[சிறுகதை]
நன்றி: தடாகம்.காம்
-ஆர்.மணிகண்டன்
அம்மா கொடுத்த பட்டியலோடு பெரிய ஒயர் கூடையும் கையுமாக படியிறங்கினான் பாஸ்கர். வாசல் புங்கமர நிழல் இன்னும் தரைவிரியத் தொடங்கவில்லை. காகங்கள் கிளைவிட்டுப் பறக்கத் தொடங்கின. மலையனூர் அம்மாவாசைக் கூட்டம் பெரிய பஸ் ஸ்டேண்டிலிருந்து இறங்கி அதனதன் ஊருக்குத் திரும்ப வேண்டி டவுன்பஸ்களுக்காக அங்கங்கே காத்திருந்தது. அண்ணா சிலை பக்கம் திரும்புகையில் எதிர்க்கே லுங்கியும் கை வைத்த பனியனுமாக கண்ணுக்கோனார் வந்து கொண்டிருந்தார். ஊரில் முன்பு வீடு வீடாகப் பால் வியாபாரம். சொந்தமாக ரெண்டு சீமைப் பசுவும் ரெண்டு எருமையும் இருந்தது. பாலுக்கு சொசைட்டி என்று வந்த போது கூட ‘கண்ணுக் கோனார் வூட்டு மாடு கறந்ததும் வாங்கிக்கறேன்’னு பலரும் வரிசை கட்டி நிற்பார்கள். ‘பொண்டாட்டி போனதோட மனுஷனுக்கு எறங்கு தெச. மாடு கன்னு எதுவும் இல்லே இப்போ. பசங்களும் சரியில்லே. திருப்பம் ரங்கசாமி மொதலியார் காய்கறிக் கடைலதான் கூடமாட ரெண்டாமாளா இருக்கார்னு அம்மா சொல்லும். கடைக்கு லோடு ஏத்த வந்தவர் அப்டியே இந்தாண்ட வர்றார் போல’.
“நல்லா இருக்கியா தம்பி? ஏதோ மார்க்கிட்டுக்குக் கிளம்பறாப்புல கீது. விஷியம் தெரியுமா?”
வருஷம் தப்பிப் பார்த்தாலும் ஏதோ அடிக்கடி பார்க்கிற மாதிரிதான் பேசுவார் கோனார். தலையாட்டினான்.
“நம்மூரு பழிய தலைவரு பல்ராமக் கவுண்ட்ரு கீறாரே, அவுர் மவ தனம் நேத்து காலைல தூக்கு மாட்டிக்கினு செத்துப் பூட்ச்சு தம்பி”
“ஏழுமல அக்காவா? நாலஞ்சு மாசம் மின்னதான் கல்யாணம் ஆச்சுன்னாங்களே. அதுவா?”
“ஆமாந்தம்பி. செரி. நீ கௌம்பு. நான் அம்மா அப்பாவப் பாத்து பேசிட்டுப் போறேன்”
. . .
கொசமடத் தெரு திரும்பி நடந்தான். மூலை குப்பைத் தொட்டியில் ஒரு மாடு தலை நுழைத்து ஆட்டிக் கொண்டிருந்தது. பிளாஸ்டிக் கவர் பொறுக்குகிற பையன் அதை நகத்த வேண்டி முதுகில் ரெண்டு அடி வைத்ததும் ஆங்காரமாய்த் தலை தூக்கிச் சிலுப்பிக் கொண்டு ரோட்டிற்குப் போனது. தொட்டிக்கு மேலே தன் தோள் மீது மம்முட்டி முகத்தைத் தாங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது தேவயானி. அன்பு தியேட்டரில் புதுப்படம் போல.
‘நம்ம குடும்பமும் டவுனுக்கு வந்து ஏழெட்டு வருஷம் ஆவுது. வந்த புதூசுல ஒன்னு ரெண்டு வருஷம் போயி வந்து இருந்ததும் அப்புறம் இல்லாமப் போயிட்ச்சு. இந்த மாதிரி கோனாரோ, இல்ல பத்திரிகை வைக்கோசரம் எவனாச்சும் வந்தா போனாத்தான் ஊர்ல நடக்கறதே தெரியுது. இந்தா டவுன்லே இருந்து பத்து மைல்தான் ஊரு. சின்ன வயசுல புதுப்படம்னா ஃபிரெண்டுங்களோட சைக்கிள்லயே ஊர்ல இருந்து டவுனுக்கு வந்ததுதான். இப்ப என்னமோ இப்டி விட்டுப் போயிட்ச்சு. அது செரி. அடிக்கடி போயார நமக்கின்னா அங்க நெலம் நீச்சு, அங்காளி பங்காளியா கீது?
‘ஆனா பல்ராமக் கவுண்ட்ரு குடும்பம் அப்டியா? திண்டியனம் ரோட்டு மேலயே பெரிய வூடு, கொட்டாவூராண்ட ஏரிக்கரைய தாண்டியே கழனி, ஈசுரன் கோயில் மூலைலேருந்து கல்பூண்டி வரிக்கும் கொல்லி, காலனி தாண்டி சந்த மோட்டாண்ட மரமண்டின்னு எத்தினி ஆஸ்தி? ரெண்டு வாட்டி பஞ்சாயத்து போர்டு தலைவரா இருந்தவரு வேற! வருஷா வருஷம் ஏரிக்கரை பூங்காவனத்தா திருவிழா அப்போ அவுரு வடத்தத் தொட்டாத்தான் தேரே நெல வுட்டு நவுரும். ரெண்டு மூனு வருஷத்துக்கு ஒரு வாட்டி துரோபதியம்மன் கோயில் வாசல்லே பாரதம் சொல்லி, அவலூர்ப்பேட்ட ரோட்ல கூத்து கட்டுறப்போ கூட, தவறாம ஒரு நா ராவு பகாசூரன் வேஷங் கட்டி, கண்ணு செவக்க தண்ணி போட்டு, மீசைய முறுக்கிக்கினு, பெரிய பெரிய அண்டாவோட மாட்டு வண்டில எல்லாத் தெருவும் சுத்தி வருவாரு. ஓவ்வோரு வூட்லயும் சாய்ந்திரம் புதுசா பொங்கின சோறும் கொழம்பும் கறியுமா ஊர்ஜனங்க எல்லாம் அண்டாவுல கொட்டும். பகாசூரன் வேஷத்துல அவுர பாத்த பசங்களுக்கு பயம் தெளிய ஒரு வாரம் மேல ஆவும்.
‘தனம் ஏழுமலைன்னு ரெண்டு பசங்க. தலைவரூட்டம்மாவும் நல்ல மாதிரி. யாரு எந்த விஷயமா அவுங்கூட்டுக்குப் போனாலுஞ் செரி. சூரியன் உச்சி ஏர்றதுக்கு முன்னால போனா காரத் தொவையலோட ஒரு சொம்புக் கூழும், மதிமாப் போனா சாப்பாடும் குடுத்துத்தான் அனுப்பும். ஊர்த் திருவிழான்னு எதுவா இருந்தாலும் மொதநா ராவு வீடியோ செலவு தலைவர்துதான்.
‘நடுவுல மின்ன மாதிரி இல்லே, கொஞ்சம் நொடிஞ்சுட்டாரு, வடக்க கொட்டாவூர்ப் பக்கம் இருந்த கழனிய வெச்சுத்தான் இப்ப தனத்துக் கல்யாணத்தயே முடிச்சார்னு கூட யாரோ சொன்னாங்க.
‘தனம் ஸ்கூல்ல மூனு செட் முன்னாலே. நல்லா படிக்கும். அழகா இருக்கும். டீக்கா டிரெஸ் பண்ணும். ஆம்பிளப் பசங்க கிட்ட கூட தைரிமா பேசும். பசங்கதான் அதுங்கிட்ட தனியா நின்னு பேசனும்னா பயப்படுவானுங்க. எப்பவும் ரெண்டு மூனு பேரா நின்னுதான் பேசுவானுங்க. தனம் போறது வர்றதை எல்லாம் ஓரந் தூரம் நின்னுதான் பாப்பானுங்களே ஒச்சி பின்னாடில்லாம் போமாட்டானுங்க. (அவுங்க அப்பா தலைவரு இல்லே?) ஆனா தலைவரு பொண்ணுங்கிற நெனப்பு கொஞ்சம் கூட கெடையாது தனத்துக்கு. ப்ளஸ் டூவுல கூட அவுங்க செட்ல ஸ்கூல்லயே ரெண்டாவதா வஞ்ச்சு தனம். மேல படிக்கணும்னு தனம் ரொம்ப அடம் புடிச்சும் கூட, பொட்டப் பொண்ணுக்குல்லாம் எதுக்கு இஞ்சினீரிங்னுட்டு, டவுன் க. க. காலேஜுலயே பி.எஸ்.சி. மேக்ஸ்ல சேத்துவுட்டுட்டாரு. அதுக்கு மேல படிக்கல. அப்புறம் ரொம்ப வருஷம் கல்யாணமே படியாம கொஞ்சம் மாசம் மின்னதான் ரொம்ப செலவு பண்ணி ஆலம்பூண்டில ரைஸ்மில்லு வெச்சிருக்கிற ஒருத்தருக்கு குடுத்தாங்கன்னு சவுந்தர் கூட சொன்னான்.
இதற்குள் தேரடித் தெரு சேட்டுக் கடைகள் எல்லாம் தாண்டி கடலைக் கடை மூலை வந்திருந்தது.
. . .
வீட்டுப் படியேறின போது மரநிழல் மேற்கே தலை நீட்டிப் படுத்திருந்தது. கூடையை அடுப்பு மேடையில் வைத்துவிட்டு தட்டும் கையும் கழுவிக் கொண்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தான் பாஸ்கர். கோனார் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டார் போல. வெத்தலை மென்று கொண்டிருந்தவர் இடுப்புத் துண்டிலிருந்;து கொஞ்சம் புகையிலை எடுத்து அண்ணாந்து வாய்க்குள் அதக்கியவர் காரம் ஒரு மடக்கு இறங்கினதும் ஆரம்பித்தார்.
“நீயே சொல்லு வாத்தியாரூட்டம்மா. சேரின்;னாலுந்தான் இன்னா? புள்ளத்தாச்சிப் பொண்ணு பாவம் சும்மா வுடுமா? ரெண்டு வருஷம் மின்னால - உங்குடும்பந்தான் மின்னயே டவுனுக்கு வந்துட்ச்சே, உனுக்கெல்லாந் தெரியாது - இந்த ஏழுமல இருக்கானே, அவன் அவங்கூட்டு மல்லாட்டக் கொல்லில வேல பாக்குறானே இரிச்சன், அவுன் மவ செல்விய இஸ்த்துக்கினு, மரமண்டி கை மாறினப்போ கெடச்சதுல மீந்த பணத்தையும் தூக்கிக்கினு எங்கியோ ஓடிட்டான். காதுங் காதும் வெச்ச மாதிரி நாலா பக்கமும் ஆளுங்கள அனுப்ச்சு தேடினாரு கவுண்ட்ரு. கடசீல ஒசூராண்ட கீதாமே தேங்கனிக் கோட்ட, அங்க கண்டுபிட்ச்சு ரெண்டு பேரையும் இஸ்தாந்தாங்க. கவுண்ட்ரு தம்பி வேடியும் எம் பங்காளி மவன் கோனேரியும் சேரிக்குப் போயி, இரிச்சன் வூட்டு சாமாஞ்செட்டு எல்லாத்தையும் வெளிய இஸ்துப் போட்டு, இரிச்சன், அவன் சம்சாரம், மவ, மவன்னு எல்லாரையும் அடிச்சுத் தொம்சம் பண்ணிட்டானுங்க. அன்னிக்கு ராவே அந்த செல்விப் பொண்ணு கிருஷ்ணாயில் ஊத்திக் கொளுத்திக்கினு துடிக்கத் துடிக்கச் செத்துப் பூட்ச்சு. முழுவாம வேற இருஞ்ச்சாம். இரிச்சன் மவன் ஆஸ்பத்திரில இருந்து எழுந்து நடக்கவே நாலு மாசம் ஆயிட்ச்சு. ஆனாலுங் காலத் தாங்கித் தாங்கித்தான் நடக்குறான் இப்ப வரிக்கும். அப்போ எங்க மொதலாளி, பழிய மணிய்க்கார் வேம்பு அய்ரு, நம்ம சினிமா கொட்டா ரெட்டியாரு மூணு பேருமா டேஷன்லயே ஒக்காந்து கவுண்ட்ரு சைடா பேசி விஷியம் வெளிய வராம முட்ச்சுட்டாங்க. இப்போ தனம் பொண்ணு சாவுக்கப்புறந்தான் ஊர்ல பேச்சே வந்துகீது.”
‘இந்த ஏழுமல விஷியமா ஊர்ப் பசங்க ஒருத்தனும் ரெண்டு வருசமா நம்ம கிட்ட ஒரு மூச்சு கூட வுடலியே. எவனுக்குமேவா தெரியாமலா பூட்ச்சு? இரிச்சன், செல்வியயெல்லாம் தெரியாம கூடவா இருக்கும்?’ பாஸ்கர் சாப்பிட்டு எழுந்தான்.
புங்கமர நிழல் இப்போது குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தது. கோனார் கிளம்பிப் போனார். எப்பவும் வெறுங்கால்தான். எந்தக் குறுக்கு வழியில் போனாலும் மண்டித் தெரு போய்ச் சேர இருபது நிமிஷம் ஆகும். வழியெல்லாம் தார் உருகி ஓடும். வேலூருக்குக் கொஞ்சமும் இளைத்ததில்லை இந்த ஊர் வெயிலும்.
. . .
ரெண்டு நாள் கழித்து ஒரு சாயந்திரம் திண்டிவனம் பஸ்ஸுக்காக பெரியார் சிலைக்குப் பின்புறம்; தாலுக்காபீஸ் சின்ன வாசலில் நின்று கொண்டிருந்தான் பாஸ்கர். ‘தகவல் தெரிஞ்சும் போவலைன்னா நல்லா இருக்காது தம்பி. கெட்ட சாவு இல்லியா? எனுக்குப் போவ என்னவோ மாதிரி இருக்குதுறா. அப்பாவும் போறாப்புல தெரியலே. தலைவரூட்டம்மா நமக்கு எத்தினியோ செஞ்சிருக்கு. ஏழுமல உன் செட்டுதானே? நீ ஒரு எட்டு போயிட்டு வந்துர்றா’ன்னு ரெண்டு நாளாகவே அம்மா இவனிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தது. எதிர்க்கே டி.எம்.சர்ச்சின் உச்சிச் சிலுவைக்கும் மேற்கு மலைக்கும் நடுவில் இறங்கத் தோதான இடம் தேடிக் கொண்டிருந்தது சூரியன். பக்கத்துத் தள்ளுவண்டியில் வறுபட்டுக் கொண்டிருந்த பீஃப் பக்கோடா நன்கு சிவசிவக்க வெங்காயத் துண்டுகளோடு சிறு சிறு தட்டுகளுக்குப் போய்க் கொண்டிருந்தது. ‘இருட்டுறதுக்குள்ளே ஏழுமல வூட்டுக்குப் போயிறணும்’.
செஞ்சியிலிருந்து வந்து எதிர்க்கே சர்ச்சு வாசலில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினவர்கள் எல்லாம் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். இறங்கி நடந்த சைக்கிள் கடை ஜாகீர் இந்தப் பக்கம் பாஸ்கர்; நிற்பதைப் பார்த்துவிட்டு, இவன் பேர் சொல்லிக் கூப்பிட்டு ரோட்டின் ரெண்டு திசையும் கவனித்தபடி தாண்டி வந்தான்.
“பென்னாத்தூருக்கா பஸ்ஸுக்கு நிக்கிறே? சாமான்யமா நீயி அந்தாண்ட வரவே மாட்டியே! என்னா விஷியம்?”
“ம். நம்ம ஏழுமல அக்கா தனம் தூக்கு மாட்டிக்கிச்சாமே. ஞாயித்துக் கெழம கண்ணுக்கோனார் சொன்னாரு. ரெண்டு மூணு நாளாய்ட்ச்சா? ஒரு எட்டு போயி ஏழுமலைய பாத்துட்டு வர்லாம்னுதான் கௌம்பினேன். நீ எப்டி இருக்கே?”
“ம். இருக்கேன். டீ சாப்ட்டுக்கினே பேசுவமே. பஸ்தான் நெறைய கீதே?” என்றபடி இவனுடன் ராஜி கடைக்குள் நுழைந்து ரெண்டு டீ சொன்னான் ஜாகீர்.
“பாசு. அது - அதான்டா அந்த தனம் - சத்திமங்கலத்துல வாத்தியாரா கீறானே வண்ணாமூட்டு மகேஷு, தனம் செட்டுறா, காலேஜ் வரிக்கும் ஒன்னா கூட பட்ச்சானே, அவந்தான். ஆலம்பூண்டிக்கும் பென்னாத்தூர்க்கும் போயாற வழீல ரெண்டு பேரும் பாத்து பேசுனாங்கன்னு எவனோ ரெண்டு பேர் அதும் புருஷங்கிட்ட சொல்லிக்கீறாங்க. இன்னா ஏதுன்னு கேட்டு மாமியார் வூட்ல போட்டு அடி அடின்னு அட்ச்சிகீறாங்க. ஒன்னும் இல்ல, தப்பா ஒன்னும் இல்லன்னு இது மல்லாடிக்கீதுறா. அவுங்க கேக்காம கூட்டியாந்து சொல்லி கவுண்ட்ரூட்லயே வுட்டுட்டு பூட்ருக்காங்க. இவுங்க வூட்லயும் அப்பனுந் தம்பியும் மாத்தி மாத்தி அட்ச்சிகீறாங்க. வெடிக்காலைல பாத்தர தனம் தூக்கு மாட்டிக்கிச்சுன்றாங்க. ஊர்ப் பெரிவுங்கல்லாம் சேந்து ஆஸ்பத்தி;ரி, போலீஸ் கேசுன்னு எதூவுமில்லாம முட்ச்சுட்டாங்கறா.”
டீ வந்தது. பாஸ்கரிடம் அவன் வேலை பற்றிக் கேட்டபடி கிளாஸை வாங்கினான் ஜாகீர். பென்னாத்தூர் வழியாகப் போகிற பஸ்; வந்து நின்றது. ‘ஏ, பெருசு, படிக்கட்ல நிக்காத, உள்ளாறதான் இம்மா எடங் கீதில்லே? போ. போ உள்ள...’ என்ற குரலோடு நிதானமாகக் கிளம்பிப் போனது. “என்னா கேட்டே?” என்றபடி ஜாகீர் பக்கம் திரும்பினான் பாஸ்கர்.
-----
2 comments:
மரத்தின் நிழல்கள், சூரியன் அஸ்த்தமிக்க இடம் தேடுவதும் பார்த்தால் இது ஒரு நாளுக்கான கதை என்பதாகத் தெரிகிறது. பொறுமை இல்லாத சாதி கவுரவம் ஆண்மைத்துவம் எவ்வளவு லேசாய் உயிரை சாப்பிடுகிறது.நல்ல கதையம்சம்.சற்று வழக்கு மொழியை சீர் செய்யவேண்டும்.நன்றி.
பின்னூட்டத்திற்கு நன்றி டேனியல். வழக்கு மொழி திருவண்ணாமலை வட்டார மொழி.
Post a Comment