Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts

July 26, 2016

மண்ணூறப் பெய்த மழை

பச்சைக் குழந்தைகளென அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேற்கு மலைகளில் தொத்திக் கொண்டிருந்த மேகங்கள்தான் நேற்று மாலை இரண்டு நாழிகைகளுக்குள் அப்படிக் கொட்டித் தீர்த்தன. முக்கால் மணி நேரம் என்றால் புரியும். அடுத்த அரை நாழிகையில் ஊரில் தங்காமல் ஓடியே விட்டது நீர்.

நேற்று புலம்பியது வருணனுக்குக் கேட்டதோ என்னவோ. வழக்கமாய்ப் பணி நிமித்தம் தாமதமாய் மதிய உணவு உண்கிறவன் இன்று நேரத்திற்கே உண்டுமுடித்துப் பாத்திரம் துலக்கும்போதே பார்த்தேன். சுற்றிலும் நீண்டு நெளிந்து எப்போதும் கண் நிறைக்கும் மேற்கு மலைகளைக் காணவில்லை. வானுக்கும் மண்ணுக்குமாய் அப்படி ஒரு கருந்திரை.

மூன்று மூன்றரை இருக்கும். செம்மண்வாசம் கமழ்ந்தெழுந்து சாளரம் கதவு என்று கிடைத்த வழிகளிலெல்லாம் வந்து நாசி நிறைத்தது. சிலுசிலுவெனக் காற்றோடு சிறு தூறலாய்த் தொடங்கி இலேசாய் வலுத்த சீரோடு பெய்யத் தொடங்கியது மழை.

ஐந்தரை மணிவரை அப்படியே அழுத்தமாய்ப் பெய்து கொண்டிருந்திருக்கிறது. பணி முடித்து வெளி வந்து பார்த்தால் இந்தக் கட்டடம் அந்தக் கட்டடம் என்று வளாகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் ஒண்டியிருந்து பணியாளர்களும் பொதுமக்களும் மழைபடாமல் நின்று மழை பார்த்துக் கொண்டிருந்தனர். தெற்கே கண்டமனூர் வரைக்கும் வடக்கே வைகை அணை வரைக்கும் என்று பேசிக் கொண்டனர்.

சுற்றிலும் பெரும்பாலும் கம்பும் தட்டாம்பயிறும் முருங்கையும்தான் விவசாயம். பாலங்களைக் கடக்கும் போதுதான் அதற்கடியில் இருந்தவை வைகையைச் சேரும் ஓடைகளும் சிற்றாறுகளும் என்றும் வைகையிலிருந்து வரும் கால்வாய்களும் என்றும் தெரியும். வானமாரிதான் இன்று விவசாயம்.
 
அம்மச்சியாபுரத்துக்கும் குன்னூருக்கும் இடையில் வந்து வைகையோடு சேரும் முல்லையாற்றுக் கால்வாய் இல்லையென்றால், இன்று வைகை அணையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கும் சுயமி எடுப்பவர்களுக்கும் கூட கண்ணுக்கும் காட்சிக்கும் குளிர்ச்சியாக என்ன இருக்கும். அந்தக் காலத்தில் தாய்ப்பாலுக்கு அடுத்து அந்தந்த ஊர் நீரைத்தான் மூன்று மடக்கு புகட்டுவார்கள். சின்னமனூரில் பிறந்த எனக்கு எந்த நதி நீரை அப்படிப் புகட்டியிருக்கமுடியும். முகநூலில் அவ்வப்போது வந்து அடுத்தடுத்த சில நாட்களில் கவனத்திலிருந்து விலகிப் போவதும் தன்முன்னாக்க நோக்கையும் உடன் கொண்டதுமான சச்சரவுகளில் ஒன்றானது மட்டுமில்லை முல்லைப் பெரியாற்று நீர் என்பது எனக்கு.

இரு சக்கர ஊர்தியை வளாகத்திலேயே நிறுத்திவிட்டுப் பேருந்தில் போய்விடலாம் என்ற அலுவலகத் தம்பியின் சொல்கேட்டுத் தலையசைத்தவனுக்கு அப்படி வேண்டாமே என்று தோன்றிவிட்டது. ‘வாங்க தம்பி, வண்டியிலேயே போயிடலாம்’ என்றதும், விட்டுவிடுங்கள் என்பதை வேறு சொற்களில் சொல்லி அவர் கிளம்பிவிட்டார். மற்றொருவரைக் கேட்டேன். கிளம்பிவிடலாம் என்றார். கிளம்பி விட்டோம்.

அடுத்த கிராமத்தைக் கடப்பதிற்குள்ளாகவே தெப்பலாய் நனைந்தாயிற்று. ஒக்கரைப்பட்டியைக் கடக்கும் போது கைபேசிகளின் நினைவு வந்தது. ஒரு கடையில் நெகிழி உறைகள் வாங்கிச் சுற்றி பைக்குள் திணித்துக் கொண்டு, அரைக்கால் சட்டைக் காலத்து மழை நனைவு பற்றிப் பேசித் தொடர்ந்தோம். அதற்கடுத்த கிராமத்தில் தேநீர் பருகல். மழைப் பயணம்.

அவர் நினைவில் ஊறிக்கிடந்த கிணறு, குதித்தாடிய ஓடை, நீந்திக் கடந்த நதி, நம்பியிருந்த விவசாயங்களெல்லாம் வெளிவந்தன. என் நினைவில் ஆழ்ந்துகிடந்த நான் வளர்ந்த வடமாவட்டக் கிராமத்துக் கிணறு, குளித்தாடிய மின்னிழுவை நீர்ப்பாய்ச்சி (பம்புசெட்டு), மீன் பிடித்த ஏரி, காவலிருந்த பள்ளிக் கூட நண்பனின் மல்லாட்டைக் (வேர்க்கடலை) கொல்லைகளையெல்லாம் மழை வெளிக்கொண்டுவந்தது.


ஆண்டிப்பட்டி வரைக்கும் சாலையின் இருமருங்கு மண்ணும் சிலிர்த்துக் கொண்டிருந்தது. மரமெல்லாம் அயர்ச்சி நீங்க தலை குளித்துக் கொண்டிருந்தது. இவற்றை ஒருமையில்தான் சொல்லவேண்டும். இன்னும் மண்ணுக்கு இப்படியான மழை வேண்டும். இரு சக்கர ஊர்தியை அதற்கான நிறுத்தத்தில் நிறுத்தி, அவரவர் பேருந்தில் ஏறிக்கடக்கும் போதும் மண்ணூறும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. 

December 21, 2011

முல்லைப் பெரியாறு அணை - பிரச்சினையும் தீர்வும் : குறும்படம்

யூ டியூப் :



 தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியீடு 

முல்லைப் பெரியாறு அணை - பிரச்சினையும் தீர்வும் : குறும்படம்

வீமியோ :



தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியீடு

December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம் - ஒலிப்பதிவு / டிசம்பர் 21 பொருளாதார முற்றுகைப் போராட்டம்

17.12.2011 அன்று காலை சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மகாலில் "முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம்" எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் குறித்த தமிழ் நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் எடுத்த " முல்லைப் பெரியாறு அணை - பிரச்சினையும் தீர்வும்" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவ்வாவணப்படத்தின் குறுந்தகடுகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைத் தெளிவாக தொழில் நுட்ப நோக்கில் விளக்கும் இப்படத்தின் குறுந்தகடுகளை பற்பல படிகள் எடுத்து தமிழர் அனைவருக்கும் விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிப் பேசினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை அடுத்து கேரளத்தில் மலையாளிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு நம்மவர் தாக்கப்படுகின்றனர்,     உடைமைகள் சூறையாடப்படுகின்றன என்பதற்காக, உணர்வெழுச்சியில், இங்கு வாழும் மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது நம் இளைஞர்கள் எவரும் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அது நம் பண்பாடு இல்லை என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

கேரள அரசுக்கும், கேரளத்தவருக்கும் நமது உணர்வையும், உரிமையையும் வெளிக்காட்டும் விதமாக, வரும் டிசம்பர் 21 அன்று, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளிலும் அறவழியில் மறியலில் ஈடுபட்டு, பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். அதில் யாதொரு கட்சிச் சின்னங்களும், கொடிகளும் இல்லாமல் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...

முல்லைப் பெரியாறு அணை - ஆவணப்படம் 


பழ.நெடுமாறன் உரை :


வைகோ உரை :



ஒலிப்பதிவு - யுவபாரதி 

December 15, 2011

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...


மூணாறு
மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம். 

நடத்தியவர்கள் : 

(இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும், தானி ஓட்டுநர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை :

பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் : 

கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

(1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி. குரல்கொடுத்தார். ஆனால்,  'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர். 'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார். பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.) 

- யுவபாரதி 

December 14, 2011

நிதானமாய் எப்படி யோசிப்பது?

'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
          ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை...'

என்ற பழம் பாடல் ஒன்றின் வரி அடிக்கடி நினைவுக்கு வரும். எப்படி இருந்த மண் என்று வியப்பையும், இன்று எம் மக்களைத் திருப்பூருக்கு விரட்டியடிக்கிறதே என்று கரிப்பையும் ஒருங்கே தரும். திருப்பூரும் இப்போது பொய்த்துக் கொண்டே வருகிறது என்பது வேறு விஷயம்.

மதுரை நகர் கடந்து ஊருக்குப் போகும்போதெல்லாம் பாலத்துக்குக் கீழ் வறண்டேகிடக்கும் வைகை கண்ணில்படும்.வையை என்னும் பொய்யாக் குலக்கொடி? ) வெள்ளங் கெட்டு வாய்க்காலானாலும் சரி என்று பழக்க தோஷத்தில் அழகர் மட்டும் சித்திரைக்குச் சித்திரை தவறாமல் இறங்கிவருகிறார். இப்போது மழை பெய்திருக்கிறது. கொஞ்ச நாள் ஓடும், நீரும் வாழ்வும்.

எங்கள் உசிலம்பட்டிக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது வைகை அணை. என் பாட்டன், பாட்டியின் சாம்பல் கரைத்ததெல்லாம் அங்குதான். வைகையை மட்டும் வைகை அணை நம்பி இருந்தால் எங்கள் மக்களின் சிறு உழவும் அவ்வளவுதான்.

எம் குடும்பத்திற்கு காற்காணி நிலமும் இல்லைதான். என் பாட்டனார் ஒருஉணவகத்தில் சமையலராக வேலை பார்த்தவர். ஆனால், உழவை நம்பித்தானே எல்லாம் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை 
நான் பிறந்தது சின்னமனூரில். கம்பம், சின்னமனூர், (உத்தம)பாளையம் பகுதிகளில் முல்லைப் பெரியாற்றுப் பாசனம் இல்லையெனில் ஒன்றுமேயில்லை. வேறு பெரும் தொழில் வாய்ப்புகளும் இல்லை. தேனி மாவட்டத்திற்குக் குடிநீரும் பெரியாற்று நீர்தான்.

அதனால்தான் அரசியல் நடிப்புச் சுதேசிகளை நம்பாமல், குமுளி லோயர் கேம்பையும் கடந்து, ஒவ்வொரு நாளும், எல்லை நோக்கி எம் மக்களே சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள்.

எல்லை கடந்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுவீழ்த்தக் கேரளப் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆவேசம் வருகிறது.எனினும் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலையும் பற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் தேனி நண்பர்கள் சொல்லும்பொழுது பதற்றமாக இருக்கிறது. வழக்கம் போல் 'பரபரப்பு... பரபரப்பு...' என்று காட்டும் தொலைக்காட்சியைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.

நிதானமாய் எப்படி யோசிப்பது?

- யுவபாரதி