இரகுநாத
நாயக்கர் – நான்காம் கிறிஸ்டியன் ஒப்பந்தம்
தரங்கம்பாடி டேன்ஸ்பொர்க் கோட்டை |
டேனிஷ்
கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான ‘ஓரிசண்ட்’ எனும் கப்பலில் ரோலண்ட் கிராப்
என்பவர் தலைமையில் டேனிஷ் வணிகக் குழு சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தபோது, ஏற்கனவே நாகப்பட்டினத்தில்
நிலைகொண்டிருந்த போர்ச்சுகீசியர்கள் ‘ஓரிசண்ட்’ கப்பலை மூழ்கடித்தனர். ரோலண்ட்
கிராப் முதலானோர் அதிலிருந்து தப்பி, தஞ்சை இரகுநாத நாயக்கரிடம் முறையிட்டனர்.
அவர் போர்ச்சுகீசியர்களைக் கண்டித்து 12000 பொன் அபராதம் விதித்தார். டேனிஷார் தரங்கம்பாடியில்
வணிக மையம் அமைத்துக் கொண்டு குடியிருக்க விரும்புவதை அறிந்த இரகுநாதன், அதை
வரவேற்று ஏப்ரல் 1620-இல் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியனுக்கு
(ஆட்சி : கி.பி.1588-1648) ஒரு தங்கத் தகட்டில் கடிதமிட்டார் (40
செமீ
x 2.5 செமீ).
டேனிஷ்
அரசரின் உத்தரவின் பேரில் இலங்கையில் கண்டி அரசரின் அனுமதி பெற்று திருகோணமலையில்
ஒரு வணிக நிலையை நிறுவிய கேப்டன் ஓவ் கெட்டி என்பவர் தஞ்சை வந்து இரகுநாத
நாயக்கரைச் சந்தித்தார். இதன் அடிப்படையில், டேனிஷார் தரங்கம்பாடியில் வணிக மையம்
அமைத்துக் கொண்டு குடியிருக்க அனுமதித்து, இரகுநாத நாயக்கர் – நான்காம்
கிறிஸ்டியனுக்கிடையே ஒப்பந்தம் உருவாயிற்று. 1620 நவம்பர் 19 அன்று கையெழுத்தான
இவ்வொப்பந்தம் போர்ச்சுகீசிய மொழியில் எழுதப்பட்டு, அதில் இரகுநாதரால் தெலுங்கில்
கையொப்பமிடப்பட்டுள்ளது. மேற்படி தங்கத்தகட்டில் எழுதப்பட்ட கடிதமும், மேற்படி
ஒப்பந்த ஆவணமும் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில்
இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவ்வொப்பந்தத்தின்படி,
தரங்கம்பாடியைச் சுற்றி 5
மைல்
x 3 மைல் சுற்றளவுள்ள நிலப்பரப்பு குத்தகைக்கு டேனிஷ் கம்பெனிக்கு
விடப்பட்டது. ‘டேன்ஸ்பொர்க்’ என்ற பெயரில் ஓவ் கெட்டியால் கோட்டை
கட்டுவிக்கப்பட்டு, வணிகம் துவக்கப்பட்டது. ரோலண்ட் கிராப்பை முதல் கவர்னராய்
நியமித்து, ஓவ் கெட்டி டென்மார்க் திரும்பினார். டேனிஷ் கிழக்கிந்தியக்
கம்பெனியால் நாணயங்களும் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
இரகுநாத
நாயக்கரின் இறைப் பணிகள்
நாயக்கர்கள்
வைணவ மரபைச் சேர்ந்தவர்கள் என்பது அறிந்ததே. குறிப்பாக, இரகுநாத நாயக்கர் இராமபிரானிடம்
பெரும்பக்தி கொண்டிருந்தார். பல திருமால் கோவில்களில் இராமன் திருமேனிகளை அமைத்தார்.
கோவில்களில் இராமாயண கதை சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார். “இராமகதை எனும் அமுதத்தை
எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் தொண்டன்” எனும் பொருள்படும் “அனவரத ராமகாதாம்ருத
சேவகன்” எனும் சிறப்பு விருதை இவர் ஏற்றிருந்தார் என்கிறது திருக்கண்ணமங்கைக் கோவில்
செப்பேடு. அக்கோவிலுக்கு 60 வேலி நிலத்தைத் தானமாக அளித்துள்ளார் இரகுநாதன்.
கும்பகோணத்திலுள்ள
இராமசாமி கோவில் இரகுநாத நாயக்கரால் கி.பி.1620-இல் கட்டுவிக்கப்பட்டது. உள்பிரகாரத்தில்
இராமாயணக் கதை முழுவதும் சித்திர வடிவில் வரையப்பட்டுள்ள இக்கோவிலில், இராம பட்டாபிஷேகக்
கோலத்தில் திருமேனிகள் விளங்குகின்றன. இக்கோவிலில் தமது தேவியருடனான இரகுநாத நாயக்கரின்
சிற்பமும் உள்ளது.
மன்னார்குடி
இராஜகோபால சுவாமி கோவில், திருவையாறு ஐயாறப்பர் கோவில், பட்டீசுவரம் தேனுபுரீசுவரர்
கோவில் முதலான ஆலயங்களுக்கும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார் இரகுநாத நாயக்கர்.
இரகுநாத
நாயக்கரின் இலக்கியப் பணிகள்
தஞ்சையில்
தெலுங்கு மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களின் பொற்காலத்தைத் தொடங்கி வைத்தவர் இரகுநாத
நாயக்கரே எனப்படுகிறது. இவ்விரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்த இரகுநாதன் தம்
தாய்மொழியாம் தெலுங்கில் அச்யுதாப்யுதயமு, ராமாயண கதா ஸங்க்ரஹமு (ரகுநாத ராமாயணம்),
பாரத கதா ஸங்க்ரஹமு, நளசரித்ரமு, வால்மீகி சரித்ரமு முதலான நூல்களையும், சமஸ்கிருதத்தில்
ஸங்கீத ஸுதா, பாரத ஸுதா, நளாப்யுதயம், பாரிஜாதாபஹரணம், அச்யுதேந்திராப்யுதயம், வால்மீகி
சரித்ரம், ராமாயண ஸார ஸங்க்ரஹம் கஜேந்திர மோக்ஷம், ருக்மிணீ–கிருஷ்ண விலாஸம், ஜானகி
பரிணயம் முதலான நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கின் முதல்
உரைநடை நூல் வால்மீகி சரித்ரமுவே எனப்படுகிறது.
கும்பகோணம் இராமசாமி கோவில் இரகுநாத நாயக்கர் சிற்பம் |
கஜேந்திர
மோக்ஷம், ருக்மிணீ–கிருஷ்ண விலாஸம், ஜானகி பரிணயம் ஆகிய மூன்றும் யக்ஷகான நாடகங்களாகும்.
தஞ்சையில் தற்போது ஆண்டுக்கொரு முறை பாகவத மேளா என்ற பெயரில் நடைபெறும் யக்ஷகான நாடகமரபு
தோன்ற இரகுநாதரே காரணமாக விளங்கினார்.
இசையில்
சிறந்த புலமை பெற்றிருந்த இரகுநாதன் ஜெயந்தசேனா எனும் ராகத்தையும், ராமானந்தா எனும்
தாளத்தையும் கண்டுபிடித்தார். இவர் எழுதிய ஸங்கீத ஸுதா எனும் இசை நூல் கருநாடக இசையின்
கருவூலம் எனப்படுகிறது. நாட்டியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இரகுநாதன் பாரத
ஸுதா எனும் நடன நூலையும் இயற்றியுள்ளார். பழைய வீணையின் மேல் அமைப்பை மாற்றி ‘இரகுநாதேந்திர
வீணை’ எனும் புதுவீணையை உருவாக்கினார். தற்போது தஞ்சை வீணை என்று வழங்கப்படுகிறது இது.
இரகுநாதனின்
அவையில் கோவிந்த தீட்சிதர், அவரது இரு மகன்களான யக்ஞநாராயண கவி, வேங்கடமகி, இரத்னகேது
ஶ்ரீனிவாச தீட்சிதர், அவரது மகன் இராஜசூடாமணி தீட்சிதர், அய்யா தீட்சிதர் எனும் கிருஷ்ணகவி,
அவரது மகன் மிருத்யுஞ்ஜய கவி, வேங்கட கவி, மதுரவாணி, இராமத்ராம்பா முதலான பல தெலுங்கு-சமஸ்கிருதப் புலவர்கள் இருந்தனர்.
இரகுநாத
நாயக்கருக்குப் பிரதானியாக விளங்கிய கோவிந்த தீட்சிதர் சமஸ்கிருதத்தில் அச்சுதப்பன் மற்றும் இரகுநாதனின் வாழ்வை கவிதை நடையில் கூறும் ஸாஹித்ய ஸுதா, இரகுநாதனின் ஸங்கீத
ஸுதாவிற்கு விரிவுரையாக அமைந்த ஸங்கீத ஸுதாநிதி, அத்துவைதத் தத்துவம் குறித்து கௌமாரில
தரிசனம் முதலான நூல்களை எழுதியுள்ளார். தமது ஆசானும் அமைச்சருமான கோவிந்த தீட்சிதர்
மீது பெருமதிப்பு கொண்டிருந்த இரகுநாதன் கோவிந்த தீட்சிதர் பெயரில் நாணயங்கள் வெளியிட்டார்.
கோவிந்த குடி, கோவிந்த புத்தூர் முதலான பெயர்களை ஊர்களுக்கு இட்டார். ‘அய்யன்’ என்று
பிறரால் அழைக்கப்பட்ட கோவிந்த தீட்சிதர் பெயரில் அமைந்த தஞ்சைப் பகுதிகளே அய்யன் கடை,
அய்யன்குளம், அய்யன்பேட்டை என்பன.
கவி
யக்ஞநாராயணன் சமஸ்கிருதத்தில் ஸாஹித்ய ரத்னாகரம், ரகுநாதபூப விஜயம் முதலான காவியங்களையும்,
ரகுநாத விலாஸம் எனும் நாடகத்தையும் இயற்றினார். சதுர்தண்டி பிரகாசிகா, வார்த்திகாபரணா,
சித்ரபந்த ராமாயணம் முதலான நூல்களை வேங்கடமகி எழுதினார்.
இரத்னகேது
ஶ்ரீனிவாச தீட்சிதர் சிதிகண்ட விஜயம் எனும் காவியத்தையும், ஸாஹித்ய ஸஞ்ஜீவினி, பாவோத்பேதம்,
ரஸார்ணவம், அலங்கார கௌஸ்துபம், காவிய தர்ப்பணம், காவ்ய ஸார ஸங்கிரஹம், ஸாஹித்ய சூக்ஷ்ம
ஸரணி, பவன புருஷோத்தமம் முதலான நூல்களையும் எழுதினார். அவரது மகன் இராஜசூடாமணி தீட்சிதர்
தந்திரசிகாமணி எனும் தத்துவ நூலையும், ருக்மிணி கல்யாணம், சங்கராப்யுதயம் எனும் காவியங்களையும்,
ராமகதா, சித்ரமஞ்சரி, ரத்னகேத விஜயம், சிருங்கார ஸர்வஸ்வம் ஆகிய நாடகங்களையும் இயற்றினார்.
கிருஷ்ண கவி ரகுநாத பூபாலியம், நைஷத பாரிஜாதம் எனும் நூல்களையும், மிருத்யுஞ்ஜய கவி பிரத்யும்னோத்தர
சரித்ரம் எனும் நூலையும், கவி மதுரவாணி ஒரு ராமாயண காவிய நூலையும் எழுதினர்.
தெலுங்கில்
வேங்கட கவி விஜய விலாஸமு, ஸாரங்கதாரா சரித்ரமு முதலான நூல்களை எழுதினார்.
தெலுங்கின்
இலக்கிய வரலாறு கி.பி.11-ஆம் நூற்றாண்டிலேயே துவங்குகிறது. தெலுங்கின் முதல் காவியம்
எனப்படுவது நன்னய பாரதம் எனும் தெலுங்கு மகாபாரதம். இக்காவியம் கீழைச் சாளுக்கிய மன்னரான
இராஜராஜ நரேந்திரனது (
ஆட்சி :
கி.பி.1019-1061) அவைப்புலவரான நன்னய பட்டரால் இயற்றப்பட்டது.
இந்த இராஜராஜ நரேந்திரன், சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜனது மகள் குந்தவைக்கும், கீழைச்
சாளுக்கிய மன்னர் விமலாதித்தனுக்கும் பிறந்தவர். இவரது மனைவி அம்மங்கா தேவி முதலாம்
இராஜேந்திர சோழனின் மகளாவார். இராஜராஜ நரேந்திரன் – அம்மங்கா தேவியின் மகனே முதலாம்
குலோத்துங்க சோழன்.
தஞ்சை
நாயக்கர்களின் ஆட்சி மொழியாக இருந்த தெலுங்கு இரகுநாத நாயக்கர் காலத்தில் பெரும் இலக்கிய
மொழியாகச் செழித்தது. தெலுங்கு இலக்கிய வரலாற்றில் இரகுநாத நாயக்கர் தெலுங்கு இலக்கியத்திற்கும்
தெலுங்கு இசைக்கும் ஆற்றிய பணிகள் போற்றப்படுகின்றன.
தெலுங்கும்
சமஸ்கிருதமும் போற்றப்பட்ட தஞ்சை மண்ணில், தமிழ்ப் புலவர்கள் அரசால் ஆதரிக்கப்படவில்லை.
ஆட்சி-அலுவல் மொழியாகவும் தெலுங்கே இருந்தது. அரச ஆதரவுடன் தெலுங்கில் பெரும் காவியங்கள்
இயற்றப்பட்ட காலத்தில், சிறு சிறு தமிழ் நிலவுடைமையாளர்களை நம்பி சிற்றிலக்கியங்கள்
பாடும் நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டது. தமிழிசைவாணர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில்,
தெலுங்குக் கீர்த்தனைகள் செல்வாக்கோடு எழுந்தன. தமிழிசை தெலுங்கு பாடத் துவங்கியது.
5 comments:
அருமையான தொடர். மிக்க நன்றி. நாயக்கர் ஆட்சி பற்ரி படிக்க வேண்டும் என்று நீன்ட நாட்களாக நினைத்திருந்தேன். நிலவுடமை பற்றி கூறி இருந்தீர்கள். நாயக்கர்கள் வரும் முன் யாரிடம் நில உரிமை இருந்தது. உழைத்தது யார் அதிக பயனடைந்தது யார். நாயக்கர்கள் காலத்தி அது எவ்வாறு மாறியது? என்று விரிவான ஆராய்ச்சியோடு எழுதினால் மிக பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தொழிற் புரட்சிக்கு முன் விவசாயம் மற்றும் அரசு அதிகாரம் இரண்டு மட்டும் யாரிடம் இருந்தது என்பது தான் அந்த கால சமூக நிலையை தீர்மானிக்கும். தமிழ் தேசியம் - திராவிடம் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவும். இது போன்ற ஆராய்ச்சிகள் மிகவும் குறைவாக உள்ளது. சில காலம் முன் வந்த குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் விஜய நகர ஆட்சியர் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி ஓரளவு கூறியது.
பாண்டிய சோழ சேர தமிழரசுகள் (மள்ளர் அரசுகள் ) வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் வடுகர் எனும் நாய்க்கர் ஆவார். அவர்கள் நம் மீது படையெடுக்கும்போது அவர்களின் படையோடு சேர்ந்து பாண்டியர்களை வீழ்த்தியவர்களே கள்ளர்-மறவர் ஆவர்.பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப்பின் மிக வலுவாய் இருந்த பாண்டியர்களின் உள்ளாட்சி அமைப்பான குடும்பு முறையை அழித்தொழிப்பதற்கு வடுகர்களுக்கு மிக்க விசுவாசமாய் அடியாள் வேலை seithu பள்ளர்களை ஒடுக்கியவர்களே கள்ளர்-மறவர் ஆவர். அவ்வாறு ஊர்க் குடும்பு முறை அழித்தொழிக்கப்பட்டபின்பு தெலுங்கு வடுகர்கள் தங்களின் ஆட்சி முறையான பாளையப்பட்டை(ஜமீன்) உண்டு seithu நம்மின் நிலங்களை எல்லாம் பிடுங்கிகொண்டனர்(இன்று ஈழத்தில் தமிழரின் நிலங்கள் சிங்களவரால் பறிக்கப்படுவதைப் போல ). அதற்க்கு பேருதவி செய்ததற்காக கள்ளர்-மறவர் ஒரு சில பாளையங்களை கூலியாய் தெலுங்கரிடமிருந்து பெற்றனர். அதற்கடுத்த கால மாற்றத்திலும் பல்வேறு படையெடுப்புகளிலும் எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பேரில் வந்தேறிகளோடு தமிழர் மண்ணை கூறுபோட்டு தங்களை இம்மண்ணில் கள்ளர்-மறவர் நிலை நிறுத்திக் கொண்டனர்.. தங்களுக்கு ஒரு அரணாய் கள்ளர்-மறவர்களை வடுகர்கள் இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.. அவ்வாறான தமிழர் ( பாண்டியர் )-தமிழினப் பகைவரின் அப்போரே இன்று பள்ளருக்கும் கள்ளர்-மறவருக்குமான சாதி மோதல்களாக உருமாற்றம் அடைந்துள்ளது.. இதில் வேதனை என்னவென்றால் உண்மையான எதிரியான தெலுங்கு வடுகர்கள் கள்ளர்-மறவர் அரணுக்கு பின்னே மிக பாதுகாப்பாய் இன்றும் உள்ளனர்..
தமிழர் நாட்டில் எங்குமே 500 வருடங்களுக்கு முற்ப்பட்ட கள்ளர்-மறவர் ஊர்களைக் காணமுடியாது... நாம் போரில் தோற்று 500௦௦ வருடங்களுக்கு மேல் ஆகிறது... ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளர் குடியிருப்புகள் உலகம் முழுவதும் உள்ளன..
உங்களின் நாயக்கர் ஆட்சியில் தமிழகம் இடுகை முழுவதும் படித்தேன். புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். மிகவும் நன்றி. ஆனால், ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த நாயக்க இலக்கியங்களை நீங்கள் கூறவில்லை. நீங்கள் பள்ளு இலக்கியங்களை பற்றி எங்கும் கூறவில்லை. மேலும், நிலவுடைமை பற்றியும் முழுமையாக கூறவில்லை, எவ்வாறு, மேலும் யாரிடமிருந்து நிழங்கள் பிடுங்கப்பட்டன. தமிழகத்தின் மூத்த குடிகளான மள்ளர்கள், குடுபன்களை, எவ்வாறு நாயக்கர்கள் பள்ளன் என்று 400 ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கினர்.இதை பள்ளுவிலும், பள்யேசல் என்ற அவர்களின் நூல்களில் இருந்து காணலாம்.
அடடா. ... மறவர் பாளையங்கள் பாண்டியர் காலத்திலிருந்து உள்ளவை.சிங்கம்பட்டி ஜமீனின் தோற்றம் கி.பி.1100. கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலில் இருக்கும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு " சீவல'மறவன்' குணராமனான குலசேகர தீக்ஷிதர் என்று சொல்கிறது. தென்னவன் மறவன் என்றுதான் பாண்டியன் போற்றப்பட்டான். நெல்லை பகுதியில் "பாண்டியமார்" என்றாலே அது மறவரை மட்டுமே குறிக்கும். பாண்டியர் காலத்திலிருந்து பள்ளர்கள் அடிமையாக கூலிகளாக இருந்த கல்வெட்டுகள் ஏராளம் உண்டு. பாண்டியனின் படையும் மறப்படைதான்.
அடடா. ... மறவர் பாளையங்கள் பாண்டியர் காலத்திலிருந்து உள்ளவை.சிங்கம்பட்டி ஜமீனின் தோற்றம் கி.பி.1100. கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலில் இருக்கும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு " சீவல'மறவன்' குணராமனான குலசேகர தீக்ஷிதர் என்று சொல்கிறது. தென்னவன் மறவன் என்றுதான் பாண்டியன் போற்றப்பட்டான். நெல்லை பகுதியில் "பாண்டியமார்" என்றாலே அது மறவரை மட்டுமே குறிக்கும். பாண்டியர் காலத்திலிருந்து பள்ளர்கள் அடிமையாக கூலிகளாக இருந்த கல்வெட்டுகள் ஏராளம் உண்டு. பாண்டியனின் படையும் மறப்படைதான்.
Post a Comment