February 22, 2014

இப்போதும் சொல்லவில்லை என்றால் - 2

மூன்று நாட்கள் முன்பே சொல்லியிருக்கவேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள்.எனக்கு அப்படித் தோன்றவில்லை.இந்த பொறுமையுணர்வினாலேயே நடப்புலகின் நெளிவு சுளிவு  அறியாமல் போய் வாழத் தகுதியற்றவனாகிவிட்டேன் என்பதையும் பல்லாண்டு காலம் உணர்ந்தே இருக்கிறேன். ஆனாலும், மாற்றிக் கொள்ள இயலவில்லை. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்ற குறள்தான் நினைவு வருகிறது. ஆனால் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கமுடிகிறது.

மூன்றாண்டுகட்கு முன்பு கோயம்பேட்டில் உள்ளுணர்வோடு வெளிப்படுத்திய கோரிக்கையின் ஒரு பகுதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் (எதிர்பாராமல்) நிறைவேறிய தகவல் அலுவலக நண்பர் ஒருவர் மூலம் தெரியவந்ததும் ஒரு உணர்வுச் சுமை நீங்கியது. நால்வரும் விடுவிக்கப்படுவர் எனத் தமிழக அரசு அறிவித்ததாக - மறுநாள் மதியம் -  தோழி அனுப்பிய குறுஞ்செய்தி கண்டதும் சில மாதங்கள் தவிர்த்திருந்த மாலை நாளிதழ் படிக்கும் மனநிலைக்குத் திரும்ப வந்தேன். விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டோர் நால்வர் அல்ல, எழுவர் எனத் தெரிந்தது. தோழியிடம் அப்போதே சொன்னேன். இதில் தடா சம்பந்தப்பட்டிருப்பதால் மத்திய அரசின் முடிவும் இதில் சம்பந்தப்படும் என்று. ஒப்புதல் என்ற அளவில் அல்ல, கலந்தாலோசனை என்ற அளவில். அன்றிரவும் மறுநாள் காலையும் ஊடகங்கள் விளம்பர இடைவேளைகளுக்கு இடையில் இதைத்தான் விவாதித்தன.

கூடவே, எல்லாவற்றையும் ஊடக மனநிலைக்கேற்பவே பழகிவிட்ட பெரும்பாலான சமூக வலைத்தள நண்பர்/நண்பியரும் இவையெவற்றையும் யோசிக்கவேண்டும் என்ற சிந்தனை கூட அவசியமில்லை என்ற வகையில் எதிர்வினையாற்றுவர் என்றும் சொன்னேன். எல்லாமே அந்தந்த கணம். அவ்வளவுதான். ஊடகங்கள் பலவும் தெரிந்தே செய்கின்றன. சிலர்  ஊடகங்கள் போலவே தெரிந்தும், சிலர் இதையும் தன்னடையாள முன்னெடுப்பிற்கு ஒரு வாய்ப்பாகவும், பலர் தெரியாமலும் வெளிப்படுத்தினார்கள். நடந்தது.

தமிழக முதல்வர் என்ற இடத்திலிருந்து ஜெயலலிதா எடுத்த முடிவு என்பது துணிச்சலானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. இந்த இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால் இம்முடிவை எடுத்திருக்கமாட்டார் என்பதும் சேர்ந்தே நினைவுக்கு வந்தது. தியாகு வழக்கு நிலை வேறு என்ற புரிதலோடே சொல்கிறேன். முதல்வரின் முடிவால் உண்மை தமிழ்/மனித உணர்வாளர்கள் மகிழ்ந்திருப்பர். ஆனால், இவ்விரு சொற்களின் பேரால் தன்னடையாளம் வளம் பெற விரும்புவோர்க்கு ஒரு சில வார ஊடக முகங்காட்டல் எனும் வாய்ப்புகள் வடிந்து போயின என்பதும் உண்மை.

எல்லாவற்றின் பின்னும் அரசியல் உள்ளது என்பதை உணர்கிற அதே வேளையில், தன்னடையாள அரசியல் என்பது ஆளுவோர்/ஆண்டோர்/ஆளவாய்ப்புள்ளோர் என்கிற கட்சிகள் எனும் வடிவில் மட்டும் இல்லை. இழவுகளின் எண்ணிக்கை கூடக்கூட தம் குரலின் ஒலியளவையும், அதன் வழி வசதிகளையும், ஊடக வெளிச்சங்களையும் பெருக்கிக் கொண்ட கோடாரிகளை என்னென்பது? அரசின் முடிவின் பின், உணர்வுப் பூர்வமான பல தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ள உண்மையான பங்கை மறுக்காத அறிவோடே சொல்கிறேன். நிற்க.

காங்கிரசைப் பொருத்தவரை, இந்தியா முழுக்க ஒரே விதமாகத்தான் பேசும் என்றும், பாஜக-வைப் பொருத்தவரை, தமிழக இல.கணேசன் ஒரு விதமாகவும், தில்லி சுஷ்மா சுவராஜ் வேறுமாதிரியும் பேசுவார்கள் என்றும் நினைத்தேன். காங்கிரஸ் ஏமாற்றவில்லை. ராஜீவ்காந்தியை இந்தியாவின் ஆன்மா என்கிற அளவிற்கு மன்மோகன் பேசியது எதிர்பாராதது. கருணாநிதிக்குதான் சிக்கல். தில்லி பாஜக கொஞ்சம் ஏமாற்றிவிட்டது. பேசியவர் சுஷ்மாவுக்குப் பதிலாக அருண் ஜேட்லி. வைகோவுக்குதான் சிக்கல். எந்த சிக்கலுமே யோசிக்கிறவர்களுக்குதான். விஜயகாந்த் போல இருந்தால் ஒரு சிக்கலும் இல்லை.

சாமானிய மனிதர் கட்சி (ஆம் ஆத்மி) என்ற பெயரில் இருந்தாலும் கெஜ்ரிவால் என்பவர் இப்படித்தான் பேசுவார் என்பது புதிய தகவலில்லை. எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கியிருப்பதாகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி என்பதாகவும் சொல்லப்படும் உதயகுமாருக்குத்தான் யோசித்தால் சிக்கல். விஜயகாந்த் போல இருந்தால் ஒரு சிக்கலும் இல்லை.

மத்திய அரசு வழக்கம் போல இந்த விவகாரத்திற்கும் பேருக்கு அமைச்சரவையைக் கூட்டிக்கூட தமிழக அரசின முடிவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், கலந்தாலோசனை என்ற அளவில் என்ற வகையில், அதை இன்றைய தமிழக அரசின் தலைமை பொருட்படுத்தாது என்பது  மத்திய அரசுக்குத் தெரியாமலில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.

காங்கிரசுக்குத் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பது அதற்கே நன்கு தெரியும். ஆனால், தமிழகத்தில் இப்படி நடந்துவிட்டது என்று காட்டி அனைத்து வடமாநிலங்களிலும் இரங்கல் தேட முயல்கிறது. காங்கிரஸ் அப்படித் தேடிவிடுமேயானால் வடமாநிலங்களில் தங்களுக்குத் தெரிவாதாகத் தோன்றும் வெற்றி வாய்ப்புக்கும் வில்லங்கம் வருமோ என்றேதான் பாஜக-வும் யோசிக்கிறது. நிற்க.

ஆனால் ஒன்று. உள்ளார்ந்து உணர்வோர்க்குத் தெரியும் நான் சொல்ல வருவது. நம் அனைவருக்கும் அறிமுகமான பேரறிவாளனின் தாய்க்கு மட்டுமின்றி, நமக்குத் தெரியாத பிற அறுவரின் குடும்பத்தினருக்கு மட்டுமேயான மனச்சுமையும் பதற்றமும் அதே அளவுக்கு நமக்கில்லை. நம் சமகால வாழ்வின் உயிர்ப்புள்ள சிலபல தருணங்களை சிலரோ பலரோ இவர்கள் பொருட்டு ஒதுக்கியுள்ளோம். தனிப்பட்ட அடையாள லாபங்களுக்காக இவ்வுணர்வை அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துவது சரியல்ல. அவ்வளவே.

நம்பிக்கை இருக்கிறது. இடைக்காலத் தடை என்பது இடைக்காலமே.

- யுவபாரதி

No comments: