May 07, 2013

செ.ச.செந்தில்நாதனின் "டிராகன் : புதிய வல்லரசு சீனா"


(தோழர் செ.ச.செந்தில்நாதன் அவர்களின் "டிராகன் : புதிய வல்லரசு சீனா" என்ற நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். முக்கியமானதொரு ஆய்வு நூல். அளவிலும் பெரியது. சீனாவைப் போலவே. அவசியம் படிக்கவும் விவாதிக்கவும் வேண்டிய நூல்.)

கி.மு.15ஆம் நூற்றாண்டு முதலான சீன வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளை அவற்றின் அரசியல் - பொருளாதார - சமூக நிலையோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். கோங் ஃபூ த்ஸி (கன்ஃபூஷியஸ்), லாஓ த்ஸி (லாவோட்ஸ்) முதலான சிந்தனையாளர்களின் தத்துவங்கள் ஒவ்வொரு சீனரின் வாழ்விலும் இன்று வரை ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஒவ்வொரு காலகட்ட ரீதியாக நிறுவுகிறார் செந்தில்நாதன்.

மேலும், பேரரசுக் காலம், பொளத்தப் பரவல் ஏற்படுத்திய தாக்கம், கீழ்க் கடற்கரையோர காலனியத் தாக்கம், நவீனத்துவத்தின் புகுகை, சன்-யாட்-சென்னின் போராட்டம், கம்யூனிஸ்ட் புரட்சி, சோசலிச சந்தைப் பொருளாதாரம் என சீன வரலாற்றை முழுமையாக ஆராய்ந்துள்ளார் ஆசிரியர்.

சோசலிச அரசின் சர்வாதிகாரம், மாவோ வழிபாடு, சீன கம்யூன் முறையின் (குறைந்த பட்ச) சாதக - (அதிக பட்ச) பாதகங்கள், மாவோ காலத்தில் அனைவருக்கும் ஆரம்பக் கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அதே சமயம் உயர் கல்விக்கு எதிரான அப்போதைய அரசின் மனநிலை, பெருமளவு சூழ்ந்திருந்த ஏழ்மை குறித்து நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

'செல்வம் சேர்ப்பதே சிறப்பு' என்ற மந்திரத்துடன் டெங் ஷியாவ்ப்பிங் காலத்தில் உலகமயமாதலுக்கும் சந்தைப் பொருளாதத்துக்கும் சீனா நகர்த்தப்பட்ட விதம், சீனத்தில் பெருகியுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அவை ஏற்படுத்தியுள்ள பாரதூரமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கம்யூனிஸ்ட் கட்சியில் நிரம்பியுள்ள கோடீஸ்வரர்கள், முப்பதே வருடங்களுக்குள் உலகின் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான வல்லரசான விதம், அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலை குறித்து பல அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.

பொருளாதார வல்லரசாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அது உழைக்கும் மக்களைக் கையாண்ட விதமும், பன்னாட்டு முதலாளிகளை ஈர்க்கும் வண்ணம் இரு பத்தாண்டுகளில் சீனத்தின் உள்கட்டமைப்பை முற்றிலும் மேம்படுத்திய அதே சமயத்தில் பல்வேறு சலுகைகளோடு அவர்களை வரவேற்ற விதமும், உலகச் சந்தையைத் தன்வயப்படுத்த அது கையாண்ட நல்லதும் அல்லதுமான அனைத்து வழிமுறைகளும் மிரளச் செய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, சந்தைப் பொருளாதாரம் முதலான விஷயங்களில் சீனத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவின் பின்தங்கிய நிலையும் அதற்கான காரணங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

பல கட்சிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களையும் கொண்ட ஜனநாயக நாட்டை விட, சுயேச்சாதிகாரம் மிக்க ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சி சர்வாதிகார நாடு பன்னாட்டு முதலாளிகளுக்கு எவ்வளவு ஏற்றதாக - விரும்பத்தக்கதாக உள்ளது என்பதை விளக்குகிறார். (சுயேச்சையான தொழிற் சங்கத்திற்கும் வழியில்லைதானே?)பொருளாதார ரீதியாக தாராளவாதத்திற்கு வழிவிட்ட டெங்கும், கடந்த எண்பதுகளின் இறுதியில் அரசியல் ரீதியான ஜனநாயத்திற்காக எழுந்த மாணவர்-தொழிலாளர்களை தியான்மென் சதுக்கத்தில் படுகொலை செய்யத் தயங்காத விதத்தைச் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.

செ.ச.செந்தில்நாதன்
பொருளாதார ரீதியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ள சீனம், பெரும் சக்தியாக வளர்ந்துள்ள இன்றைய நிலையில் அரசியல் ரீதியாக நட்பு கொண்டுள்ள நாடுகள் பெரும்பாலும் மன்னராட்சி, ராணுவ ஆட்சி, அரை ஜனநாயகம் என்றவாறே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சீனத்தின் தொழிலுற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்வளம் உள்ள நாடுகளாகவும் அவை இருப்பதையும் காட்டுகிறார். இந்திய - சீன உறவு-பகை குறித்து விவாதிக்க ஒரு பெரும் அத்தியாயத்தையே எழுதியுள்ளார் செந்தில்நாதன்.

விமர்சன ரீதியாக சீன வரலாற்றை அணுகுதல் அல்லது ஆராய்தல் என்றாலே, கண்ணைக் கட்டிக்கொண்டு அமெரிக்க அடிவருடிகள், தரகு முதலாளிகள், அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தும் இடதுசாரிகளே அதிகம். மிகப் பெரும் பொருளாதார பலத்தை வெகுக் குறுகிய காலத்தில் எட்டிய சீனம் கண்டுள்ள (டிராகன்) வளர்ச்சி கண்டு புளகாங்கிதம் கொண்டு மெய்சிலிர்ப்பவர்களும், சோசலிச சீனம்... சோசலிச சீனம்... எனக் குரல் விற்பவர்களும் சீனம் குறித்த தங்களது அபிமானத்தை விரைவில் மாற்றிக் கொள்ளவேண்டிய காலம் வரும் என்று கருதுகிறேன்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எந்த விதத்திலும் மக்கள் சீனம்(?) மாற்று இல்லை. சந்தைப் பொருளாதாரமே அரசைத் தீர்மானிக்கும் நிலையில் இருந்தாலும், குறைந்த பட்சமாகவேனும் ஜனநாயக முகத்தைக் காட்டிவருகிறது அமெரிக்கா. ஆனால், அரசியல்-ஊடகம்-இணையம் என்று எந்த வகையிலும் ஜனநாயகம் என்ற வார்த்தையைப் பெயரளவில் கூட ஒப்புக் கொள்ளாத ஒரு கட்சி சர்வாதிகாரமும் அதன் சந்தைப் பொருளாதாரமும் கொண்டது சீனம். ஆக, இது எந்த விதத்திலும் மனித உலகிற்கு நன்மை பயக்கப் போவதில்லை.

மிஞ்சிப்போனால், வட அமெரிக்கக் கண்டத்திலிருக்கும் ஒரு நாட்டுக்கு இணையாக, நமது ஆசிய கண்டத்திலிருக்கும் ஒரு நாடு வல்லரசாகியிருக்கிறது என்று தோள்களைக் குலுக்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

- யுவபாரதி

வெளியீடு:
ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-24.


பக்கம்: 512 விலை ரூ.250

No comments: