Showing posts with label இராவணன். Show all posts
Showing posts with label இராவணன். Show all posts

June 16, 2013

கம்பன் சிந்தனை – 7 : நேசத்தால் நிறைந்த நெஞ்சள்

மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பறவை, விலங்கு, மனிதர் என்று எல்லா உயிரினங்களிலும் நேசம் எனும் சொல்லுக்குப் பெரிதும் இலக்கணமாகக் கொள்ளப்படுபவள் தாய். இறை நம்பிக்கையாளர்களும் இறைவனை எத்தனை பேர் கொண்டு அழைத்தாலும் அம்மையே அப்பா என்றோ, தாயுமானவா என்றோ சொல்கிற போது கொள்ளும் அச்சமின்மையும், அன்புமிகுதியும், உரிமை கொள்ளலும் பிற பேர்களில் வருவதில்லை. அன்னையரில் விதிவிலக்குகள் வெகுசொற்பம்.

கம்பனால்  ‘நேசத்தால் நிறைந்த நெஞ்சள்’ என்ற சொல்லால் ஆளப்பட்டிருப்பவள் ஒரு தாய். அவள் மண்டோதரி. அசுர சிற்பியாகிய மயனின் மகள். இராவணனின் பட்டத்தரசி. இந்திரசித்தன் எனப்படும் மேகநாதனின் தாய்.

சீதை, திரௌபதி, அகலிகை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து அன்னையரை (பஞ்சமாதர்) நாள்தோறும் நினைத்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என்று பொருள்படும் சுலோகம் ஒன்று வடமொழியில் இருப்பது நினைவிற்கு வருகிறது. தன் தாய் பட்டினியில் கிடக்க, அதைக் கண்டும் காணாது தான் மட்டும் வயிறாற உண்டு உறங்கி உயிர்த்து வாழும் மகவு, பிற எந்தத் தாயை நினைத்தாலும் பணிந்தாலும் எந்தப் புண்ணியமில்லை. நமக்கு இந்த உலகம் நம் அன்னை தந்தது. நிற்க.

யுத்த காண்டம் இராவணன் சோகப் படலத்தில் பத்தே பத்துப் பாடல்களில்தான் சொல்லப்படுகிறது மண்டோதரி தன் மகனது உடல் மேல் வீழ்ந்து புலம்பும் காட்சி. போர்க்களத்திலிருந்து மைந்தன் உடலைச் சுமந்து வந்து, அரண்மனையில் கிடத்துகிறான் இராவணன். தவமிருந்து பெற்ற பிள்ளையின் உடல் தலையற்றுக் கிடக்கிறது. ‘தாய்க்குத் தலைப்பிள்ளை, தந்தைக்கு இளையபிள்ளை’ என்பார்கள். இன்னின்னார்க்கு ஈமக்கடன் செய்ய உரிமை பெற்றோர் இவரிவர் என்பதால் மட்டுமல்ல, பிள்ளைகள் மீது பெற்றோர் காட்டும் அன்பின் சிறு வேறுபாட்டிலும் இது பொருந்தும் என்பார்கள்.

கருங்குழல் கற்றை கால்தொட, கைகளால் முலைமேல் கொட்டியபடி ஓடி வருகிறாள் மயன்மகள்.

தலையின்மேல் சுமந்த கையள் தழலின்மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளள் நேசத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.

தலையின் மேல் கூப்பிக் கோர்த்த கைகளை உடையவளாய், நெருப்பின் மேல் நிற்பது போல நிலத்தின் மேல் நிற்கும் கால்களை உடையவளாய், வேடன் கணைபட்டு உயிர் துறந்து மலைமீது வீழ்ந்த மயிலைப் போல, நேசத்தால் நிறைந்த நெஞ்சையுடைய மண்டோதரி தன் மகன் உடல் மீது வீழ்கிறாள்.

உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிரிலள் கொல்லோ! என்னப்
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் விம்மி யாதும்
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல
அயர்த்தனள் அரிதின் தேறி வாய்திறந்து அரற்றல் உற்றாள்.

மூச்சில்லை. உணர்வில்லை. உயிர் விட்டாளோ! என்று நினைக்கும்படி உடலில் ஓர் அசைவுமில்லை. ஒரு வார்த்தை வரவில்லை. விம்மி வியர்க்கவில்லை. வெகுநேரம் இப்படிக் கிடந்தாள். மெல்ல மெல்ல உணர்வு கூடி பெருமூச்சு விடுகிறாள். பின் தெளிந்து, வாய்திறந்து புலம்பத் தொடங்குகிறாள்.

அமாவாசை எனப்படும் கார்உவா தொடங்கி, பௌர்ணமி எனப்படும் வெள்உவா நாள் வரை பதினாறு நாட்கள். அமாவாசையன்று ஒரு கலையோடு இருக்கும் சந்திரன், நாளும் ஒரு கலை கூடி, பௌர்ணமியன்று பதினாறு கலைகளும் கூடி முழுநிலவாய்ப் பொலிகிறான் என்பர். அப்படிக் ‘கலைகள் ஒவ்வொன்றாய்க் கூடி வளரும் உன் இளம்பருவத்திலேயே – பதினாறு வயதிற்கு முன்பே – உன் வில்லாற்றலால் இந்திரனையே வெல்லக் காண முன்பு ஓர் தவம் செய்தேன். ஆனால், தலையிலா யாக்கை காண எத்தவம் செய்தேன்? அந்தோ!’ என்று புலம்புகிறாள் மண்டோதரி.

‘கால்களில் சலங்கை கட்டித் தவழும் பருவத்திலேயே, இரண்டு சிங்கங்களைக் கொணர்ந்து வந்து, அவற்றை ஒன்றையொன்று மோதச் செய்து, மாடத்தில் சிரித்து ஆடிய விளையாட்டை இனி எப்படிக் காண்பேன்? முக்கண்ணன் முதலான கடவுளரையும், மூன்று உலகத்தையும் வென்ற என் பிள்ளையை மானிடரில் ஒருவன் கொல்ல மாண்டு போனானே! உயர்ந்து நிற்கும் மேருமலையை அணு ஒன்று உதைத்தது போலானதே! அம்மா!’ என அரற்றுகிறாள்.

அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும் அமர்வெண்திங்கள்
இம்பர் வந்தானை அஞ்சல் எனஇரு கரத்தில் ஏந்தி
வம்புறும் மருவைப் பற்றி முயல்என வாங்கும் வண்ணம்
எம்பெருங் களிறே! காண ஏசற்றேன், எழுந்திராயோ!

‘வானில் கண்ட சந்திரனை அருகே வா என்று நீ அழைத்ததும் பூமிக்கு இறங்கி வந்தான் அவன். அஞ்சவேண்டாம் எனக் கூறி இரு கைகளிலும் ஏந்தி, அவன் மீது இருக்கும் மருவை முயல் என்று எண்ணிப் பற்ற முயன்றாயே! என் கண்ணே! களிறே! என்னால் தாங்கமுடியவில்லை. எழுந்திரு!’

எத்தனை பெரிய வீரனும் எந்த வயதிலும் தன் தாய்க்குச் சிறு பிள்ளைதான். மேகநாதன் இளம் வயதிற்கே உரிய அழகிய அறியாமையால் திங்களின் மருவை முயல் என நினைந்து பற்றி இழுத்ததும், சிங்கங்களைப் பற்றிக் கொணர்ந்து அவற்றின் மோதலைப் பார்த்து கைகொட்டிச் சிரித்ததும், தன் வில்லாற்றலால் இந்திரனை வென்றதும் மண்டோதரியைப் பொருத்தவரை தன் மகனின் பிள்ளை விளையாட்டுதான். தேவரையும் மூவரையும் வென்ற தன் பிள்ளை, மானிடரில் ஒருவனால் வீழ்ந்துபட்டுத் தலையற்றுக் கிடப்பதைக் காண முடியவில்லை அவளால்.

இறுதியில் சொல்கிறாள் மண்டோதரி. மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.

பஞ்சுஎரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை
அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றே.

‘தீப்பட்ட பஞ்சு போல அரக்கர்தம் கடல் போன்ற படைகளெல்லாம், கடும் கோபம் கொண்ட மனிதர்கள் கொல்ல அழிந்துவிட்டதே. மீளவே இல்லையே. முன்பும் அஞ்சினேன். இப்போதும் அஞ்சுகிறேன். அந்த சீதை எனும் அமுதால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தனான இராவணனுக்கும் நாளை இந்நிலைதானே வரும்?’

-    யுவபாரதி

June 09, 2013

கம்பன் சிந்தனை – 6 : இன்னும் நான் இருக்கின்றேனே?

தன் தந்தையால் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட தம்பி அதிகாயன், இலக்குவன் கணையால் கொல்லப்படுகிறான். அவனோடு கும்பன், நிகும்பன், நராந்தகன் முதலான படைத்தலைவர்களும் களத்தில் கொல்லப்படுகின்றனர். இதையறிந்ததும் மேகநாதன் இராவணனிடம் சொல்கிறான்: 'கொன்றார் அவரோ? கொலை சூழ்க! என நீ கொடுத்தாய்'

'தெரிந்தே பலி கொடுத்தாயே, அப்பா! வினைவலிமை, தன்வலிமை, மாற்றான் வலிமை, துணை வலிமை இவற்றை ஒப்பிட்டுப் பார்க்காமல் மன்னன் என்ற பெயரில் இத்தனை பேரைப் பலி கொடுத்தாயே, அப்பா!’

எனினும், 'என் தம்பியைக் கொன்றவனை கூற்றுவனுக்குத் தராமல் போய் தேவர் குழாம் நகைக்கும் வண்ணம் பாரில் இருந்தேன் எனின், நான் அவ் இராவணி அல்லேன் ' என வஞ்சினம் கூறிப் போர்க்களம் சென்ற மேகநாதன் பெரும்போருக்குப் பின் இறந்துபடுகிறான். தூதுவர் மூலம் செய்தி அறிந்த இராவணன் கதறுகிறான். (இராவணி என்றால் இராவணனின் வழித் தோன்றல்).

மைந்தவோ எனும், மா மகனே எனும்,
எந்தையோ எனும், என் உயிரே எனும்,
முந்தினேன் உனை, நான் உளனே எனும்,
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்.

'என் மகனே! என் செல்வமே! என் அப்பனே! என் உயிரே! காலனிடம் உன்னை முன்னனுப்பிவிட்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே' எனப் புலம்புகிறான் இராவணன். தன் தம்பியையும் இளைய மகனையும் ஏற்கனவே பறிகொடுத்த இராவணன் தனக்கு ஈமக்கடன் செய்ய வேண்டிய மூத்த மகனையும் இழந்துவிட்டான். வெந்த புண்ணில் வேல்பட்டது போல் பத்துத் தலைகளும் பரிதவிக்கின்றன.

வாகை சூடித் திரும்புவான் என்று தான் நினைக்கையில் களப்பலியாகிவிட்டான் மகன். மகன் உடல் தேடி களம் புகுகிறான் இலங்கை வேந்தன். தேவர், இயக்கர், கந்தருவர் முதலான சேவகர்கள் யாவரும் அவன் பின்னாலேயே ஓடிவருகின்றனர். போர்க்களத்தில் கிடந்த பிணங்களை உண்பதற்காகப் பேய்களும், கழுகுகளும் சூழ்ந்திருக்கின்றன.

அழுதவால் சில, அன்பின போன்ற, அடி
தொழுதவால் சில, தூங்கினவால் சில,
உழுத யானைப் பிணம் புக்கு ஒளிந்தவால் –
கழுதும் புள்ளும் அரக்கனைக் கண்டதும்.

அவற்றில் சில இராவணனைக் கண்டதும் அழுகின்றன. சில அன்பின் மிகுதியால் துடிக்கின்றன. அவனது அடிதொழுகின்றன சில. உண்ட களைப்பில் உறங்குகின்றன சில. வீழ்ந்து கிடந்த யானையின் பிணத்திற்குப் பின்னால் சில பேய்களும் கழுகுகளும் ஒளிந்து கொள்கின்றன.

இராவணனின் கண்களுக்கு இவை ஏதும் புலப்படவில்லை. பிற யாரொருவரையும் பார்க்கும் மனநிலையில் அவன் இல்லை. தன் மகன் மேகநாதனின் உடலைத் தேடுகிறான். கோடிக் கணக்கில் வீழ்ந்து கிடந்த குதிரைகளின் உடல்களையும், அரக்கர்கள் யாக்கைகளையும், யானைகளின் பிணங்களையும், உடைந்து கிடந்த தேர்களையும் உருட்டிப் புரட்டிப் பகல் முழுக்கத் தேடுறான். பேர் சொல்லப் பெற்ற பிள்ளையின் பிணத்தைத் தேடுகிறான். 'நாடினான், தன் மகன் உடல், நாள்எலாம்' என விசும்புகிறான் கம்பன்.

மெய் கிடந்த விழி வழி நீர் விழ
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்
மொய் கிடந்த சிலையொடு மூரி மாக்
கை கிடந்தது கண்டனன், கண்களால்.

கண்களில் நீர் வழிய வழிய, நெஞ்சு நெய் கனல் பட்டு உருகிய இராவணன் முதலில் காண்பது மேகநாதனின் கைகளை. அக்கைகளோ ஏந்திய வில்லையும் கணையையும் விடாது கிடந்தன. மகனின் கைகளை எடுத்து தன் தலைமேல் வைத்து அழுகிறான். அதற்குப் பிறகே மகனின் மெய் கண்டு அதன்மேல் விழுகிறான்.

கை கண்டான் பின் கருங்கடல் கண்டென
மெய் கண்டான் அதன்மேல் விழுந்தான் அரோ!
பெய் கண்தாரை அருவிப் பெருந் திரை
மொய் கண்டார் திரை வேலையை மூடவே.

இராவணனின் கண்களிலிருந்து அருவியென பெருகிய நீர் கடலையே மூடுவதைக் கண்டனர் அக் காட்சியைக் கண்டவர்கள். அம்புகள் அமிழ்ந்து கிடந்த மகனின் உடலை எடுத்து, தன் மார்போடு அணைத்து அரற்றுகிறான் இராவணன். 'அப்புமான் உற்றது யாவர் உற்றார் அரோ!' என்கிறான் கம்பன். ஐயோ! அத்தலைவன் உற்ற துயரம் யார் உற்றார்?

மேகநாதனின் தலையை மட்டும் காணவில்லை. அவனைக் கொன்ற அந்த மானிடன்தான் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றுணர்ந்து விண் திறந்திட விம்மி அரற்றினான் இராவணன். 'என் பகைவர் என் புத்திரனையம் கொண்டு போயினரே! அம் மானிடர் இருவரும், அக் குரங்கும் போர்க்களத்தே இருக்கின்றனரே. இன்னும் மாளவில்லையே! இனிமற்று உண்டோ, இராவணன் வீரவாழ்க்கை' எனக் கழிவிரக்கம் கொண்டு கதறுகிறான் இராவணன்.

சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன், நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின்யார் உலகத்து உள்ளார்?

‘சினத்தோடு எதிர்நின்று வென்று இந்திரனின் செல்வத்தை அடைந்தேன். நினைத்ததை எல்லாம் செய்து முடித்தேன். ஒரு பெண் மீது கொண்ட ஆசையால், எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன்களை எல்லாம், என் மகனே! உனக்கு நான் செய்யும்படி ஆனதே! என்னைப் போன்ற ஒரு துர்ப்பாக்கியவான் யாரேனும் இவ்வுலகத்தில் உண்டா? என் மகனே!’

- யுவபாரதி

June 05, 2013

கம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்

கம்பனால் ‘சொல்லின் செல்வன்’ எனப் போற்றப்படுபவன் அனுமன் என்பதைப் பலரும் அறிவர். எனில், ‘வில்லின் செல்வன்’ எனப் போற்றப்படுபவன் யார்? அது, இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை வென்றதால் இந்திரசித்து. அவனது வில்லின் திறத்தை நான்முகனே மெச்சிப் புகழ்வதாக ஒரு மதுரகவியில் சொல்வான் கம்பன்.

சந்த வில்லி முப்புரம் தழற்படச் சரந்தொடும்
அந்த வில்லி யும்சினத்து அரக்கரோடு தானவர்
சிந்த வில்லி ஐந்தெடுத்த தேவர்தேவ னும்அலால்
இந்த வில்லி ஒக்கும் வில்லி எங்குமில்லை இல்லையே.

வில்லைத் திறம்படக் கையாளத் தெரிந்தவன் வில்லி. திரிபுரம் எரிக்கும் பொருட்டு பினாகம் எனும் வில்லினை எடுத்த சிவனையும், அரக்கரும் தானவரும் அழியும் பொருட்டு ஐம்படைகளை எடுத்த திருமாலையும் தவிர, இந்த மேகநாதனுக்கு இணையான வீரன் எவ்வுலகத்திலும் இல்லை என்பது பொருள்.

திருமாலின் ஐம்படைகள் என்பவை சக்கரம், சங்கு, கதை, வில், வாள் என்பன. இவற்றிற்கு முறையே சுதர்சனம், பாஞ்சசன்னியம், கௌமோதகி, சார்ங்கம், நந்தகம் என்று பெயர், முற்காலத்தில் திருமாலின் ஐம்படைகளும் பொறிக்கப்பட்ட தகட்டினை குழந்தைகளுக்குக் காப்பாகக் கழுத்தில் கட்டிவிடுவார்களாம். அதற்கு ஐம்படைத் தாலி என்று பெயர்.

தன் பாசக் கயிற்றால் அனுமனையே கட்டிப்போட்டான் மேகநாதன். பின் கருடன் வரவால் அது இற்றது. தன் பிரம்மாஸ்திரத்தால் இலக்குவனையும் வானர சேனையையும் சாய்த்தான் மேகநாதன். பின் அனுமன் சஞ்சீவிமலை கொணர்ந்து அவர்களின் உயிர்மீட்டான்.

தன் ஆற்றலையும் ஆயுதவலிமையையும் எதிர்கொண்டு மீளும் எதிரிகளின் வல்லமையைக் கண்டு வந்த மேகநாதன், மறுநாள் போருக்குப் புறப்படும் முன் இராவணனிடன் சொல்வான்.

ஆதலால் அஞ்சி னேன்என்று அருள் அலைஆசை தான்அச்
சீதைபால் விடுதி யாயின் அனைவரும் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கி வென்றான்.

எதிரிகளைக் கண்டு அஞ்சிச் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம், அப்பா! உன் மீதுள்ள அன்பினால் சொல்கிறேன் என்று மேற்கண்டவாறு சொல்கிறான். பொருள் வெளிப்படை. இராவணன் மகன் சொல்லும் கேட்கமாட்டான். மகன் போர்க்களம் புகுவான். இறுதியில் இலக்குவன் கணைகளால் மாள்வான். வெட்ட வெட்டத் தன் அங்கங்களைச் சேர்க்கத் தெரிந்த மாயாவி மேகநாதன் என்பதால், தொடர் கணைகளால், கை-கால்கள் வேறு, உடல்-தலை வேறென அறுத்து, தலையை மட்டும் கடலில் வீழ்த்தி மூழ்கடிப்பான் இலக்குவன்.

வாய்மையும் வலிமையும் மிக்க மேகநாதன் அடையும் இத்தகைய மரணம்தான், யுத்த காண்டத்திலேயே இராவணன் மரணத்தை விடவும் படிப்போர் மனத்தை நோகச் செய்வதாகும். அவன் வீழ்ந்துபட்ட செய்தியை இராவணனிடம் சொல்ல போர்க்களத்தினின்று தூதுவர் வருவர். பதைபதைத்து வந்தோர் ஒரே வரியில் சொல்வர்.

பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்
இல்லை ஆயினன்; உன்மகன் இன்றுஎனச்
சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார்.

(தூதுவர்) பற்களும் வாயும் மனமும் கால்களும் உயிர்ப் பாரமும் நடுநடுங்க, அச்சம் கொண்டு, நிலை தளர்ந்து (இராவணனிடம்) கூறினர் : உன் மகன் இன்று இல்லாமல் போனான்.

சோகத்தில் கொடியது புத்திர சோகம். அதுவும் தனக்குப் பின் தன் குலம் தழைக்க விளங்குவான் எனக் களித்திருக்கையில், தாம் உயிர் தரித்திருக்கும்போதே, தோளுக்கு மேல் வளர்ந்த நிலையில் தம் மகனைப் பறிகொடுக்கும் பெற்றோரின் துயரம் சொல்லி மாளாதது. ‘இலக்கியங்களில் புத்திர சோகம்’ எனும் தன் நூலில் நமது பல்வேறு இலக்கியங்களிலும் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர் துயர்ப்படும் காட்சிகளை உணர்ச்சி பொங்கக் காட்டியிருப்பார் ம.பொ.சி. அதன் முன்னுரையில் இந்நூலை எழுதியதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார். தமது எண்பதாவது வயதில், நாற்பது வயதிலிருந்த தம் மகனைப் பறிகொடுத்திருக்கிறார் .பொ.சி. வளர்ந்த தம் மகன் மறைந்த துக்கம் தாளாது அதை ஆற்றும் முகமாகவேனும் ஆகாதா என்ற நோக்கில் எழுதியது அந்நூல்.

மேகநாதன் இறந்த செய்தி கேட்டு மலைகள் பொடிபடும் வண்ணம் இடிக்கும் இடியென பற்களைக் கடித்தபடி, அம்மலைகள் வழி கடல்நீர் கொப்புளித்து வெளிப்படும் வண்ணம் தரையில் கைகளால் அடித்து அழுகிறான் இராவணன். பத்துத் தலைகளில் ஒவ்வொன்றும் ஆற்றாமையால் அழும். அரற்றும். புலம்பும். இராவணனுக்குப் பத்துத் தலைகள் எனும் உருவகத்திற்கு, எட்டுத்திசைகளையும் ஆகாயத்தையும் பாதாளத்தையும் தன்வயப்படுத்தி, தன் பார்வையிலேயே வைத்திருந்தான் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்

(காண்போம்).

- யுவபாரதி

May 27, 2013

கம்பன் சிந்தனை - 3 : கும்பகருணன் எனும் நல்லோன்

இராமாயணக் கதாபாத்திரங்களில் எனக்கும் மிகப் பிடித்த பாத்திரங்களில் ஒன்று கும்பகருணன். இராமனுக்கு இலக்குவன் போல், இராவணனுக்கு கும்பகருணன். நல்ல தம்பிகள். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் போருக்குப் போனவன்.

கம்பராமாயணத்தின் அற்புதமான படலங்களில் ஒன்று கும்பகருணன் வதைப் படலம். மிகவும் சிரமப்பட்டு கும்பகருணனை எழுப்புவர். எழுந்துவந்து இராவணனைச் சந்திப்பான் கும்பகருணன். நடந்தவை அறிந்ததும், "இது நல்லது இல்லை அண்ணா! சீதையை வெளிவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்வான். "எனக்கு அறிவுரை சொல்ல நீ ஒன்றும் அமைச்சன் இல்லை, நீ பயந்து விட்டாய், போ! போய் மீண்டும் இரவும் பகலும் தூங்கு..." என்று சீறும் இராவணன்,

'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் 

கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; 
யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான்.

அண்ணன் கோபம் கொண்டது தெரிந்ததும் அவனை வணங்கி, சூலமேந்தி, போருக்குப் புறப்படுவான் கும்பகருணன். "வெற்றியோடு திரும்புவேன் என்று சொல்லமுடியாது அண்ணா! விதி என் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது, போருக்குப் புறப்படுகிறேன்" என்று சொல்லி,

'என்னை வென்றுளர்எனில், இலங்கை காவல! 
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால், 
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை- 
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.

'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன 
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ! 
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய! 
பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான்.

("இலங்கை அரசே! என்னை இராம-இலக்குவர்கள் வென்றார்களாயின், உன்னையும் வெல்லப் போவது உண்மை. பின்யோசனை வேண்டாம். சீதையை விட்டுவிடுவது நல்லது. இதுநாள் வரை நான் முன்பு செய்த பிழைகள் ஏதுமிருப்பின் மன்னித்துவிடு. இனி உன் முகத்தில் திரும்பவும் விழித்தல் என்பது இயலாது என்றறிவேன். உயர்ந்தோனே! விடைபெறுகிறேன்" என்று சொல்லிப் போருக்குப் புறப்பட்டான் கும்பகருணன்.)

- யுவபாரதி

கம்பன் சிந்தனை - 2 : இராவணன் இழந்த ஆறு


இராவணன் பெருவீரன். மாபெரும் இசைக் கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம்போதி இராகம் இசைப்பதிலும் வல்லவன் என்றும் ஹம்ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்லப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற்றிருந்தும், தம்மை விரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதி வரை வெளிவிட மறுத்ததால் வீழ்ந்துபட்டான்.

வாரணம் பொருத மார்பும்,

வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
வெறும் கையோடு இலங்கை புக்கான்.


எட்டுத் திசை யானைகளோடு போரிட்ட மார்பையும், திருக்கயிலையையே பெயர்த்தெடுத்த தோள்களையும், நாரத முனிவர்க்குச் சரிக்குச் சரியாக இசை வாதம் செய்த நாவையும், மாலை அணிந்த கிரீடங்கள் பத்தையும், சிவன் உவந்தளித்த சந்திரஹாஸம் எனும் வாளையும், தன் வீரத்தையும் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு இராமனிடம் தோற்று வெறும் கையோடு இலங்கையில் நுழைந்தான் இராவணன் என்கிறான் கம்பன்.

- யுவபாரதி

கம்பன் சிந்தனை - 1 : இராவணனின் முகப்பொலிவு


சொல்நயத்தாலும் பொருள்நயத்தாலும் எனக்குப் பிடித்த கம்பராமாயணப் பாக்களில் இதுவும் ஒன்று. இராம-இராவண யுத்தம் முடிந்துபட்டது. போர்க்களத்தில் உயிர்துறந்து கிடக்கிறான் இராவணன். வீழ்ந்துபட்ட அவனது முகப்பொலிவை வருணிக்கிறார் கம்பர். அத்தோடு அதற்கான காரணங்களையும் அழகுற அடுக்குகிறார்.

இராவணனிடம் இதுவரையிலும் அடங்காமலிருந்த பல விடயங்கள் அடங்கியதால் வந்த முகப்பொலிவு என்கிறார்.

"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க,
மனம் அடங்க, வினையம் வீய,

தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,


தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா,
நிலை அடங்கச் சாய்த்த நாளின்,


மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள் அம்மா!
"


கொடிய சிங்கத்தின் சினம் போன்ற இராவணனின் கோபம் அடங்கியதால், எதற்கும் அடங்காத ஒரு மனம் அடங்கியதால், வஞ்சகம் அடங்கியதால், பகையுணர்வு அடங்கியதால், கைகளின் போர்ச் செயல் அடங்கியதால், சீதை மேல் கொண்ட மையல் அடங்கியதால், பிறரை அச்சுறுத்தும் ஆற்றல் அடங்கியதால், முன்பு தம்மை அடக்கிய முனிவர்களையும் கூட தனது கடுந்தவத்தால் தலை தாழ்த்தி நிலையடங்கச் செய்த நாளை விடவும், இன்று இராவணனின் முகங்கள் மும்மடங்கு பொலிவு பெற்று விளங்குகின்றன என்கிறான் கம்பன்.

- யுவபாரதி