January 04, 2010

பைக்காரா *


பாறைகள் தவழும்
அருவியில் காலம் நழுவ
பயந்து கைப்பிடித்தோம்

பனி பூக்க இடமின்றி கோர்த்து
உறைந்திருந்த விரல்கள் கேட்டிருக்குமோ
இதயநதியின் சலசலப்புக்கு ஊடான
கூழாங்கல் பெயர்வுகளின் அடிநாதம்

இரவின் நேசம் ஈரமாய்
மிச்சமிருக்கும் சாலையில்
பேசாமல் நடந்தோம்

மௌனத்தின் வேகம்
மோத மோதக் கிறங்கி அசைந்தன
இருபக்கமும் தைலமரங்கள்

புலன்களை யுகாந்திர ஒளியால்
கூசச் செய்வது
உன் அன்பின் பிறைநிழல் கூட

இருவேறு படகுகள்
ஒருசேர மிதித்தோம்

உன்னைத் தொட நானும்
என்னைத் தொட நீயும்
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனோம்

பைக்காரா ஏரியில்
ஆகாயத் தாமரையின் இடையூறுகளில்லை
மேகங்கள் நீந்துவதற்கு

வார்த்தைகள் தவிக்கும் இடைவெளியில்
தர இயலாத ஒன்றைத்
தந்தும் சுமந்தும் கரையிறங்குகிறாய்
என் அரும்பு வெதும்ப.

( * உதகையை அடுத்த ஒரு சுற்றுலாத் தலம் )

- யுவபாரதி

No comments: