January 11, 2010

முகடு

தொடுவானம் புகைந்து
உருகும் கண்ணாடிப் பாளம்
படபடத்து நிறமிழக்கும்
இமைச் சிறகு
கனம் நழுவ
கழுத்தில் சரிந்து
காதுமடல் கடித்திழுக்கிறாய்
உயிர்ப் பரப்பில்
மீனின் சுவாசமென
மிதந்து திரிகின்றன
இதழ்கள்
அணைப்பின் நிழல் கவ்வ
மேகம் துளிர்க்கிறது.

ஞாபகத்தின்
காலப் பிசகுகளில்
படிதாண்டாத கணவனின்
உறைந்த காலடி ஸ்பரிசம்
அலற அலறச்
சப்தப் பெருங்குழியில்
உதறிப் பதைக்கிறாய்
மரண வீட்டின்
தீண்டாத நண்பனென
அகாலத்தில் விழிக்கிறது
மௌனம் பாரித்த
மழை.

No comments: