December 02, 2016

தாமரைக் குளம் ஏனோ கொல்லவில்லை


வடக்குக் கோபுர வாசலிலிருந்து பக்கவாட்டில் வரும் சந்து தேரடி வீதியில் வந்து இறங்கும். அந்த சந்திப்பில் இருந்த தட்டுக்கடை ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கிறிஸ்டி சொன்னான். வழக்கறிஞனாகப் பதிவு செய்திருந்தவன். மூத்தவர் ஒருவரிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான்.

‘டவுனில் எனக்கு முதல் அட்ரஸ்னு சொன்னா உங்க வீடுதானே பாரதி! என் ஃபோன் நம்பர்னு முதல்லே எல்லார்கிட்டேயும் கொடுத்ததும் உங்க வீட்டு நம்பர்தானே! நீங்க எல்லாரும் இப்படி அலையுற மாதிரி ஆயிடுச்சே.’

வெளியில் மௌனம் காட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

‘மனசை விட்டுடாதீங்க பாரதி.’

மனத்தை நான் விட்டாலும் மனம் எங்கே என்னை விடுகிறது. கட்டணம் கட்டாத இணைப்பை எத்தனை நாள்தான் தொலைபேசித் துறை விட்டுவைத்திருக்கும். வெண்கல பித்தளைப் பாத்திரங்கள் கடைக்குப் போய் வருடங்களிருக்கும். குளிர்சாதனப் பெட்டி, மரக்கட்டில், மாவரைக்கும் எந்திரம் உள்ளிட்ட விலையுள்ள பொருள்களோடு கூட, பயன்பாட்டிலிருந்த அரிசி மூட்டை கூட படியிறங்கிப் போய்விட்டது. நான்கு சுவரும் கூரையும் சில தட்டுமுட்டுச் சாமான்களுமே வெறித்துக் கிடந்த வீட்டில் புத்தகங்கள் மட்டும் இளித்துக் கொண்டிருந்தன.

மூன்று இரவுகளை வச்சிரவேலு உதவியால் துர்க்கையம்மன் கோயிலை அடுத்து அவன் மேலாளராயிருந்த சத்திரத்திலும் மூன்று இரவுகளை மருந்தாளுநன் செந்தில் தங்கியிருந்த அறையிலுமாகக் கழித்துவிட்டு அன்று இரவு தேரடி வீதியில் நின்று கொண்டிருந்தேன். தாமரை நகரில் அவனது அண்ணன் ஒருவர் கட்டிக் கொண்டிருந்த வீடு ஒன்று இப்போது பாதியில் நிற்பதாகச் சொன்னான். அங்கேயே தங்கிக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டேன்.

பவித்திரம் கிராமத்திலிருந்த அவன் வீட்டிற்குதான் முதலில் கூப்பிட்டான். சுற்றிலும் விவசாய நிலம். நடுவே கிணற்றோடும் தோட்டத்தோடும் கூடிய அழகிய வீடு. அவனது அம்மா அப்பாவும் அண்ணன்களும் என்னிடம் அத்தனை பிரியமாக இருப்பார்கள். மலரும் குட்டியும் ‘அண்ணா அண்ணா’ என்று உயிரையே விடுவார்கள். குட்டி தான் வரைந்திருக்கிற ஓவியங்களையெல்லாம் காட்டி என் அபிப்பிராயம் கேட்கும். அப்போதைய நிலையில் அங்கு போக மனம் ஒப்பவில்லை.

அங்கிருந்து கிளம்பி மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து அங்கிருந்து நான் வேலை பார்க்கும் கிராமத்திற்குச் செல்ல தோதுப்படாது என்று சொல்லிவிட்டேன். நண்பரோ உறவினரோ, நன்றாக இருந்த போது ஒருவர் வீட்டுக்குச் செல்வதும் உண்பதும் இருப்பதும் வேறு. உணவுக்கும் கூரைக்கும் உழலும்போது அடுத்தவர் வீட்டுக்குச் செல்வது என்பது வேறு. கெட்ட காலத்தில் காடு, மலை, கோயில், குட்டிச்சுவர், சத்திரம், பொது இடம் என்று கிடப்பதே கௌரவம்.

திருவண்ணாமலைக்குத் தென்மேற்கே சாத்தனூர் அணை செல்லும் சாலையில் நகர எல்லைக்குச் சில பர்லாங்குகள் தள்ளி இருந்தது தாமரை நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு. அவனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனான் கிறிஸ்டி. உள்ளே வந்து துண்டை விரித்துப் படுத்துவிட்டேன். தரை வேலை முடிந்திருந்தது. சுவர்களும் விதானமும் செங்கல்லும் சிமெண்டுமாக நின்றிருந்தன. வெளிக்கதவைத் தவிர பிற கதவுகள் இன்னும் பொருத்தப்படவில்லை. சன்னலுக்காக வைக்கப்பட்டிருந்த இடைவெளிகளின் வழி நன்றாகக் காற்று வந்தது.

முன்பு தாமரை நகரைக் கடந்து மெய்யூருக்கும் வாணாபுரத்திற்கும் சாத்தனூர் அணைக்கும் வேலைக்குப் போயிருந்திருக்கிறேன். அப்போது இரு சக்கர வாகனமும் என்னிடமிருந்தது. மோட்டுவளையைப் பார்த்துப் படுத்துக் கொண்டிருந்த அப்போது கூட, வேலை சார்ந்தவர்களும் தனிப்பட்ட விதத்தில் தெரிந்தவர்களுமாக எத்தனையோ நண்பர்கள் அதே வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் குடியிருந்தார்கள். என் முகத்தை யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.

மறுநாள் வேலைக்குப் போய்வந்தேன். அப்போதும் எஞ்சியிருந்த நண்பர்கள் சிலரை சந்திக்கும் இடமாக நகரமையத்திலிருந்த தொண்டரீசர் கோயிலுக்கு நடந்து போனேன். ஏதோ யாகம் நடந்து கொண்டிருந்தது. காதில் விழுந்த சொற்களிலிருந்து ருத்திரனை அழைப்பது கேட்டது. மீண்டும் அங்கிருந்து மேற்கே மைல்கள் நடந்து ரமணாசிரமத்தைத் தாண்டி கல்லூரி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்த பேரா.நெடுஞ்செழியன் வீடு போனேன். ‘புத்ர’வும் ‘பாடகி’யும் வாங்கிக்கொண்டு என் பாதிவீட்டிற்குத் திரும்பினேன். நடந்தே அழியணும் வழி. அரைமனிதனாக அலைந்து கொண்டிருந்த காலத்திலும் தொடர்பை அறுத்துக்கொள்ளாமல் பேணமுடிந்த ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

நகருக்கு உள்ளே ஐயங்குளமும் வெளியே தாமரைக்குளமும் தற்கொலைகளுக்குப் பேர் போனவை. மறுநாள் காலை தாமரைக்குளத்திற்கு நடந்து கொண்டிருந்தேன். குளக்கரையில் காலைக்கடன் முடித்துத் திரும்புகையில் யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஓர் உணர்வு. உணர்வு உந்திய திசையில் சட்டென திரும்பினேன். காலருகே நல்லதொன்று தலை தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. சாவு குறித்து அச்சத்தை வாழ்க்கைப்பாடு விலக்கியிருந்தது. நாமாய்த் தேடிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இருந்தாலும் கண்ணெதிரே காலம் அசைந்தாடுவதைப் பார்த்தபோது உள்ளுக்குள் எங்கோ பதற்றம் துளிர்ப்பது தெரிந்தது. அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சில கணங்கள் உற்றுப்பார்த்துவிட்டு அதன்பாட்டிற்கு ஊர்ந்து மறைந்தது. நானும் தரையிறங்கிவிட்டேன். வாழ்வெனும் நஞ்சு ஏறி ஏறி கொஞ்சம் கொஞ்சமாகச் சாகவேண்டியவன் இவன் என்று நினைத்ததோ என்னவோ.

(நவம்பர் 2016)

2 comments:

Yaathoramani.blogspot.com said...

முடித்த விதம்
நறுக்கெனக் கொட்டிப் போனது
பாம்பு கொட்டவில்லையாயினும்..

Yuvabharathy Manikandan said...

நன்றி ரமணி