Showing posts with label விக்கிரமங்கலம். Show all posts
Showing posts with label விக்கிரமங்கலம். Show all posts

September 15, 2015

விக்கிரமங்கலம்


எல்லாரையும் பார்க்கிறது
எல்லார் பார்க்கவும் இருக்கிறது

பைந்துகில் போர்த்தாத புலத்தில்
சூரியன் கவிழ்ந்து கிடக்கிறான்

காலக்குகையின் ஓயாத இரைச்சலை
காற்று விழுங்குகிறது

சமணமுனிவன் கல்படுக்கையில்
மேய்ந்து களைத்த வெள்ளாடு
ஓய்வெடுக்கிறது

மது உலர்ந்த நெகிழிக் குவளை
தேக்கிய மழைநீரில்
பாழி ஈத்தவன் பேர்
தலைகீழாய்த் தொங்குகிறது

தூரத்து யௌவனத்தைக்
கண்ணிடுக்கிப் பார்க்கும் மூப்பனென
எல்லாரையும் பார்க்கிறது
எல்லார் பார்க்கவும் இருக்கிறது
மலை.