April 15, 2014

மகாபாரதத்திலிருந்து...

(வனபருவம்)

1

கோபமும் மேலானதன்று; பொறுமையும் மேலானதன்று. 

எப்போதும் கோபமுள்ளவனை நண்பர்களும் பகைவர்களும் பொதுவானவர்களும் மட்டுமின்றி, வேலைக்காரர்களும் வெறுக்கிறார்கள். அவனுக்கு ஒரு பட்சம் அஞ்சியபடி, மறுபட்சம் கேடு நினைக்கிறார்கள்.

அதே சமயம், எப்போதும் பொறுமையுள்ளவனை நண்பர்களும் பகைவர்களும் பொதுவானவர்களும் மட்டுமின்றி, வேலைக்காரர்களும் அவமதிக்கிறார்கள். அவன் பொருட்களை அச்சமின்றி எடுத்துக் கொள்கிறார்கள். அவனை அவமதித்து அவனது மனைவியையும் விரும்புகிறார்கள். அவனது மனைவியும் அவனை அவமதிக்கிறாள்.

ஆகவே, அவ்வக்காலத்திற்கேற்ப பொறுமையுள்ளவனாகவோ கோபமுள்ளவனாகவோ ஒருவன் இருக்கவேண்டும்.

- பிரகலாதன் தன்பேரன் மகாபலியிடம் சொன்னதாக, திரௌபதி தருமபுத்திரனிடம் சொன்னது. 


2


பாண்டவர்களின் வனவாசக் காலத்திலும் அவர்களைச் சில பிரஜைகள் அண்டியிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாகத் தன் உருமறைத்து வாழ்ந்திருந்தான் ஜடாசுரன். பீமார்ஜுனர்கள் இல்லாத சமயம் பார்த்து, பாண்டவர்தம் ஆயுதங்களைக் கவர்ந்து கொண்டதுடன், திரௌபதியையும் தரும நகுல சகதேவர்களையும் கட்டித் தூக்கிக்கொண்டு விரைந்தான்.

'ஒருவன் மித்திரர்களிடத்தும் நம்பினவர்களிடத்தும் அன்னமிட்டவர்களிடத்தும் வசிக்க இடம் கொடுத்தவர்களிடத்தும்ஒருபொழுதும் துரோகம் செய்யலாகாது' என்று அங்கம் கட்டுண்ட நிலையிலும் சொன்னான் தருமபுத்திரன். ஜடாசுரன் அதைச் செவி மடுக்காமல் நகரமுயலவும் தருமபுத்திரனின் பாரம் கூடிற்று. ஜடாசுரன் தடுமாறிய நிலையில், சகதேவன் கட்டுவிடுபட்டுத் தப்பி எதிர்நின்றான்.

அதற்குள் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருந்த பீமனும் வந்துவிட்டான். 'காலமென்ற நூலுடன் தொங்கவிடப்பட்ட தூண்டிலானது உன்னால் விழுங்கப்பட்டது. வாய் கோக்கப்பட்ட மீன் எப்படி விடுபட்டுச் செல்லும்?' என்றபடி ஜடாசுரனை வீழ்த்தி, சகோதரர்களையும் திரௌபதியையும் விடுவித்தான் பீமசேனன்.

1 comment:

Vignesh L'Narayan said...

இக்காலத்திற்க்கு மிகவும் அவசியமான கருத்து.