Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

January 14, 2017

இப்படியா கைவிடும்

எப்போது கிளம்பிப் 
போனார் இளையராஜா
இறுகச் சாத்திய சன்னல்
அதிரக் கேட்ட துடியொலியை
எங்கே கொண்டுபோனான்
சாமக் கோடாங்கி
மணிக்கிருமுறை ஏன்
விட்டுவிட்டுக் குரைக்கிறது
தெரு மணி
பூனைக் குழந்தையின்
அழுகுரல் எப்படி
சுவர்க்கோழியோடு மோதுகிறது
கைகால் பரத்திக் கவிழ்ந்து
என்னமாய் உறங்குகின்றன 
புத்தகங்கள்
புட்டிமதுவின்
கடைசிச் சொட்டும்
இப்படியா கைவிடும்.

09.01.2017

February 07, 2014

ஒன்றுமில்லை


வாகனங்கள் வழக்கம்போல்
இயங்கின

கோயில் மதுச்சாலை
புத்தகக்கடைகள் திறந்திருந்தன

மனிதர்கள்
அழுதார்கள் சிரித்தார்கள்
சந்தித்தார்கள் சண்டையிட்டார்கள்

காணாமல் போன அன்று
நான்மட்டும்தான் காணாமல் போனேன்.



- யுவபாரதி

January 03, 2013

இரு உண்மைகள்



1

என் பிணத்திற்கு விறகுகள் அடுக்கியபடி
இருவர் பேசிக் கொண்டனர்

     புத்தகங்களால் 
     இவன் உலகையே நேசித்தான்

          புத்தகங்களால் 
          இவன்  இவனையே வெறுத்தான்

     புத்தகங்களால்
    இவன் சிறகுகள் பெற்றான்

          புத்தகங்களால்
          இவன்  பறத்தலையே மறந்தான்

     புத்தகங்களால் 
     இவன் அறிவாளியாக இருந்தான்

           புத்தகங்களால் 
           இவன்  முட்டாளாகவே வாழ்ந்தான்

     புத்தகங்களால் 
     இவன் இதயம் விம்மி இறந்தான்

          புத்தகங்களால் 
          இவன் மூளை வீங்கியே  மாண்டான்

2

என் பிணம் வாய் திறந்தது
     புத்தகங்களை என் சிதையிலிடுங்கள்


3

அவர்கள்
மீண்டும் பேசத் தொடங்கினர்

     புத்தகங்களை நேசிப்பதாலேயே
     இவன் தன்னோடு சிதையிலிடச் சொல்கிறான்

          புத்தகங்களை வெறுப்பதாலேயே
          தன் சிதையிலேயே எரித்துவிடச் சொல்கிறான்

4

என் சிதை
எரியத் தொடங்குகிறது.

- யுவபாரதி