September 29, 2010

ரகசியக் கனவின் இசைச் சொற்கள்

கனவுகள் சூழ்ந்த இவ்வாழ்க்கையில் என் கைவசமிருப்பது கவிதைகள் மட்டுமே எனும் உமாஷக்தியின் அவளும் அவனும் அவர்களுமான கவிதைகளாலானது "வேட்கையின் நிறம்".




இருப்பின் போதாமையும், கழற்றிவிட முடியாத தனிமையும், பற்றிக் கொள்ள விழையும் அன்பும், அனுபவத்தில் வந்தமைகிற அவநம்பிக்கையும், வாழ்வின் மீதான கரிப்பு கலந்த வேட்கையும் வெளிப்படும் தருணங்களே இவரது கவிதையாக்கத்தின் களங்கள்.

தாளில் விழுந்த வார்த்தைகள்
வண்ணத்துப் பூச்சியாய் மாறி
நேர்கின்றன நிஜமான கவிதைகள்

மொழியின் குருதி கொப்பளிக்கும்
மற்றவை யாவும் கட்டமைக்கப்பட்ட
வரிகளின் மரண நெடி

என்கிற வரிகள், உலகோடு ஊடாடும் மெல்லுணர்வு, கவிமனத்தின் இசைவயப்பட்டு மொழியின் வசீகரத்தால் சிறகடிப்பதே கவிதை என்று தோன்றச் செய்கிற அதே தருணம், மொழியைக் குரூரம் பெற்றுக் கொப்பளிக்கும் வரிகள் குறித்த கவியின் அசூயையையும் காட்சிப் படுத்துகின்றன.

தன் அனுபவம் ஒத்த விழைவுகளை வாசிப்பில் கண்ணுறும் கணத்திலேயே ஒரு வாசகன் அப்படைப்போடு கொள்ளும் அன்னியோன்னிய உறவு சாத்தியமாகிறது. கவியின் தன்வதையிலிருந்தே உருக்கொள்ளும் கவிதை, படைப்பு வெளியில் விஸ்தீரணம் கொள்ள வாசகனின் வெளிப்படாத துயரை வன்மத்துடள் வேண்டி நிற்பதைச் சொல்கின்றன

உறக்கத்தின் சுதந்திரம் பறித்து
மாயக்கனவின் மீதேறி
வேட்டைக்காரனின் வன்மத்துடன்
குருதி கேட்கிறது
எல்லா இதயத்திலிருந்தும்.

என்கிற வரிகள்.

உமா ஷக்தியின் பல கவிதைகளில் தனிமை கொள்ளும் தீவிரத்தை, அதன் கூர்நகக் கீறல்களோடும், தீராத உதிர வேட்கையோடும் உணர முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் பற்பல கணங்களில் தனிமைக்கு ஆட்படுகின்றனரெனினும், அதைச் சக உயிர்களுக்குக் கலையில் பகிரும் ஒரு படைப்பாளி, நாளும் அதீத நெருக்கத்தில் உணர்கிறாள். அவளுக்குத் தன் பேருருவைக் காட்டி, அழியாத தன் நிலைப்பேற்றை உணர்த்தி, சாளரங்களற்ற தன் மாளிகையில் சிக்கி உலவும் மானுடத்தின் நிர்க்கதியைச் சொல்கிறது தனிமை.

சட்டென கனவினை உடைத்து வெளிவந்தது
நீண்ட அலகுடைய பட்சியொன்று
கனவா நினைவா காட்சியா
திகைக்கும் முன்
தீராக் கோபத்துடன் கொத்தித் தின்றது
தனிமையின் இரவு முழுவதையும்

என்கிறது தனிமையின் இரவு என்ற கவிதை.

மழைக்கும் மொழிக்குமான உறவு கனமானது. மண்ணிலும் மனத்திலும் மழை கிளர்த்தும் வாசனையைத் தன்னில் தருவிக்கக் கவிதையில் முயல்கிறது மொழி. மழைச்சரம் பற்றி நடக்கத் துவங்கும் தருணம் கவிமனம் கொள்ளும் பிள்ளைமை அதன் சொற்களுக்குள் சிக்குவதில்லை. எனினும் மொழி விடுவதுமில்லை.

மழை பற்றிய கவிதையை
எப்படி எழுத இயலும்
முழுக்க நனையாமல்


சொட்டச் சொட்ட நனைகிறது
பேனாவும் தாளும் பின் இந்தக் கவிதையும்
மழைப்பாடல் எழுதும் போதெல்லாம்

என்கிற உமாவின் வரிகளில், தன் இயலாமையின் எல்லை கடந்து ஓடோடி அண்ணாந்து கண்மூடி மழையில் நனைகிறது மொழி.

சிறிது ஸ்பரிசம் கூட நிகழ முடியாதவாறு
முழுவதும் மூடியிருந்தேன் என் ஜன்னலை
இரக்கமில்லாமல் இறுக்கிப் பிடித்து
ஆவேசத்துடன் பொழிந்து தள்ளியது
நேற்றிரவில் உன் மழை...


நான் சொற்களின் காதலி
உன் ஆழுலகில் தேடுகிறேன்
எனை மீட்டெடுக்கும்
மந்திரச் சொல்லொன்றை...

என ஊடல் நெட்டுயிர்த்துக் கூடல் ததும்பும் பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எனினும் குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலையாகிற இழப்பு தரும் ஊமை வலி சொல்லும் கவிதைகள் குறிப்பிடத் தக்கவை.

விலக்கி விட ஏன் இத்தனை பிரயத்தனங்கள்
இதயத்தின் அடி ஆழம் வரை சுவைத்த காதல்கள்
நஞ்சை விட கசப்பாய் அமிலமாய் எரியும்


என் சுவர்கள்
உன் இசைச் சொற்களால் நிரம்ப
திரும்புதல் சாத்தியமற்ற
திசையில் உன் பயணங்கள்

என்கிற வரிகளில், பழகிக் களித்த மனங்களில் புரிதலின்மையால் நிகழும் கரிப்பும், அதை வெளிக்காட்டாது தவிர்க்க முயலும் பரிதவிப்பும், ஒட்டுதலற்ற உறவினும் பிரிவே இனிது எனத் தடுமாறும் அவநம்பிக்கையும் பதிவாகின்றன.

'எண்ணற்ற கவிதைகள் எழுதுவதை விடவும் எளிய ஒரு படிமத்தை உருவாக்குவது நல்லது ' என்பார் டி.எஸ்.எலியட். அவன் அவள் அவர்கள் என விரிவு கொள்ளும் காலிக் கோப்பை மது எனும் கவிதை கனவுக்கும், போதாமைக்கும், தனிமைக்கும், ரெளத்திரத்துக்கும் எழுப்பும் படிமங்கள் அலாதியானவை.

அவள்
அவன் எழுதக் காத்திருக்கும் கனவுத்தாள்
எவ்வளவு நிரப்பியும் நிறையாத காலிக் கோப்பை
வால் நட்சத்திரத்தின் மாய வசீகரம்


அவன்
வித்தைக்காரன் பழக்கிய சிறுத்தை
நெல்மணிக்கு ஆசைப்படும் கிளி
ஆழ்கடலில் ஒற்றைப் படகு

வாழ்வை நெகிழ்வாகக் கருத விழையும் மனத்திற்கு அது காட்டும் இறுக்கமும், சக மனிதர்களால் சாத்தியமற்று மொழியில் கரையும் தனிமையும், உணர்ந்து கொண்ட உறவுகளுக்குள் மவுனமாய் நிகழும் உறைதலும் மொழியின் சாத்திய வெளிக்குள் அதிராத வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் "வேட்கையின் நிறத்"தில் உருக்கொள்கின்றன.

- யுவபாரதி

1 comment:

Unknown said...

//வாழ்வை நெகிழ்வாகக் கருத விழையும் மனத்திற்கு // நாமெல்லாம் இப்படித்தானே இருக்கிறோம் :))) உங்கள் விமர்சனம் மேலும் செறிவான கவிதைகளை எழுதத் தூண்டுகின்றது. மிக்க நன்றி யுவபாரதி ;))