September 18, 2015

பிள்ளையாருக்குக் காது பெரிது

காலையில் சீர்காழி வந்து எழுப்பிவிட்டார். பல் தேய்த்து குளித்து வருவதற்குள் எல்.ஆர்.ஈசுவரி வந்து ஆட ஆரம்பித்தார். வீட்டில் வழிபாடு முடித்து வணங்கி எழுகையில் ரஜினி, கமல் தொடங்கி மதியம் வரை சிம்பு, தனுஷ் எல்லாம் கூட வந்து காதலும் வீரமும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாள். வீட்டில் இருந்து ஒரு வேலை பார்க்கமுடியவில்லை. சற்று கண்ணயரலாம் என்றாலும் முடியாது.

தெருவின் நடுமத்தியில் பெரிய பிள்ளையார் சிலை. அவர் பாதத்திலேயே ஒலிபெருக்கி வைத்து, பகலெல்லாம் மேற்சொன்ன சகலவிதப் பாடல்களோடும் வழிபடுகிறார்கள். பராமரிப்பெல்லாம் பத்து-இருபது வயதுகளுக்குள் உள்ள பிள்ளைகள்.

'வீட்டில் உட்கார முடியலே தம்பிகளா! சத்தத்தைக் கொஞ்சம் குறைச்சு வைச்சுக் கேளுங்கப்பா' என இரண்டு முறை சென்று சொல்லும்படியானது. 'எதுக்குடா ஊர் வம்பு?' என்று அம்மா சொன்னாலும், 'அந்தப் பசங்க சந்தோஷத்தைக் கொண்டாட வேணாம்னா சொல்றேன்? அடுத்தவங்க நிம்மதியைக் கெடுக்கக் கூடாதில்லேமா!' என்று சொல்லிவிட்டுதான் சென்றேன்.

போய்ச் சொன்ன மரியாதைக்கு 'சரிங்கண்ணே' என்றபடி பாட்டை நிறுத்தினார்கள். 'ஐயையோ, உங்களைப் பாட்டே கேட்கவேணாம்னு சொல்லலையே, தெருவிலே இருக்குற மத்தவங்களுக்குத் தொந்தரவா இல்லாமக் கேளுங்கன்னுதானே சொல்றேன்' என்று பதறிச் சொன்னேன். அமைதியாக இருந்துவிட்டனர். எனக்குதான் 'அச்சோ! பிள்ளைகளைக் காயப்படுத்திட்டமோ!' என்றாகிவிட்டது.

வீடு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 'சில்லரையாச் செதறிட்டேண்டி' என்று கொம்பன் முருங்கை மரம் ஏறிக் கதறத் தொடங்கிவிட்டார். இரண்டாவது முறையும் இப்படியே ஆனது. 'ம்கூம். இது சரிப்பட்டு வராது. கிளம்பிடவேண்டியதுதான். இரவு வரை வீடு திரும்பக்கூடாது' என்று தீர்மானித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

புத்தகமும் கையுமாய்க் கிளம்பி, முக்கிலிருக்கும் பெரியவர் கடைக்குச் சென்றதும், 'மதுரைக்கா தம்பி?' என்று பொதுவாகக் கேட்டார். மேலும் கீழுமாய்த் தலையசைத்துவிட்டு விசனம் சொன்னேன். 'போன வருசம் வரைக்கும் இங்கே இதுக்காக ஸ்பீக்கர் செட் எல்லாம் கிடையாது தம்பி. இந்த வருசம்தான் பசங்க இதுக்கும் சேர்த்தே பெரிய வசூல் பண்ணி இப்படிப் பண்றாங்க. சனிக்கிழமை வரைக்கும் இப்படித்தான் அலறவிடுவாங்க. ஒன்னும் கேட்கமுடியாது. மதிக்க மாட்டானுங்க' என்றார்.

அடடா. ஆமாம். பிள்ளையாரைக் கரைக்க மூன்று நாள் ஆகுமே. பிள்ளையாருக்குக் காது பெரிது. எவ்வளவு பெரிய சத்தமும் கேட்பார். நமக்கு அப்படியா?


No comments: