Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

June 30, 2012

இழப்பும் பிழைப்பும்



நடிப்பு ஒரு 'கலை'
நீங்கள் சாகவில்லை
வீணாய்த் துடிக்காதீர்கள்
என்கிறீர்கள்

நீங்கள் பாதுகாப்பானவர்கள்
வீணாய்ப் புலம்பாதீர்கள்
என்கிறீர்கள்

நீங்கள் எம் கரிசனத்துக்குரியர்கள்
வீணாய் விமர்சிக்காதீர்கள்
என்கிறீர்கள்

ஆனால்
எம் மண்
இன்னும் ஒரு பந்தயப் பொருள்
தாயம் போட கட்டை உருட்டும்
உம் சூதாடிகளுக்கு

விட்டகன்ற எம் உயிர்களும்
உயிர் மட்டும் மிஞ்சிய உடல்களும்
இன்னும் ஒரு முதலீடு
கூட்டம் கூட்ட நா சுழற்றும் 
உம் வாய்வணிகர்களுக்கு

ஆயினும்
அழுகையும் ஆங்காரமுமான
எம் மொழிக்கும்
சூழ்ச்சியும் சுயலாபமுமான
உம் மொழிக்கும்

உலகில் மட்டும் ஒரே பெயர்

தமிழ்.


- யுவபாரதி

(தமிழ்நதிக்கு)