August 15, 2016

தனிக்கோள் துயரம்

தம்மீதானதும் மற்றவர் மீதானதுமான ஒரு தனியரின் நம்பிக்கையும் மற்றவரது உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் புரிந்துகொண்டு இணக்கமாக இருக்க விழைவதும் எந்த நிலையிலும் உள்ளார்ந்து மற்றவர் மீது பகை பாராட்டாது பழகுவதுமான பண்புகள் மட்டுமா தனியரது வாழ்வின் மீது தாக்கம் செலுத்துகிறது. இப்பண்புகளை மற்றவர் உணராமலேயோ குறைவாகவோ கருதி விழையும் எதிர்வினைகளும் சேர்ந்துதானே தனியரின் இருப்பிலும் இயக்கத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

எப்போதும் உற்சாகத்தோடு இருந்தது உரையாடிக் கொண்டே இருந்தது என்ற காலமெல்லாம் நினைவுக் கரையில் வந்துமோதி உள்ளமிழும் கடலலைபோலாகிவிட்டது. எனவே நேற்றைய விடியல் என்பதும் கூட ஒரு தோழியின் பிறந்தநாளுக்காக வலைத்தள வழியான வாழ்த்துத் தெரிவித்தலோடும் சிறு உரையாடலோடுமாக வழக்கத்தை விட சற்றே உற்சாகமாகத் தொடங்கியது எனலாம்.

உச்சிக்காலத்துக்குச் சற்றுமுன்தான் நா.முத்துக்குமார் மரணமுற்றதாகச் செய்தி வந்து விழுந்தது. உள்ளுக்குள் எங்கோ எதுவோ உடைந்து எப்பொழுதும் இருப்பதைவிடவும் கடினமானவொரு இறுக்கம் அழுத்தமாய் அடைத்துக் கொண்டது. நேரம் கூடக்கூட மிகவும் கடினமாகியும் விட்டது. வெகுகாலம் தொடர்பற்று இருப்பினும் இளம்வயதில் பேசிப் பழகியவனின் மரணம் என்பதாலா வயதொத்தவன் ஒருவனது திடும்மரணம் என்பதாலா. தெரியவில்லை.

உடனே பேச விழைந்து எண் சுழற்றியவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார். இத்தகவலே தெரிய வராத ஒரு பழைய நண்பனையும் ஒரு தம்பியையும் மட்டும் தொடர்பு கொண்டு பேசமுடிந்தது. வீட்டில் இருப்புக் கொள்ளாது கிளம்பி நகரத்தின் பல்வேறு தெருக்களை குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். மரணம் ஏதும் சம்பவிக்காத வீடறிந்து கடுகு வாங்கிவருவதற்கில்லை. வாழும் கணத்தில் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் மரணத்தை இறக்கிவிட வழிதேடியுமில்லை.

இரணமும் குருதியும் பழகிப்போன துறையில் பணிபுரிகிறவன்தான் எனினும் யாரோ ஒருவரின் மரணம் எனக் கேள்வியுறும் கணங்களையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. நெருக்கமான உறவுகளாயும் நண்பர்களாயும் இருந்தவர்களின் மரணங்களைக் கேள்வியுறும் கணங்கள் இன்னும் அழுத்தமானவை. வாழ்வு மட்டும் சாசுவதமா, வெட்டியாய் வாழ்ந்து என்ன, சாதித்துவிட்டு இளம் வயதிலேயே இறந்துவிட்டால்தான் என்ன என்கிற சமாதான வினாக்களாலும், பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது, நினைவில் என்றென்றும் நீங்காது என்கிற சம்பிரதாயச் சொற்றொடர்களாலும் சற்றும் விளக்கமுடியாதது மரணம்.

தூலமாக இல்லாமலே போய்விடும் அந்த இழப்பின் தாக்கத்தை மரணமுற்றவரை நேர்படச் சார்ந்தவர்கள் மட்டுமே நடப்பிலும் எதிர்விலும் உணர்வர். மற்றவர்களுக்கு வெறும் துயர நிகழ்வும் நினைவில் எஞ்சியிருக்கும் துயரமும்தான். நினைவு என்பதும் நடப்பியலின் போக்கில் நீங்கியோ அமிழ்ந்தோ விடுவதும் எப்போதோ அவ்வப்போதோ தலைகாட்டுவதும்தான். நேர்படச் சார்ந்தவர்களுக்கு அப்படி மட்டுமில்லை.

விபத்தாலும் திடீர் உடல்நலக்குறைவாலும் கூட நேரும்தான் என்றாலும், அவற்றிலும் தனியரின் கவனக்குறைவோ மற்றவரின் கவனக்குறைவோ சம்பந்தப்பட்டுதானிருக்கிறது. வேலை நெருக்கடிகளால் பழக்கவழக்கங்களால் அவைபற்றி நேரும் உடல்நலக் குறைவைப் பொருட்படுத்தாமல் விடுவதால் மரணம் நேர்வது என்பது மிகத் துயரமானது. தன்னலமின்றி வாழ்வது என்பதெல்லாமில்லைதான். ஆனால், பிறர்நலம் கருதி வாழ்வதாய் நம்பினாலும், தன்முக்கியத்துவம் கருதி மட்டுமே வாழ்வது தம்மோடு நேர்படச் சார்ந்த தானும் தன்னையும் நேசிக்கிற பிறர்முக்கியத்துவத்தை கவனியாது விட்டுவிடுகிறது.


வாழ்வில் தொடர்ந்து வந்து கவிந்து மூடிய பற்பல நெருக்கடிக் கூண்டுகளிலிருந்தும் முயன்று முன்னகர்ந்து வெளிப்பட்டுப் பறக்கமுடிந்தவனும் அறிந்தவர்களாலேயே அவ்வப்போது ஒரு கோழிக்குஞ்சைப் போலத் தேய்த்து எறியப்படுகிறவனுமான ஒருவன், அகண்டாகாரமாய்ச் சுழன்றபடி சூரியனையும் அதற்குரிய பாதையில் சுற்றி வரும் ஒரு தனிக்கோள் போலத்தான். சுழற்சியிலும் உடைவிலும் பிறகோள்களின் முக்கியத்துவத்தையும் பொருட்படுத்துகிறது அது

1 comment:

https://couponsrani.in/ said...
This comment has been removed by a blog administrator.