Showing posts with label தி.பரமேசுவரி. Show all posts
Showing posts with label தி.பரமேசுவரி. Show all posts

December 15, 2013

ம.பொ.சி. நான்கு நூல்கள் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

இராஜேந்திர சோழன், ஜெயமோகன், ஹாமீம் முஸ்தபா

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தமிழர் திருமணம், சீர்திருத்தப் போலிகள், கண்ணகி வழிபாடு மற்றும் தமிழன் குரல் ஆகிய நான்கு நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் 14/12/2013 சனிக்கிழமை காலை சென்னை சைதாபேட்டையில் உள்ள அகநாழிகை புத்தகக் கடையில் நடந்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஹாமீம் முஸ்தபா, ஜெயமோகன், மற்றும் இராஜேந்திரசோழன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கவிஞர் தி.பரமேசுவரி நிகழ்வைத் தொகுத்தளித்தார். அகநாழிகை பொன்.வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.


அந்நிகழ்வின் mp3 வடிவிலான ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.




ஜெயமோகன் விமர்சன உரை





ஒலிப்பதிவு : யுவபாரதி

February 24, 2013

"நான் - வித்யா" நூல் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

நாடகக் கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் - வித்யா" எனும் தன்வரலாற்று நூல் குறித்த விமர்சனக் கூட்டம் 23-2-2013 சனிக்கிழமை மாலை சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு யாவரும்.காம் ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை யாவரும்.காம் சார்பில் நா.சாத்தப்பன் வரவேற்றுப் பேசினார். நாகையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வானவில் ரேவதி, எழுத்தாளர்கள் தி.பரமேசுவரி, கவின்மலர், யுவபாரதி மணிகண்டன் ஆகியோர் இந்நூல் குறித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு mp3 வடிவில்...











ஒலிப்பதிவு : யுவபாரதி

October 15, 2011

தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

அருள் எழிலன்,பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ்,செல்வராஜ் 
15.10.2011 அன்று காலை சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் "தமிழகத்தில் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர் அருள் எழிலன், மரண தண்டனை எதிர்ப்பு குறித்து மூத்த எழுத்தாளரும், மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பா.செயப்பிரகாசம், அணுமின் நிலைய எதிர்ப்பு குறித்து கூடங்குளம் அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் எக்ஸ்.டி.செல்வராஜ், பரமக்குடி தலித் படுகொலைகள் குறித்து எழுத்தாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் ஆகியோர் பேசினர்.

கவிஞர் கவின்மலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவிஞர் தி.பரமேசுவரி, "தடாகம்" அமுதரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.




ஒலிப்பதிவு : யுவபாரதி.

October 04, 2011

ம.பொ.சி. நினைவு நாள் விழா மற்றும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

ஞானசிவம்,பெ.சு.மணி,இல.கணேசன்,ஊரன் அடிகள்,
எஸ்.கே.பாலசுப்ரமணியன்,ஏ.நடராசன்,கலவை கோபாலகிருஷ்ணன் 
03.10.2011 அன்று சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி கலாலயா அரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் 16-வது நினைவு நாள் விழா மற்றும் அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வள்ளலார் நெறி பரப்புநர் ஊரன் அடிகள், சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குனர் ஏ. நடராஜன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் இல.கணேசன், பாரதியியல் ஆய்வறிஞர் பெ.சு.மணி ஆகியோர் பேசினர். கலவை கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ம.பொ.சி.யின் பெயரன் தி.ஞானசிவம் செய்திருந்தார். விழாவைக் கவிஞரும் ம.பொ.சி.யின் பெயர்த்தியுமான தி.பரமேசுவரி தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவின் ஒலிப்பதிவு இது. 







ஒலிப்பதிவு - யுவபாரதி

October 03, 2011

காஞ்சிபுரம் : ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

ம.பொ.சி.
09.01.2011 அன்று காஞ்சி இலக்கியக் களம் சார்பில் ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரம் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் காஞ்சி அமுதன் தலைமை ஏற்றார். அமுதகீதன் வரவேற்றார். தமிழரசுக் கழகத்தில் இயங்கிய சாம்பசிவம், ம.பொ.சி. இலக்கியப் பேரவை நிறுவனர் க.உ.கிருஷ்ணமூத்தி, தி.பரமேசுவரி ஆகியோர் பேசினர். எக்பர்ட் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்... 




ஒலிப்பதிவு - யுவபாரதி

September 29, 2011

ஸ்டாலின் ராஜாங்கம் - இரு நூல்களின் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

ஸ்டாலின் ராஜாங்கம்
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தீராத் தியாகம் மற்றும் நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 2010 டிசம்பர் 26 அன்று திருவண்ணாமலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்றது. சமூக சமத்துவப் படை நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் நூல்களை வெளியிட்டுப் பேசினார். மேலும் தி.பரமேசுவரி, ஹமீம் முஸ்தபா, பழனிவேள், பாலசுப்பிரமணியன், ஜெகன்னாதன் ஆகியோர் இந்நூல்கள் குறித்துப் பேசினர். அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...


   

ஒலிப்பதிவு : யுவபாரதி

January 17, 2011

ம.பொ.சி.யின் "தமிழன் குரல்" இதழ்த் தொகுப்பு - மூன்று நூல்கள்

தமிழக எல்லை மீட்பில் (சென்னை, திருத்தணி, குமரி) முக்கியப் பங்காற்றியவரும், தமிழரசுக் கழக நிறுவனரும், தமிழ்த் தேசிய முன்னோடியுமான சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் அவர்கள் 1954 - 1955 காலகட்டத்தில் நடத்திய 'தமிழன் குரல்' என்ற மாத இதழ் அவருடைய பெயர்த்தி தி.பரமேசுவரியால் தொகுக்கப்பட்டு அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என்று மூன்று நூல்களாக சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழன் குரல் - அரசியல் கட்டுரைகள்

"எங்கெங்கும் தமிழ் இனத்தவர் போர் முழக்கம் செய்து வரும் நேரத்தில்தான் அவர்களுக்கெல்லாம் ஆதரவாகப் பணிபுரியத் 'தமிழன் குரல்' வெளிவருகிறது. தமிழகம் தனி ஆட்சி பெறவேண்டும்; துண்டுபட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் தாய்த் தமிழகத்தோடு ஒன்றுபடவேண்டும்; தமிழகத்தில் தமிழ் ஒன்றே ஆட்சி மொழியாதல் வேண்டும்..." - ம.பொ.சி. (ஆகஸ்டு 1954)

இவ்விதழில் ம.பொ.சி. எழுதிய தலையங்கம், கண்ணோட்டம் (துணைத் தலையங்கம்) என்ற தலைப்பிலான கட்டுரைகளோடு, ம.பொ.சி., மு.வ., நாமக்கல் கவிஞர், சோம.லெ., ஏ.ஜி.வேங்கடாச்சாரி, ரா.பி.சேதுப்பிள்ளை, வெ. சாமிநாத சர்மா, குயிலன் ஆகியோர் எழுதிய அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


தமிழ்த் தேசியத்தின் குரல் மீண்டும் வலுவாய் எழும்பத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், காலத்தின் குரலாய்த் 'தமிழன் குரல்' நூல்வடிவில் வருவது மிகச் சரியானதாகும்.


மொத்த பக்கங்கள் : 272; விலை : ரூ.150/-.



2. தமிழன் குரல் - இலக்கியக் கட்டுரைகள்

"தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எலாம் நிரம்பியுள்ள களஞ்சியம்" - ம.பொ.சி.
அரசியல் இதழாக மட்டுமில்லாமல், இலக்கியம் பேசும் இதழாகவும் இருந்த 'தமிழன் குரலி'ல் ம.பொ.சி.யுடன் நாமக்கல் கவிஞர், ரா.பி.சேதுப்பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, அ.ச.ஞா., பெ.தூரன், கி.வா.ஜ., கா.பொ.ரத்தினம், நா.பார்த்தசாரதி, டி.கே.சண்முகம், குன்றக்குடி அடிகளார், தெ.பொ.மீ., சோம.லெ., ந.சஞ்சீவி, பி.ஸ்ரீ. ஆகியோரும் பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
சங்க இலக்கியம், குறளும் சிலம்பும், பிற்கால இலக்கியம் என வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன.


மொத்த பக்கங்கள் : 215; விலை : ரூ.125/-.



3. தமிழன் குரல் - படைப்பிலக்கியம்

'தமிழன் குரல்' இதழில் வெளிவந்த கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பல்துறைக் கட்டுரைகள் ஆகியன படைப்பிலக்கியம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


தண்டபாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, டி.கே.சண்முகம், தெ.பொ.மீ., சோம.லெ., பெ.தூரன், வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, கவிஞர் கா.மு.ஷெரீப், ர.சண்முகம் (ரசம்), குயிலன் ஆகியோர் 'தமிழன் குரலில்' எழுதியுள்ள படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

மொத்த பக்கங்கள் : 272; விலை : ரூ.145/-.


இம்மூன்று நூல்களும் சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கும்.

முகவரி:
சந்தியா பதிப்பகம்,
பு. எண்: 77 , 53 ஆவது தெரு,
9 ஆவது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை - 600 083.
இணைய தளம்: http://www.sandhyapublications.com/
மின்னஞ்சல் : sandhyapublications@yahoo.com
தொலைபேசி எண்: 044 - 24896979 .


தொகுப்பாசிரியரின் வலைப்பூ: http://www.tparameshwari.blogspot.com/
தொகுப்பாசிரியரின் மின்னஞ்சல்: thi.parameswari@gmail.com

September 07, 2010

கூர் தீட்டிய விழிகள் - கவிதை நூல் வெளியீட்டு விழா

கூர் தீட்டிய விழிகள் கவிதை நூல் வெளியீடு 04.09.10 மாலை 5 திருவண்ணாமலை அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அ.அப்போலியன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் யுவபாரதி தலைமை வகித்துப் பேசினார். சேத்துப்பட்டு திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தாமஸ் அப்பாத்துரை வெளியிட கவிஞர் குமாரி பிரகாஷ் பெற்றுக் கொண்டார். பாவலர் வையவன், கவிஞர் தி. பரமேசுவரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. வே. நெடுஞ்செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நூலாசிரியரின் பெற்றோர் கெங்கம்மாள் - வாசுதேவன் ஆகியோர் பிரதிகளை வழங்க ஏந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.நாகசங்கர், குமுதம் இராமசாமி முதலான பலர் பெற்றுக் கொண்டனர். சுரேஷ் நிகழ்வைத்தொகுத்து வழங்க, நூலாசிரியர் ஏந்தல் கணா ஏற்புரைத்தார்.



நூலின் விலை: ரூ. 50/-

மணிவாசகர் பதிப்பகம்,

31, சிங்கர் தெரு,

பாரி முனை,

சென்னை - 108.