March 02, 2013

பம்பரம் விட்ட கதை

ஊருக்கு வந்திருக்கிறேன். காலை உணவுக்குப் பின், சற்றே ஓய்வாக வாசற்பக்கம் உட்கார்ந்தேன். தெருவில் பம்பரம் விட்டுக்கொண்டிருந்தான் பக்கத்து வீட்டு விக்கி. ஏழு வயது. துணைக்குப் பிள்ளைகள் வேறு யாருமின்றி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கைக்கயிற்றிலிருந்து விடுபட்டதும், அற்புதமாக நிலைநின்று சுழன்றாடிச் சடக்கென்று சாய்ந்தது பம்பரம்.

அதைப் பார்க்க ஆசை ஆசையாய் இருந்தது. விக்கியிடமிருந்து பம்பரத்தை வாங்கி கயிற்றையும் சுற்றித் தரையில் விட்டேன். தலைகீழாகவேனும் சுற்றிவிடும் என்று பார்த்தால், பக்கவாட்டில் தறிகெட்டு ஓடியது. சாக்கடைக்குள் விழுந்து விடுமோ என்று பதறி ஓடித் தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. திரும்பவும் முயற்சித்தேன். ஒழுங்காய் 90 டிகிரியில் வெகுநேரம் சுழன்றாடி என் மானம் காப்பாற்றியது. நம்பிக்கை வந்து மூன்றாவது முறை முயல்கையில் 60 டிகிரியில் ஆடித் தடுமாறியது. பம்பரத்தை மீண்டும் விக்கியிடமே தந்துவிட்டேன்.

நானும் விக்கி வயதில் பம்பரமும் கையுமாக அலைந்தவன்தான். பிரகாஷின், பரணியின் பம்பரங்களை எத்தனை முறை பதம் பார்த்திருக்கிறது என் பம்பரம்? பம்பரம் என்று மட்டுமல்ல. பம்பரம், கோலி, கிட்டிப்புல் என்றுதான் கழியும் பள்ளி செல்லும் நாட்களின் காலை மாலையும், சனி ஞாயிறுகளின் முழு நேரமும் போகும். கோலி விளையாட்டில் முட்டி தள்ளியது, தள்ளவைத்தது, கிட்டிப்புல் விளையாடி தெருவில் போவோர் வருவோர் மீதெல்லாம் புல் பட்டு வசை வாங்கியது எல்லாம் நினைவுக்கு வருகிறது. வசையொழிய வாழ்ந்ததே இல்லை. மரப்பலகையில் செய்த மட்டை, ரப்பர் பந்து, ஓணாந்தண்டு ஸ்டம்ப் சகிதம் எப்போது கிரிக்கெட் என்று விளையாடப் புகுந்தோமோ அப்போதே இதர விளையாட்டுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டன.

அதற்கப்புறம் பம்பரம் என்றால் தவிர்க்கமுடியாமல் சின்னக்கவுண்டர் நினைவுக்கு வருகிறார். இப்படியும் பம்பரம் விடலாம் என்று செய்துகாட்டியமைக்காக நல்ல உயரத்திற்கும் வந்திருக்கிறார். நம்மக்கள் நன்றி மறவாதவர்கள்.

சூரியன் உதிக்கிறது; மறைகிறது; உதிக்கிறது. இலை துளிர்க்கிறது; வாடுகிறது; துளிர்க்கிறது. மாம்பழம் கூட ஒரு சில சீசன்களில் நன்றாகப் பழுத்திருக்கிறது. சுழன்று சுழன்று சுற்றிவிட்டாலும் பம்பரம் மட்டும் இங்கு சீராக நிலைநின்று சுழல முடியவில்லை.

அண்ணா! அண்ண்ணா!!’ என்று கூப்பிட்டு என்னை நினைவிலிருந்து மீட்ட விக்கி, ‘அம்மா கூப்பிடுது. கையிலே பம்பரத்தைப் பார்த்தால் வையும். இதைக் கொஞ்சம் வெச்சுக்கிடுங்க. என்னன்னு கேட்டுட்டு வந்து அப்புறமா வாங்கிக்கறேன்என்று ஓடினான்.

-  யுவபாரதி 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையாக சுழன்றது மனதில்....

ஜீவ கரிகாலன் said...

பம்பரம் பற்றிய பதிவுகள் எனக்கு ஏக்கத்தையே அளிக்கிறது... நான் வசிக்கும் தெருவில் பம்பரம், கோலி, கிட்டிப்புல் விளையாடும் பசங்களை மதம் மாற்றம் செய்து, அந்த விளையாட்டுகள் உங்களை கெடுத்து வருகின்றது என்று பிரச்சாரம் செய்து, விரட்டியடித்த கிரிக்கெட் பாதிரியார் தான் நான்........