December 08, 2014

அம்பேத்கரும் ஒரு கிராமக் குடியரசும்

வைகை அணையின் இருப்பிடம் குறித்து யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. தேனி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலம் அது. ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் செல்லும் வழியில் கிளை பிரிந்து செல்லும் ஒரு சிற்றூர் சீரங்கபுரம். விஜயநகரப் பேரரசின் இறுதிக்கட்ட அரசர்களில் ஶ்ரீரங்கராயர் என்ற பெயரில் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் பெயரால் நிறுவப்பட்ட ஊராக இருக்கலாம்.
நண்பர் ஒருவருடன் பேசுகையில் அவ்வூர் பற்றிச் சொன்னார். அதைக் கேட்டபோது மனதில் வேதனை கவிந்த அதே கணம், நம் நாட்டில் இன்றும் பல கிராமங்களின் நடைமுறைதானே இது என்ற எண்ணமும் எழுந்தது. எந்தவொரு விஷயத்திலும் நடைமுறையை இயல்பானது என்று நம் மனம் பழக்கப்பட்டு, அது குறித்து வருந்துவதையும் விட்டுவிடுகிறது. அப்படியே சாதிய ஏற்றத்தாழ்வையும், அதன்வழியான ஒடுக்குமுறையையும்  கவனிக்கத் தவறிவிடுகிறது. கவனத்திற்கு வந்தாலும் பெரிதாய்க் கவலைப்படுவதில்லை.

‘இந்துக்களும் பொது மனசாட்சி இல்லாமையும்’ என்ற கட்டுரையில் மேல்நாட்டு அடிமை முறையையும், நம்நாட்டுச் சாதி முறையையும் ஒப்பிட்டு அம்பேத்கர் சொல்வார் – “சட்டப்படி ஓர் அடிமை சுதந்திரமானவனல்ல; ஆனால் சமூகரீதியாக அவன் தனது ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ளமுடியும். சட்டப்படி ஒரு தீண்டப்படாதவன் சுதந்திர மனிதன், ஆனால் சமூகரீதியாக அவன் தன்னுடைய ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ள உரிமையற்றவன்.”

அரசியல் மற்றும் பொருளியல் கருத்தியலால் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஒடுக்குமுறைக்கும், அரசியல்-பொருளியல் இலாபங்களை உள்ளடக்கிய கலாச்சாரக் கருத்தியலால் செயல்படுத்தப்படும் ஒடுக்குமுறைக்குமான வேறுபாட்டையே வேறு சொற்களில் எளிதாகச் சொல்கிறார் அம்பேத்கர். பின்சொன்னதின் செயல்களம் மனம் என்பதால் முன்சொன்னதை விட ஆழமானது. மனதில் செயல்பட்டு இயல்பென ஏற்றுக்கொள்ள வைக்கையில் உடல்–உடைமை–உரிமை என்ற கேள்வி எழாமல் ஒடுக்குமுறை எளிதாகிறது. தன்னுணர்வாலும் கல்வியாலும் ஒடுக்கப்படுவோரிடம் சமத்துவத்துக்கான எத்தனம் எழுகையில், உடல்-உடைமை மீதான வன்முறையாகி இறுதியாக மனதை முடக்கி ஆசுவாசம் கொள்கிறது ஆதிக்கசக்தி.

சீரங்கபுரம் என்பது நாயக்கர்கள் பெரும்பான்மையாகவும், அவர்களது எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் அருந்ததியர்களும் வாழும் கிராமம். விஸ்வகர்மா மற்றும் பிற சாதியினர் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்றனர். கிராமத்திற்கேயுரிய பண்புப்படி ஊரும் சேரியும் வேறுவேறுதான். நிலவுடைமை நாயக்கர்களுக்கே உரியதாயிருப்பதால் அவர்களை அருந்ததியர்கள் நம்பியே வாழும் நிலை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

அரசு நிதியால் நிறுவப்பட்டுள்ள சமுதாயக் கூடமும் கலையரங்கமும் சாதிஇந்துக்களின் பயன்பாட்டிற்கே உரியவை. நடுநிலைப்பள்ளியிலும் அங்கன்வாடியிலும் சாதிஇந்து மற்றும் தலித் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் தனித்தனியாகவே அமரவைக்கப்படுவர். அரசால் போடப்பட்டுள்ள பிரதான சாலையில் மட்டும் தலித்துகள் செருப்பணிந்து நடக்கலாம். சாதிஇந்துக்கள் வாழும் வீதிகளுக்கோ, அழைப்பின் பேரில் வீடுகளுக்கோ செல்கையில் தலித்துகள் செருப்பணிய அனுமதியில்லை. பலசரக்குக் கடைக்குக் கூட தலித்துகள் மட்டும் செருப்பை வாசலிலேயே கழற்றிவைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.

ஊருக்குள் தலித்துகள் வேட்டியை மடித்துக் கட்டக்கூடாது. துண்டைக் கக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாதிஇந்துக்களின் முன் பேசவேண்டும்; சாதிஇந்துக்களை ‘சாமி’ என்றே அழைக்கவேண்டும். தேனீர்க் கடைகளில் முன்போலிருந்த இரட்டைக்குவளை முறை மாறிவிட்டது. இப்போது சாதிஇந்துக்களுக்கு எவர்சில்வர் குவளைகள்; தலித்துகளுக்குப் பயன்படுத்தியதும் உடன் எறியும் காகிதக் குவளைகள்.

இவ்வளவும் சொன்ன நண்பர், “பணியக்கூடாதுன்னு தெரியுது சார். ஆனா வீட்டுக்குச் சாமான் வாங்கப் போகையிலே, ஏன்வம்புன்னு கடைவாசல்லே செருப்பைக் கழற்றிப் போட்டுட்டுதான் போறேன். என்ன பண்றது?” என்று கேட்டார்.

“இந்தியக் கிராமங்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அற்றவை. எனவே, ஜனநாயகமும் அற்றவை. குடியரசு என்பதற்கு நேர்மாறானது இந்தியக் கிராமம். எனவே, இந்தியக் கிராமத்தை ஒரு குடியரசு என்றால், அது தீண்டப்படுவோர்க்காக தீண்டப்படுவோரால் நடத்தப்படும் தீண்டப்படுவோரின் குடியரசாகும்; தீண்டப்படாதோரின் மீதான இந்துக்களின் ஏகாதிபத்தியமுமாகும்” – டாக்டர் அம்பேத்கர்.

No comments: