் போதும் மண்ணூறும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. 

No comments: