Showing posts with label தமிழரசுக் கழகம். Show all posts
Showing posts with label தமிழரசுக் கழகம். Show all posts

December 16, 2011

பணிக்கர் என்றொரு நடுவர்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

சர்தார் கே.எம்.பணிக்கர்
தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.
ம.பொ.சி.
அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார்.

அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "

- யுவபாரதி

January 11, 2011

எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினை

நன்றி: www.jeyamohan.in

கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்துக்களை தெரிந்துகொண்டேன். பொதுவாக நமக்கு பிரியமானவர்களை அப்பழுக்கற்றவர்களாக உருவகித்துக்கொள்ளும் மனப்பழக்கம் உண்டு. ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அது நல்ல மனநிலையே. ஆனால் அரசியலில் அது சரியாக அமையாதென்பது என் என்ணம். பற்றில் இருந்து வரும் வரிகளுடன் விவாதிக்கமுடியாது

நான் காமராஜ், ராஜாஜி, மபொசி ஆகிய அனைவரைப்பற்றியும் நிறைகுறைகளுடனேயே பார்க்கிறேன். அவர்களைப்பற்றி அவர்க்களோ அவர்களின் ஆதரவாளர்களோ எழுதும் நூல்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. என்னுடைய புரிதல்கள் வெறும் வாசிப்பை மட்டும் சார்ந்தவை அல்ல. எல்லைபோராட்ட வீரரும் காங்கிரஸ் முன்னோடியுமான தாணுலிங்கநாடார் தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களிடம் மிகநெருக்கமாக பழக்வும் அவர்களின் அந்தரங்க கடிதங்களை முறைப்படுத்தவும் வாய்ப்புகிடைத்தவன் என்ற முறையில் உருவான புரிதல்.

இக்கட்டுரையில் நான் மபொசியை குறைத்துமதிப்பிடும் தொனி வந்துவிட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை. ஆனால் அவர் தமிழ்மீதும், இந்தியதேசியத்தின் ஒளிமிக்க பகுதி என்ற கோணத்தில் தமிழ்த்தேசியம் மீதும் கொண்ட பற்று உண்மையானது. அவரது வரலாற்றுப் பங்களிப்பு முக்கியமானது. அதிகார உட்கட்சிஅரசியல் காரணமாக அவர் காமராஜால் வெளியேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழுணர்ச்சியற்றது என்ற வாதங்கள் வலுப்பெற அது வழியமைத்தது. காங்கிரஸின் தேசியநோக்கை தமிழுணர்வுடன் பிணைக்கவே ஆளில்லாமலாயிற்று. அவரது தரப்பு காங்கிரஸுக்குள் நீடித்திருந்தால் திராவிட இயக்க அரசியல் இந்த அளவுக்கு ஒற்றைப்படை வெற்றியை அடைந்திருக்காதென்றே நினைக்கிறேன். இக்கட்டுரையிலும் அதே தொனியுடன் மட்டுமே எழுதியிருக்கிறேன்

ராஜாஜி கட்சித்தாவல் மூலம் பதவிக்கு வந்தார் என்பதும் என்ன விளக்கமளித்தாலும் வரலாற்று உண்மை. நேரு அதை விரும்பவில்லை, பதவி விலக கோரினார், ராஜாஜி மறுத்துவிட்டார். இச்செய்தியை சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியவரலாறு நூலிலும் கண்டதாக நினைவு. அதுவே முதல் கட்சித்தாவல், முதல் மைனாரிட்டி அரசு. நான் திருவுருக்களை உருவாக்கவில்லை. சூழலை ஒட்டுமொத்தமான பின்னணியாக வைத்து தனிப்பட்ட அரசியல்தலைவர்களின் பங்களிப்பை புரிந்துகொள்ள முயல்கிறேன், அவ்வளவுதான்.

ஜெ

December 27, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கடிதம்

அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் "மபொசி, காமராஜ், ராஜாஜி..." கட்டுரை படித்தேன்.

உங்களிடமிருந்து இப்படி ஒரு வரலாற்றுப் பிழை மலிந்ததும் அவதூறான சொற்கள் நிரம்பியதுமான ஒரு கட்டுரையை எதிர்பார்க்கவில்லை. திராவிடத் திரிபுக்குச் சற்றும் சளைத்ததில்லை உங்களதும். எல்லா ஆளுமைகளும் எல்லாக் காலத்தும் நனி சிறந்தோர் இல்லைதான். ஆனால் அதே சமயம் அவரவர் நிறைவேற்றிய வரலாற்றுக் கடமைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

"அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது" - என்கிறீர்கள்.

தமிழரசுக் கழகம் என்பது ம.பொ.சி. காங்கிரசில் இருந்தபோது ஒரு கலாச்சார இயக்கமாகவே துவங்கப்பட்டது என்பதும் அதன் துவக்கவிழாவில் சில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அது 'காங்கிரசால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது' என்பது உண்மையல்ல. அது உண்மையானால் வடக்கெல்லை மீட்புப் போராட்டம் உச்சத்தை அடைகையில் அதைத் தேச ஒற்றுமைக்கு ஊறு என்று கூறி,'அப் போராட்டத்தைக் கைவிடுகிறீர்களா? அல்லது தமிழரசுக் கழகத்தார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறீர்களா?' என்று காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் 1954-இல் விளக்கம் கேட்கும் நிலை வந்திருக்காது. அதற்கு முன்பும் தமிழரசுக் கழகம் குறித்து நேருவே விளக்கம் கேட்கும் நிலையும் வந்திருக்காது.

தெ.பொ.மீ., மு.வ., சஞ்சீவி முதலான தமிழறிஞர்களும் இருந்த அமைப்பு அது. கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டதும் கூட.

"குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்" என்பதெல்லாம் எவ்வளவு அவதூறான சொல்லாடல்?

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே ஆந்திரத் தனி மாநிலக் கோரிக்கை எழுந்துவிட்டது. சுதந்திற்குப் பின் வீறு கொண்டது. சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னைக்கும் உரிமை கொண்டாடினர் ஆந்திரர். சுதந்திரம் பெற்ற மறு நாளே வடக்கெல்லை காக்கத் திருப்பதி புறப்பட்டவர் ம.பொ.சி. வடவேங்கடம் வரை மீட்கப் போராடி, தணிகை வரை மட்டுமே மீட்க முடிந்தது. இதில் காங்கிரசின் பங்கோ, ராஜாஜியின் பங்கோ ஏதுமில்லை. தணிகையை மீட்க உடன் உழைத்தவர்கள் மங்கலங் கிழார், கே.விநாயகம் முதலானோர். இப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை கைது செய்யப்பட்டு, இரு முறை சிறைப்பட்டார் ம.போ.சி. அவரது தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த பழனி மாணிக்கம், திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகிய இருவர் சிறைப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தனர்.

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோது ' சென்னை மீதான உரிமை கோருவதை விட்டால் உங்களின் தனி மாநிலக் கோரிக்கைக்கு தமிழரசுக் கழகமும் போராடும்' என்றவர் ம.பொ.சி. 'தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று போராடினார் அவர். சென்னையை மீட்க ராஜாஜி உதவினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனுக்கும் இதில் பெரும் பங்குண்டு.

தெற்கெல்லைப் போராட்டத்தைத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு முன்னின்று நடத்தியது. நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி போன்றோர் முக்கியமானவர்கள். ஜீவாவின் பங்கும் குறிப்பிடத் தக்கது. இந்தியதேசிய காங்கிரஸ் கேரள காங்கிரசை ஆதரித்த போது ம.பொ.சி. திரு.த.நா.கா.வை ஆதரித்தார். அப்போதைய போராட்டத்தில் (கல்குளம்) ஈடுபட்ட 11 தமிழர்கள் பட்டம் தாணுப்பிள்ளை உத்தரவால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள வெறியர் அவர். (அச் சம்பவத்திற்காக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராம் மனோகர் லோகியா அவரிடம் விளக்கம் கேட்டார்.) தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது 'தமிழன் குரல்' இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.

1946-1965 காலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி தமிழரசுக் கழகம். தமிழரசுக் கழகம் முன்னெடுத்த தமிழ்த் தேச அரசியலையும் உட்செரித்து வளர்ந்ததுதான் அண்ணாவின் தி.மு.க. அந்த இடத்தில்தான் அது பெரியாரின் தி.க.விடமிருந்து வேறுபட்டது. 1967 காலகட்டத்தில் ம.பொ.சி.யின் நிலைப்பாட்டினால் பலர் அவரை விட்டு விலகினர் என்பது உண்மை. அதன் பாற்பட்டு எமக்கும் விமரிசனம் உண்டு. ஆனால் தமிழ்த் தேச எல்லை மீட்பில் அவர் பங்கு மகத்தானது. எல்லை மீட்பில் காமராஜருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அதீத முக்கியத்துவம் தவறானது.

ஆந்திர, கருநாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ம.பொ.சி. 'எனது போராட்டம்' என்ற அவரது தன்வரலாறு, புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இலக்கியத்தில் இன உணர்ச்சி போன்றவை முக்கியமானவை. அவற்றில் சிலவற்றையாவது வாசிக்க முயல்வீர்கள் என்று நம்புகிறேன். அவர் குறித்த செய்திகள், கட்டுரைகள் http://maposi.blogspot.com என்ற வலைப்பூவில் பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ், தமிழியம் முதலான சொற்களில் நம்பிக்கையுடைய உங்களுக்கு, தமிழர் - தமிழ்த் தேசியம் முதலான சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல்லாயிரம் வாசகர் கொண்ட தங்களுக்கு வரலாற்றுப் பதிவுகளில் கவனப்பாடு அவசியம் என்று நினைக்கிறேன். மிகை புகழோ- திருவுருவாக்கமோ, அவதூறோ - இழிவுபடுத்தலோ தவிருங்கள்.

நன்றி.

அன்புடன்,

யுவபாரதி
27.12.2010