November 14, 2014

பட்டம் காட்டிய அழகு

நன்றி: www.yaavarum.com

‘உங்களுக்குப் பட்டம் செய்யத் தெரியுமா மாமா?’

புத்தகத்திலிருந்து தலை திருப்பிப் பார்த்தால் பக்கத்து வீட்டு விக்கி.
நாலாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் தெருவில்தான் ஆட்டம். எதை வாங்கிக் கொடுத்தாலும், செய்து கொடுத்தாலும் சில நிமிடங்களில் துவம்சம் செய்துவிடுவான். சில பட்டணத்துப் பிள்ளைகள் போல் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி விளையாடி, மூளையை மட்டும் சோர்ந்து போக வைத்துக் கொள்வதில்லை. இந்த ஊரும் பட்டணம் இல்லை.

‘தெரியும்பா’ என்றபடி, இரண்டு துடைப்பக்குச்சி கொண்டு வரச் சொன்னேன், வீட்டிலிருந்த பழைய தினத்தந்தி, பசை, கத்தரிக்கோல், செலோடேப் சகிதம் உட்கார்ந்துவிட்டேன். துடைப்பக்குச்சி வந்ததும், ‘பத்திரமாய் விளையாடணும் விக்கி’ என்றபடி பட்டம் செய்யத் தொடங்கினேன்.
*****
அப்போது எனக்கும் விக்கி வயதுதான் இருக்கும். பென்னாத்தூர் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்தோம். திண்டிவனம் சாலையை அடுத்து தெற்கே இருக்கும் தெரு. அந்தப் பெருமாள் கோவில் மிகப் பழையது. மொட்டைக் கோபுரம். ஒன்றரையாள் உயர மதில்கள். அதற்கு எதிரிலிருந்த முதல் வீட்டில்தான் அப்போது பஞ்சாயத்து அலுவலகம் இருந்தது.

பஞ்சாயத்து சார்பில் ஊர்ச்சங்கை ஊதவைக்கும் பணியாளர் அன்றென்னவோ காலை பத்து பத்தரை வாக்கில் சங்கை இயக்கிவிட்டார். காலை எட்டு மணி, மதியம் ஒரு மணி, மாலை ஆறு மணி. இவைதான் சங்கு பிடிக்கும் நேரம். அகாலத்தில் சங்கொலி கேட்டதும் பலரும் பஞ்சாயத்து அலுவலகத்தை நோக்கிப் படைதிரண்டு போனார்கள். சிறிது நேரத்தில் அந்தப் பணியாளரை பலரும் போட்டு அடிக்கும் சம்பவம் நடந்தது. ‘ஏன் இந்த நேரம் சங்கு பிடித்தாய்?’ என்று கேட்டதற்கு, ‘இந்திரா காந்தி இறந்துட்டாங்க’ என்று சொன்னாராம். போலீசார் வந்து அவரைக் காப்பாற்றும்படி ஆயிற்று. பிற்பகல் வானொலியில் சொன்னபிறகுதான் அடித்தவர்களுக்கு அது உண்மை எனத் தெரிந்தது.

ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த அன்று மாலை, பாட்டிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, பரணியோடும் இன்னும் சில பையன்களோடும் பெருமாள் கோவில் மதிலேறினேன். முந்தின நாள்தான் பவானி ஓட்டல் கிரி அண்ணனை விடாமல் துரத்தி பட்டம் செய்து வாங்கியிருந்தேன். மிட்டாய் ரோஸ் நிறத்தில் சட்டமும், கிளிப்பச்சை நிறத்தில் வாலும் இருந்தது நினைவிருக்கிறது.

பட்டம் நன்றாகவே பறந்து கொண்டிருந்தது. நான் நீயென்று நண்பர்களுக்கிடையில் கைமாறிக் கொண்டேயிருந்தது. நடுநடுவே கோவில் கோபுரம், புங்கமரம் எனச் சிக்கிக் கொண்டாலும், எங்களில் ஒருவர் ஏறி எடுத்துவிட்டுக் கொண்டிருந்தோம். மதில்சுவரில்தான் அவ்வளவு நேரமும் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வழியே சென்ற பலரின் ஏச்சும் எங்கள் ஆட்டத்தைக் கலைக்கவில்லை.

விளக்கு வைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நூல் பரணியின் கையில் இருந்தது. பாட்டி என்னை தேடிவருவதற்குள் கடைசியாக ஒருதடவை நூல் பிடித்துவிட்டு, பட்டத்தைப் பத்திரமாகக் கொண்டுபோக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த நேரத்தில் தெருவிளக்கின் மின்கம்பியில் சிக்கிக் கொண்டது பட்டம். பதற்றத்திலிருந்த பரணியிடமிருந்து நூலை வாங்கி மதிலிலிருந்தபடியே அசைத்து அசைத்து பட்டத்தை எடுத்துவிட ஆடினேன்.

ஏதோவொரு கணப்பிசகில் நூல் அறுந்தது. கம்பியிலிருந்த பட்டம் விழுந்து கொண்டிருந்தது. கையில் மிஞ்சிய நூலோடு மதிலிலிருந்து நானும் விழுந்து கொண்டிருந்தேன். ஏதோ புண்ணியவான் மதிலோரம் கொஞ்சம் மணல் குவித்து வைத்திருக்கிறான். வெளிகாயம் ஏதுமில்லை. நூலோடு மடங்கியபடியிருந்த வலதுகை வலித்தது. நண்பர்கள் பயந்தபடி கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி ஓடி, இடதுகையால் பட்டத்தை அள்ளிக்கொண்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன்.

விளையாடப் போய் வந்தாலும், கால்சட்டைப் பையில் ஏதேனும் தின்பண்டம் கோண்டுவருவேன் என்று வழக்கம் போல் கிட்டே வந்தான் தம்பி. நான் உதட்டைப் பிதுக்கி, இடம்வலமாகத் தலையசைத்ததும் முகம் சுருங்கி நகர்ந்துவிட்டான். வலதுகையை அசைக்கவே முடியவில்லை. விஷயத்தைச் சொன்னால் முதுகு சிவக்க அடித்த பின்னர்தான், ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போவாள் அம்மா. பாட்டியோ கெண்டைக்காலிலேயே போடுவாள். ஆக, வீட்டில் சொல்லவேயில்லை. இரவுணவை பாட்டியையே ஊட்டிவிடச் சொல்லிவிட்டதால் கையை அசைக்க வேண்டிய அவசியம் வரவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு வலியைத் தாங்கிவிட்டேன். இப்படி உள்வலி பழகிவிட்டதால்தானோ, என்னவோ, இப்போதும் பல்லைக் கடித்துக் கொண்டு வலி தாங்கமுடிகிறது போல.

இரவு தூங்கினேனோ, இல்லையோ, தெரியவில்லை. காலை விடியல் காட்டிக் கொடுத்துவிட்டது. பலமடங்கு வீங்கிவிட்டது வலதுகை. அழத் தொடங்கிவிட்டேன். என்னைப் பார்த்து தம்பியும் அழுதான். அம்மாவும் அப்பாவும் அழுகையோடும் திட்டோடும் திருவண்ணாமலைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். நகரை அடுத்த கீழ்நாத்தூரிலிருந்த புத்தூர் கட்டுக்காரர்களிடம் சிகிச்சை. எனக்குப் பிடித்த அந்தச் சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையைக் கிழித்துதான் கையை எடுக்கவேண்டிவந்தது. கையை மடக்கி முட்டை எல்லாம் வைத்த டானா கட்டு.

கை குணமாக பலமாதங்களானது. அன்றைக்கு என்னோடு விளையாடிய சிலரும் கூட, சில நாட்கள் எனக்கு முன்னால் முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு கடந்துபோனார்கள். எனக்குப் பின்னால் வேறு சில பையன்களோடு சேர்ந்து கொண்டு, என் போலவே கையை மடக்கிக் கொண்டு நடந்து அழகுகாட்டினார்கள்.

‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து.....’   

- யுவபாரதி

No comments: