November 17, 2014

வாய்க்காலை ஒட்டிய வீடு

கிழக்கே வாய்க்காலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான் அப்பன் விக்கிரமபாண்டீசுவரன். தெற்கே தெருவைப் பார்த்தபடி நிற்கிறாள் அம்மை செண்பகவல்லி. தெருவுக்கே அவள் பேர்தான். வீரவநல்லூரில் வீட்டுக்கு ஒரு செண்பகவல்லியோ, செண்பகமோ உண்டு. அப்பன் பேர் அந்த அளவுக்கு விளங்கவில்லை. மணிமுத்தாறு வாய்க்கால் முன்போலன்றி அடிக்கடி வறண்டால் கூட அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்பதால் இருக்கும்.
அம்மைக்கு எல்லாக் கதையும் தெரியும். எல்லோரும் அவளிடம்தான் வந்து அழுது தீர்ப்பார்கள். அல்லது நன்றி பாராட்டுவார்கள். அவளோடு பேசித் தீர்த்தபிறகு, அப்பனிடமும் வந்து வணக்கம் சொல்லிச் செல்வார்கள். நான் அவளைப் பார்க்கப் போனால் கூட, அவரையும் ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போடா என்று அவள் சொல்வதாகவே தோன்றும்.
வண்ணதாசனையோ, வண்ணநிலவனையோ போல நெல்லை நினைவுகளே முழுக்க வாய்க்கப் பெற்றவனல்ல நான். தொலைதூர வடக்கு மாவட்டம் ஒன்றிலேயே வாழ நேர்ந்ததால், இளவயதில் வழக்கமான கோடை விடுமுறைக்கோ, நடுவில் நேரும் நல்லது-கெட்டதுக்கோ வீரை வரும் எங்கள் குடும்பம். அம்மாவைப் பெற்ற கோமதிப்பாட்டியின் ஊர் அது. பள்ளிக்குச் செல்லும் முன்பே எனக்கு ஆனா ஆவன்னா, 1 2 3 எல்லாம் சொல்லித்தந்தவள். ஆஸ்துமா அவளைப் படாதபாடு படுத்தியது. பாட்டி போய் கொஞ்சம் காலமாகிறது. அவள் போனதும் கல்தரை பாவிய பழைய வீடும் போய்விட்டது. பழைய வீட்டை இடித்து புது மாதிரியில் கட்டிவிட்டார் மாமா. எல்லா வசதிகளும் இருக்கும் புதுவீட்டில் அவர் தனியாக வாழ்கிறார் இப்போது.
கோயில் நேர்த்தி ஒன்றிற்காக நேற்றிரவு வந்து சேர்ந்தவன் விடிந்ததும் விடியாததுமாக வாய்க்கால் பார்க்கப் போனேன். தண்ணீர் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் டானா, பானா, ஐயனார் கசை என வடிவம் மாறிமாறி வளையமிட்டபடி பறந்தது ஒரு குருவிக் கூட்டம். தலைக்கு மேலே சுற்றிச் சென்றன கிளிகள். எதையோ பற்றிவிட்ட நீர்க்காகம் நீர்விட்டுக் கிளம்பியது. குளிக்க இறங்கிய நேரம், ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்த இசக்கியண்ணன் அடையாளம் கண்டு ஊர்நலம், உத்தியோக நலம் விசாரித்தார். குளித்துக் கரையேறும் நேரம், கணேசண்ணன் இறங்கினார். நெஞ்சுவலி வந்து போனதும் மனிதன் பாதியாளாகிவிட்டார் என அம்மா சொன்னது சரிதான்.
அப்போதெல்லாம் வாய்க்காலில் நீராடிவிட்டுப் புறவாசல் படிக்கட்டிலேயே படியேறலாம். பழையவீட்டின் புறவாசல் திறந்து நுழைந்ததும், தென்னை மரம். அடுத்து சுவரினை ஒட்டி தரைமேடையில் இருக்கும் மாடனையும் மாடத்தியையும் வணங்கிவிட்டு உள்நுழைவேன். இரண்டு செங்கற்களை சுவரோடு வைத்து சுண்ணம் பூசிய வடிவங்கள். காலம் காலமாக இருப்பவர்கள். தனது இளம்வயதில் இருட்டில் தனியே செல்ல நேர்கையில் ‘மாடா! துணைக்கு வாடா!’ என்று அழைத்தால், வெள்ளை வேட்டி கட்டிய ஆஜானுபாகுவான உருவம் ஒன்று உடன் வருவதாகவே தோன்றும், கூப்பிட்டால் குரல் கொடுக்கும் என்றெல்லாம் சொல்வாள் அம்மா. வருடத்திற்கு ஒருமுறை வள்ளுவரை அழைத்து விசேஷ பூசை உண்டாம். நான் பார்க்க நேர்ந்ததில்லை. புதிதாய்க் கட்டிய வீட்டிலும் மாடன்-மாடத்திகளின் இடத்திற்குப் பாதகமில்லை.
கொல்லை எனும் பின்கட்டு நடுவில் ஒரு அடிபம்ப்பும், பக்கவாட்டில் கருங்கல் வைத்த விறகடுப்பும் கொண்டது. குழந்தைப் பருவத்தில் அதில் நெல் அவிவதைப் பார்த்ததுண்டு. அந்த வாசனை பிடிப்பதற்கே அருகில் நிற்பேன். மீசை மாமா எனும் கோமதிப் பாட்டியின் தம்பி பேரில் முன்பு இருந்தவைதான் வீடும் வயலும். முப்பது வயதிலேயே கணவரை இழந்து, பிள்ளைகளோடு தம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள் கோமதிப்பாட்டி. பாட்டியின் அம்மா செண்பகம்பாட்டி உயிரோடிருந்தவரை வயலை விற்கவிடவில்லை. வயலை விற்றதும் நெல் அவிவதும் நின்றது. பின்னர் வயசாளிகளுக்கான வென்னீர் அடுப்பாக மாறியது.
கொல்லையை அடுத்த கொட்டிலின் விதானமான மரத்தாலான மச்சிலில்தான் நெல் கொட்டி வைப்பார்கள். பலகையைத் தள்ளினால் நீரொழுக்கு போல் வந்துவிழும் நெல். பின்பு பயன்படாத தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டுவைக்கும் இடமானது. ஒருமுறை கண்ணாமூச்சி விளையாடுகையில் ஒளிந்து கொள்ள ஏறி விழுந்தது நினைவிருக்கிறது. கொட்டிலில் பெரிய ஊஞ்சல் ஒன்று இருந்தது. கொட்டிலின் தரைக்கடியில் பெரிய மனைப்பாம்பு இருப்பதாகச் சொல்வாள் பாட்டி. குழந்தைகள் ஊஞ்சலுக்குச் சண்டையிடாதிருக்க அப்படி பயமுறுத்தினாளோ என்னவோ.
கொட்டிலை அடுத்திருந்த அடுக்களையில்தான் உயிரோடிருந்தவரை வெந்துகொண்டிருப்பாள் முத்துமாமி. முற்றத்தை அடுத்திருந்த தாழ்வாரத்தில் இந்த வீட்டில் எல்லாருக்கும் பிள்ளைப்பேறு நடந்தது என்பாள் அம்மா. எனக்கு நினைவு தெரிந்த வயதில், உறவினர் வீட்டுப் பிள்ளைப்பேறுகள் பர்வதராணி டாக்டர் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டன.
தாழ்வாரத்தை அடுத்த ரேழி எனும் பெரிய இடைகழியில் முப்பது பேர் உள்ளே உட்கார்ந்து கொள்ளும் அளவுக்குப் பெரிய மரப்பெட்டி இருந்தது. பேர் தெரியாத பல வெண்கலப் பாத்திரங்கள் அதில் இருக்கும். அங்கிருந்த கட்டிலில்தான் திட சரீரமும் நாகர்கோவிலுக்கே உரிய நீண்டு அடர்ந்த கூந்தலும் கொண்ட மாமி, புற்றுநோய் முற்ற முற்ற உடல் நைந்து கேசம் உதிர்ந்த நிலையில் நாற்பது வயதிலேயே தன் கடைசி மூச்சை விட்டாள். எப்போதும் குளுமை மாறாதிருந்த ரேழியின் கல்மெத்தையில், இருபுறமும் கையை ஊன்றியபடி உட்கார்ந்து பேசுவார் மீசை மாமா – கவிஞர் ஹவியின் அப்பா. பின்னர் மதுரையே வாழிடமாகிவிட்ட அவர், அவரது அம்மா இறந்தபின் இவ்வீட்டை என் தாய்மாமனுக்கு விற்றுவிட்டார். கோமதிப்பாட்டி இருந்தவரை அந்த பழைய வீட்டை இடிக்கவிடாமல் தடுத்துவந்தாள்.
ரேழியின் ஓரம் சுவரில் பதித்த பூஜை அலமாரி. அதை அடுத்து பாவுள் எனும் பலசரக்குச் சாமான்கள் வைப்பறை, மிதிவண்டிகள் நிறுத்தவும் குழந்தைகள் பரமபதம் விளையாடவும் நடை. நடைக்கு மேலிருந்த மச்சிலில்தான் தாத்தா வைத்துவிட்டுப் போனதும் யாரும் சீந்தாமலிருந்ததுமான தாஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும் சூதாடியும் மற்றும் சில முன்னேற்றப் பதிப்பக நூல்களும் கிடைத்தன.
முன்வாசலில் மரச்சட்டம் போட்டு மூடப்பட்ட திண்ணையில் அமர்ந்தபடி, கோவிலுக்கு வருவோர் போவோர் எனத் தெருவில் தென்படும் எல்லோரையும் விசாரிப்பாள் கோமதிப்பாட்டி. பக்கத்துவீட்டில் விஜயா பெரியம்மா இருந்தாள். செண்பகம் பாட்டிக்கு தாய்மாமன் மகனும் பழம்பெரும் நகைச்சுவை நடிகருமான புளிமூட்டை ராமசாமியின் மகள். பெரியம்மாவோடு நிறைய பேசுவாள் பாட்டி. சில சமயம் சண்டையே வரும். பேசச் சலிக்காத பாட்டிக்கு வெளியாரோடு பேசக்கிடைத்ததுதான் திண்ணை. மாமிக்கு அதுவும் கிடையாது. அந்தத் திண்ணை இருந்த இடம் புதுவீட்டில் கார் நிறுத்தத் தோதுவான வெட்டவெளியாகிவிட்டது.
நன்கு விடிந்துவிட்டது. முன்வாசல் இரும்புக் கதவைத் திறந்தேன். தெருவில் யாருமில்லை. செண்பகவல்லி அம்மையும் கதைகேட்க தெருவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
- யுவபாரதி 

No comments: