Showing posts with label நாய். Show all posts
Showing posts with label நாய். Show all posts

January 20, 2017

தேட்டம்


வெறிச்சோடிய தெருவில் நாய்
விடாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது
மண்ணள்ளி விசிறி
காலுதைத்துத் தேம்புகிறது குழந்தை
நகரமறுத்துக் கால்தேயவிட்ட ஆடு
தலைக்கயிறு பற்றி இழுபட்டுப்போகிறது
யாரும் கேட்காத மொழியை
சைகையோடு எழுதிக் காட்டுகிறான்
பித்தன்
காணாமல் போன என்னைத் தேடி
வெகுதூரம் வந்துவிட்டேன்.

18.01.2017

January 18, 2014

நிழல் வலி


வெளியே 

பயண நேரத்து நாய்க்குட்டி
முதுகும் நிமிராது
குரைக்கவும் கூடாது

உள்ளே 

உபரி நேரத்து ஓய்வறை
எங்கும் நகராது
எதிரொலிக்கவும் சுடாது


- யுவபாரதி

August 26, 2013

வீட்டுநாய்


நான்கு காலும் மூச்சிரைக்கும் நாக்குமாய்த்தான்
வீட்டு நாயும் இருக்கிறது

எங்கோ கூவும் சேவல் காணாது
அரைத்துயில் கெட்டுக் குரைக்கிறது

வெளிப்படும் எஜமானியின் கால் சுற்றி வால் குழைத்து
தலை தடவலில் கண்லயிக்கிறது

வீடும் வேலியும் தாழிடல் கண்டு
சங்கிலிக் கழுத்து இழுபட வேலி பிறாண்டுகிறது

தரை படுத்து வீதி வெறித்து
உணவு பரிமாறும் ஒற்றைத் தட்டோடு பகல் நகர்த்துகிறது

வாசலில் நிழல் நகரும்
எவ்வொரு கணமும் விசுவாசம் பொங்க வீறிடுகிறது

ஒற்றைத் தெருவில் இரவு மேய்த்து
இழுத்துக் கட்டும் நேரம்
கருவானம் நோக்கி ஊளையிடும் பாவனையில்
அசட்டுக் குரைப்போடு அடங்குகிறது

நான்கு காலும் மூச்சிரைக்கும் நாக்குமாய்த்தான்
வீட்டு நாயும் இருக்கிறது.


-யுவபாரதி

June 12, 2013

நகராட்சி வாகனங்கள் - பள்ளி வாகனங்கள் : ஓர் ஒப்பீடு

1) நகராட்சி வாகனங்களில் கதவுகள் பின்பக்கம் உள்ளன. பள்ளி வாகனங்களில் கதவுகள் பக்கவாட்டில் உள்ளன.

2) நகராட்சி வாகனங்களைக் கண்டதும் நாய்கள் ஓடிப் பதுங்குகின்றன. பள்ளி வாகனங்களைக் கண்டதும் பிள்ளைகள் ஓடிப் பதுங்குகின்றன.

3) நாய் பிடிப்பதற்காக நகராட்சி வாகனங்களை தெருவாசிகள் போராடி அழைத்து வரவேண்டியிருக்கிறது. பிள்ளை பிடிப்பதற்காக பள்ளி வாகனங்கள் அவையாகவே தெருத் தெருவாக வருகின்றன.

4) நகராட்சி வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களே நாய்களைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. பள்ளி வாகனங்களைப் பொருத்தவரை பெற்றோரே பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்துவிடுகின்றனர்.

5) நகராட்சி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. பள்ளி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த பிள்ளைகளையே பிடித்துச் செல்கின்றன.

6) நகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்ட நாய்களில் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வள் வள்என்று கத்திக் கொண்டே இருக்கின்றன சில. பள்ளி வாகனங்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகளிலும் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வீல் வீல்என்று கதறிக் கொண்டே இருக்கின்றன சில.

7) நகராட்சி வாகனங்கள் நாய்களை அவை வாழும் பகுதியிலிருந்து ஒரே நாளில் அன்னியப்படுத்துகின்றன. பள்ளி வாகனங்கள் பிள்ளைகளை அவை வாழும் பகுதியிலிருந்து வருடக்கணக்கில் படிப்படியாக அன்னியப்படுத்துகின்றன.

- யுவபாரதி