- யுவபாரதி
பென்னாத்தூரில், அவலூர்பேட்டை
சாலையின் மேற்குப் பக்கம் துரோபதையம்மன் கோவில் தெரு என்றால், கிழக்குப் பக்கம் அருணோதயா
நர்சரி பள்ளி. எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஆங்கிலவழிப் பள்ளி. தாளாளரும்
தலைமை ஆசிரியருமான ஒரு கிறிஸ்தவர் வீட்டில்தான் பள்ளிக்கூடம் நடந்தது. மாலை நேரத்தில்
பிள்ளைகள் விளையாட நிழல்தரும் ஒரு பெரிய புங்கமரம் பள்ளிக்கு எதிரே இருந்தது.
எண்பதுகளின் துவக்கம். செங்கத்திலிருந்து
பென்னாத்தூருக்கு வந்த எங்கள் குடும்பம் திண்டிவனம் சாலையை ஒட்டியிருந்த பெருமாள் கோவில்
தெருவில் குடியிருந்தது. குடியிருந்த வீடு கொஞ்சம் பெரியது. வீட்டிற்குப் பின்னால்
ஒரு கிணறும் சிறு தோட்டமும் கூட இருந்தது. அதில் தக்காளி, மிளகாய், வெங்காயம், அவரை,
புடலை எல்லாம் பயிரிட்டு வளர்ப்போம்.
அம்மா அப்போது பக்கத்தில் இரண்டு கிமீ
தொலைவில் இருந்த கருங்காலிகுப்பம் எனும் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக
இருந்தார். தம்பி கைக்குழந்தை. அவனைப் பார்த்துக் கொள்ள அம்மாவைப் பெற்ற பாட்டி எங்கள்
கூட இருந்தார். என் சித்திக்கு இரண்டு வயது இருக்கும்போதே தாத்தா இறந்துவிட்டாராம்.
மின்வாரியத்தில் ஃபோர்மேனாகக் கொடைக்கானலில் வேலை பார்த்து வந்த தாத்தா நாய் கடித்து,
சரிவர மருத்துவம் பார்க்காததால் இறந்துவிட்டார் என்பார் அம்மா. வீட்டில் இருந்த புகைப்படத்தில்
தாத்தாவைப் பார்த்திருக்கிறேன். கருகரு நெடுநெடுவென ஏறுநெற்றியுடன் இருப்பார். தாத்தா
இறந்தபின் குழந்தைகளோடு தன் தாய் வீட்டில் இருந்துகொண்டு மிகவும் சிரமப்பட்டு வளர்த்தாராம்
பாட்டி. பாட்டிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் வீரவநல்லூர்.
என் மீது கொள்ளைப் பிரியம் பாட்டிக்கு.
முதல் பேரன் இல்லையா! நர்சரியில் சேர்க்கும் முன்பே எனக்கு ஆனா ஆவன்னா, ஏ பி சி டி,
ஒன்னு ரெண்டு மூனு எல்லாம் ஓரளவு கற்றுத் தந்து விட்டார். என்னை நேராக யூகேஜியிலேயே
சேர்த்துக் கொண்டார்கள். இப்போது போல அப்போதெல்லாம் நர்சரியிலிருந்து வேனெல்லாம் வராது.
நாம்தான் நடந்தோ, பெரியவர்களோடு சைக்கிளிலோ போகவேண்டும். என்னை என் பாட்டிதான் நர்சரிக்குக்
கொண்டுபோய்விடும். அதற்கு தீவிர ஆஸ்துமா இருந்ததால் ரொம்ப தூரம் தூக்கிச் செல்லமுடியாது.
நடத்தித்தான் கூட்டிப்போகவார். தெருவில் ரொம்ப நேரம் ஆட்டம் போட்டாலோ சொல்பேச்சு கேட்காவிட்டாலோ
பாட்டி பெரும்பாலும் அடிக்கமாட்டார். சிவந்து எரியும் அளவிற்கு தொடையில் நன்கு கிள்ளுவார்.
அந்தக் கிள்ளை விட அம்மாவின் அடியே எவ்வளவோ மேல்!
நர்சரிக்குப் போகும்போது டிபன்
பாக்சோடு கூட, ஒரு சின்ன பிளாஸ்டிக் பெட்டியில் நாலணா அளவுள்ள குட்டி பிஸ்கெட் எட்டும்
கொஞ்சம் சீரக மிட்டாயும் போட்டுத் தருவார் பாட்டி. நிறைய கதைப் புத்தகம் படிப்பார். பீர்பால்
கதையோ முல்லா கதையோ, ஏதாவது ஒரு சிறிய கதையோடுதான் காலையில் நர்சரிக்குக் கூட்டிப்போவார்.
மாலையில் கூட்டிவருவார். என் தம்பிக்குத்தான் இந்தக் கொடுப்பினை இல்லை. அவன் பிறந்து
ஓரிரு வருடத்திற்குள் என் மாமாவிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், மாமா வீட்டிற்குப்
போய்விட்டார் பாட்டி.
அப்போது எங்கள் வீட்டிற்கு இரண்டு
வீடு தள்ளி இருந்த எல்லை மாமா பையன் பரணிதான் எனக்கு ரொம்ப சினேகிதம். எல்லை மாமா என்றதும்
ஏதோ எல்லைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் என்று நினைக்கவேண்டாம். ஐயங்கார் குடும்பம்
அது. மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக இருந்தார் பரணி அப்பா. சுருக்கமாக எல்ஐ. அதனால்
எல்லை மாமா. எதிர்த்த வீட்டில் இருந்த பாலாஜியும் நண்பன்தான். என்னையும் பரணியையும்
விட ஓரிரு வயது மூத்தவன். தவிர தெருவெங்கும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். பக்கத்து
சாஸ்திரி வீடு பக்கம் மட்டும் போகமாட்டோம். அவர் பெண் உஷா அக்கா நல்லவர் என்றாலும்
சாஸ்திரி ஒரு சிடுமூஞ்சி.
பெருமாள் கோவில் சுவர் மேல் ஏறி
கீழே கொட்டிக்கிடக்கும் மணல்மேல் குதித்து விளையாடுவோம். யார் ரொம்ப தூரம் தாண்டிக்
குதிக்கிறார்கள் என்று போட்டியே நடக்கும். அப்படித்தான் ஒருநாள் மாலை நான் கொட்டிக்கிடந்த
மணலையும் தாண்டிக்குதித்து கை ஒடிந்துவிட்டது. வீட்டில் சொன்னால் அடிப்பார்கள் என்று
சொல்லாமலே வலியைப் பொறுத்துக்கொண்டு உறங்கியும் விட்டேன். காலையில் கையைத் தூக்கக்
கூட முடியாமல் பொதபொதவென வீங்கிவிட்டது. சட்டையைக் கழற்ற முடியாமல் வெட்டி எடுத்துவிட்டு,
முட்டைவைத்து புத்தூர் டானாக்கட்டு போட்டார்கள். ரொம்பநாள் பாகப்பிரிவினை சிவாஜி மாதிரி
இருந்தேன். ‘தாழையாம் பூ முடிஞ்சு, தடம் பாத்து நடை நடந்து…!’
நர்சரியில் துரோபதையம்மன் கோவில்
தெரு எஸ்ஸும் என் கூடத்தான் யூகேஜி படித்தான். எங்கள் தெரு பரணி, சத்தியராஜ் வாத்தியார்
பெண் கவி, ஊர்த்தலைவர் அக்கா பையன் ஏழுமலை, கல்பூண்டி ரெட்டியார் பையன் மகேஷ் உட்பட
பலர் என்னோடு படித்தார்கள். அப்போது எனக்கு வகுப்பு ஆசிரியையாக இருந்தவர் பள்ளித் தாளாளரின்
பெண்தான். பப்பி மிஸ் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவர்களது இயற்பெயர் நினைவில்லை.
மதிய உணவுக்கான மணி அடித்ததும்
ஒழுங்காக டிபன் பாக்ஸ் திறக்கிறோமா, கீழே சிந்தாமல் சாப்பிடுகிறோமா என்று மிஸ் பார்ப்பார்கள்.
தானாய்ச் சாப்பிடத் தெரியாத பிள்ளைகளுக்கு மிஸ்ஸோ ஆயாவோ ஊட்டிவிடுவார்கள். சாப்பிட்டு
முடித்ததும் அங்கேயே பாய்விரித்து ஒரு அரைமணி நேரம் தூங்கவைப்பார்கள். பெரும்பாலும்
நண்பர்கள் எல்லாம் அருகருகே படுத்துக்கொண்டு, வெளியே யாருக்கும் கேட்காதபடி குசுகுசுவென
பேசிக்கொண்டுதான் இருப்போம். மிஸ் கண்காணிப்பு வலம் வரும்போது மட்டும் கண்மூடி நடிப்போம்.
மாலை ஒரு மணி நேரம்தான் வகுப்பு. அப்புறம் விளையாட்டுதான். ஓட்டப்பந்தயம், கோகோ, பூப்பந்து,
கண்ணாமூச்சி என்று.
அங்கு நான் முதல் வகுப்பு படிக்கும்போது,
அப்படி விளையாட்டு நேரத்தில்தான் பரணி கையிலிருந்த ஒரு குச்சிமிட்டாயைக் கேட்டிருக்கிறான்
ஏழுமலை. பரணி தரமாட்டேன் என்றதும் அதைப் பிடுங்கிச் சாக்கடையில் எறிந்துவிட்டான் இவன்.
பரணி அழுதுகொண்டே ‘மிஸ்கிட்ட சொல்றேன்’னு சொன்னதும் அவனை அடித்துவிட்டான் ஏழுமலை. இதைப்
பார்த்துவிட்டு நான் ஏழுமலையிடம் சண்டைக்குப் போனேன். கைகலப்பு. நான் வலுக்கொண்ட மட்டும்
பிடித்துத் தள்ளியதில் புங்கமரத்தில் போய் முட்டிவிழுந்தான் ஏழுமலை. தலையில் காயம்பட்டு
இரத்தம் வழிந்தது.
விஷயம் கேள்விப்பட்டு மிஸ் வந்து
என்னைக் கண்டித்தார்கள். ஏழுமலையை அருகிலிருந்த வீராசாமி டாக்டரிடம் கூட்டிப்போகக்
கிளம்பினார் மிஸ்ஸின் அண்ணன். அதற்குள் ஏழுமலை வீட்டுக்குத் தகவல் எட்டிவிட்டது. அருணோதயா
நர்சரி பள்ளிக்கு எதிரிலிருந்த தெரு, திண்டிவனம் சாலையில் முடியும் இடத்தில்தான் எழுமலை
வீடும், அவனது மாமா வைத்திருந்த மரமண்டியும். அவன் அம்மா-அப்பாவோ மாமாவோ வந்திருந்தால்
பரவாயில்லை. வந்தது அவன் பாட்டி. அவன் பாட்டி வாய்க்கு அந்தச் சுற்றுப்பக்கம் நான்கைந்து
தெருக்களும் பயப்படும். ஊர்த் தலைவரின் அம்மா வேறு அது.
அந்தப் பாட்டியின் கண்ணில் காட்டாமல்
பள்ளிக்குள் ஒளித்துவைத்து அதனிடம் சமாதானம் பேசினார்கள் பப்பி மிஸ். தகவல் தெரிந்து
என் பாட்டியும் வர, அதனைப் பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டது ஏழுமலைப் பாட்டி. என் பாட்டி
மன்னிப்புக் கேட்டும் கூட அதன் கோபம் தீரவில்லை. ஏழுமலை தலையில் கட்டோடு ஆஸ்பத்திரியிலிருந்து
வந்ததும் ‘என் கையில் சிக்கட்டும் அவன்’ என்று என்னைக் கறுவிக்கொண்டே போனார் அவன் பாட்டி.
அவர் கிளம்பிப் போனதும் பள்ளியிலிருந்தே எனக்குப் பூசையைத் தொடங்கிவிட்டார் பாட்டி. மாலையில்
பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் அம்மாவும் தன்பங்குக்குப் பூசை. அப்பா வந்துதான்
காப்பாற்றினார். அழுது அழுது முகம் வீங்கிவிட்டது. அப்பா தலைவர் வீட்டுக்குப் போய்
அவரிடம் மன்னிப்புக் கேட்டார். “இலேசான காயந்தான். குழந்தைங்கன்னா இதெல்லாம் சகஜம்தான்”
என்றாராம் தலைவர். அவர் அம்மாதான் அப்பாவிடமும் சண்டை போட ஆரம்பித்தாராம். தலைவர் அதனை
வைது அடக்கினாராம்.
இனி இந்தப் பள்ளி எனக்குச் சரிப்பட்டு
வராது என்று முடிவெடுத்துவிட்டார்கள். பென்னாத்தூரில் இருந்த வேறு பள்ளியிலும் சேர்க்கவில்லை.
தன் பார்வையிலேயே இருக்கட்டும் இவன் என்று அடுத்த வருடம் கருங்காலிக்குப்பத்தில் கொண்டுபோய்ச்
சேர்த்தார்கள். தமிழ்வழிக் கல்வி. ஐந்துவயது முடியவில்லை என்பதால் அதே வருடம் சேர்க்கமுடியவில்லை.
அதாவது நெடுக்காக தலையைச் சுற்றி வலதுகையால் இடதுகாதைத் தொடமுடியவில்லை. ஏழெட்டு மாதங்கள்
வீட்டில் இருந்தேன்.
புதுப்பள்ளியில் அடுத்த வருடம்
மீண்டும் நான் ஒன்றாம் வகுப்பு. எஸ்ஸு, பரணி, ஏழுமலை எல்லாம் நர்சரியில் இரண்டாம் வகுப்பு.
எல்லாவற்றிற்கும் காரணமான பரணியோடு இனி பேசக்கூடாது என்றார்கள். ஏழுமலை வீட்டுப்பக்கமே
போகக்கூடாது என்றார்கள். உபதேசத்தை எல்லாம் ரொம்ப நாள் என்னால் கடைபிடிக்கமுடியவில்லை.
ஓரிரு நாட்களில் பரணியோடு விளையாடப் போய்விட்டேன். கொஞ்சம் நாள் கழித்து ஆறிப்போன காயத்தின்
தழும்பைத் தொட்டுப்பார்த்து ஏழுமலையோடும் இராசியாகிவிட்டேன்.
பரணி மட்டும் அன்று அந்தக் குச்சிமிட்டாயை
ஒரு காக்காக்கடி கடித்து ஏழுமலைக்குத் தந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.
நானும் அந்தப்பள்ளியில் அவர்களோடேயே படித்திருப்பேன்.
No comments:
Post a Comment