October 26, 2018

எனக்கும்தான் (Me Too)

பொதுவாக பாதிப்பை உண்டாக்கியவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளானவர்களையே கேள்வி கேட்டு நிலைகுலையச் செய்யும் சமூக அமைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதிலும் பாலியல் ரீதியான பாதிப்பு பெண்ணுக்கு நேர்ந்தது அல்லது நேர்ந்திருக்கிறது எனில் கேள்விகளும் அறிவுரைகளும் அப்பெண்ணை நோக்கியே வீசப்படுகின்றன. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் 'இவள் ஏன் அங்கே போகணும், இப்படி இப்படி இருந்தா அப்படி ஆகியிருக்காது' என்ற எண்ணமே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

பணியிடத்தில் பெண்ணுக்குப் பாலியல் சீண்டல் அல்லது தாக்குதல் என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது என்பதும், இதைச் சகித்தும் வெளிச் சொல்லாமல் குமுறலோடு கடந்துமே பெண் நகர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதும் எவரும் அறியாததல்ல. தொடக்கக் காலத்தில் பெண் இதைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வாக நம்மிடம் இருந்தது 'நீ ஒன்னும் இனிமே வேலைக்குப் போகவேண்டாம். நீ வேலைக்குப் போய்தான் குடும்பத்துக்கு ஆகணும்னு ஒன்னுமில்லை' என்பது. இன்றைய பொருளியல் சூழல் அப்படிப் பேசும் இடத்திலிருந்து குடும்பத்தை வெகுவாக மாற்றியிருக்கிறதுதான்.

குடும்பத்திற்காக மட்டும் பணிபுரியச் செய்வதில்லை ஆண் எனும் தன்னிலை. பொருளியல் தேவை என்பதற்காக மட்டுமில்லாமல், பொருளியல் சுதந்திரம், சமூக மதிப்பு, சுயமரியாதை, தன்னடையாளம் என அனைத்திற்கும்தான். பாலின பேதமின்றி, பெண் எனும் தன்னிலை பணிக்குச் செல்வதும் இவை அனைத்திற்கும்தான். ஆனால் பெண்ணுக்கென்று எண்ணும்போது குடும்பப் பொருளியல் தேவைக்காக மட்டுமே பணிக்குச் செல்லலாம் என்பதே பெரும்பான்மையான குடும்ப மனநிலை. அதாவது வீடோ வெளியோ பெண் குடும்பத்திற்காக மட்டுமே பணி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

குடும்பத்தின் இந்த எதிர்பார்ப்பு எனும் அழுத்தத்துடனே பெண் பணியிடம் விரைகிறாள். பணியிடத்தில் எதிர்கொள்ள நேரிடுகிற பாலியல் சீண்டல் அல்லது தாக்குதலை வீட்டிலும் சொல்லமுடியாத நிலை இதனாலே ஏற்படுகிறது. வீட்டில் சொன்னாலும் பாதிப்பு தனக்கே ஏற்படும் என்று நினைக்க நிர்ப்பந்திக்கப்படுகிற எதார்த்தம், வீடும் வெளியும் தன் குரலைச் செவிமடுப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் பாதுகாப்பின்மை தரும் மன அயர்ச்சி என்றே பழகிப் போகிறாள். இவ்வயர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தவர்கள் வெகுசொற்பம்.

பணியிடம் என்ற வகைமையில் எந்த இடமுமே பெண் மீதான பாலின வேறுபாடு காட்டல், அதன் வழி சீண்டல் இவற்றிலிருந்து விதிவிலக்கானவை இல்லை. கல்வி நிலையம், காவல் நிலையம், அலுவலகம், தொழிலகம், மருத்துவமனை, வணிகத்தலம்,திரை, ஊடகம், இன்னபிறவும். சக ஊழியர், முதலாளி/அலுவலர் என்பவர்களாலே பாலியல் சீண்டல் அல்லது தாக்குதல் நேர்கிற போது, தனது சமூக மதிப்பு, பாதிப்புக்கு உள்ளாக்குபவரது சமூக மற்றும் பணி அந்தஸ்து, தனது பணி பாதுகாப்பு, புரிந்துகொள்ள மறுக்கும் குடும்ப உறவுகள் உள்ளிட்ட நிர்ப்பந்தங்களால் அச்சுறுத்தப்பட்டு மௌனமாக்கப்படுகிறாள் பெண்.

சின்மயீ போன்ற பிரபலங்கள், அறியப்பட்ட சில ஊடகவியலாளர்கள் போன்றோரே பல்லாண்டுகளுக்கு முன்பு தங்களுக்குப் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் அத்துமீறல்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த இந்நாட்டில் இத்தனை காலம் ஆகியிருக்கிறது. அவர்களும் அவதூறுகளுக்கும் அநாகரிகக் கேள்விகளுக்கும் இன்றும் உள்ளாக வேண்டியிருக்கிறது.

எனில் சாமானியராக உள்ள பெண்கள் எதிர்கொண்டதும் எதிர்கொள்கிறதுமான பாலியல் அத்துமீறல்களை அவர்கள் வெளிப்படுத்த இந்த வெளி என்னவாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது?

22.10.2018

1 comment:

Unknown said...

அருமை சார்