Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

May 04, 2015

வெளிமரம்

ஊடாடும் சூரியன்
ஒளிப்புள்ளிகளால் நிழற்கோலமிடுவான்
இளவேனிலின் சங்கேதமொழியில்
பறவைகள் குலாவியதுண்டு
காற்றுள்ள வெளியில்
அசையாதிருந்தேன்
புயல்பெயர்த்து எறிந்த
ஓலம் கேட்டிருக்காது
அடிமரத்தில் புடைத்த
பெயர்கள் வானம் பார்ப்பது தெரிந்திருக்காது
பீளைக்கண் பித்தன்
ஒடிந்த என் கிளையால்
வேர்தட்டிப் பாடுவதும்
தீண்டியிருக்காது
காற்றுள்ள வெளியில்
அசையாதிருக்கும் என் பிரதேசம்
உங்கள் பார்வைக்கு அப்பாலுள்ளது.

August 20, 2013

வீட்டுமரம்

கால்
விறைக்கத் தொடங்கியது
நான் நகரவில்லை
விரல் பத்தும் வேராக
தரை அகழ்ந்து இறங்கியது.

கை
கனக்கத் தொடங்கியது
நான் திமிறவில்லை
விரல் பத்தும் கிளையாக
சுவர் குடைந்து பரவியது.

தலை
சரியத் தொடங்கியது
நான் அசையவில்லை
காது கன்னம் நரம்பேறி இலைகுலுங்க
கண் இரண்டும் ஒளியிழந்து பூவீழ
மூளை உருகி மறைந்தது

மரம்
நிலைக்கத் தொடங்கினேன்.

- யுவபாரதி