Showing posts with label உண்ணாப் போராட்டம். Show all posts
Showing posts with label உண்ணாப் போராட்டம். Show all posts

March 26, 2013

அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...


காலை 9 மணிக்கு இருவர் கைப்பிடிக்க நடந்து வருகிறார். உறுதியாக நின்று உண்ணாவிரதப் பந்தல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பாலச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவிக்கிறார். பின் தமக்கென ஒதுக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இருக்கையில் அமர்கிறார். அவர் 92 வயதான ஒரு மூதாட்டி. மாலை 5 மணி வரை இடம் விட்டு கொஞ்சமும் எழாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். பெயர் மாரியம்மாள். ஊர் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி. வைகோவின் தாயார். 

இந்தச் செய்தியை வாசிக்கும் போதே இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 86 வயது முதியவர் அவர். சென்னை கடற்கரை அண்ணா சமாதியருகில். அல்லது சமாதியாகி விட்ட அண்ணா அருகில். உயர்தர படுக்கை. சுற்றிலும் ஏர்கூலர்கள். பெரிய மின்விசிறிகள். தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக வாழ்க்கைத் துணைகள். சுற்றிலும் பிள்ளைகள், பேரன்கள், கட்சி முக்கியஸ்தர்கள். சுமார் நான்கு மணி நேரம் இருந்துவிட்டு, வெற்றி வெற்றி என ஒரு பிரசங்கம். 

நம்மூரில் அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...

November 07, 2012

சென்னையில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

03/11/2012 சனிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், அன்புசெல்வம், கோணங்கி, திலீப்குமார், யூமா வாசுகி, ஸ்டாலின் ராஜாங்கம், யுவபாரதி, கடற்கரை, அஜயன்பாலா, கவின்மலர், அ.ஜெகநாதன், தமிழச்சி தங்கபாண்டியன், தி.பரமேசுவரி, கு.உமாதேவி, ஜெயபூர்ணிமா, அருள் எழிலன், நிர்மலா கொற்றவை, வசுமித்ர, விஷ்ணுபுரம் சரவணன், காரை மைந்தன், பொன்.ஏழுமலை, செந்தூரன், இளவேனில், பதிப்பாளர் யாக்கன், ஓவியர்கள் வீரசந்தானம் மற்றும் அரஸ், பேரா. பிரபா கல்விமணி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, கார்ட்டூனிஸ்ட் பாலா, ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், பூவுலகின் நண்பர்கள் பி.சுந்தரராஜன், மா.பெ.பொ.க. வாலாசா வல்லவன், மே 17 இயக்கம் த.சுந்தரமூர்த்தி, சேவ் தமிழ் கி.அருணகிரி, புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம் தமிழேந்தி, தமிழ்நாடு மாணவர் இயக்கம் சே.இளையராஜா, தலித் விடுதலை இயக்கம் கருப்பையா, தமிழ்நாடு மக்கள் கட்சி ப.அருண் சோரி, கல்கத்தா இயற்பியல் பேரா.குருபிரசாத் கான், தமிழகத் தமிழாசிரியர் கழகம் ஜே.கங்காதரன், சமூக ஆர்வலர்கள் நா.சாத்தப்பன், மி.டேவிட், வி.பால்கிரேகேரி, ஜே.சாம்ராஜ், வெங்கடேசன், பூ.ஆகாசமுத்து, காயல்பட்டினம் ஷமீம் இஸ்லாம், இடிந்தகரை கவாஸ்கர், கூத்தன்குழி அசோக் உட்பட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 





October 05, 2011

மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்


மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது.   மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...                                     

இந்திய அரசே , மரண தண்டனையை ரத்து செய் !


பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க 


தமிழக அரசே,  அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!


என்ற கோரிக்கையை முன்வைத்து 09.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.


பா.செயப்பிரகாசம் 

அமைப்பாளர்களுக்காக.