May 01, 2020

அவரும் வாரார் முல்லையும் பூத்தன

1

மரத்திலிருந்தபடி நீர்ப்பரப்பையே பார்த்திருந்து ஒரு மீன் கண்டதும் சர்ரெனப் பாய்ந்து கவ்வி உயரப் பறக்கும் மீன்கொத்தி. ஆனால், கடல் அலைகளின்  மேலமர்ந்தபடி அவற்றின் அசைவுகளுக்கேற்பச் சிறகடித்துக் கொண்டே அவ்வலைகள் புரட்டிவிடுகிற மீன்கள் ஒவ்வொன்றாய்க் கவ்வி விழுங்கும் நாரை. குறுந்தொகைப் பாடல்கள் மீன்கொத்தி என்றால் கலித்தொகைப் பாடல்கள் நாரை.

2

ஒரு வரிக் கவிதையாக மந்திரம் போல என் மனதில் ஒலிக்கும் பாடல் வரிகளில் குறுந்தொகையில் வரும் 'அவரும் வாரார் முல்லையும் பூத்தன' என்பது முக்கியமானது.

"அவரும் வாரார் முல்லையும் பூத்தன
பறிஉடைக் கையர் மறிஇனத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே"

என்பது முழுப்பாடல். மழைக் காலம் தொடங்குவதற்குள் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் சொன்ன காலத்திற்குள் வரவில்லை என்பதால் அவன் வரவுக்காகக் காத்திருந்த தலைவியின் சொற்கள் இவை. மழைக்குப் பின்னர்தான் முல்லைக் கொடி பூக்கும். இதை அறிந்தாலே தலைவி சொல்வது தெரிந்து விடுகிறது. தொரட்டிக்கொலும் கையுமாக  ஆடுகளோடு செல்கிறார்கள் இடையர்கள். அவர்களில் ஒருவன் தலைவியின் வீட்டிற்குப் பால் கொண்டுவந்து கொடுத்து விட்டு உணவு பெற்றுக்கொண்டு விரைகிறான். அவன் தலையில் அப்போதே பறித்த இளம் முல்லைப் பூக்களைச் சூடியிருப்பதைத் தலைவி பார்க்கிறாள். ஆக, மழைக்காலமே வந்துவிட்டது. தலைவனோ திரும்பி வரவில்லை. 'அவரும் வாரார் முல்லையும் பூத்தன'.

3

'அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்' எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடல் ஒன்று, பாலை நிலத்தில் யானை, புறா, மானின் செயல்கள் என்று அடுக்கடுக்கான காட்சிகளைச் சொல்லிச் செல்லும். 'இந்த நாளில் திரும்பி வருவேன்' என்று தலைவியிடம் சொல்லி, பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவனோ (மேற்சொன்ன குறுந்தொகைப் பாடலின் தலைவன் போலவே) குறிப்பிட்ட நாள் வந்தும் வரவில்லை. அதனால் துன்புற்ற தலைவிக்கு ஆறுதல் சொல்லும் தோழியின் சொற்களாக வரும் நீண்ட பாடல் இது.

அதில் மூன்று காட்சிகள் அத்தனை அழகானவை.

"...
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல்
....
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே
...
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே
...
இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்துஅளிக்கும் கலைஎனவும் உரைத்தனரே...
..."

அதாவது, பொருள் தேடப் பிரிந்து சென்ற காதலர் திரும்பி வருவார். 'பாலை நிலத்தில் கிடைப்பதற்கு அரியதாகக் கிடைத்த நீரையும் யானைக்குட்டி கலக்கிவிட்டுவிடும். தாகம் அதிகமிருந்தாலும் ஆண்யானை அந்தக் கொஞ்சம் நீரையும் தான் அருந்தாமல், முதலில் தம் பெண்யானைக்கு ஊட்டிவிட்டு, மிச்சம் இருப்பதையே தான் அருந்தும்' என்றாரே! 'பாலை நிலத்தின் வெம்மை தாளாமல் தவிக்கிற தம் பெண்புறாவின் வேதனையை, ஆண்புறா தம் மெல்லிய சிறகுகளால் விசிறியபடி ஆற்றிவிடும்' என்றாரே! 'பாலை நிலத்தில் நிழல் இல்லாமல் தவிக்கிற தம் பெண்மானுக்கு, ஆண்மான் தான் வெயிலில் நின்று தன் நிழலையே கொடுத்துப் பேணும்' என்றாரே காதலர்! (இப்படிப்பட்ட இணைகளைக் காணும் காதலர், உன்னை வாடச் செய்வாரோ? நிச்சயம் வருவார்.) என்று தலைவியிடம் சொல்கிறாள் தோழி.
'பொருள்வயின் சென்றநம் காதலர் வருவர்கொல்'.


No comments: