January 22, 2012

"புதிய தலைமுறை" இப்படிச் செய்யலாமா?

அன்புள்ள புதிய தலைமுறை இதழாசிரியர் திரு.மாலன் அவர்களுக்கு,


வணக்கம்.


இந்த வாரத்தைய "புதிய தலைமுறை" இதழ் (26 ஜனவரி 2012, மலர் 3, இதழ் 18) கண்டேன். "இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?" என்ற கவர் ஸ்டோரி படித்தேன். வரவேற்கத்தக்க கட்டுரை அது. 


ஆனால், அது தொடர்பாக, "பணிக்கரின் ஆவேசம்" என்ற சிறு கட்டுரை, பெட்டிச் செய்தி அளவில் (பக்கம் 12) வெளியாகியிருக்கிறது. படித்ததும் நான் அதிர்ந்து போனேன். "பணிக்கர் என்றொரு நடுவர்" என்ற தலைப்பில் 2011 டிசம்பர் 16 அன்று எனது வலைப்பூவிலும், முகநூலிதும் நான் எழுதி, பதிவிட்ட சிறு கட்டுரை அது. முகநூலில் பலராலும் படிக்கப்பட்டு, பின்னூட்டமிடப்பட்ட பதிவு அது. ஆனால், தலைப்பு மட்டும் மாற்றப்பட்டு ஓர் எழுத்தும் பிசகாமல் அப்படியே தங்கள் இதழில் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதன் கீழ் எனது பெயரோ, வலைப்பதிவு முகவரியோ குறிப்பிடப்படவுமில்லை.


கீழ்க்காணும் எனது வலைப்பூ, முகநூல் சுட்டிகளைப் பாருங்கள் :



நான் எழுதிய கருத்தின் அடிப்படையில் வேறு விதமாக தங்கள் இதழ் சார்ந்த எவராலேனும் எழுதப்பட்டிருந்தால் அது வேறு. எழுத்து பிசகாமல் அப்படியே எனது அச்சிறு கட்டுரை Cut and Paste செய்யப்பட்டுள்ளது.


எனது ஒரு சிறு பதிவைத் தங்களின் இதழில் வெளியிடுகிறீர்கள் எனில் அதன் கீழ் எனது பெயரைக் குறிப்பிடுவதுதானே சரி? அதே பதிவைத் தலைப்பு மாற்றி அப்படியே பெயர் ஏதுமின்றி வெளியிடுவது என்பது, அது ஏதோ தங்கள் பத்திரிகையில் பணியாற்றும் யாரோ எழுதியதாகத்தானே அர்த்தப்படும்?


நீங்கள் இதழாசிரியர் மட்டுமல்ல. நீங்களே ஓர் எழுத்தாளரும் கூட. எனில், இச்செய்கை உண்மையில் எழுதிய என்னை எப்படி காயப்படுத்தும் என்பதை நீங்களே அறிவீர்கள்.

மின் ஊடகத்தில் வாசிப்பவர்கள் அச்சு ஊடகத்திலும் வாசிக்கப் போகிறார்களா? என்று இதைச் செய்தவர்கள் எண்ணியிருப்பார்களெனில் அது தவறு. 

நல்ல வாசகர்கள் பலரும் விரும்பிப் படிக்கும் வகையில் வெளிவரும் தங்கள் இதழில் இவ்விதம் நேர்ந்திருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. "புதிய தலைமுறை"யில் வெளியாகும் பல படைப்புகள், கட்டுரைகள் மீதான நம்பகத் தன்மையையும் ஐயுற வைக்கிறது.

இச்செய்கைக்குப் "புதிய தலைமுறை"யின் அடுத்த இதழிலேனும் வருத்தம் தெரிவிக்கப்படுமானால் திருப்தியுறுவேன்.

அன்புடன்,

யுவபாரதி.

22.01.2012

8 comments:

Thangavel Manickam said...

எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள் யுவபாரதி! பெயரே டெரராக இருக்கிறது பாரதி !

மாலனாவது உங்களிடம் மன்னிப்புக் கேட்பதாவது?

ஏன் இந்த விபரீத ஆசை உங்களுக்கு ?

சி.பி.செந்தில்குமார் said...

MR MAALAN HAS TO ANSWER

குடந்தை அன்புமணி said...

நிச்சயம் இது கண்டித்தக்கது- வருந்தத்தக்கது. இதை புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் பார்வைக்கு சமர்ப்பித்தாயிற்றா...

Raj said...

may be you can discuss it with yuvakrishna(lucky). He works for Pudhiya thalaimurai.

சென்னை பித்தன் said...

வருத்தப்பட வேண்டிய செய்திதான். எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் புதிய தலைமுறையினர்?

Anonymous said...

நீங்கள் ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியிருக்கும் பகுதி இது. உங்கள் சொந்தச் சரக்கு அல்ல. எனவே உங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டியதில்லை. நீங்கள் இந்தக் கருத்துக்கு உரிமை கொண்டாடவும் கூடாது

Yuvabharathy Manikandan said...

மிஸ்டர் அனானிமஸ், ம.பொ.சி.யின் அந்த மேற்கோளை மட்டும் அவர்கள் எடுத்துப் பயன்படுத்தியிருந்தால், நான் ஏன் கேட்கப் போகிறேன்? அதோடு சேர்த்து என் பதிவை அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதால்தானே கேட்கிறேன்? கடிதத்திலும் இதைத்தானே குறிப்பிட்டுருக்கிறேன்?

அந்த மேற்கோளைப் பயன்படுத்தி அவர்களது கருத்தை வெளிப்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.

அதை விடுத்து எனது பதிவை - தலைப்பை மட்டும் மாற்றி - எனது பெயரின்றி - அப்படியே அச்சிட்டிருப்பதுதான் எனது வருத்தத்திற்குக் காரணம்.

எனது பதிவையும், இதழில் வெளியாகியுள்ள பகுதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். என் ஆதங்கம் புரியும்.

அனானிமஸாக இருந்தாலும் நான் சொல்வது இதுதான்.

(கருத்திடும்போது அனானிமஸாக ஏன் கருத்திடுகிறீர்கள்? உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்தான் என்ன?)

Yuvabharathy Manikandan said...

நண்பர்களே! "புதிய தலைமுறை இப்படிச் செய்யலாமா?" என்ற எனது மின்னஞ்சலுக்குப் "புதிய தலைமுறை" இதழாசிரியர் திரு. மாலன் பின்வருமாறு எனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

திரு.மாலன் அவர்களுக்கு என் நன்றி.

//அன்புள்ள யுவபாரதி,

வணக்கம்.

தங்கள் மடல் கிடைத்தது. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

நான் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறேன். உங்கள் வலைப்பூபற்றிய குறிப்பை அடுத்த இதழில் வெளியிட ஏற்பாடு செய்கிறேன்.

அன்புடன்

மாலன்//