1
என்
பிணத்திற்கு விறகுகள் அடுக்கியபடி
இருவர்
பேசிக் கொண்டனர்
புத்தகங்களால்
இவன்
உலகையே நேசித்தான்
புத்தகங்களால்
இவன்
இவனையே வெறுத்தான்
புத்தகங்களால்
இவன்
சிறகுகள் பெற்றான்
புத்தகங்களால்
இவன்
பறத்தலையே மறந்தான்
புத்தகங்களால்
இவன்
அறிவாளியாக இருந்தான்
புத்தகங்களால்
இவன்
முட்டாளாகவே வாழ்ந்தான்
புத்தகங்களால்
இவன்
இதயம் விம்மி இறந்தான்
புத்தகங்களால்
இவன் மூளை வீங்கியே மாண்டான்
2
என்
பிணம் வாய் திறந்தது
புத்தகங்களை என் சிதையிலிடுங்கள்
3
அவர்கள்
மீண்டும்
பேசத் தொடங்கினர்
புத்தகங்களை
நேசிப்பதாலேயே
இவன்
தன்னோடு சிதையிலிடச் சொல்கிறான்
புத்தகங்களை வெறுப்பதாலேயே
தன் சிதையிலேயே எரித்துவிடச் சொல்கிறான்
4
என்
சிதை
எரியத்
தொடங்குகிறது.
- யுவபாரதி
No comments:
Post a Comment