February 16, 2010

அந்தப்புறத்து புத்தன்


நகக் கண்ணில் கரிபூச
உள்ளங்கைகள் பிச்சையெடுத்தன
தொப்பூழ்க் கொடி அறுபட்ட
உதிரத் தடாகத்தில்
உறவுச் சாம்பல் நிரவி
அரியாசனம் நிலைபெற்றாயிற்று

இதயம் வீசி எறியப்பட்டது
உப்புநீர்க் குட்டையின் அந்தப்புறம்
உடைபட்ட எழுகரங்களும்
கிழிபட்ட யோனிகளும்
அவநம்பிக்கையின் வீரியத்துடன்
புதைபட்ட பதுங்கு குழிகளின் மீது
அலகில் ஆலிவ் இலை தரித்த பறவை
பிணந்தின்னும் சிங்கத்தின் கைவாளில்
ஓய்வெடுக்கிறது

மண்டையோட்டு மாலையிட்டு
பிள்ளைக்கறி படைக்கிறார்கள்
அழுகுரல்களின் சரணத் திரயம்
புடைத்தெழும் விகாரைகளில்
அடைபட்ட புத்தன்
பித்துப் பிடித்து ஓலமிடுகிறான்.


- யுவபாரதி 

2 comments:

மதுரை சரவணன் said...

கவிதை அவலங்களுடன் , நம் வலியையும் சேர்த்து உணர்த்துவது கேட்க வேண்டியவர்கள் காதுகளில் விழுந்தால் நல்லது. வாழ்த்துக்கள்

பவா செல்லதுரை said...

நல்ல கவிதை