May 27, 2013

கம்பன் சிந்தனை - 4 : ஒரு நாட்டின் பெருமிதம்


வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

(வண்மை - கொடை, திண்மை - துணிவு, செறுநர் - பகைவர், வெண்மை - அறியாமை)

கம்பராமாயணத்திலிருந்து பலரும் எடுத்துக்காட்டிப் பேசும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று இது. அயோத்தி நகரின் செழுமை பற்றிக் கூறுவது. பல அறிஞர்களின் விளக்கங்களிலும் சற்று வேறுபட்டது 'கம்பன் கவிநலம்' எனும் கட்டுரையில் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் தரும் விளக்கம். தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றோடு ஒப்பிட்டு, அச்சூத்திரத்தை மனதில் இருத்தியே இப்பாவை ஆக்கியிருக்கிறான் கம்பன் என்பார் கதிரேசனார்.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச் 

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.

என்பதே அந்தச் சூத்திரம். பெருமிதம் எவற்றால் அமையும் என்பதைச் சாற்றுகிறது இது. (தறுகண் - துணிவு, இசைமை - புகழ்)

அயோத்தி எதனெதனால் பெருமிதம் பெற்றுத் திகழ்கிறது?

அங்கு வறுமை என்பதே இல்லை என்பதால் கொடைக்கு அவசியமில்லை; பகைவர் எவரும் இல்லை என்பதால் துணிவுக்கும் வேலையில்லை; பொய்யுரை ஏதும் இல்லை என்பதால் உண்மைக்கும் பொருளில்லை; மிக்க கேள்வியறிவு பொருந்தி இருப்பதால் அறியாமை என்பதும் இல்லை.

இல்லை இல்லை என்று இடப்படும் இப்பட்டியலால் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நான்கு பெருமிதங்களையும் அயோத்தி நகரம் தாங்கிநின்றது என்கிறான் கம்பன்.

கல்வி, தறுகண் (துணிவு), கொடை விளக்கம் சரி. இசைமையையும், உண்மையையும் எப்படிப் பொருத்துவது? என்ற கேள்வி எழும் என்றால், 'பொய்யாமை யன்ன புகழில்லை' என்ற வள்ளுவன் வரி காட்டி நிறுவுவார் கதிரேசனார்.

ஒரு பாடலை விளக்க வருகையில் முப்பெரும் நூல்களின் ஒத்திசைவைக் காட்டி மெய்ப்பிக்கும் பாங்கை என்னென்பது?

- யுவபாரதி

4 comments:

அனைவருக்கும் அன்பு  said...


சிறப்பான கருத்துகளை கம்பன் வழி நின்று விளக்கியிருகிறீர்கள் ரசித்தேன் வாழ்த்துக்கள் அந்த இல்லாமைகள் உள்ள ஒரு உலகை இனி பார்ப்பது அரிதுதான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எளிமையான விளக்கம்...

ரசித்தேன்...

தி.தமிழ் இளங்கோ said...

தங்களது கம்பனின் சிந்தனை நான்கினையும் இன்று படித்தேன். காப்பியச் சிந்தனைக்கு தாங்கள் தெரிவு செய்த கம்பனின் பாடல்களும், விளக்கங்களும் நல்ல இலக்கியச் சுவை! தொடரட்டும்!



Thulasi said...

அதுவே ஒரு கற்பனை தான் ஐயா