Showing posts with label சமஸ்கிருதம். Show all posts
Showing posts with label சமஸ்கிருதம். Show all posts

June 15, 2012

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-10)

இரகுநாத நாயக்கர் – நான்காம் கிறிஸ்டியன் ஒப்பந்தம்

தரங்கம்பாடி டேன்ஸ்பொர்க் கோட்டை
டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான ‘ஓரிசண்ட்’ எனும் கப்பலில் ரோலண்ட் கிராப் என்பவர் தலைமையில் டேனிஷ் வணிகக் குழு சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தபோது, ஏற்கனவே நாகப்பட்டினத்தில் நிலைகொண்டிருந்த போர்ச்சுகீசியர்கள் ‘ஓரிசண்ட்’ கப்பலை மூழ்கடித்தனர். ரோலண்ட் கிராப் முதலானோர் அதிலிருந்து தப்பி, தஞ்சை இரகுநாத நாயக்கரிடம் முறையிட்டனர். அவர் போர்ச்சுகீசியர்களைக் கண்டித்து 12000 பொன் அபராதம் விதித்தார். டேனிஷார் தரங்கம்பாடியில் வணிக மையம் அமைத்துக் கொண்டு குடியிருக்க விரும்புவதை அறிந்த இரகுநாதன், அதை வரவேற்று ஏப்ரல் 1620-இல் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியனுக்கு (ஆட்சி : கி.பி.1588-1648) ஒரு தங்கத் தகட்டில் கடிதமிட்டார் (40 செமீ x 2.5 செமீ). 

டேனிஷ் அரசரின் உத்தரவின் பேரில் இலங்கையில் கண்டி அரசரின் அனுமதி பெற்று திருகோணமலையில் ஒரு வணிக நிலையை நிறுவிய கேப்டன் ஓவ் கெட்டி என்பவர் தஞ்சை வந்து இரகுநாத நாயக்கரைச் சந்தித்தார். இதன் அடிப்படையில், டேனிஷார் தரங்கம்பாடியில் வணிக மையம் அமைத்துக் கொண்டு குடியிருக்க அனுமதித்து, இரகுநாத நாயக்கர் – நான்காம் கிறிஸ்டியனுக்கிடையே ஒப்பந்தம் உருவாயிற்று. 1620 நவம்பர் 19 அன்று கையெழுத்தான இவ்வொப்பந்தம் போர்ச்சுகீசிய மொழியில் எழுதப்பட்டு, அதில் இரகுநாதரால் தெலுங்கில் கையொப்பமிடப்பட்டுள்ளது. மேற்படி தங்கத்தகட்டில் எழுதப்பட்ட கடிதமும், மேற்படி ஒப்பந்த ஆவணமும் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவ்வொப்பந்தத்தின்படி, தரங்கம்பாடியைச் சுற்றி 5 மைல் x 3 மைல் சுற்றளவுள்ள நிலப்பரப்பு குத்தகைக்கு டேனிஷ் கம்பெனிக்கு விடப்பட்டது. ‘டேன்ஸ்பொர்க்’ என்ற பெயரில் ஓவ் கெட்டியால் கோட்டை கட்டுவிக்கப்பட்டு, வணிகம் துவக்கப்பட்டது. ரோலண்ட் கிராப்பை முதல் கவர்னராய் நியமித்து, ஓவ் கெட்டி டென்மார்க் திரும்பினார். டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் நாணயங்களும் அச்சிட்டு வெளியிடப்பட்டன.

இரகுநாத நாயக்கரின் இறைப் பணிகள்

நாயக்கர்கள் வைணவ மரபைச் சேர்ந்தவர்கள் என்பது அறிந்ததே. குறிப்பாக, இரகுநாத நாயக்கர் இராமபிரானிடம் பெரும்பக்தி கொண்டிருந்தார். பல திருமால் கோவில்களில் இராமன் திருமேனிகளை அமைத்தார். கோவில்களில் இராமாயண கதை சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார். “இராமகதை எனும் அமுதத்தை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் தொண்டன்” எனும் பொருள்படும்அனவரத ராமகாதாம்ருத சேவகன்” எனும் சிறப்பு விருதை இவர் ஏற்றிருந்தார் என்கிறது திருக்கண்ணமங்கைக் கோவில் செப்பேடு. அக்கோவிலுக்கு 60 வேலி நிலத்தைத் தானமாக அளித்துள்ளார் இரகுநாதன்.

கும்பகோணத்திலுள்ள இராமசாமி கோவில் இரகுநாத நாயக்கரால் கி.பி.1620-இல் கட்டுவிக்கப்பட்டது. உள்பிரகாரத்தில் இராமாயணக் கதை முழுவதும் சித்திர வடிவில் வரையப்பட்டுள்ள இக்கோவிலில், இராம பட்டாபிஷேகக் கோலத்தில் திருமேனிகள் விளங்குகின்றன. இக்கோவிலில் தமது தேவியருடனான இரகுநாத நாயக்கரின் சிற்பமும் உள்ளது.

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில், திருவையாறு ஐயாறப்பர் கோவில், பட்டீசுவரம் தேனுபுரீசுவரர் கோவில் முதலான ஆலயங்களுக்கும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார் இரகுநாத நாயக்கர்.

இரகுநாத நாயக்கரின் இலக்கியப் பணிகள்

தஞ்சையில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களின் பொற்காலத்தைத் தொடங்கி வைத்தவர் இரகுநாத நாயக்கரே எனப்படுகிறது. இவ்விரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்த இரகுநாதன் தம் தாய்மொழியாம் தெலுங்கில் அச்யுதாப்யுதயமு, ராமாயண கதா ஸங்க்ரஹமு (ரகுநாத ராமாயணம்), பாரத கதா ஸங்க்ரஹமு, நளசரித்ரமு, வால்மீகி சரித்ரமு முதலான நூல்களையும், சமஸ்கிருதத்தில் ஸங்கீத ஸுதா, பாரத ஸுதா, நளாப்யுதயம், பாரிஜாதாபஹரணம், அச்யுதேந்திராப்யுதயம், வால்மீகி சரித்ரம், ராமாயண ஸார ஸங்க்ரஹம் கஜேந்திர மோக்‌ஷம், ருக்மிணீ–கிருஷ்ண விலாஸம், ஜானகி பரிணயம் முதலான நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கின் முதல் உரைநடை நூல் வால்மீகி சரித்ரமுவே எனப்படுகிறது.

கும்பகோணம் இராமசாமி கோவில்
இரகுநாத நாயக்கர் சிற்பம்
கஜேந்திர மோக்‌ஷம், ருக்மிணீ–கிருஷ்ண விலாஸம், ஜானகி பரிணயம் ஆகிய மூன்றும் யக்‌ஷகான நாடகங்களாகும். தஞ்சையில் தற்போது ஆண்டுக்கொரு முறை பாகவத மேளா என்ற பெயரில் நடைபெறும் யக்‌ஷகான நாடகமரபு தோன்ற இரகுநாதரே காரணமாக விளங்கினார்.

இசையில் சிறந்த புலமை பெற்றிருந்த இரகுநாதன் ஜெயந்தசேனா எனும் ராகத்தையும், ராமானந்தா எனும் தாளத்தையும் கண்டுபிடித்தார். இவர் எழுதிய ஸங்கீத ஸுதா எனும் இசை நூல் கருநாடக இசையின் கருவூலம் எனப்படுகிறது. நாட்டியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இரகுநாதன் பாரத ஸுதா எனும் நடன நூலையும் இயற்றியுள்ளார். பழைய வீணையின் மேல் அமைப்பை மாற்றி ‘இரகுநாதேந்திர வீணை’ எனும் புதுவீணையை உருவாக்கினார். தற்போது தஞ்சை வீணை என்று வழங்கப்படுகிறது இது.

இரகுநாதனின் அவையில் கோவிந்த தீட்சிதர், அவரது இரு மகன்களான யக்ஞநாராயண கவி, வேங்கடமகி, இரத்னகேது ஶ்ரீனிவாச தீட்சிதர், அவரது மகன் இராஜசூடாமணி தீட்சிதர், அய்யா தீட்சிதர் எனும் கிருஷ்ணகவி, அவரது மகன் மிருத்யுஞ்ஜய கவி, வேங்கட கவி, மதுரவாணி, இராமத்ராம்பா முதலான பல தெலுங்கு-சமஸ்கிருதப் புலவர்கள் இருந்தனர்.

இரகுநாத நாயக்கருக்குப் பிரதானியாக விளங்கிய கோவிந்த தீட்சிதர் சமஸ்கிருதத்தில் அச்சுதப்பன் மற்றும் இரகுநாதனின் வாழ்வை கவிதை நடையில் கூறும் ஸாஹித்ய ஸுதா, இரகுநாதனின் ஸங்கீத ஸுதாவிற்கு விரிவுரையாக அமைந்த ஸங்கீத ஸுதாநிதி, அத்துவைதத் தத்துவம் குறித்து கௌமாரில தரிசனம் முதலான நூல்களை எழுதியுள்ளார். தமது ஆசானும் அமைச்சருமான கோவிந்த தீட்சிதர் மீது பெருமதிப்பு கொண்டிருந்த இரகுநாதன் கோவிந்த தீட்சிதர் பெயரில் நாணயங்கள் வெளியிட்டார். கோவிந்த குடி, கோவிந்த புத்தூர் முதலான பெயர்களை ஊர்களுக்கு இட்டார். ‘அய்யன்’ என்று பிறரால் அழைக்கப்பட்ட கோவிந்த தீட்சிதர் பெயரில் அமைந்த தஞ்சைப் பகுதிகளே அய்யன் கடை, அய்யன்குளம், அய்யன்பேட்டை என்பன.

கவி யக்ஞநாராயணன் சமஸ்கிருதத்தில் ஸாஹித்ய ரத்னாகரம், ரகுநாதபூப விஜயம் முதலான காவியங்களையும், ரகுநாத விலாஸம் எனும் நாடகத்தையும் இயற்றினார். சதுர்தண்டி பிரகாசிகா, வார்த்திகாபரணா, சித்ரபந்த ராமாயணம் முதலான நூல்களை வேங்கடமகி எழுதினார்.

இரத்னகேது ஶ்ரீனிவாச தீட்சிதர் சிதிகண்ட விஜயம் எனும் காவியத்தையும், ஸாஹித்ய ஸஞ்ஜீவினி, பாவோத்பேதம், ரஸார்ணவம், அலங்கார கௌஸ்துபம், காவிய தர்ப்பணம், காவ்ய ஸார ஸங்கிரஹம், ஸாஹித்ய சூக்ஷ்ம ஸரணி, பவன புருஷோத்தமம் முதலான நூல்களையும் எழுதினார். அவரது மகன் இராஜசூடாமணி தீட்சிதர் தந்திரசிகாமணி எனும் தத்துவ நூலையும், ருக்மிணி கல்யாணம், சங்கராப்யுதயம் எனும் காவியங்களையும், ராமகதா, சித்ரமஞ்சரி, ரத்னகேத விஜயம், சிருங்கார ஸர்வஸ்வம் ஆகிய நாடகங்களையும் இயற்றினார்.

கிருஷ்ண கவி ரகுநாத பூபாலியம், நைஷத பாரிஜாதம் எனும் நூல்களையும், மிருத்யுஞ்ஜய கவி பிரத்யும்னோத்தர சரித்ரம் எனும் நூலையும், கவி மதுரவாணி ஒரு ராமாயண காவிய நூலையும் எழுதினர்.

தெலுங்கில் வேங்கட கவி விஜய விலாஸமு, ஸாரங்கதாரா சரித்ரமு முதலான நூல்களை எழுதினார்.

தெலுங்கின் இலக்கிய வரலாறு கி.பி.11-ஆம் நூற்றாண்டிலேயே துவங்குகிறது. தெலுங்கின் முதல் காவியம் எனப்படுவது நன்னய பாரதம் எனும் தெலுங்கு மகாபாரதம். இக்காவியம் கீழைச் சாளுக்கிய மன்னரான இராஜராஜ நரேந்திரனது ( ஆட்சி : கி.பி.1019-1061) அவைப்புலவரான நன்னய பட்டரால் இயற்றப்பட்டது. இந்த இராஜராஜ நரேந்திரன், சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜனது மகள் குந்தவைக்கும், கீழைச் சாளுக்கிய மன்னர் விமலாதித்தனுக்கும் பிறந்தவர். இவரது மனைவி அம்மங்கா தேவி முதலாம் இராஜேந்திர சோழனின் மகளாவார். இராஜராஜ நரேந்திரன் – அம்மங்கா தேவியின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன்.

தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி மொழியாக இருந்த தெலுங்கு இரகுநாத நாயக்கர் காலத்தில் பெரும் இலக்கிய மொழியாகச் செழித்தது. தெலுங்கு இலக்கிய வரலாற்றில் இரகுநாத நாயக்கர் தெலுங்கு இலக்கியத்திற்கும் தெலுங்கு இசைக்கும் ஆற்றிய பணிகள் போற்றப்படுகின்றன.

தெலுங்கும் சமஸ்கிருதமும் போற்றப்பட்ட தஞ்சை மண்ணில், தமிழ்ப் புலவர்கள் அரசால் ஆதரிக்கப்படவில்லை. ஆட்சி-அலுவல் மொழியாகவும் தெலுங்கே இருந்தது. அரச ஆதரவுடன் தெலுங்கில் பெரும் காவியங்கள் இயற்றப்பட்ட காலத்தில், சிறு சிறு தமிழ் நிலவுடைமையாளர்களை நம்பி சிற்றிலக்கியங்கள் பாடும் நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டது. தமிழிசைவாணர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தெலுங்குக் கீர்த்தனைகள் செல்வாக்கோடு எழுந்தன. தமிழிசை தெலுங்கு பாடத் துவங்கியது.

- யுவபாரதி

(அடுத்தது)

March 25, 2012

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-9)

அல்லூரி இரகுநாத நாயக்கர் (கி.பி.1600–1634)

தஞ்சை நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவர் இரகுநாத நாயக்கர். கி.பி.1600 முதல் அரசை வழிநடத்திய இவர், 1614-ல் தந்தை அச்சுதப்பரின் மறைவுக்குப் பின் தஞ்சை மன்னரானார். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் புலமையும் போர்க்கலையிலும் இசைக்கலையிலும் வல்லமையும் பெற்றிருந்தார் இரகுநாதன். இவரைக் கிருஷ்ண தேவராயருடன் இணைவைத்துக் கூறுவர் தெலுங்கு இலக்கிய ஆய்வாளர்கள். இவரது மனைவிகளில் ஒருவரான இராமபத்ராம்பா கல்வியறிவும் கவித்திறமும் பெற்றவர். இரகுநாதனின் காலத்திலும் கோவிந்த தீட்சிதரே பிரதானியாக இருந்தார்.

இரகுநாதரின் போர்கள்

அ) கோல்கொண்டாப் படையை, வேங்கடபதிராயரின் சார்பில் எதிர்த்துப் போரிட்டு வென்றார் அச்சுதராயரின் மகன் இரகுநாதன் என்று ஏற்கனவே கண்டோம். அப்போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வருகையில், விஜயநகர ராயர்களுக்கு எதிராகக் கலகம் செய்து செஞ்சிப் போரில் சிறைப்பட்டிருந்த செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரை ராயரின் இசைவு பெற்று விடுவித்தார் இரகுநாதன். இதனால் மகிழ்ந்த செஞ்சி கிருஷ்ணப்பன் தனது மகளை இரகுநாதனுக்கு மணமுடித்து வைத்தார் என்கிறது விஜயராகவனின் “ரகுநாதாப்யுதயமு”. 

ஆ) ஆட்சிக் கட்டில் ஏறியது முதலே பல போர்களைச் சந்தித்தார் இரகுநாத நாயக்கர். செஞ்சி கிருஷ்ணப்பரின் திறை அரசர்களாக இருந்து கொள்ளிடத்திற்கு வடக்கே தேவிக்கோட்டையிலிருந்து ஆண்டு வந்த சோழகர்கள் தஞ்சை நாயக்கர்களுக்கு எதிராகச் செயல்பட்டதை அடுத்து கொள்ளிடம் கடந்து சோழகர்களுடன் போரிட்டு வென்றார் இரகுநாதன். சோழகர்களுக்கு உதவி செய்த செஞ்சி நாயக்கர் போர்க்களம் விட்டோடினார். சோழகர்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியப் படைகளைத் தொடர்ந்து, அவை நிலைகொண்டிருந்த வடஇலங்கை நோக்கி கடற்பயணம் செய்த இரகுநாத நாயக்கர், இலங்கையில் அவற்றைத் தோற்கடித்து, பரராஜ பயங்கரன் என்பவரை யாழ்ப்பாண அரியணையில் அமர்த்திவிட்டுத் தஞ்சை திரும்பினார். இப்போர் குறித்த செய்திகள் யக்ஞ நாராயணனின் “ஸாஹித்ய ரத்னாகர”த்தில் (சமஸ்கிருதம்) தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்போர்கள் 1614-15ல் நிகழ்ந்திருக்கும் எனத் தெரிகிறது.

இ) விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதிராயரின் மறைவுக்குப் பின் (1614) விஜயநகர அரியணைக்கான போட்டி துவங்கியது. வேங்கடபதிக்கு ஆண்வாரிசு இல்லாமல் போனதால், மரணப் படுக்கையில் தனது அண்ணன் மகன் இரண்டாம் ஶ்ரீரங்கன் எனும் சிக்கதேவனைத் தன் வாரிசாக அறிவித்தார் வேங்கடபதி. வேங்கடபதியின் இளைய ராணி ஒபயம்மாவின் சகோதரன் கொப்பூரி ஜக்கராயன் என்பவர் ஒபயம்மாவின் வளர்ப்புப் பிள்ளையை வேங்கடபதியின் வாரிசு என்று கூறி, ஆட்சி உரிமை கோரினார். தனது முயற்சிக்குத் தடையாக இருந்த சிக்கதேவனைக் கொன்றதோடு, அவரது குடும்பத்தையும் வேலூர்ச் சிறையில் அடைத்தார். அப்போது, விஜயநகரப் பேரரசின் தலைநகராக இராயவேலூர் இருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. எனினும், சிக்கதேவனின் இரண்டாம் மகன் இராமதேவன் துணி வெளுப்பவர் ஒருவரது உதவியால் சிறையிலிருந்து தப்பி, காளஹஸ்தி வேங்கடகிரி அரசகுலத்தைச் சேர்ந்த வேலுகோடி யாசமநாயுடுவிடக் அடைக்கலமானார்.

இராமதேவராயருக்கு அரசுரிமை மீட்க வேண்டி, ஜக்கராயனுடன் போரிட்டார் யாசமநாயுடு. செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும், மதுரை முத்து வீரப்ப நாயக்கரும், திருவிதாங்கூர் அரசரும், திருநெல்வெலிப் பாண்டியர்களும், போர்ச்சுகீசியரும் ஜக்கராயனுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டனர். ஜக்கராயனின் படையும் அவரது ஆதரவப் படைகளும் மதுரை நாயக்கரின் அப்போதைய தலைநகரான திருச்சிராப்பள்ளிக்கு அருகே குழுமின.

முறையான உரிமையாளரான இராமதேவனுக்கு அரசுரிமை கிடைக்கும் பொருட்டு யாசமநாயுடுவுக்கு ஆதரவாகப் போரிட்டார் இரகுநாதன். யாழ்ப்பாணப் படையும், டச்சுப் படைகளும் இரகுநாத நாயக்கருக்கு ஆதரவளித்தன. யாசமநாயுடுவின் படையும் இரகுநாதனின் படையும் ஆதரவுப் படைகளும் தஞ்சைக்கு அருகே பழமனேரியில் குழுமின.

இவ்விரு படைகளும் கல்லணைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியின் தென்கரையில் தோப்பூர் எனும் இடையில் சந்தித்தன. இப்போது அவ்வூர் தோகூர் எனப்படுகிறது.

எதிரிகளின் படையணிகளிலும் மதுரைப் படைகளே முன்னின்று போரிட்டன. கொப்பூரி ஜக்கராயன் போர்க்களத்திலேயே வெட்டுண்டு வீழ்ந்தார். ஜக்கராயனது தம்பி யத்திராஜ் நாயுடுவும், செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும் தோற்றோடினர். ஜக்கராயனது தளபதியும் மதுரை முத்து வீரப்ப நாயக்கரும் சிறைப்பட்டனர். எனினும் இருவரையும் விடுதலை செய்தார் இரகுநாத நாயக்கர். நன்றிக் கடனாகத் தன் மகளை இரகுநாதனுக்கு மணம் செய்வித்தார் மதுரை நாயக்கர். இப் போர்வெற்றியைக் குறிக்கும் விதமாக அவ்விடத்தில் இரகுநாதன் வெற்றித் தூண் ஒன்றினை நாட்டினார்.

தோப்பூர்ப் போர் வெற்றியைத் தொடர்ந்து, இராமதேவனைக் கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த சக்கரபாணி கோவிலில் வைத்து அவரை விஜயநகரராயரென (கருநாடகச் சக்கரவர்த்தி) என 1617-ல் அறிவித்தார் இரகுநாதன். அப்பொழுது இராமதேவராயருக்கு வயது 15.

ஈ) தோப்பூர்ப் போரை அடுத்து செஞ்சிக்கு எதிராகப் படை நடத்தினார் இரகுநாத நாயக்கர். இப்போரில் செங்சிக் கோட்டையைத் தவிர்த்து புவனகிரி உள்ளிட்ட பிற அனைத்து முக்கியக் கோட்டைகளையும் இழந்தார் செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர். எனினும் விஜயநகர அரசரிமைக்குத் தொடர்ந்து முயன்ற ஜக்கராயனின் தம்பி யத்திராஜ் நாயுடுவுடன் சேர்ந்து, சிதம்பரத்திற்கு வடமேற்கே வெள்ளாற்றங்கரையில் உள்ள பாளையங்கோட்டையில் 1917-ல் இரகுநாத நாயக்கருடனும், யாசம நாயுடுவுடனும் மோதினார் செஞ்சி கிருஷ்ணப்பன். எனினும் இப்போரில் தோற்றுச் சிறைப்பட்டார். இரகுநாதனின் பரிந்துரையால் பின் விடுதலையும் பெற்றார். இரகுநாதர் இறுதியாகப் பங்கேற்ற போர் இதுவே எனப்படுகிறது.

தஞ்சை கிழக்கு வாயில் பீரங்கி
குதிரையேற்றத்திலும் வாள்வீச்சிலும் துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றிருந்த இரகுநாத நாயக்கர் நிறுவிய இரும்பிலான பீரங்கியை தஞ்சை நகரின் கிழக்கு வாயிலில் இன்றும் காணலாம்.

- யுவபாரதி

(அடுத்தது)

March 24, 2012

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-8)

அல்லூரி அச்சுதப்ப நாயக்கர் (கி.பி.1560-1614)

கி.பி.1560 முதல் இளவரசராக (யுவராஜா) இருந்த அச்சுதப்ப நாயக்கர், தந்தை சேவப்பனின் மறைவுக்குப் பின், 1580-ல் தஞ்சை மன்னரானார். சின்ன சேவாச்சுதா என்றும் அழைக்கப்படும் இவரது பட்டத்தரசி மூர்த்திமாம்பா; மகன் இரகுநாதன்.

இவருக்குப் “பிரதானி”யாக இருந்தவர் கன்னடப் பிராமணரான கோவிந்த தீட்சிதர். சேவப்பரின் இறுதிக் காலத்தில் பிரதானியாகப் பதவியேற்ற இவர், அச்சுதப்பனின் காலத்திலும் தொடர்ந்தார். விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரன்–புக்கனுக்கு இராஜகுருவாக விளங்கிய மாதவ வித்யாரண்யருக்கு இணையாக, தஞ்சை அரசில் செல்வாக்குப் பெற்றவராக ஆய்வாளர்களால் அறியப்படுபவர் கோவிந்த தீட்சிதர். பட்டீசுவரம் திருக்கோவிலில் இவருக்குச் சிலை உள்ளது.  

தஞ்சை நாயக்க அரசில் அரசருக்கு அடுத்து பெரும் செல்வாக்கு பெற்ற பதவி பிரதானி என்பதாகும். பிரதம அமைச்சர் (Prime Minister) பதவிக்கு ஒப்பானது அது. நாட்டின் உள்நாட்டு – வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் பிரதானியின் பங்கு மிகப்பெரியது. பிரதானிக்கு அடுத்த முக்கியப் பதவி “தளவாய்” எனப்படும் படைத்தளபதியாகும்.

மாறாக, மதுரை நாயக்க அரசில், அரசருக்கு அடுத்து தளவாய் எனும் பதவியே செல்வாக்கு பெற்றது. தலைமை ஆளுநர் (Governor General) பதவிக்கு ஒப்பானது என்பர். அவருக்கு அடுத்த முக்கியப் பதவியே பிரதானி என்பது. மதுரை அரசைப் பொறுத்தவரை பிரதானி அரசின் வரவு செலவைக் கவனிக்கும் நிதியமைச்சர் மட்டுமே.

அச்சுதப்பனின் இளவரசுக் காலத்தில்தான், விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதற்கும், விஜயநகரம் எனும் ஹம்பி முற்றிலும் அழியவும் காரணமான தலைக்கோட்டைப் போர் நடந்தது (ஜனவரி 1565). கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த இப்போரில் தக்காணச் சுல்தான்கள் எனப்படும் ஆமதுநகர், பீரார், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய ஐந்து நாடுகளின் சுல்தான்களும் ஒன்றுசேர்ந்து விஜயநகரப் படைகளை வீழ்த்தினர். பெனுகொண்டாவிற்குப் பெயர்ந்தது விஜயநகர அரசு.

மதுரை, செஞ்சி நாயக்கர்களைப் போலன்றி, சதாசிவராயர், திருமலைராயர், ஶ்ரீரங்கராயர், வேங்கடபதிராயர் முதலான விஜயநகர அரசர்களுக்குப் பணிந்த உண்மை விசுவாசியாகவே இருந்தார் அச்சுதப்ப நாயக்கர். வேங்கடபதிராயர் எனும் வேங்கடவர் காலத்தில் பேரரசை எதிர்த்துக் கலகம் செய்த மதுரை வீரப்ப நாயக்கரை எதிர்த்து, வல்லம்படுகையில் போரிட்டார் ராயர். அப்போரில் பேரரசுக்குக் கட்டுப்பட்டவர் என்ற நிலையில் பேரரசை ஆதரித்து மதுரை நாயக்கரை எதிர்த்தார் அச்சுதப்பன். இதனால், இப்போரில் தோல்வியுற்ற மதுரை வீரப்ப நாயக்கர் தஞ்சை மீது தீராப் பகை கொண்டார்.

பெனுகொண்டாவில் நிலைகொண்ட விஜயநகர அரசுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர் தக்காணச் சுல்தான்கள். அவ்விதம் முகமது குலி குதுப்ஷாவின் தலைமையில் படையெடுத்து வந்த கோல்கொண்டாப் படையை, வேங்கடபதிராயரின் சார்பில் எதிர்த்துப் போரிட்டு வென்றார் அச்சுதப்பனின் மகன் இரகுநாதன். இரகுநாதனுக்கு 1589-லேயே இளவரசுப் பட்டம் அளித்து இணையாட்சி நடத்தச் செய்தார் அச்சுதப்பன். நாகப்பட்டினத்திலும் கொழும்புவிலும் கால்கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக, யாழ்ப்பாண அரசுக்குத் துணைகொண்டு பலமுறை போரிட்டுள்ளார் அச்சுதப்பன்.

இரகுநாத நாயக்கர் எழுதிய “அச்சுதாப்யுதயமு”, விஜயராகவ நாயக்கர் எழுதிய “ரகுநாதாப்யுதயமு” ஆகிய தெலுங்கு நூல்களும், பிரதானி கோவிந்த தீட்சிதரின் மகனும் கவிஞருமான யக்ஞ நாராயணன் எழுதிய “ஸாஹித்ய ரத்னாகரா” என்ற சம்ஸ்கிருத நூலும் அச்சுதப்பனின் போர் வெற்றிகள் குறித்துப் பேசுகின்றன.

காவிரியின் குறுக்கே திருவாடி அருகே அணை கட்டுவித்தது நீர்ப்பாசனத்திற்கான இவரது முக்கியப் பணியாகும்.


திருவரங்கம் அரங்கநாதர் கோவில்
திருவரங்கம் அரங்கநாதன் மீது பெரும்பக்தி கொண்டவர் அச்சுதப்ப நாயக்கர். தஞ்சையிலிருந்து தினமும் திருவரங்கம் சென்று வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். திருவரங்கம் செல்ல முடியாத நாட்களில் தஞ்சை அரண்மனையிலிருந்தே திருவரங்கம் கோவிலைத் தரிசிக்க ஏதுவாக ஒரு உயரமான மாடக் கோபுரத்தையும் அரண்மனையில் கட்டுவித்திருந்தார் என்பர். திருவரங்கக் கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்களும், எட்டாம் திருச்சுற்றும் (பிரகாரம்), கோவிலினுள் பல மண்டபங்களும் அச்சுதப்பன் கட்டுவித்தவை. கோவில் விமானத்திற்கும் கொடிமரத்திற்கும் பொன்வேய்ந்ததுடன், பற்பல மணிகள் பதித்த மகுடத்தோடு கூடிய திருமால் விக்கிரகத்தையும் கோவிலுக்கு வழங்கினார் அச்சுதப்ப நாயக்கர்.

மேலும், மாயவரம், திருவிடைமருதூர், திருவாடி, கும்பகோணம் முதலான ஊர்களில் காவிரிக்கரையை ஒட்டி படிகளுடன் கூடிய புஷ்யமண்டபங்கள் கட்டுவித்தார். திருவண்ணாமலை மற்றும் இராமேசுவரம் திருக்கோவில் கோபுரங்களுக்கு பொற்கலசங்கள் வழங்கினார். சிதம்பரம் திருமூலட்டான ஆலயம், மூவாலூர் மார்க்கசகாயர் ஆலயம், திருவிடைமருதூர் சிவன் கோவில் ஆகியவற்றிற்கு நிலக்கொடையும் வழங்கியுள்ளார் அச்சுதப்பன்.

தனது முதுமை காரணமாகவும், மகன் இரகுநாதனின் திறன் மீது கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவும் கி.பி.1600 வாக்கிலேயே ஆட்சிப் பொறுப்பை இரகுநாதனிடம் அளித்திருந்தார் அச்சுதப்பன்.

- யுவபாரதி

(அடுத்தது)

March 06, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-4)

விஜயநகர (ஹம்பி) விரூபாட்சர் ​கோயில்
விஜயநகரப் பேரரசர்களும் நாயக்க மன்னர்களும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் குறித்துப் பற்பல நூல்கள் உள்ளன.

கி.பி.1300-க்குப் பிறகு வடநாடுகளைப் போலன்றி, முற்றிலும் இசுலாமிய ஆட்சியாளர்களுக்கு ஆட்படாது தென்னகத்தைக் காத்த இந்துப் பேரரசு என்ற வகையில் மட்டுமே வரலாற்றாசிரியர்கள் பலரும் விஜயநகரப் பேரரசை மதிப்பிடுகின்றனர்; ஆனால்  இப்பேரரசு தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் - குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்படுத்திய - அடையாள மாற்றங்களை / எதிர்விளைவுகளை மதிப்பிடுவதில்லை.
 
தமிழகத்தின் மீதான விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலம் என்பது குமார கம்பணனால் சம்புவராயர் வெற்றி கொள்ளப்பட்ட கி.பி.1362-லிருந்து நாயக்க அரசுகள் தோற்றம் கொண்ட கி.பி.1529 வரையிலானது. இந்நேரடி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, சந்திரகிரி, திருவதிகை, படைவீடு முதலான ராச்சியங்கள் மண்டலேசுவரர் / தண்டநாயகர் என்கிற ஆளுநர்களின் (Governor) கண்காணிப்பில் இருந்தது. மைசூருக்குத் தெற்கே விஜயநகரப் ​பேரரசிற்குட்பட்ட இக்கேரி நாயக்க ராச்சியம் இருந்தது. கொங்குப் பகுதி வெகுகாலம் இக்கன்னட ராச்சியத்தில் இருந்தது. நாயக்க அரசு என்பது பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசு. (பேரரசு வலுக்குன்றியதும் இவ்வரசுகள் தன்னரசுகளாயின என்பது வேறு.)

மதுரையில் நாயக்கர் அரசு (கி.பி.1529) ஏற்பட்ட பின்னர், இரண்டாம் தேவராயர் காலத்தில் மதுரை விசுவநாத நாயக்கரது மகன் குமார கிருஷ்ணப்பனால் இலங்கையின் புத்தளம் போரில் கண்டியரசு வெல்லப்பட்டு (கி.பி.1564-65), குமார கிருஷ்ணப்பனின் மைத்துனர் விஜய பூபால நாயக்கர் கண்டி ராச்சியத்தின் ஆளுநராக்கப்பட்டார். பின்னர் இவர் பெளத்தத்தைத் தழுவி சிங்களப் பெயர் பூண்டு விஜயபால நாயகே ஆனார். தெலுங்கு நாயக்க மரபினர் சிங்களத்தில் நாயகே ஆயினர்.

குமார கம்பண உடையார், விரூபாட்சி நாயக்கர், எம்பண நாயக்கர் (கம்பணன் மகன்), பிரகாச நாயக்கர் (எம்பணன் மைத்துனன்), சவண நாயக்கர், லக்கண நாயக்கர், மதன நாயக்கர், சோமண நாயக்கர், துளுவ நரச நாயக்கர், தென்ன நாயக்கர், குரு குரு திம்மப்ப நாயக்கர், கட்டிய காமய்ய நாயக்கர், சின்னப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர், நாகம நாயக்கர், கேசவப்ப நாயக்கர் முதலானோர் மேற்கண்ட ஒன்றரை நூற்றாண்டுக் காலம் தமிழக ராச்சியங்களுக்கு ஆளுநர்களாக இருந்தவர்கள்.

கருநாடகம் எனும் வழக்கு

விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த சங்கம மரபும், அடுத்தடுத்து ஆட்சிசெய்த சாளுவ, துளுவ மரபுகளும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவை என்பதை ஏற்கனவே கண்டோம். விஜயநகரப் பேரரசு  ஆட்சிக் காலத்தவை எனக் கண்டறியப்பட்ட 7000 கல்வெட்டுகள் மற்றும் 300 தாமிரப் பட்டயங்களில் பாதிக்கும் மேலானவை கன்னட மொழியிலானவை என்பது சிந்திக்கத்தக்கது.

விஜயநகரப் பேரரசு தம்மை விஜயநகர சாம்ராஜ்யம் என்றும், கருநாடக சாம்ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக் கொண்டது. விஜயநகரப் பேரரசர்கள் விரூபாட்சன் எனும் விஜயநகர சிவனையும், வேங்கடாசலபதி எனும் திருப்பதித் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாக வணங்கினர். கிருஷ்ண தேவராயர் தனது ஜாம்பவதி கல்யாணம் எனும் சமஸ்கிருத நூலில் விரூபாட்சனைக் "கர்நாடக ராஜ்ய ரக்ஷாமணி " (கருநாடக அரசைக் காக்கும் மாணிக்கம்) எனப் புகழ்கிறார்.

இதனாலேயே,

ஃ    விஜயநகர ஆட்சிக்காலம் முதற்கொண்டு, வடநாட்டு இசுலாமிய அரசுகளும் வெளிநாட்டுப் பயணிகளும் விஜயநகர அரசை மட்டுமின்றி, விஜயநகரப் ​பேரரசர்களாலும் அவர்தம் மரபினராலும் ஆளப்படும் அனைத்துப் பகுதிகளையும் கருநாடகம் என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.

ஃ    பின்னாளில் ஆற்காட்டிலிருந்து ஆண்ட நவாபும் கருநாடக நவாப் என்றே அழைக்கப்பட்டார்.

ஃ    அறுநூறாண்டுக் காலம் விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த பாளையக்காரர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த (இப்போதும் இருக்கிற) தமிழகத்திற்கும் கருநாடகம் என்ற பெயர் ஏற்பட்டது.

ஃ    தமிழகத்தின் கிழக்குச் சோழமண்டலக் கடற்கரை கருநாடகக் கடற்கரை ஆனது. தமிழிசை தெலுங்கு மயமான (குறிப்பாக, தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில்) பின்பும், அது தெலுங்கிசை என்றோ, ஆந்திர இசை என்றோ அழைக்கப்படாமல் கருநாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஃ    விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் பழமைவாதத்தை - சாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்றியதாலேயே பழமைவாதத்தை வெகுமக்கள் கருநாடகம் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது, இன்றும் பழமைவாதியை  "அவர் சுத்தக் கருநாடகம்!"  என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

சீமை எனும் சொல்

சோழர், பாண்டியர் காலத்தில் ஆட்சிப் பிரிவுகள் மண்டலம், வளநாடு / கோட்டம், கூற்றம் / நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டிருந்தன. இவை முறையே இன்றைய மண்டலம் (Zone), மாவட்டம், வட்டம், ஊர் என்பதற்கு ஒப்பானவை. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இப்பிரிவுகள் முறையே ராஜ்யம், விஷயம்/கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பெயரிடப்பட்டன. இவற்றில் சீமை எனும் சொல் தென் தமிழகத்தில் இன்றும் பெருவழக்கிலுள்ளது. இன்று உள்ளூர்/உள்நாட்டு மக்களையும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும், நாட்டுக்காரர்கள், நாட்டுத் துணி, நாட்டுச் சரக்கு என்று வழங்குகின்றனர். வெளியூர் /வெளிநாட்டு மக்களையும் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களையும் சீமைக்காரர்கள், சீமைத் துணி, சீமைச் சரக்கு என்று வழங்குகின்றனர். இன்று, சீமை என்றாலே வெளிநாடு என்று பொருள் கொள்ளப்படுகிறது. தமிழரசர்கள் நாடு என்றிட்ட பிரி​வைத் தெலுங்கரசர்கள் சீமை என்று வழங்கியது தமிழர்களிடம் அப்படியே பதிவாகியிருக்கிறது.

ஆனால் விஜயநகர ராயர்களால் பெரிதும் ஆளப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென் மாவட்டங்கள், இதர கடலோர ஆந்திரம் மற்றும் தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த தெலுங்கர்களால் இன்றும் ராயுலுசீமா என்றே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

-  யுவபாரதி 

(அடுத்தது)

February 27, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-3)

துளுவப் பரம்பரையில் கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகர ஆட்சிக்கட்டில் ஏறியவர் அவரது இளைய தம்பி அச்சுதராயர் (கி.பி.1530-1542). அவரை அடுத்து கி.பி.1542-இல் அரசரான அவரது மகன் முதலாம் வேங்கடவர் கொல்லப்பட்டு, கிருஷ்ணதேவ ராயரின் மற்றொரு தம்பி மகனான சதாசிவராயர் அரசரானார்.
 
இன்றைய விஜயநகரம்  (ஹம்பி)
 சதாசிவராயர் காலத்தில் அமைச்சர் இராமராயரே பகர ஆளுநராய் (Regent) இருந்தார். சதாசிவராயர் பெயருக்கு மட்டுமே அரசர். இவர் காலத்தில்தான் (தற்போது மராட்டிய மாநிலத்திலுள்ள) ஆமதுநகர் மற்றும் பீரார், (தற்போது கருநாடக மாநிலத்திலுள்ள) பீஜப்பூர், (தற்போது ஆந்திர மாநிலத்திலுள்ள) கோல்கொண்டா மற்றும் பீடார் ஆகிய ஐந்து நாடுகளின் சுல்தான்களும் ஒன்றுசேர்ந்து கிருஷ்ணா நதிக்கரையிலிருந்த  (இராட்சசி-) துங்கிடி என்னுமிடத்தில் நடந்த  போரில் விஜயநகரப் படைகளை வீழ்த்தினர். தலைக்கோட்டைப் ​போர் எனப்படும் 1565 ஜனவரி 23 அன்று முடிந்த இப்போரின் முடிவில் விஜயநகர அமைச்சர் - ஆளுநர் இராமராயர் சிறைப்படுத்தப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இராமராயரின் தம்பி திருமலைராயரின் உதவியோடு சதாசிவராயர் வடபெண்ணை நதிக்கரையை ஒட்டியிருந்த பெனுகொண்டாவிற்குத் தப்பிவிட்டார். அதுமுதல் விஜயநகரப் பேரரசின் தலைநகராக பெனுகொண்டா ஆனது. சுல்தான்களின் படைவீரர்கள் விஜயநகரத்தை முழுவதும் அழித்து எரியூட்டினர்.

அவ்வப்போது தன்னாட்சி பெற விழைந்து பேரரசை எதிர்த்து வந்த - பேரரசின் சார்பில் செஞ்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் ஆட்சி புரிந்த - நாயக்கர்கள் தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தித் தத்தம பகுதிக்குத் தங்களையே முற்றுரிமை பெற்ற மன்னரகளாக முடிசூட்டிக் கொண்டனர்.

கி.பி.1570-இல் பெயரளவில் அரசரான சதாசிவராயரைச் சிறையிலிட்டுவிட்டுத் தானே விஜயநகர அரசரானார் திருமலைராயர். அவரது பரம்பரையே அரவீட்டுப் பரம்பரை எனப்படுகிறது. இவரது மகன் ஸ்ரீரங்கரும் பெனுகொண்டாவிலிருந்தே அரசாண்டார். ஸ்ரீரங்கனை அடுத்து ஆட்சிக்கட்டிலேறிய அவரது தம்பி இரண்டாம் வேங்கடவர் (கி.பி.1586-1614) காலத்தில் கி.பி.1601-இல் இராயர் சாம்ராச்சியத்தின் தலைநகரானது வட ஆற்காட்டு வேலூர். அதனாலேயே இவ்வேலூரை இன்றும் இராயவேலூர் என்கின்றனர்.

மூன்றாம் வேங்கடவர் அரசராக இருந்த காலத்திலேயே கி.பி.1639-இல் இவரிடமிருந்து சென்னையைக் குத்தகைக்கு எடுத்து புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். விஜயநகர அரசின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கர். கி.பி.1649-இல் வேலூர் பீஜப்பூர் சுல்தானால் வெற்றி கொள்ளப்பட்டதோடு விஜயநகரப் பேரரசு முடிவுற்றது. பீஜப்பூர் சுல்தானை ஸ்ரீரங்கர் மீது படையெடுக்கத் தூண்டியவர் அப்போது மதுரையை ஆண்ட திருமலை சவுரி நாயினு அய்யிலுகாரு எனப்படும் திருமலை நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது. பெருந் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் ஆட்சிப் பறிப்புக்கும் கைப்பற்றலுக்கும் பெயர்பெற்றது விஜயநகரப் பேரரசு.

(நாயக்கர் ஆட்சியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அதன் முன்வரலாறாக மிகச் சுருக்கமாகவே விஜயநகரப் பேரரசின் வரலாறு இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தமது தோற்றுவாயான ஆந்திர - கருநாடகப் பகுதிகளில் தம் ஆட்சியை இழந்தாலும், தமிழகத்தில் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நாயக்கர்கள் தம் ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டனர் என்பதும்,ஆங்கிலேயர் காலத்திலும் ஜமீன்தார்களாக இருந்து தொடர்ந்து ஆண்டனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மொழிகள் பெரும் வளப்பமுற்றன என ஏற்கனவே குறிப்பிட்டோம். செஞ்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் ஆட்சி புரிந்த நாயக்கர்களின் வரலாற்றில் புகும் முன் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இம்மொழிகளில் இயற்றப்பட்ட நூல்களைக் காண்போம்.

தெலுங்கு நூல்கள்:

. எண் - நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்

1 தெலுங்கு பாரதம் - எர்ரப் பிரகதா - மகாபாரதம்
2 லக்ஷ்மீ நரசிம்ம புராணமு - எர்ரப் பிரகதா - புராணம்
3 தெலுங்கு ராமாயணம் - எர்ரப் பிரகதா - இராமாயணம்
4 ஹரிவம்சமு - எர்ரப் பிரகதா - வைணவ புராணம்
5 தெலுங்கு நைஷதம் - ஸ்ரீநாதன் - நளன் கதை
6 ஹர விலாசமு - ஸ்ரீநாதன் - சிவன் பெருமை
7 தெலுங்கு பாகவதம் - போதனன் - பாகவதம்
8 வீரபத்ர விஜயமு - போதனன் - வீரபத்திரர் கதை
9 ஜைமினி பாரதம் - நரசிம்ம ராயரால் ஆதரிக்கப்பட்ட வீரபத்ரன் - பாரதம்
10 சிருங்கார சாகுந்தலமு - வீரபத்ரன் - சகுந்தலை கதை
11 கவிகர்ண ரசாயனமு - நரசிம்ம கவி - கவிதை
12 பசவ புராணமு - பக்தி சோமநாதன் - வீரசைவ பசவண்ணர் கதை
13 ஹயலக்ஷண சாஸ்திரமு - மனுமஞ்சி பட்டர் - குதிரை நூல்
14 ராஜசேகர சரித்ரமு - மல்லண்ணா - வரலாறு
15 பிரபாவதி பிரத்யும்னமு - சூரண்ணா - புராணம்
16 கலா பூர்ணோயதமு - சூரண்ணா - புராணம்
17 ராகவ பாண்டவ்யமு - சூரண்ணா - இராமாயணம் மற்றும் மகாபாரதம்
18 பாரிஜாதாபஹரணமு - நந்தி திம்மண்ணா - புராணம்
19 மனுசரிதா - அல்லசாணி பெத்தண்ணா - புராணம்
20 சகல கதாசார சங்கிரஹா - ராமபத்ரன் - கதைத் தொகுதி
21 ராமாப்யுதயமு - ராமபத்ரன் - இராமாயணம்
22 காளஹஸ்தி மகாத்மியமு - தூர்ஜடி - காளத்தித் தல வரலாறு
23 காளஹஸ்தீசுவர சதகமு - தூர்ஜடி - காளத்தி சிவன் பெருமை
24 வசு சரிதமு - ராமராஜ பூஷணன் - புராணம்
25 ஹரிச்சந்திர நளோபாக்கியானமு - ராமராஜ பூஷணன் - அரிச்சந்திரன் நளன் கதை
26 பாண்டுரங்க மகாத்மியமு - தெனாலி ராமகிருஷ்ணா - பண்டரிபுரத்தின் பெருமை
27 நிரங்குசோபாக்கியானமு - ருத்ரய்யா - புராணம்
28 ஆமுக்த மால்யதா - கிருஷ்ண தேவராயர் - ஆண்டாள் கதை

(வ. எண் 14 முதல் 26 வரையிலான நூலாசிரியர்கள் கிருஷ்ண தேவராயரதுஅவையில் இருந்த அஷ்டதிக் கஜங்கள் (எண்திசை யானைகள்) எனப்பட்டவர்கள்.)

கன்னட நூல்கள்:

வ. எண் -நூலின் பெயர் - ஆசிரியர் பொருள்

1 தர்மநாத புராணம் - இரண்டாம் அரிகரன், முதலாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட மதுரா - 15ஆம் சைனத் தீர்த்தங்கரர் கதை
2 ரத்ன காண்டகா - அயதாவரா - சைனக் காப்பியம்
3 தர்ம பரீட்சா - விருத்த விலாசன் - சைன நூல்
4 சாஸ்திராச்சாரம் - விருத்த விலாசன் - சைன நூல்
5 காவிய சாரா - அபினவவாதி வித்யானந்தஎ - சைனத் தொகை நூல்
6 சைன பாரதா - சாளுவன் - மகாபாரதம்
7 பரதேசுவர சரிதா - ரத்னாகர வர்ணி - பரதச் சக்கரவர்த்தி சைனரான கதை
8 அபராஜித சதகா - ரத்னாகர வர்ணி - சைன நீதி நூல்
9 புஜபலி சரித்ரா - பஞ்ச பாணன் - சிரவணபெலகுளா கோமதீசர் சிலை நிறுவல்
10 பசவ புராணம் - பீம கவி - வீர சைவ சமயாசிரியர் பசவண்ணா கதை
11 சிவ தத்துவ சிந்தாமணி - இரண்டாம் தேவராயரால் ஆதரிக்கப்பட்ட லக்ஷ்மண தண்டநாதன் - வீர சைவத் தத்துவ நூல்
12 பிரபு லிங்க லீலா - சாமரசன் - வீர சைவ வரலாறு
13 பிரெளடராய சரிதா - அதிரிஸ்யா - வீர சைவ அடியார் கதை
14 சட்ஸ்தல ஞானாமிருதம் - அதிரிஸ்யா - வீர சைவ நூல்
15 சிவயோக பிரதீபிகா - நிஜகுண சிவயோகி - வீர சைவ தத்துவ விரிவுரை
16 விவேக சிந்தாமணி - நிஜகுண சிவயோகி - வீர சைவக் கதைகள்
17 வீர சைவாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட மல்லனார்யா - சிவனது திருவிளையாடல்
18 சத்யேந்திர சோளகதா - மல்லனார்யா - சிவ மந்திர மாண்பு
19 சர்வஞ்ஞன பதகளு - சர்வஞ்ஞன் - நீதி நூல்
20 கன்னட ராமாயணா - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட நரஹரி - இராமாயணம்
21 கன்னட பாகவதா - சாடு விட்டலநாதன் - பாகவதம்
22 புரந்தரதாசர் கீர்த்தனகளு - அச்சுதராயரால் ஆதரிக்கப்பட்ட புரந்தரதாசன் - வைணவக் கீர்த்தனைகள்
23 மோகன தரங்கிணி - கனகதாசன் - கண்ணன் கதை
24 நளசரிதா - கனகதாசன் - நளன் கதை
25 ஹரிபக்திசாரா - கனகதாசன் - வைணவ பக்திநூல்
26 ராமதான்ய சரிதா - கனகதாசன் - கேழ்வரகு வரலாறு

சமஸ்கிருத நூல்கள்:

வ. எண்- நூலின் பெயர் - ஆசிரியர் - பொருள்

1 மதுரா விஜயம் - குமார கம்பணர் மனைவி கங்கா தேவி - குமார கம்பணரின் தமிழக வெற்றி
2 ஜாம்பவதீ கல்யாணம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
3 உஷா பரிமளம் - கிருஷ்ண தேவராயர் - புராணம்
4 வேதப் பிரகாசம் - இரண்டாம் அரிகரரின் அமைச்சர் சாயனன் - ரிக் வேத விரிவுரை
5 நியாயாம்ருதம் - கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்ட வியாசராயன் - அத்வைதத் தத்துவ விளக்கம்
6 சாத்வீக பிரம்மவித்யா விலாசம் - முதலாம் வேங்கடவரின் ஆசிரியர் தாதாச்சாரியர் - வைணவத் தத்துவம்
7 பாண்டுரங்க மகாத்மியம் - தாதாச்சாரியர் - பண்டரிபுர இறைவன் கண்ணனின் மாட்சிமை
8 தெய்வக்ஞ விலாசம் - கொண்டவீட்டு லக்ஷ்மீதரன் - கலைக் களஞ்சியம்
9 சங்கீத சூரியோதயம் - லக்ஷ்மீ நாராயணா - இசை நூல்
10 சாலுவாப்யுதயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் இராஜநாத திண்டிமா - பரம்பரையின் எழுச்சியும் ஆட்சியும்
11 பாகவத சம்பு - இராஜநாத திண்டிமா - புராணம்
12 அச்யுத ராயாப்யுதயம் - இராஜநாத திண்டிமா - அச்சுதராயரின் பெருமை
13 வரதாம்பிகா பரிநிர்ணயம் - அச்சுதராயரின் அவைப் புலவர் திருமலாம்பா - அச்சுதராயர்-வரதாம்பா திருமணம்

- யுவபாரதி 

(அடுத்தது)

February 06, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)

விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் வரும் முன்னும் தமிழகத்தின் பெரும்பகுதிகள்வேறு இரு அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்தன. அவ்வரசுகள் வடபகுதியை ஆண்ட கன்னட ஹொய்சளர்கள் (கி.பி.1225-1343) மற்றும் தென்பகுதியை ஆண்ட மாபார் சுல்தான்கள் (கி.பி.1335-1378). அவ்வாட்சிக் காலம் தனியே ஆராயத் தக்கது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியை அறிய விஜயநகரப் பேரரசின் முக்கியநிகழ்வுகளை அறிய வேண்டியுள்ளது.

விஜயநகரப் பேரரசை நிறுவிய  சங்கம மரபினர் ஹொய்சள அரச வம்சத்தோடு மணவுறவு கொண்டிருந்த யாதவ வம்சத்தார் என்று பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் ஏற்கின்றனர். சங்கம மரபினர் மட்டுமின்றி ,சாளுவ, துளுவ மரபினரும் தங்கள் மரபினரோடு மட்டுமின்றி ஆந்திர அரச மரபினரான ராஜு குலத்தாரோடும், வேளாண் மரபிலிருந்து அரசியல் தொடர்புகளினால் நிலவுடைமையிலும் வணிகத்திலும் எழுச்சி பெற்றுவந்த பலிஜ குலத்தாரோடும் மணவுறவு கொண்டனர். குமார கம்பணனின் மனைவி கங்காதேவியை பலிஜ குலத்தவர் என்றும் நூல்கள் தெரிவிக்கின்றன.பலிஜ குலத்தார் விஜயநகர அரசர்களின் மெய்க்காவல் துவங்கி படைத்தலைமை, நாயக்கஸ்தானம் வரை பெற்று அரசியலில் பலிஜ குலத்தார் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர். இறுதியில் அரசாண்ட ஆரவீட்டு மரபிற்கு பலிஜ குலத்தாரே உரிமை கோருகின்றனர். விஜயநகரப் அரசின் இலச்சினை சாளுக்கிய மரபிற்குரிய 'வராகமே' என்பதால், விஜயநகர அரசமரபைச் சாளுக்கிய மரபோடு இணைத்து ஊகிக்கவும் இயலும்.

கங்காதேவியின்
மதுரா விஜயத்தில் பின்வரும் புனைவு ஒன்று உண்டு: "சம்புவராயனை வென்றதும் குமார கம்பணன் காஞ்சியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரது கனவில் தேவ வடிவில் மதுரை மாதேவி (மீனாட்சி?) மதுரையின் அலங்கோல நிலையை வருணித்து, மனித உலகம் கண்டிராத ஒரு ஒளி மிக்க வாளைக் கம்பணன் கையில் தந்து மறைந்தாள்". தமிழர்களைத் ​தெலுங்கர் ஆள அங்கயற்கண்ணியே ஆசி தந்திருக்கிறாள் போல. 

முதலாம் புக்கனுக்குப் பின் ஆட்சிக்கட்டிலேறிய
​​இரண்டாம் ஹரிஹரராயர் (கி.பி.1377-1404) காலத்திலேயே மதுரைப் பகுதிகளிலிருந்து சுல்தான்கள் ஆட்சிமுற்றிலும் துடைக்கப்பட்டது. தமிழகப் பகுதிகளை வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தார் ஹரிஹரராயர். இவர்களும் ராயரது அரச மரபினரே.

இரண்டாம் ஹரிஹரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர்
​​​ இரண்டாம் தேவராயர் (கி.பி.1426-1446). கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர். இப்போர்களில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர்கள் பேரரசுக்குப் பணிந்து அப்போது கொற்கையிலிருந்தும் தென்காசியிலிருந்தும் சிற்றரசர்களாக நேர்ந்த பாண்டிய அரச மரபினரே ஆவர். இவர் காலத்துத் தமிழக மண்டலங்களுக்கானமகாமண்டலேசுவரர் (தண்டநாயகர்) இலக்கண்ணராயர்.

இந்த இரண்டாம் அரிகரர் காலத்திலேயே தமிழகம் படைவீடு ராஜ்யம் (வேலூர்), சந்திரகிரி ராஜ்யம் (சந்திரகிரி), சோழ ராஜ்யம் (தஞ்சை), மதுரை ராஜ்யம், திருவதிகை ராஜ்யம் (செஞ்சி) என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு, ராய அரசமரபைச் சாராதவர்களும் மண்டலாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருக்குப் பின் வந்த இச்
​​​ சங்கமப் பரம்பரையினர் திறமையற்றவர்கள்.

கி.பி. 1485 இல் சந்திரகிரி ராஜ்ய மண்டலாதிபதியாக இருந்த சாளுவ நரசிம்மன் பேரரசரானார். இவருக்குப்பின் இவர் மகன் இம்மடி நரசிம்மன். இவர்களைச்
சாளுவப் பரம்பரையினர் என்பர். இவர்களுக்குப் பின் பேரரசைக் கைப்பற்றியவர் இவர்களிடம் படைத்தலைவராயிருந்த நரச நாயக்கர். இவரே துளுவப் பரம் பரையின் முதல்வர். துளுவப் பரம்பரையினரும் சாளுவரை ஒத்த மரபினரே.



மன்னர் கிருஷ்ண தேவராயர்
அப்போது தஞ்சையில் தன்னாட்சி பெற முயன்ற கோனேரி ராஜனையும் தென்காசிப் பாண்டியர்களையும் அடக்கினார் நரசநாயக்கர். அவரது மகனே கிருஷ்ண​ தேவராயர் (கி.பி.1509-1529).

மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்குப் பதிலாக நாயக்கர் முறை இவரது காலம் முதலாகவே தோன்றியது.மகாமண்டலேசுவரர் பதவி மரபுவழிப்பட்டதாக விளங்கவில்லை. ஆனால் நாயக்கர் பதவிமரபு வழிப்பட்டதே. பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சியிலும் (கி.பி.1509), கரிகபாடி விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரையிலும் (கிபி1529) நாயக்கராட்சிகள்நிறுவப்பட்டன. கிருஷ்ண தேவராயரின் மறைவுக்குப் (கி.பி.1530) பின் கி.பி.1532-லேயே அல்லூரி சேவப்ப நாயக்கர் தலைமையில் தஞ்சையில் நாயக்கராட்சிநிறுவப்பட்டது.

தன்னாட்சி அமைப்புகளின் அழிவும் ஆயக்கர் முறையும்

தமிழகத்தில் ஊர், நாடு, சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பிற்காலச் சோழர்களின் காலத்தில்
தன்னாட்சி (Self-rule) கொண்டிருந்தன. வரி வாங்கவும், பஞ்ச காலங்களில் வரித் தள்ளுபடி செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தன. கோயில்களை மேற்பார்வை செய்தன. அறநிலையப் பொறுப்பேற்றுக் கண்காணித்தன. பொது மக்களிடம் பணம் வாங்கி, வைப்பு நிதியாக்கி, தேவையான காலங்களில் மக்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கும் வங்கிகளாகவும் இருந்தன. நிலங்களை விற்கும் உரிமையும், தானியர் முதலான கோவில் அலுவலர்களை நியமிக்கும் அதிகாரமும் இவ்வமைப்புகளுக்கு இருந்தன.

விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலமான கி.பி.15-ஆம் நூற்றாண்டிலேயே - அப் பேரரசின் பகராளிகள் (பிரதிநிதிகள்) மதுரை, தஞ்சை, செஞ்சி முதலான பகுதிகளிலிருந்து அதிகாரம் செலுத்தி வந்த காலத்திலேயே - இச்சிற்றூராட்சி முறை ஒழிக்கப்பட்டு, பன்னிருவர் அடங்கிய
ஆயக்கர் முறை (Ayakar System) தோற்றுவிக்கப்பட்டது. எல்லா நிலமும் அரசருடையதே என்றானதால், நிலவுரிமை பெற்றிருந்த தமிழ்க்குலங்கள் பலவும் குத்தகை விவசாயக் குடிகளாயின. ( விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள் என்பதை நினைவில் கொள்க.) படைப்பற்றுகள் என்ற பெயரில் படைவீரர்களுக்கு மானியமாகவும் வழங்கப்பட்டன.

ஆயக்கர் முறையிலுள்ள பன்னிருவரில்
மணியம், கர்ணம், தலையாரி ஆகிய மூவரும்அரசால் நியமிக்கப்படுபவர்கள். கிராமத்தின் வரி வருவாய், நிலப் பரப்பு, எல்லைகள், நீர்நிலைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்பவர் கர்ணம். கர்ணத்தின் உதவியுடன் வரி வசூலிப்பவர் மணியம் (மணியக்காரர்). ஊர்க்காவல்பணி செய்பவர் தலையாரி. ஆயக்கர் முறையிலுள்ள மற்ற ஒன்பதின்மர் சிற்றூர் மக்களின் பணிகளுக்குத் தேவையான தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர். இவர்கள் அரசால் நியமிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டது. அதற்கு ஜோடி (Quit-Rent) என்ற வரி செலுத்தவேண்டியிருந்தது. இந்த ஆயக்கர் முறையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் இருந்தது.

தெலுங்கர் மற்றும் கன்னடர் குடியேற்றம்

விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் தமிழகத்தில்குடியேறினர். கன்னடர்களும் குடியேறினர்.

"தமிழகம் தெலுங்கர்களான விஜயநகர வேந்தர்களின் ஆட்சியில் இருந்தபோது, தெலுங்கர்கள் இந்நாட்டில் வந்து குடியேறாமலா இருப்பார்கள்? தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கர் குடியேறுவது இயற்கை. ஆதலால், தெலுங்கர்களான கம்மவார்களும் நாயக்கர்களும் ரெட்டியார்களும் வேறு கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர்வீரகளாகவும் வணிகர்களாகவும் தமிழ்நாட்டில் குடியேறினார்கள் " என்பார் அ.கி. பரந்தாமனார்.

பலிஜவார், கம்மவார், கம்பளத்தார் உள்ளிட்ட நாயுடு வகையினர், ரெட்டியார், ராஜூ, ஆரியவைசியர், பேரிவைசியர், தேவாங்கர், தெலுங்குப் பிராமணர், கன்னடப் பிராமணர், தொட்டியர், அருந்ததியர், ஒட்டர், சாலியர், தொம்பர், ஒக்கலிகர் எனப் பல்வேறு தெலுங்கு மற்றும் கன்னடச் சாதியினர் தமிழகத்தில் குடியேறினர்.

விஜயநகரப் பேரரசுக்கு முந்திய கன்னடர்களான ஹொய்சளர்களின் தமிழகத்தின் மீதான ஒரு நூறாண்டு கால ஆட்சிக்காலத்திலேயே கன்னடப் பிராமணர்கள், ஒக்கலிகர்கள் தமிழகத்தில் குடியேறியிருந்தனர். ஆட்சியின் துவக்கத்திலேயே 
ஹொய்சளரை வீழ்த்தி கருநாடகம் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதாலும் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளைத்தாய்மொழியாகக் கொண்ட பரம்பரைகளும் இருந்ததாலும் இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தெலுங்கர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் தமிழகத்தில் குடியேறினர்.

இதனால்தான் விஜயநகரப் பேரரசுக் காலம் என்பது தெலுங்கு இலக்கியத்திற்குமட்டுமின்றி கன்னட இலக்கியத்திற்கும், சமஸ்கிருத இலக்கியத்திற்கும்பொற்காலமாகவே இருந்தது. 


- யுவபாரதி 

(அடுத்தது)