Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

January 22, 2012

"புதிய தலைமுறை" இப்படிச் செய்யலாமா?

அன்புள்ள புதிய தலைமுறை இதழாசிரியர் திரு.மாலன் அவர்களுக்கு,


வணக்கம்.


இந்த வாரத்தைய "புதிய தலைமுறை" இதழ் (26 ஜனவரி 2012, மலர் 3, இதழ் 18) கண்டேன். "இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?" என்ற கவர் ஸ்டோரி படித்தேன். வரவேற்கத்தக்க கட்டுரை அது. 


ஆனால், அது தொடர்பாக, "பணிக்கரின் ஆவேசம்" என்ற சிறு கட்டுரை, பெட்டிச் செய்தி அளவில் (பக்கம் 12) வெளியாகியிருக்கிறது. படித்ததும் நான் அதிர்ந்து போனேன். "பணிக்கர் என்றொரு நடுவர்" என்ற தலைப்பில் 2011 டிசம்பர் 16 அன்று எனது வலைப்பூவிலும், முகநூலிதும் நான் எழுதி, பதிவிட்ட சிறு கட்டுரை அது. முகநூலில் பலராலும் படிக்கப்பட்டு, பின்னூட்டமிடப்பட்ட பதிவு அது. ஆனால், தலைப்பு மட்டும் மாற்றப்பட்டு ஓர் எழுத்தும் பிசகாமல் அப்படியே தங்கள் இதழில் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதன் கீழ் எனது பெயரோ, வலைப்பதிவு முகவரியோ குறிப்பிடப்படவுமில்லை.


கீழ்க்காணும் எனது வலைப்பூ, முகநூல் சுட்டிகளைப் பாருங்கள் :



நான் எழுதிய கருத்தின் அடிப்படையில் வேறு விதமாக தங்கள் இதழ் சார்ந்த எவராலேனும் எழுதப்பட்டிருந்தால் அது வேறு. எழுத்து பிசகாமல் அப்படியே எனது அச்சிறு கட்டுரை Cut and Paste செய்யப்பட்டுள்ளது.


எனது ஒரு சிறு பதிவைத் தங்களின் இதழில் வெளியிடுகிறீர்கள் எனில் அதன் கீழ் எனது பெயரைக் குறிப்பிடுவதுதானே சரி? அதே பதிவைத் தலைப்பு மாற்றி அப்படியே பெயர் ஏதுமின்றி வெளியிடுவது என்பது, அது ஏதோ தங்கள் பத்திரிகையில் பணியாற்றும் யாரோ எழுதியதாகத்தானே அர்த்தப்படும்?


நீங்கள் இதழாசிரியர் மட்டுமல்ல. நீங்களே ஓர் எழுத்தாளரும் கூட. எனில், இச்செய்கை உண்மையில் எழுதிய என்னை எப்படி காயப்படுத்தும் என்பதை நீங்களே அறிவீர்கள்.

மின் ஊடகத்தில் வாசிப்பவர்கள் அச்சு ஊடகத்திலும் வாசிக்கப் போகிறார்களா? என்று இதைச் செய்தவர்கள் எண்ணியிருப்பார்களெனில் அது தவறு. 

நல்ல வாசகர்கள் பலரும் விரும்பிப் படிக்கும் வகையில் வெளிவரும் தங்கள் இதழில் இவ்விதம் நேர்ந்திருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. "புதிய தலைமுறை"யில் வெளியாகும் பல படைப்புகள், கட்டுரைகள் மீதான நம்பகத் தன்மையையும் ஐயுற வைக்கிறது.

இச்செய்கைக்குப் "புதிய தலைமுறை"யின் அடுத்த இதழிலேனும் வருத்தம் தெரிவிக்கப்படுமானால் திருப்தியுறுவேன்.

அன்புடன்,

யுவபாரதி.

22.01.2012

January 11, 2011

எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினை

நன்றி: www.jeyamohan.in

கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்துக்களை தெரிந்துகொண்டேன். பொதுவாக நமக்கு பிரியமானவர்களை அப்பழுக்கற்றவர்களாக உருவகித்துக்கொள்ளும் மனப்பழக்கம் உண்டு. ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அது நல்ல மனநிலையே. ஆனால் அரசியலில் அது சரியாக அமையாதென்பது என் என்ணம். பற்றில் இருந்து வரும் வரிகளுடன் விவாதிக்கமுடியாது

நான் காமராஜ், ராஜாஜி, மபொசி ஆகிய அனைவரைப்பற்றியும் நிறைகுறைகளுடனேயே பார்க்கிறேன். அவர்களைப்பற்றி அவர்க்களோ அவர்களின் ஆதரவாளர்களோ எழுதும் நூல்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. என்னுடைய புரிதல்கள் வெறும் வாசிப்பை மட்டும் சார்ந்தவை அல்ல. எல்லைபோராட்ட வீரரும் காங்கிரஸ் முன்னோடியுமான தாணுலிங்கநாடார் தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களிடம் மிகநெருக்கமாக பழக்வும் அவர்களின் அந்தரங்க கடிதங்களை முறைப்படுத்தவும் வாய்ப்புகிடைத்தவன் என்ற முறையில் உருவான புரிதல்.

இக்கட்டுரையில் நான் மபொசியை குறைத்துமதிப்பிடும் தொனி வந்துவிட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை. ஆனால் அவர் தமிழ்மீதும், இந்தியதேசியத்தின் ஒளிமிக்க பகுதி என்ற கோணத்தில் தமிழ்த்தேசியம் மீதும் கொண்ட பற்று உண்மையானது. அவரது வரலாற்றுப் பங்களிப்பு முக்கியமானது. அதிகார உட்கட்சிஅரசியல் காரணமாக அவர் காமராஜால் வெளியேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழுணர்ச்சியற்றது என்ற வாதங்கள் வலுப்பெற அது வழியமைத்தது. காங்கிரஸின் தேசியநோக்கை தமிழுணர்வுடன் பிணைக்கவே ஆளில்லாமலாயிற்று. அவரது தரப்பு காங்கிரஸுக்குள் நீடித்திருந்தால் திராவிட இயக்க அரசியல் இந்த அளவுக்கு ஒற்றைப்படை வெற்றியை அடைந்திருக்காதென்றே நினைக்கிறேன். இக்கட்டுரையிலும் அதே தொனியுடன் மட்டுமே எழுதியிருக்கிறேன்

ராஜாஜி கட்சித்தாவல் மூலம் பதவிக்கு வந்தார் என்பதும் என்ன விளக்கமளித்தாலும் வரலாற்று உண்மை. நேரு அதை விரும்பவில்லை, பதவி விலக கோரினார், ராஜாஜி மறுத்துவிட்டார். இச்செய்தியை சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியவரலாறு நூலிலும் கண்டதாக நினைவு. அதுவே முதல் கட்சித்தாவல், முதல் மைனாரிட்டி அரசு. நான் திருவுருக்களை உருவாக்கவில்லை. சூழலை ஒட்டுமொத்தமான பின்னணியாக வைத்து தனிப்பட்ட அரசியல்தலைவர்களின் பங்களிப்பை புரிந்துகொள்ள முயல்கிறேன், அவ்வளவுதான்.

ஜெ

December 27, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கடிதம்

அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் "மபொசி, காமராஜ், ராஜாஜி..." கட்டுரை படித்தேன்.

உங்களிடமிருந்து இப்படி ஒரு வரலாற்றுப் பிழை மலிந்ததும் அவதூறான சொற்கள் நிரம்பியதுமான ஒரு கட்டுரையை எதிர்பார்க்கவில்லை. திராவிடத் திரிபுக்குச் சற்றும் சளைத்ததில்லை உங்களதும். எல்லா ஆளுமைகளும் எல்லாக் காலத்தும் நனி சிறந்தோர் இல்லைதான். ஆனால் அதே சமயம் அவரவர் நிறைவேற்றிய வரலாற்றுக் கடமைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

"அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது" - என்கிறீர்கள்.

தமிழரசுக் கழகம் என்பது ம.பொ.சி. காங்கிரசில் இருந்தபோது ஒரு கலாச்சார இயக்கமாகவே துவங்கப்பட்டது என்பதும் அதன் துவக்கவிழாவில் சில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அது 'காங்கிரசால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது' என்பது உண்மையல்ல. அது உண்மையானால் வடக்கெல்லை மீட்புப் போராட்டம் உச்சத்தை அடைகையில் அதைத் தேச ஒற்றுமைக்கு ஊறு என்று கூறி,'அப் போராட்டத்தைக் கைவிடுகிறீர்களா? அல்லது தமிழரசுக் கழகத்தார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறீர்களா?' என்று காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் 1954-இல் விளக்கம் கேட்கும் நிலை வந்திருக்காது. அதற்கு முன்பும் தமிழரசுக் கழகம் குறித்து நேருவே விளக்கம் கேட்கும் நிலையும் வந்திருக்காது.

தெ.பொ.மீ., மு.வ., சஞ்சீவி முதலான தமிழறிஞர்களும் இருந்த அமைப்பு அது. கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டதும் கூட.

"குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்" என்பதெல்லாம் எவ்வளவு அவதூறான சொல்லாடல்?

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே ஆந்திரத் தனி மாநிலக் கோரிக்கை எழுந்துவிட்டது. சுதந்திற்குப் பின் வீறு கொண்டது. சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னைக்கும் உரிமை கொண்டாடினர் ஆந்திரர். சுதந்திரம் பெற்ற மறு நாளே வடக்கெல்லை காக்கத் திருப்பதி புறப்பட்டவர் ம.பொ.சி. வடவேங்கடம் வரை மீட்கப் போராடி, தணிகை வரை மட்டுமே மீட்க முடிந்தது. இதில் காங்கிரசின் பங்கோ, ராஜாஜியின் பங்கோ ஏதுமில்லை. தணிகையை மீட்க உடன் உழைத்தவர்கள் மங்கலங் கிழார், கே.விநாயகம் முதலானோர். இப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை கைது செய்யப்பட்டு, இரு முறை சிறைப்பட்டார் ம.போ.சி. அவரது தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த பழனி மாணிக்கம், திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகிய இருவர் சிறைப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தனர்.

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோது ' சென்னை மீதான உரிமை கோருவதை விட்டால் உங்களின் தனி மாநிலக் கோரிக்கைக்கு தமிழரசுக் கழகமும் போராடும்' என்றவர் ம.பொ.சி. 'தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று போராடினார் அவர். சென்னையை மீட்க ராஜாஜி உதவினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனுக்கும் இதில் பெரும் பங்குண்டு.

தெற்கெல்லைப் போராட்டத்தைத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு முன்னின்று நடத்தியது. நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி போன்றோர் முக்கியமானவர்கள். ஜீவாவின் பங்கும் குறிப்பிடத் தக்கது. இந்தியதேசிய காங்கிரஸ் கேரள காங்கிரசை ஆதரித்த போது ம.பொ.சி. திரு.த.நா.கா.வை ஆதரித்தார். அப்போதைய போராட்டத்தில் (கல்குளம்) ஈடுபட்ட 11 தமிழர்கள் பட்டம் தாணுப்பிள்ளை உத்தரவால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள வெறியர் அவர். (அச் சம்பவத்திற்காக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராம் மனோகர் லோகியா அவரிடம் விளக்கம் கேட்டார்.) தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது 'தமிழன் குரல்' இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.

1946-1965 காலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி தமிழரசுக் கழகம். தமிழரசுக் கழகம் முன்னெடுத்த தமிழ்த் தேச அரசியலையும் உட்செரித்து வளர்ந்ததுதான் அண்ணாவின் தி.மு.க. அந்த இடத்தில்தான் அது பெரியாரின் தி.க.விடமிருந்து வேறுபட்டது. 1967 காலகட்டத்தில் ம.பொ.சி.யின் நிலைப்பாட்டினால் பலர் அவரை விட்டு விலகினர் என்பது உண்மை. அதன் பாற்பட்டு எமக்கும் விமரிசனம் உண்டு. ஆனால் தமிழ்த் தேச எல்லை மீட்பில் அவர் பங்கு மகத்தானது. எல்லை மீட்பில் காமராஜருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அதீத முக்கியத்துவம் தவறானது.

ஆந்திர, கருநாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ம.பொ.சி. 'எனது போராட்டம்' என்ற அவரது தன்வரலாறு, புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இலக்கியத்தில் இன உணர்ச்சி போன்றவை முக்கியமானவை. அவற்றில் சிலவற்றையாவது வாசிக்க முயல்வீர்கள் என்று நம்புகிறேன். அவர் குறித்த செய்திகள், கட்டுரைகள் http://maposi.blogspot.com என்ற வலைப்பூவில் பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ், தமிழியம் முதலான சொற்களில் நம்பிக்கையுடைய உங்களுக்கு, தமிழர் - தமிழ்த் தேசியம் முதலான சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல்லாயிரம் வாசகர் கொண்ட தங்களுக்கு வரலாற்றுப் பதிவுகளில் கவனப்பாடு அவசியம் என்று நினைக்கிறேன். மிகை புகழோ- திருவுருவாக்கமோ, அவதூறோ - இழிவுபடுத்தலோ தவிருங்கள்.

நன்றி.

அன்புடன்,

யுவபாரதி
27.12.2010

September 08, 2010

கடிதம் - இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகலும் அவையகத்து அஞ்சாமையும்


நன்றி: காலச்சுவடு


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது' என்கிற குறளை மனத்தில் இருத்திக் கொண்டே இப்படிச் சொல்லியிருப்பார் இமையம். 'அரசு நினைத்தால் நூலகத் துறையில் மட்டுமல்ல, காலச்சுவடையே நிறுத்த முடியும். காலச்சுவடுக்கு வரக்கூடிய விளம்பரங்களை நிறுத்த முடியும்' இந்த அக்கறையான குரலைக் காலச்சுவடு செவிமடுப்பது நல்லது.

காலச்சுவடு இதழ் அரசு நூலகங்களில் தடைசெய்யப்பட்டிருப்பதற்கு உரிமை சார்ந்த எதிர்வினையாக, அவ்விதழ் மேற்கொண்டுவருகிற கருத்துரிமைப் போராட்டத்தின் அறம் சார்ந்து, பல படைப்பாளிகளும் வாசகர்களும் இடதுசாரிகளும் பண்பாட்டியலாளர்களும் ஆகஸ்டு 2008 இதழில் செய்திருந்த கருத்துப் பதிவுகளை அரசியல்வாதிகளைப் புகழும் அடிவருடித்தனமெனச் சொல்லிக்காட்ட நேர்ந்திருக்கிறது இமையத்திற்கு.

வாசகர்களின் ஒரு பிரிவினரை மட்டும் கணக்கில் கொண்டு, காலச் சுவடை வெளியிடவோ, (கடைகளில்) விநியோகிக்கவோ ஏதும் தடையில்லை என்கிற நிலையில், நூலகத் துறை ஆணை இல்லாமல் போவதால், இதை வாசிக்கிற வாசகர் எவரும் இன்மையை உணரப் போவதில்லை என்கிற தொனியில் எழுதியிருக்கிறார் அவர். காலச்சுவடு வாசகர்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தொடர்ந்து வாங்க இயலாத பொருளியல் சூழல் உள்ள பலரும் இருக்கிறார்களே! இப்பிரிவினரையும் உள்ளடக்கியதுதான் பொது நூலகம்.

எண்ணிக்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல்வாதிகள்தான், இலக்கியவாதிகள் அல்ல என்று துவக்கத்தில் பொதுவாகக் குறிப்பிடுகிற இமையம், அடுத்த சில வரிகளில் தமிழ்நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர்? அதில் புத்தகம் படிப்போர் எவ்வளவு? அதிலும் காலச்சுவடு போன்ற இதழ்களைப் படிப்போர் எவ்வளவு? என்கிற வினாக்களை எண்ணிக்கையை நம்பியே முன்வைக்கிறார். 24.08.2008 ஜூனியர் விகடனில் வாசகர்கள் அதிக அளவில்(?) படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான் (நூலக ஆணைக் குழு) காலச்சுவடு பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. எண்ணிக்கையில் நம்பிக்கைகொண்ட அமைச்சர் அரசியல்வாதிதான். இமையம் அரசியல்வாதியும் 'கூட'.

உண்மை புரியாமல், அரசியல் காரணங்களுக்காகக் காலச்சுவடு நிறுத்தப்பட்டதாகத் தவறாக யூகித்துக்கொண்டு, பிரச்சினையைத் தி.மு.க. பக்கம் திருப்பிவிடுகிறார்கள் என்கிற வார்த்தைகளுக்கும், காலச்சுவடு போன்ற இதழ்களைக் கண்டு உருவான அச்சத்தினால் தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது போன்ற தோற்றத்தைக் காலச்சுவடு உருவாக்குகிறது என்கிற வார்த்தைகளுக்கும் உள்ள இடையழுங்கு கவனிக்கத் தக்கது. இதைத்தான் ஆள்வோர் உளப்பாங்கைக் குறிப்பறிந்து ஒழுகுதல் என்பர்.

அரசியல் - ஆட்சி - ஊடகம் என மூன்றிலும் மாறன் சகோதரர்கள் மேலாதிக்கம் பெற வேண்டி, பல இடையூறுகளும் நால்வகை உபாயங்களினாலும் தகர்த்தெறியப்பட்டு, திமுகவின் மாநிலத் தலைமையாலும் வட்டாரத் தலைமைகளாலும் ஊக்குவிக்கப்பட்டபோதும், அதனால் வெகுபல ஊடகங்கள் - நிறுவனங்கள் இன்னலுற்றபோதும் எழாத அறச்சீற்றம், இப்பொழுது சன் குழுமம் திமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கிற சூழலில், அக்குழுமத்தால் தமிழ்ச் சமூக வாழ்வில் நேர்ந்துள்ள விபரீதங்களில் காலச்சுவடைக் கவனம் செலுத்த வழிநடத்த முயல்கிற இமையம் போன்றோரின் உள்ளடக்கம் தெரியாத அளவிற்கு ஒன்றும் தமிழ் வாசகன் இல்லை.

பொதுவாக "நாம் 'பிறருக்கான புனிதத்தை' மட்டுமே பேசுபவர்களாக இருக்கிறோம்" (இமையம்) மற்றும் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இப்பூவுலகில் எதுவுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கை" (காலச்சுவடு) என்பதான வரிகள் அவரவர் உள்ளிருப்பை அடையாளப்படுத்துகின்றன.

இமையமே சொல்கிறாரே 'நமது பலவீனங்கள் எதுவோ, அதுவாகத்தான் நாம் இருப்போம்' என்று.


- யுவபாரதி, சென்னை


June 23, 2010

தோழர் அ.மார்க்சுக்குக் கடிதம்



(நாயுடு சாதியினர் யாவரும் இடைநிலைச் சாதியினரா? என்பது குறித்து)
அன்புள்ள தோழர்,

வணக்கம். ‘எதிர்’ வெளியீடாக வந்துள்ள தங்களின் ‘தலித் அரசியல்’ படித்தேன். கடந்த இருபதாண்டு காலமாக தலித் அரசியல் சார்ந்து தங்களால் எழுதப்பட்ட முக்கியமான பல கட்டுரைகள் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டுக் கிடைத்திருப்பது தலித் அரசியல் குறித்த புரிதலுக்கும் ஆரோக்கியமான விவாதத்திற்கும் அவசியமானதே.

இந்நூலில் ஆதிக்க சாதிகள் என்று குறிப்பிடும் இடங்களில் பார்ப்பனர் மற்றும் வேளாளரில் சில பிரிவினரான சைவ வேளாளர், தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், முதலியார் ஆகியோரைச் சரியாகவே அடையாளம் காட்டுகிறீர்கள். நகரத்தார் இப்பட்டியலில் விடுபட்டுள்ளனர். தெலுங்கராட்சிக்குப் பின் ரெட்டியாரையும் இப்பிரிவில் சேர்க்கலாம் என்கிறீர்கள். ஏற்புடையதே. (ரெட்டியாரிலும் கஞ்சமர் எனும் பிற்பட்ட வகுப்பினர் உண்டு என்பது வேறு.) ஆனால் நாயுடு சாதியினரை மட்டும் ஒட்டுமொத்தமாக இடைநிலைச் சாதியினர் (ப.96) என்றே குறிப்பிடுவதோடு, பார்ப்பனர் மற்றும் வேளாளர்களின் நகரம் சார்ந்த ஆதாயக் குடிப்பெயர்வுக்குப் பின்னரே கிராம அளவில் ஆதிக்கத்திற்கு வந்துள்ள கள்ளர், வன்னியர், நாடார் முதலான இடைநிலைச் சாதியினரோடு நாயுடு சாதியினரையும் (ப.165) இணைத்தும் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், வேளாளர்தம் சில பிரிவினரைப் பகுத்து அடையாளம் கண்டது போல நாயுடு சாதியினரையும் காண வேண்டியுள்ளது.

இன்று தமிழகத்தில் நாயுடு என்று ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் இரு வேறு தனித்த வகைப்பாட்டினர் அவர்களில் உள்ளனர்.

1. புஷ்யமித்திர சுங்கனின் பார்ப்பனிய எதேச்சாதிகாரத்திற்குத் தப்பி கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்து மத்திய மேற்கு ஆந்திரம் மற்றும் மத்தியக் கிழக்குக் கருநாடகத்தின் கிருஷ்ணா நதிக்கரைப் பகுதியில் குடியேறி, பின் அங்கிருந்து கிளைத்துத் தெற்கிலும் வடக்கிலும் பரவிய பௌத்தக் குர்மி (Buddhist Kurmi) இனத்தவர்கள் எனக் கருதப்படும் கம்மவார்கள். [பார்க்க: www.wikipedia.com/ (search) kamma]

2. கங்கைச் சமவெளியின் காம்பிளி, மிதிலை, அயோத்தி ஆகிய பகுதிகளிலிருந்து மத்திய மேற்கு ஆந்திரம் மற்றும் மத்தியக் கிழக்குக் கருநாடகத்தின் கோதாவரி நதிக்கரைப் பகுதியில் குடியேறி, பின் அங்கிருந்து கிளைத்துப் பெரிதும் தெற்கிலும் கிழக்கிலும் சற்றே வடக்கிலும் பரவிய இந்தோ - ஆரியப் பழங்குடியினரான காம்ப்பு இனத்தவர்கள் எனக் கருதப்படும் காப்புகள் எங்கிற பலிஜர்கள். (பலிஜர் மட்டுமின்றி கவரை, கம்பளத்தார், காஜுலர் (வளையக்கார நாயுடு) என்ற சாதிகளும் காப்பு வகையில் அடங்குவர்). [பார்க்க: www.wikipedia.com/ (search) balija]

இவற்றில் தென்னகத்தில் வேர்விட்டுச் செழித்த விஜயநகரப் பேரரசு, குறிப்பாக அதிலிருந்து கிளைத்த செஞ்சி, தஞ்சை, மதுரை, கண்டி நாயக்க அரசுகள் யாவும் பலிஜ நாயுடுக்களுடையவை (பார்க்க: www.wikipedia.com/ (search) balija & Caste and Race in India, G.S.Ghurye, p.106).

தமிழகத்தின் பார்ப்பன - வேளாளப் புலவர்கள் பலரும் ‘தென்மொழியும் வடமொழியும் பழுதறக் கற்ற பாங்கு’ போல, தெலுங்குப் பார்ப்பனர் - பலிஜ நாயுடுக்கள், தெலுங்கு - வடமொழி இலக்கிய உருவாக்கதில் நெருங்கிய பிணைப்பு கொண்டவர்கள். தமிழகத்தை வெற்றி கொண்டு விஜயநகரப் பேரரசுக்குள் கொணர்ந்த குமார கம்பணனின் வீரம் குறித்து அவன் மனைவி கங்கா தேவி எழுதியது ‘மதுரா விஜயம்’ என்கிற வடமொழி நூலே. பல நாயக்கர்கள் வடமொழியில் நூல் யாத்தவர்கள் [பார்க்க: www.wikipedia.com/ (search) balija].

வர்ணாசிரம இறுக்கத்தையும் வடமொழி ஆதிக்கத்தையும் தமிழகத்தில் வளப்படச் செய்தவர்கள் நாயக்க அரசர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்விடயத்தில் இவர்கள் தமிழரசர்களை விட பன்மடங்கு மிஞ்சியவர்கள். நிலம் முழுக்க மன்னனுக்கே சொந்தம் என்ற நிலை வலுக்கொண்டதும் இவர்கள் காலத்ததே.

மதுரை விசுவநாத நாயக்கர் ஆட்சியின் கீழ் வகுக்கப்பட்ட எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளில் (பாலிகர்(Palegar) பற்று) மறவர்க்குட்பட்ட பதினொன்று, கம்மவார்க்குட்பட்ட இளசை, குருவிக்குளம் போன்ற சில தவிர பிற யாவும் தெலுங்கு - கன்னட பலிஜர் சாதி வகையினரதே. மதுரை நாயக்க அரசுகளில் அரசருக்கு அடுத்த ஆற்றல் வாய்ந்த பதவியான தளவாய் பதவியை அலங்கரித்தவர்கள் தொண்டை மண்டல வேளாளரான அரியநாத முதலியாரைத் தவிர்த்து, பிற அனைவரும் பெரும்பாலும் தெலுங்குப் பார்ப்பனரும், பலிஜ நாயுடுக்களுமே.

ஆங்கிலேயர் ஆட்சி இங்கே வேரூன்றும் வரை தமிழகத்தை ஆண்டவர்கள் நாயக்கர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் கூட பெருநிலக் கிழார்களாயும், பின் பெரு வணிகராயும், இன்றும் வணிகத்திலும் அரசியலிலும் கோலோச்சுபவர்களாக இருப்பவர்கள் இவர்கள். கீழவெண்மணி சம்பவத்திற்குக் காரணமான நிலக்கிழார் இவ்வினத்தவரே என்பதும் நினைவு கூரத் தக்கது. இன்றும் பலிஜரும் கம்மவாரும் அரசால் முற்பட்ட வகுப்பினராகவே வகைப்படுத்தப்படுபவர் ஆவர்.

கம்பளத்தார், காஜுலர் (வளையக்கார நாயுடு) போன்ற நாயுடு சாதியினரை, இடைநிலைச் சாதியினாராகப் பார்ப்பது ஏற்புடையது. கவரைகளைப் பின்னாளில் ஆதிக்கம் பெற்ற இடைநிலைச் சாதியினர் எனலாம். ஆனால் தமிழகத்தின் பார்ப்பனர் - வேளாளர்களோடு இணையாய்ப் பார்க்க வேண்டிய ஆதிக்க சாதிகளான பலிஜா - கம்மா சாதியினரையும், நாயுடு என்ற ஒற்றைப் பெயரில் இடைநிலைச் சாதியினர் என்பது ஏற்கத் தக்கதல்ல.

தமிழகத்தை ஆட்சி செய்ததில் அதிகமும் பலிஜ நாயுடுக்கள் என்பதால் இக்கடிதத்தில் கம்மவார் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் ஆந்திரத்தில் காப்புவினரை விட கம்மவாரின் கையே ஓங்கியுள்ளது என்பதும் அதை எதிர்த்து காப்பு(பலிஜா)வினர் அரசியல் ரீதியாக அணிதிரள்கின்றனர் என்பதும் வேறு.

ஆகவே, வேளாளர்தம் சில பிரிவினரைப் பகுத்து அடையாளம் கண்டது போல நாயுடு சாதியினரையும் காண வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இடைநிலைச் சாதியினர் எனக் கூற இயலாது. தவிர அனைத்து நாயுடு சாதியினரையும் ஒன்றாய்ப் பாவித்து, மொழிச் சிறுபான்மையினர் என்று கவசம் பூட்டுவோமேயானால், தெலுங்கு - கன்னடம் பேசும் பிற ஆதிக்க சாதிகளும் இவ்விதம் இடம்பெறும் அபாயமுண்டு என்பதையும் மறுக்கமுடியாது.

நன்றி.

அன்புடன்,
ஆர்.மணிகண்டன்.

January 06, 2010

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கடிதம் 10.11.99

151, கே.பி.சாலை,
நாகர்கோவில்-629 001.
10.11.99.


அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் 6.11.99 கடிதம் இப்போது கிடைத்தது. உங்களை நான் நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் காட்டிய தோழமையும், காஞ்சிபுரத்திலிருந்து நாம் திருவண்ணாமலைக்கு ஒன்றாக வந்த அனுபவமும் ஒருநாளும் மறக்கக் கூடியவை அல்ல.

அன்று எடுத்த புகைப்படங்களை அனுப்பித் தந்ததற்கு நன்றி. நான் திருவண்ணாமலை வந்ததன் நினைவாக அவை என்றும் என் ஆல்பத்தில் இருக்கும். நண்பர் எம்.எஸ். நன்றாக இருக்கிறார்.

ஜே.கே. பற்றிய நூல்களில் என்னென்ன என் வீட்டு நூல் நிலையத்தில் இருக்கின்றன என்று பார்க்கிறேன். அவை பற்றிய முழு விவரங்களையும் தருகிறேன். இவற்றைச் செய்து முடிக்கச் சிறிது அவகாசம் தேவை.

என் குடும்பத்தாருடன் ஒரு முறை திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அப்போது உங்களுடன் தொடர்பு கொள்வதோடு உங்கள் வீட்டிற்கும் அவசியம் வருவேன்.

நண்பர் பவா செல்லத்துரை அவர்களிடமும் பிற நண்பர்களிடமும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள்.

தினமணி தீபாவளி மலரில் ‘டால்ஸ்டாய் தாத்தாவின் கை’ என்ற என் சிறுகதை வெளிவந்திருக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் நீங்களும் ஈடுபட்டு வரவேண்டும்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா