October 05, 2011

காஞ்சிபுரம் : இலக்கியக் களம் நடத்திய கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

அமுதகீதன், யாழன் ஆதி, அமிர்தம்சூர்யா, குட்டிரேவதி 
13.12.2010 அன்று காஞ்சிபுரத்தில் இலக்கியக் களம் சார்பில் மொழி திரியும் கவிதைவெளியில் திசைமுகம் தேடல் என்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கவிஞர் அமுதகீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வந்தவர்களை கவிஞர் சூர்யமித்ரன் வரவேற்றார்.

முதலில் பேசிய கவிஞர் யாழன் ஆதி"தலித்தியக் கவிதைகள் : அழகியல் - அரசியல்" என்ற தலைப்பில், தலித் அரசியலின் கடந்த கால வரலாறு, 90களில் தலித்தியச் சிந்தனை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம், அம்பேத்கரியத் தத்துவ நிலைப்பாடுகளின் அடியொற்றி தலித்திய எழுத்துகள் பயணிக்க வேண்டியுள்ள கடப்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.

"இரண்டாயிரத்துக்குப் பின் தமிழ்க்கவிதை பகட்டு வெளிப் பறத்தலும் இருட்டைத் தோண்டி எடுத்தலும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய கவிஞரும் கல்கி வார இதழின் உதவி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா நவீன கவிதைகள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளன என எழும் வழக்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக அவற்றின் மொழிப் பயன்பாடு மற்றும் குறியீட்டுத் தன்மை ஆகியவற்றை விளக்கியதோடு, வாசிப்பிற்கு அது வாசகனிடம் எதிர்பார்க்கிற எத்தனங்களின் உள்ளீடு குறித்துப் பேசினார்.

"உடலை வாசித்தலும் எழுதுதலும்" என்ற தலைப்பில் கவிஞர் குட்டிரேவதி கருத்துரைத்தார். பெண்ணியம் மற்றும் தலித்தியம் சார்ந்த சமகாலப் படைப்புகளில் உடலரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பாலுறவு வேட்கையை எழுதுவது மற்றுமே உடலரசியல் ஆகாது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தமும் கவிஞர் அமுதகீதனும் செய்திருந்தனர்.இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு : யுவபாரதி

No comments: