Showing posts with label இருள். Show all posts
Showing posts with label இருள். Show all posts

January 20, 2017

துரத்திவரட்டும் இருள்

இரவின் நீளத்தை அளந்து சொல்லென
யார் தூண்டியிருக்கக் கூடும்
தொடக்கப் புள்ளி தொட்டு
அதன் தோலில் விரல் தீற்றியபடி
ஓடிக் கொண்டிருக்கிறேன்
மேலும் மேலும் கருத்து
பாதை இருளச் செய்ய
யார் தூண்டியிருக்கக் கூடும்
தீற்றிய விரலால் துழாவியபடி
ஓடிக் கொண்டிருக்கிறேன்
பனியும் வியர்வையுமான பாதையில்
இரும்பு முட்கள் முளைவிக்க 
யார் தூண்டியிருக்கக் கூடும்
காலடிக் குருதி துப்பியபடி
ஓடிக் கொண்டிருக்கிறேன்

இன்னும் இன்னும் நீட்டிக்காட்ட
என் ஓட்டத்தோடே கூட நகர்ந்துவரவும்
அதை யார்தான் தூண்டியிருக் கூடும்
ஓடியவரை வாரிச் சுருட்டிக்கொண்டு
வெளிகுதித்தோடுகிறேன்
இருள் எனைத் துரத்திவரட்டும்
இனி.

08.01.2017

September 03, 2016

ஊமை ஓவியம்

இருளின் பாலை வெளிச்சத்தில்
நிலைகுத்தி விழிக்கிறது கண்

சுழித்தோடும் கால ஓலம்
ஒற்றைக்காதையும்
செவிடாக்கியிருக்கிறது

உறிஞ்சிய நீர்மை
என்றோ உலர்ந்திருக்க
ஒட்டியிருக்கிறது கன்னம்

சொல்லாளும் உலகில்
ஊமை ஓவியம்
ஆணியடிக்காத சுவரில்
ஆடிக் கொண்டிருக்கிறது.