November 20, 2017

“அறம்” படம் பார்த்தேன்

முகநூல் மற்றும் இணையவெளியில் பலரும் அறம்படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க படம் என்று பலரும் கருதுவதற்கான கூறுகளாக என்னென்ன இருக்கின்றன?
1. அடிக்கடி நம் கவனத்திற்கு வந்து கலங்கச் செய்கிற மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மீட்கப்படுகிற நேர்வுகள் பற்றிப் பேசியிருப்பது.
2. அரசின் கையாலாகாத் தனமும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனமுமே அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று உரத்து முழங்கியிருப்பது.
3. நமது அதிகார அமைப்புக்குள்ளும் மனிதநேயம் மிக்க (தெய்வத்தன்மை?) அதிகாரி அவதரிக்கிறார், ஆனால் அவரைத் தவிர அனைவரும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்கிற கருத்து வெளிப்படும் காட்சியமைப்பு.
4. மக்கள் நல்லவர்களாகவும் அதிகார அமைப்பு நாற்றமடிப்பதாகவும் இருப்பதால் நல்ல அதிகாரி பணி துறந்து மக்களுக்காக மக்களை நோக்கி வருகிறார் என்ற நம்பிக்கை(?) முடிப்பு.
5. நயன்தாரா மட்டுமின்றி அனைத்து நடிகர்களும் பெரும்பாலும் தமது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள், இடம் சார்ந்த பதிவுகள் நன்றாக இருக்கின்றன என்கிற அபிப்பிராயம்.
இவற்றில் முதல் மற்றும் இறுதிக் கூறுகளைத் தவிர மற்ற மூன்றும் நமது வழக்கமான நாயக மையம் கொண்ட வணிகப் படங்களின் கூறுகள்தான்.
மக்கள் நல்லவர்கள் - ஏமாளிகள், ஆட்சியாளர்கள் கெட்டவர்கள் - சுயநலமிகள் என்கிற இருமை எதிர்வு இவற்றின் பொதுக் கூறு. பிரச்சனைகளுக்கு மற்றவரே பொறுப்பு என்கிற கருத்துரை பொதுப் புத்திக்கு விடுதலையைத் தந்து விடுகிறது. நாயகன்/நாயகி நல்லவர் என்பதால் நல்லவர்களுக்காகப் போராடி வெற்றி பெறுகிறார். நல்லவர்கள் பக்கம் நிரந்தரமாக வந்து விடுகிறார். எளிய வாய்ப்பாடு இது.
முதல் கூறு இப்படத்திற்கான களம் பற்றியது. அவ்வப்போதைய சமகாலப் பிரச்சனைகள் பலவற்றை களமாகக் கொண்டு இதைப் போல பல நூறு படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் பிரச்சனையைக் கொண்டு இது. அவ்வளவே.
நாயக மையம் என்கிற வழமைக்கு மாறாக நாயகி மையம் கொண்ட படம் இது. நாயகி ஒரு நல்ல அதிகாரி என்பதற்காக வழக்கம் போல மற்ற அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரையும் பொறுப்பற்றவர்களாகக் காட்டியிருக்கிறது படம். இதுவும் வணிகப்படங்களில் வழக்கமானதுதான்.
இப்படத்தில் மையப் பாத்திரம் நாயகி என்பதற்குப் பதிலாக நாயகன் என்று இருந்திருந்தாலும் பெரிய வேறுபாடு இல்லை. உங்களை எங்கள் மகளாகப் பார்க்கிறேன்” “நாங்க கும்புடுற கன்னிமார் சாமிகளில் ஒரு கன்னியா பார்ப்போம்என்ற வசனங்கள் "மகன்", "முருகன்" என்று மாறியிருக்கும். பல ஆண்களுக்கு மத்தியில் பெண் அதிகாரியா உட்காரும்போதுதான் எவ்வளவு கஷ்டம்னு உணர்றேன்என்பதான வசனம் இருந்திருக்காது.
இயக்குநர் தாம் சொல்ல நினைத்ததையெல்லாம் ஒரே நேரத்தில் காட்டூர் வெளியில் பதைக்கும் பாத்திரங்கள் வாயிலாகவும், இடையிடையே தோன்றும் ஊடக விவாதம் வாயிலாவும் பேசியேவிடுகிறார். திரைப்படமாக அதைக் காட்டவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளைக் களமாகக் கொண்டும் திரைமொழியில் அதைச் சரிவரக் காட்டாமல் விடுவதால், மக்களுக்கோ அரசுக்கோ மனதில் ஆழ உணர்த்தாமல், செய்தியாக நினைவூட்டிக் கடந்துவிடும் வழக்கமான திரைப்படங்களில் ஒன்றாகவே இதையும் கருதத் தோன்றுகிறது.
நயன்தாரா தனது பாத்திரத்தை மிக நன்றாகச் செய்திருக்கிறார். புலேந்திரன், அவரது மனைவி, குழந்தைகள், பிரதான மருத்துவர், தீயணைப்பு அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் முதலான பாத்திரமேற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

No comments: