- யுவபாரதி
நன்றி: கூடு.தமிழ் ஸ்டுடியோ.காம்.
இந்திரா கோஸ்வாமி |
"என் சொந்த அனுபவங்களிலிருந்தே எழுதுகிறேன்; அவ்வனுபவங்களுக்கு என் கற்பனையால் உருக் கொடுக்கிறேன்; அவ்வளவுதான்" என்றவரும், அசாமியர்களால் தங்களின் அன்புக்குரிய மூத்த சகோதரி (பாய்தேவ்) என்று அழைக்கப்பட்டவருமான, ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி கடந்த நவம்பர் 29 அன்று காலமானார். பெண்கள் மற்றும் விளிம்பு நிலையினர் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களைச் சமரசமற்று எழுத்தில் பதிவுசெய்து வெளிப்படுத்தியதால், பழமைவாதிகளாலும் ஆதிக்கசக்திகளாலும் தொடர்ந்து தூற்றப்பட்டார். மக்களால் நேசிக்கப்பட்டார்.
1942-ஆம் ஆண்டு ஒரு வசதியான அசாமிய வைணவப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இந்திரா கோஸ்வாமி, ஒன்றுபட்ட அசாமின் தலைநகராக இருந்த ஷில்லாங்கின் (தற்போது மேகாலயா மாநிலத்தின் தலைநகர்) பைன் மவுண்ட் பள்ளியில் பள்ளிக்கல்வியும், குவாஹாத்தி காட்டன் கல்லூரியில் அசாமிய இலக்கியத்தில் பட்டமும் பெற்றார். கல்லூரியில் பயின்ற காலத்திலேயே, இவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. ஒரு பாலம் கட்டும் பணிக்காக அசாம் வந்திருந்த, மைசூரைச் சேர்ந்த மாதவன் ராயசம் ஐயங்கார் என்ற பொறியியலாளரை 1962-இல் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவரது பணிநிமித்தம் அவருடன் மத்தியப் பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களுக்குப் பயணமானார் இந்திரா. இம்மாநிலங்களில் அவர் கண்ட அனுபவங்கள் பின்னாளில் அவரது இரு பெரும் நாவல்களில் வெளிப்பட்டன. திருமணமான இரு ஆண்டுகளுக்குள், காஷ்மீரில் நடந்த ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார் மாதவன்.
கணவரின் மரணம் இந்திராவைப் பெருமளவில் பாதித்தது. அசாமிய வைணவப் பிராமணக் குடும்பங்கள் "ஸத்ரா" எனும் மத நிறுவனங்களுக்குக் கட்டுப்பட்டவை. ‘ஏகசரண தர்மம்’ எனும் பெயரில் தீவிர வைணவத்தைப் போதிக்கும் ஸத்ராக்கள் இறுக்கமான சமூகக் கட்டளைகளிட்டு நடைமுறைப் படுத்துபவை. இத்தகைய ஒரு குடும்பச் சூழலில், இளம் விதவையான இந்திரா பெற்ற அனுபவங்கள் அவரைத் தீராத மன அழுத்தத்திற்கு உள்ளாக்கின. தற்கொலை முயற்சிகளுக்குத் தூண்டின. ஒருமுறை, தம் வீட்டிற்கு அருகிலிருந்த கிரினோலின் அருவியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டார். பின்பும் பலமுறை, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இத்தற்கொலை முயற்சிகள் அவரது உடல்நிலையில் - குறிப்பாக நரம்புகளில் - நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தின. தமது மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து, 1988-இல் வெளிவந்த தமது முடிவுறா சுயசரிதை (ஆத லேக்கா தஸ்தாவேஜ்:The Unfinished Autobiography) எனும் நூலில் விவரித்துள்ளார் இந்திரா கோஸ்வாமி.
மன அழுத்தத்திலிருந்து விடுபடும் முகமாக, கோல்பாறா சைனிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த இந்திரா, 'மாமொணி ராய்சொம் கோஸ்வாமி' என்ற புனைப்பெயருடன் எழுத்துக்குத் திரும்பினார். படிப்பையும் தொடர்ந்தார். "நான் வாழ்வதற்காக மட்டுமே எழுதினேன்; எழுதி இருக்காவிடில் நான் வாழ்ந்திருக்கவே முடியாது" என்று தான் தீவிரமாக எழுதவந்தது குறித்துப் பின்னாளில் குறிப்பிட்டார் அவர்.
மத்தியப் பிரதேசத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாக வைத்து துருப்பிடித்த வாள் (மாமொரே தொரா தரேவால்:The Rusted Sword) என்ற நாவலையும், காஷ்மீரில் செனாப் நதி மீது குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டல்களை வெளிப்படுத்தும் 'செனாப் நீரோட்டம்' (செனாபொர் ஸ்ரோத்:The Chenab's Current) என்ற நாவலையும் எழுதினார். 'துருப்பிடித்த வாள்' நாவலுக்காகவே 1983ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார் இந்திரா கோஸ்வாமி.
ஆய்வுப் பணிக்காக உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனுக்குச் சென்ற இந்திரா, அங்கு விதவைகளுக்கான இல்லத்தில் தங்கி, தம் ஆய்வில் ஈடுபட்டார். ‘ராதா ஸ்வாமிகள்’ எனும் பெயரில் இளம்பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் பாலியல் சுரண்டல்களை வெளிப்படுத்துவதான தமது புகழ்பெற்ற 'நீலகண்டி பிரஜா' (Blue Necked Braja) எனும் நாவலை எழுதினார். இயல்பான பாலுணர்வுகளுக்கும் மதக் கட்டளைகளுக்கும் இடையில் துயருறும் இளம் விதவைகளின் அவதியை அதில் வெளிப்படுத்தினார். அந்நாவலின் மூலம், புராணக் கண்ணனோடு இணைத்துப் புகழப்படும் பிருந்தாவனத்தின் காணச் சகிக்காத மற்றொரு முகத்தை உலகுக்குக் காட்டினார். சனாதனிகளின் கடும் எதிர்ப்பையும் சந்தித்தார். அந்நாவலின் செளதாமினி எனும் பிரதானக் கதாபாத்திரம் தன்பிம்பமே என்றும், தன் கணவர் இறந்தபின் தான் சந்தித்த மோசமான அனுபவங்களே செளதாமினி என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் இந்திரா கோஸ்வாமி.
பிருந்தாவனத்தில் அவர் இருந்த காலத்தில் பல்வேறு இராமாயணப் பிரதிகளைப் படிப்பதில் ஈடுபட்டார். பின்னாளில் இந்தி மொழியின் துளசி ராமாயணத்தையும், அசாமிய மொழியின் மாதவ (கந்தளி) ராமாயணத்தையும் ஒப்பிட்டு, இராமாயணம் - கங்கையிலிருந்து பிரம்மபுத்திராவுக்கு (Ramayana : From Ganga to Brahmaputra) எனும் நூலை எழுதினார். இந்நூலுக்காக ஃபுளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் விருதையும் பெற்றார்.
பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தில் அசாமிய மொழி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த இந்திரா கோஸ்வாமி, பின்னாளில் அத்துறையின் தலைவராகவும் ஆனார். அவரது இலக்கிய வாழ்வின் மிகச் சிறந்த காலம் எனப்படுவது தில்லியில் இருந்த காலமே. அவரது இரு பெரும் இலக்கியப் படைப்புகளான 'அந்துப் பூச்சியால் அரிக்கப்பட்ட யானையின் அம்பாரி', 'இரத்தம் தோய்ந்த பக்கங்கள்' ஆகிய நாவல்களை அப்போதே எழுதினார். அந்துப் பூச்சியால் அரிக்கப்பட்ட யானையின் அம்பாரி (தந்தாள் ஹதிர் உனே கோவா ஹெளதா:The Moth eaten Howdah of Tusker) எனும் நாவல் அசாமியப் பிராமணக் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கத்தையும், பெண்கள் படும் துன்பங்களையும், ஸத்ரா கட்டளைகளால் அசாமிய பிராமண விதவைகள் படும் துயரங்களையும் விவரிக்கிறது. இந்நாவலால் அவர் தமது சாதியினரிடமிருந்து பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
இரத்தம் தோய்ந்த பக்கங்கள் (தேஜ் ஆரு துளிரே துஸரித பிருஷ்டா:Pages Stained with Blood) என்ற நாவல் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து, 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. தில்லியில் கலவரம் தீவிரமாக நடைபெற்ற முக்கியப் பகுதிகளில் ஒன்றான சக்திநகரில் குடியிருந்தவர் என்ற வகையில் கலவரத்தை நேரில் கண்ட சாட்சியானார் இந்திரா கோஸ்வாமி. கலவரம் நடைபெற்ற ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதும், தில்லியின் சிவப்பு விளக்குப் பகுதி எனப்படுவதுமான ஜி.பி.ரோட்டின் பாலியல் தொழிலாளர்களையும் நாவலில் முக்கியப் பாத்திரங்களாக்கினார். அக்கலவரத்தின் விளைவு தொடர்பாக, ஒரு நேர்காணலில் 'தத்தம் கணவர்களை ஒரு சேர இழந்து தவித்த பெரும் எண்ணிக்கையிலான இளம் விதவைகளின் கதறலை இதுபோல் எங்கும் காணமுடியாது' என்று குறிப்பிட்டார்.
இந்திரா கோஸ்வாமியின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு
இந்திரா கோஸ்வாமி |
சின்னமஸ்தாவிடமிருந்து வந்தவன் (சின்னமஸ்தார் மனுத்தோ:The Man from Chinnamasta). இது இந்தியாவின் முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றான, அசாமிலுள்ள காமாக்யா கோவிலில் மிருகங்களைப் பலியிடும் ஆயிரம் ஆண்டுப் பழக்கத்தை விமரிசிக்கிறது. இந்நாவல் ஒரு பிரபல அசாமிய இதழில் தொடராக வெளிவந்த போது, அவ்விதழின் ஆசிரியரும், இந்திரா கோஸ்வாமியும் தாந்திரீகர்களால் மிரட்டப்பட்டனர். "ஒரு தாய்க் கடவுளை இரத்தத்துக்குப் பதிலாக, மலர்களால் வழிபடுங்கள் என்பதுதான் நான் சொல்ல வந்தது " என்று இது குறித்துக் குறிப்பிட்டார் இந்திரா.
சாகித்திய அகாதமி விருது மட்டுமின்றி, பாரத் நிர்மாண் விருது (1989), கதா தேசிய விருது (1993), ஞானபீட விருது (2000), நெதர்லாந்து நாட்டின் பிரின்ஸ் கிளாஸ் விருது (2008) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் இந்திரா கோஸ்வாமி. மேற்கு வங்கத்திலுள்ள இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், அருணாசலப் பிரதேசத்திலுள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைப்பழகம் ஆகியவை அவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. சதையும் வலியும் (Pain and Flesh) என்ற ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். இவரது வாழ்வு ஜானு பரூவா எனும் இயக்குநரால் மூடுபனியிலிருந்து வரும் சொற்கள் (Words from the Mist) என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1947 முதல் அசாமில் தனிநாடு கேட்டு இயங்கிவரும் அமைப்புகளுக்கும், நடுவண் அரசுக்கும் இடையிலான பிரச்சினைகளால் அமைதி இழந்திருக்கும் அசாமியர்களைக் கண்டு மிகவும் வருந்திய இந்திரா கோஸ்வாமி, இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுச் சிக்கல் தீர்க்கப்படவேண்டும் என்பதில் பெரிதும் கவனம் கொண்டார். 2002-ஆம் ஆண்டில் இச்சிக்கலைச் சுமுகமாகத் தீர்ப்பதில் அரசு அக்கறையற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி தமக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் புறக்கணித்தார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இப்பிரச்சினையில் அரசு தரப்புக்கும் அசோம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் (ULFA) இடையே ஒரு இணக்கத் தூதராய்ச் செயல்பட்டுவந்தார். இவரது முன்முயற்சியின் காரணமாகவே, இரு தரப்பும் கலந்து பேசும் விதமாக மக்கள் ஆலோசனைக் குழு (People's Consultative Group) உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாகவே குவாஹாத்தி மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இந்திரா கோஸ்வாமியின் உடல்நலம் குறித்து, அவர்தம் உறவினர், நண்பர்கள் மட்டுமல்லாது, பலதரப்பட்ட அசாமிய மக்களும் அவ்வப்போது நேரில் வந்து விசாரித்து வந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று காலை அவர் காலமான செய்தி தெரியவந்த போது, "மாமொணி பாய்தேவ் எழுதிய கதைகளை வாசித்தறியாத அசாமியர்களும் கூட, அவரது வாழ்க்கைக் கதையை அறிந்திருப்பர், ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் வாய்மொழிக் கதை போல " என்று ஒருவர் கூறியது பொய்யில்லை.
No comments:
Post a Comment