Showing posts with label நெடுமாறன். Show all posts
Showing posts with label நெடுமாறன். Show all posts

December 19, 2011

தமிழ்த் தோழர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

நண்பர்களே!


கடந்த 1990-களில் கருநாடகத்தில் தமிழர்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தற்போது கேரளத்தில். இவ்வன்முறைகள் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட பெங்களூர் தண்டுப்பகுதியும் சரி, கேரளத்தின் தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வனப்பகுதியும் சரி. மாநில மறுசீரமைப்புக் கமிஷனால் வஞ்சிக்கப்பட்டு தமிழகம் இழந்த பகுதிகள். இவ்வரலாறே நமக்குத் தெரிவதில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.


1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க. காட்டிய முனைப்பு தமிழக எல்லைக் காப்புப் போராட்டங்களில் இல்லை என்பது முக்கியக் காரணம். தமிழரசுக் கழகம், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பிற அமைப்புகள் முன்னெடுத்த வடக்கெல்லை, தென்மேற்கு எல்லைப் போராட்டங்களில் அண்ணாவின் அனுமதியோடு / அவரவர் உணர்வால் அந்தந்த பகுதியின் தி.மு.க.வினர் சிலர் பங்கெடுத்தனர். அவ்வளவுதான். தி.மு.க.வின் தலைவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிற்காலத்தில் என்ன நேர்ந்தது?


பிற்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளே ஆட்சிக்கு வந்ததால், பிற அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்த வரலாறு நமக்குப் புகட்டப்படவேயில்லை. இப்போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் துறந்தோர் குறித்தும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.


வடக்கெல்லைப் போராட்டத்தில் (திருத்தணி) சிறையிலேயே உயிர் துறந்தவர்கள் இருவர். தெற்கெல்லைப் போராட்டத்தில் (குமரி) துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோர் 11 பேர். சிறைப் பட்டவர்களும், அடியுதைப் பட்டவர்களும் ஏராளம்.


தமிழ், தமிழகத்தின் உரிமை காக்கப் போராடியவர்கள் எந்த கட்சியினர் ஆயினும் சரி. அவர்கள் யாவரும் நம் முன்னோர். அவர்களது போராட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. அவ்வரலாற்றை நாம் அறியத் துணை செய்யும் பல நூல்கள் உள்ளன. முக்கியமான இரு நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.


1) புதிய தமிழகம் படைத்த வரலாறு 

    - ம.பொ.சிவஞானம்
    
    விலை ரூ.150/-

    பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர்,
    சென்னை-4. பேச: 24943074


2) தமிழன் இழந்த மண்

    - பழ.நெடுமாறன்

    விலை ரூ.60/-

    தமிழ்க்குலம் பதிப்பாலயம், 48, மேலமாசி வீதி, மதுரை-1.


விருப்பம் இருப்போர் வாசியுங்கள் !


 - யுவபாரதி 

December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம் - ஒலிப்பதிவு / டிசம்பர் 21 பொருளாதார முற்றுகைப் போராட்டம்

17.12.2011 அன்று காலை சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மகாலில் "முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம்" எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் குறித்த தமிழ் நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் எடுத்த " முல்லைப் பெரியாறு அணை - பிரச்சினையும் தீர்வும்" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவ்வாவணப்படத்தின் குறுந்தகடுகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைத் தெளிவாக தொழில் நுட்ப நோக்கில் விளக்கும் இப்படத்தின் குறுந்தகடுகளை பற்பல படிகள் எடுத்து தமிழர் அனைவருக்கும் விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிப் பேசினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை அடுத்து கேரளத்தில் மலையாளிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு நம்மவர் தாக்கப்படுகின்றனர்,     உடைமைகள் சூறையாடப்படுகின்றன என்பதற்காக, உணர்வெழுச்சியில், இங்கு வாழும் மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது நம் இளைஞர்கள் எவரும் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அது நம் பண்பாடு இல்லை என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

கேரள அரசுக்கும், கேரளத்தவருக்கும் நமது உணர்வையும், உரிமையையும் வெளிக்காட்டும் விதமாக, வரும் டிசம்பர் 21 அன்று, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளிலும் அறவழியில் மறியலில் ஈடுபட்டு, பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். அதில் யாதொரு கட்சிச் சின்னங்களும், கொடிகளும் இல்லாமல் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...

முல்லைப் பெரியாறு அணை - ஆவணப்படம் 


பழ.நெடுமாறன் உரை :


வைகோ உரை :



ஒலிப்பதிவு - யுவபாரதி