September 18, 2015

ஆய்லான் குர்தி : நாடற்ற குழந்தையின் மரணம்

நன்றி : தின செய்தி நாளிதழ்

அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை என்ற சொற்கள் இப்போது நமக்கு நாமே சொல்லிச் சொல்லி பழகிப்போய்விட்டவைதான். அப்புறம் நகர்ந்தும் விடுகிறோம். தினம் தினம் செய்திகளைக் கண்டும் ஆழ உணராமல் கடந்து செல்லும் அவசர உலகில் சில புகைப்படங்கள்தான் சற்றே துணுக்குறச் செய்து நடந்துகொண்டிருக்கும் துயரம் என்ன என்பதையே தெரிந்து கொள்ள பலரைத் தள்ளுகிறது.

ஆய்லான் குர்தி
குண்டுவீச்சின் தீயும் புகையும் துரத்த அழுதுகொண்டோடும் தம் வயதொத்த பலரோடு கூட ஆடைகளற்று அலறியோடும் வியட்நாம் சிறுமி பான் தீ கிம் பூச்சாகட்டும், நெஞ்சில் துப்பாக்கித் தோட்டாவோடு உறங்குவது போல் மண்ணில் கிடந்த ஈழத்துச் சிறுவன் பாலச்சந்திரனாகட்டும், துருக்கித் தீவு ஒன்றின் கடற்கரையில் நிலத்துக்கும் நீருக்குமிடையில் குப்புறக்கிடந்த சிரியச் சிறுவன்  ஆய்லான் குர்தியாகட்டும், உலகில் ஒவ்வொரு மூலையிலும் மனிதகுலத்தின் ஏதோவொரு இனத்திற்கு நடத்தப்பட்டு வரும் அநீதியை உலகின் கவனத்திற்குக் கொணடுவர குழந்தைகளின் அலறலும் மரணமும் தேவையாக இருப்பதுதான் நடப்புக் காலத்தின் ஆகப்பெரிய துயரம்.
ஐ.எஸ். என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் சிரியா எனும் பயங்கரவாத அமைப்பின் அதிகாரத்தின் கீழ் இராக் மற்றும் சிரியாவின் குறிப்பிடத்தக்க பகுதி வந்துவிட்ட பின் இந்நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறுவோர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கிறது.
இராக்குக்கும் மத்திய தரைக்கடலின் கிழக்கெல்லையிலுள்ள துருக்கிக்கும் இடைப்பட்ட சிறிய நாடு சிரியா. எனினும் நீண்ட வரலாற்றினைத் தன்னுள் கொண்ட பகுதி. இப்போதைய நெருக்கடியான சூழலில் இராக்கிலிருந்தும் சிரியாவிலிருந்தும் மட்டுமின்றி ஆப்பிரிக்கக் கண்டத்தின் லிபியாவிலிருந்தும் கடல் மார்க்கமாக வெளியேறி,வருகின்றனர் மத்தியத் தரைக்கடலின் வடக்கே இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியேற வாசலான துருக்கியின் எல்லையிலும் கிரீஸின் எல்லையிலும் மட்டும் இலட்சக் கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்ட பின்னும் தத்தம் நாட்டின் சமூக-பொருளியல் காரணங்களைக் குறிப்பிட்டு அகதிகளைத் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க ஐரோப்பிய நாடுகள் பலவும் மறுத்தே வருகின்றன.
நிராதரவாய் மூழ்கிய படகின் நுனியைப் பிடித்தபடி, எப்படியும் குழந்தையைக் காப்பாற்றிவிடலாம் எனத் தன் கையைத்  தண்ணீருக்கு மேலே தூக்கிப்பிடித்திருந்த தந்தை அப்துல்லா குர்தியின் கையிலேயே உயிர்விட்டிருக்கிறான் ஆய்லான் குர்தி. 
அப்துல்லா குர்தி சிரியா நாட்டைச் சேர்ந்தவராயினும் சிறுபான்மை குர்து இனத்தைச் சேர்ந்தவர். இரானின் வடமேற்கு, இராக்கின் வட்க்கு, சிரியாவின் கிழக்கு என நீண்ட பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவர்கள் குர்துக்கள். எல்லைகளால் வரையறுக்கப்பட்ட மேற்படி மூன்று நாடுகளிலும் கடந்த காலங்களில் மூன்றாம் தரத்தினராகவே நடத்தப்பட்டவர்கள். தம் தனித்துவத்திற்காக நூற்றாண்டுகாலப் போராட்டத்தை நடத்திவந்தவர்கள். சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். தொண்ணு{றுகளில் குர்துக்களின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்ப்பாக வந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அப்போது குர்துக்களை ஒடுக்குவதைச் சுட்டிக்காட்டியே இராக்கையும் இரானையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மிரட்டியதுண்டு. அதே ஐரோப்பிய நாடுகள்தான் இப்போது அதே குர்து அகதி ஒருவர் குடும்பத்தை நடுக்கடலில் சாகக் கொடுத்திருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள் குவித்த முதலீடுகளெல்லாம் உலகின் மூன்று பகுதிகளைத் தம் காலனிகளாக்கி ஈட்டியவைதானே. இன்று பெரும்பாலான ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் பலவும் வறுமையில் தடுமாறுவனவாகவும் தட்டுத் தடுமாறி வளர்வனாகவும் இருப்பதில் ஐரோப்பிய நாடுகளின் கடந்தகாலப் பங்கை யார்தான் மறுக்கமுடியும்? அரபுலகத்தின் எண்ணெய் வளத்துக்காக அரபு நாடுகளில் மக்கள் நலமும் முழு இறையாண்மையும் கொண்ட அரசுகள் அமையாதிருக்க அமெரிக்காவோடு சேர்ந்து, தங்களின் முழு பலத்தையும் பிரயோகித்தே வந்திருக்கின்றன.
ஒரு பக்கம் பயங்கரவாதிகளை மறைமுகமாக ஊக்குவித்து, ஆசிய-ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மையை உருக்குலைப்பது, தற்சார்புள்ள ஆட்சிகளைக் கவிழ்ப்பது, பொம்மை அரசுகளை அமைப்பது, பயங்கரவாதிகளை ஒழிக்க உதவுவது என்ற பேரில் ஆயுதவிற்பனை செய்து பணமீட்டுவது என்ற எல்லா வழிகளிலும் தங்கள் நலனை மட்டுமே பேணிவந்திருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்களை அவர்களின் உரிமைகளின் நோக்கில் கணக்கில் கொண்டிருக்கவேயில்லை.
ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் அடைக்கலம் தேடிவரும் அகதிகளைப் பராமரிப்பது என்பதை இப்போது பெரும் சவாலாகவே நினைக்கின்றன. அகதிகளுக்கான அடிப்படை வசதிகள், நிவாரண உதவிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் என நீளும் பொறுப்புகளும் கருதி பிரதான ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலம் தருதல் என்ற கடமையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவே விரும்புகின்றன.
இந்நிலையில்தான் தம் உயிரையும் குடும்பத்தினரையும் மட்டுமாவது காப்பாற்றவேண்டி, யாதொரு பாதுகாப்பும் இல்லாதெனினும் கிடைத்த படகிற்குப் பெரும் தொகை கொடுத்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை திசை தெரியாத கடலில் பயணிக்க இறங்குபவர்களை அரசுகளோடு சேர்ந்து நாடுள்ளவர்களும் கள்ளத்தோணிகள் என்கிறார்கள்.
கனடாவில் இருக்கும் தம் சகோதரியின் ஏற்பாட்டின்படி அங்கு அகதியாகச் செல்ல எண்ணி மனைவி ரேஹன் மற்றும் மகன்கள் காலிப், ஆய்லான்களோடு படகில் துருக்கி செல்லும் வழியிலேயே தனது மனைவி மக்களை இழந்து தனியனாகியிருக்கிறார் அப்துல்லா குர்தி. எந்த நாடு வாழவிடாது வெளியேற்றியதோ, அதே சிரியாவில் தனது குடும்பத்தையும் புதைத்துவிட்டார். அனைத்தையும் இழந்த எனக்கு, இனி உலகையே தந்தாலும் வேண்டாம் என்கிறார் அப்துல்லா குர்தி.
ஏழு கடல்களிலும் திரியும் படகுகளில் எத்தனையோ ஆய்லான்களைச் சுமந்து கொண்டு அப்துல்லாக்களும் ரேஹன்களும் திசையிழந்து அடைக்கலம் தேடுகிறார்கள். தேசங்களின் கதவுகளோ இறுக்க மூடியிருக்கின்றன. தன்னை ஏற்க மறுத்த உலகைப் பார்க்க மனமின்றி கவிழ்ந்து கிடந்த ஆய்லானின் உயிரற்ற உடலைப் பார்த்தபடியே எந்த சலனமுமின்றி இந்த உளமற்ற உலகையும் பார்க்க நாம் பழகிவிட்டோம்.

No comments: