March 25, 2012

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-9)

அல்லூரி இரகுநாத நாயக்கர் (கி.பி.1600–1634)

தஞ்சை நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவர் இரகுநாத நாயக்கர். கி.பி.1600 முதல் அரசை வழிநடத்திய இவர், 1614-ல் தந்தை அச்சுதப்பரின் மறைவுக்குப் பின் தஞ்சை மன்னரானார். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் புலமையும் போர்க்கலையிலும் இசைக்கலையிலும் வல்லமையும் பெற்றிருந்தார் இரகுநாதன். இவரைக் கிருஷ்ண தேவராயருடன் இணைவைத்துக் கூறுவர் தெலுங்கு இலக்கிய ஆய்வாளர்கள். இவரது மனைவிகளில் ஒருவரான இராமபத்ராம்பா கல்வியறிவும் கவித்திறமும் பெற்றவர். இரகுநாதனின் காலத்திலும் கோவிந்த தீட்சிதரே பிரதானியாக இருந்தார்.

இரகுநாதரின் போர்கள்

அ) கோல்கொண்டாப் படையை, வேங்கடபதிராயரின் சார்பில் எதிர்த்துப் போரிட்டு வென்றார் அச்சுதராயரின் மகன் இரகுநாதன் என்று ஏற்கனவே கண்டோம். அப்போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வருகையில், விஜயநகர ராயர்களுக்கு எதிராகக் கலகம் செய்து செஞ்சிப் போரில் சிறைப்பட்டிருந்த செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரை ராயரின் இசைவு பெற்று விடுவித்தார் இரகுநாதன். இதனால் மகிழ்ந்த செஞ்சி கிருஷ்ணப்பன் தனது மகளை இரகுநாதனுக்கு மணமுடித்து வைத்தார் என்கிறது விஜயராகவனின் “ரகுநாதாப்யுதயமு”. 

ஆ) ஆட்சிக் கட்டில் ஏறியது முதலே பல போர்களைச் சந்தித்தார் இரகுநாத நாயக்கர். செஞ்சி கிருஷ்ணப்பரின் திறை அரசர்களாக இருந்து கொள்ளிடத்திற்கு வடக்கே தேவிக்கோட்டையிலிருந்து ஆண்டு வந்த சோழகர்கள் தஞ்சை நாயக்கர்களுக்கு எதிராகச் செயல்பட்டதை அடுத்து கொள்ளிடம் கடந்து சோழகர்களுடன் போரிட்டு வென்றார் இரகுநாதன். சோழகர்களுக்கு உதவி செய்த செஞ்சி நாயக்கர் போர்க்களம் விட்டோடினார். சோழகர்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியப் படைகளைத் தொடர்ந்து, அவை நிலைகொண்டிருந்த வடஇலங்கை நோக்கி கடற்பயணம் செய்த இரகுநாத நாயக்கர், இலங்கையில் அவற்றைத் தோற்கடித்து, பரராஜ பயங்கரன் என்பவரை யாழ்ப்பாண அரியணையில் அமர்த்திவிட்டுத் தஞ்சை திரும்பினார். இப்போர் குறித்த செய்திகள் யக்ஞ நாராயணனின் “ஸாஹித்ய ரத்னாகர”த்தில் (சமஸ்கிருதம்) தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்போர்கள் 1614-15ல் நிகழ்ந்திருக்கும் எனத் தெரிகிறது.

இ) விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதிராயரின் மறைவுக்குப் பின் (1614) விஜயநகர அரியணைக்கான போட்டி துவங்கியது. வேங்கடபதிக்கு ஆண்வாரிசு இல்லாமல் போனதால், மரணப் படுக்கையில் தனது அண்ணன் மகன் இரண்டாம் ஶ்ரீரங்கன் எனும் சிக்கதேவனைத் தன் வாரிசாக அறிவித்தார் வேங்கடபதி. வேங்கடபதியின் இளைய ராணி ஒபயம்மாவின் சகோதரன் கொப்பூரி ஜக்கராயன் என்பவர் ஒபயம்மாவின் வளர்ப்புப் பிள்ளையை வேங்கடபதியின் வாரிசு என்று கூறி, ஆட்சி உரிமை கோரினார். தனது முயற்சிக்குத் தடையாக இருந்த சிக்கதேவனைக் கொன்றதோடு, அவரது குடும்பத்தையும் வேலூர்ச் சிறையில் அடைத்தார். அப்போது, விஜயநகரப் பேரரசின் தலைநகராக இராயவேலூர் இருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. எனினும், சிக்கதேவனின் இரண்டாம் மகன் இராமதேவன் துணி வெளுப்பவர் ஒருவரது உதவியால் சிறையிலிருந்து தப்பி, காளஹஸ்தி வேங்கடகிரி அரசகுலத்தைச் சேர்ந்த வேலுகோடி யாசமநாயுடுவிடக் அடைக்கலமானார்.

இராமதேவராயருக்கு அரசுரிமை மீட்க வேண்டி, ஜக்கராயனுடன் போரிட்டார் யாசமநாயுடு. செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும், மதுரை முத்து வீரப்ப நாயக்கரும், திருவிதாங்கூர் அரசரும், திருநெல்வெலிப் பாண்டியர்களும், போர்ச்சுகீசியரும் ஜக்கராயனுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டனர். ஜக்கராயனின் படையும் அவரது ஆதரவப் படைகளும் மதுரை நாயக்கரின் அப்போதைய தலைநகரான திருச்சிராப்பள்ளிக்கு அருகே குழுமின.

முறையான உரிமையாளரான இராமதேவனுக்கு அரசுரிமை கிடைக்கும் பொருட்டு யாசமநாயுடுவுக்கு ஆதரவாகப் போரிட்டார் இரகுநாதன். யாழ்ப்பாணப் படையும், டச்சுப் படைகளும் இரகுநாத நாயக்கருக்கு ஆதரவளித்தன. யாசமநாயுடுவின் படையும் இரகுநாதனின் படையும் ஆதரவுப் படைகளும் தஞ்சைக்கு அருகே பழமனேரியில் குழுமின.

இவ்விரு படைகளும் கல்லணைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியின் தென்கரையில் தோப்பூர் எனும் இடையில் சந்தித்தன. இப்போது அவ்வூர் தோகூர் எனப்படுகிறது.

எதிரிகளின் படையணிகளிலும் மதுரைப் படைகளே முன்னின்று போரிட்டன. கொப்பூரி ஜக்கராயன் போர்க்களத்திலேயே வெட்டுண்டு வீழ்ந்தார். ஜக்கராயனது தம்பி யத்திராஜ் நாயுடுவும், செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும் தோற்றோடினர். ஜக்கராயனது தளபதியும் மதுரை முத்து வீரப்ப நாயக்கரும் சிறைப்பட்டனர். எனினும் இருவரையும் விடுதலை செய்தார் இரகுநாத நாயக்கர். நன்றிக் கடனாகத் தன் மகளை இரகுநாதனுக்கு மணம் செய்வித்தார் மதுரை நாயக்கர். இப் போர்வெற்றியைக் குறிக்கும் விதமாக அவ்விடத்தில் இரகுநாதன் வெற்றித் தூண் ஒன்றினை நாட்டினார்.

தோப்பூர்ப் போர் வெற்றியைத் தொடர்ந்து, இராமதேவனைக் கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த சக்கரபாணி கோவிலில் வைத்து அவரை விஜயநகரராயரென (கருநாடகச் சக்கரவர்த்தி) என 1617-ல் அறிவித்தார் இரகுநாதன். அப்பொழுது இராமதேவராயருக்கு வயது 15.

ஈ) தோப்பூர்ப் போரை அடுத்து செஞ்சிக்கு எதிராகப் படை நடத்தினார் இரகுநாத நாயக்கர். இப்போரில் செங்சிக் கோட்டையைத் தவிர்த்து புவனகிரி உள்ளிட்ட பிற அனைத்து முக்கியக் கோட்டைகளையும் இழந்தார் செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர். எனினும் விஜயநகர அரசரிமைக்குத் தொடர்ந்து முயன்ற ஜக்கராயனின் தம்பி யத்திராஜ் நாயுடுவுடன் சேர்ந்து, சிதம்பரத்திற்கு வடமேற்கே வெள்ளாற்றங்கரையில் உள்ள பாளையங்கோட்டையில் 1917-ல் இரகுநாத நாயக்கருடனும், யாசம நாயுடுவுடனும் மோதினார் செஞ்சி கிருஷ்ணப்பன். எனினும் இப்போரில் தோற்றுச் சிறைப்பட்டார். இரகுநாதனின் பரிந்துரையால் பின் விடுதலையும் பெற்றார். இரகுநாதர் இறுதியாகப் பங்கேற்ற போர் இதுவே எனப்படுகிறது.

தஞ்சை கிழக்கு வாயில் பீரங்கி
குதிரையேற்றத்திலும் வாள்வீச்சிலும் துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றிருந்த இரகுநாத நாயக்கர் நிறுவிய இரும்பிலான பீரங்கியை தஞ்சை நகரின் கிழக்கு வாயிலில் இன்றும் காணலாம்.

- யுவபாரதி

(அடுத்தது)

No comments: