Showing posts with label குறிப்புகள். Show all posts
Showing posts with label குறிப்புகள். Show all posts

September 16, 2015

புதைந்த பாதை : ஒரு குறிப்பு

நெல்லைக்கு அருகிலுள்ள திருப்பணி கரிசல்குளம் எனும் கிராமத்தில் வாழும் தலித்துகளின் கடந்த கால நினைவுகள், கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய காலம் வரை நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள், கொழும்பு மும்பை முதலான ஊர்களில் வேலை பார்த்து அதைக் கொண்டு கிராமத்தில் விளை நிலங்களை வாங்கியதோடு கல்விக் கூடங்களையும் நிறுவியது, அவ்விளை நிலங்களுக்கு மறவர்கள் கோனார்கள் முதலான உள்ளூர் ஆதிக்க சாதியினரால் ஏற்பட்ட பொருளிழப்பு, மனக்குமுறல், சட்டப் பூர்வமாக எதிர்த்து நின்ற மந்திரமூர்த்தி கொலை, திமுகவின் ஆதரவாளர்களாகவும் அதற்கு உழைத்தவர்களாகவும் தலித்துகள் இருக்க, அதன் ஆட்சியதிகாரம் மறவர் முதலான சாதியினரின் தலித்துகள் மீதான அதிகாரத்திற்கே சாதகமாகி விட்ட துயரம் என நீள்கிறது 'புதைந்த பாதை' எனும் ஜெ.பாலசுப்பிரமணியத்தின் நூல். 

ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறைகளின் குடிமரபை வாழ்வியல் மாற்றங்களை சுருக்கமாக விவரிக்கிறது 32 பக்கங்களே உள்ள இந்த சிறு நூல்.

February 13, 2015

முருக வழிபாடு - ஓர் உரையாடல்

https://www.facebook.com/ilango.krishnan.1/posts/850972431615102என்ற பதிவில் இளங்கோ கிருஷ்ணன் 'முருக வழிபாடு தமிழ் மதமா?' என்று தொடங்கிய உரையாடலில் பங்கேற்க முயல்கையில் என் பின்னூட்டம் நீளமாகும் எனத் தோன்றியது. எனவே தனியே பதிவிடுகிறேன்.)

1. அண்ணாதுரை சொன்னதாக இளங்கோ கிருஷ்ணன் சொல்லியிருப்பதை நான் இதற்கு முன் படித்ததில்லை. அப்படிக் கருத வாய்ப்பில்லை என்றும் சொல்லமுடியாது. அண்ணாவை முன்வைத்து தன்படங்களில் பாடும்-பேசும் எம்ஜிஆரின் பல்லாண்டு வாழ்க, நம் நாடு முதலிய பிரபல படங்களில் கையில் வேல் தாங்கிய முருகன் படம் இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறேன். ஒன்றே குலமென்று பாடுவோம்... என்ற பாடலைக் கவனித்தால் இந்த சொல்லாடல் முக்கியத்துவம் பெற்ற காரணம் தெரிகிறது.

2. குறிஞ்சி நில முருகன், பாலை நிலக் கொற்றவைச் சிறுவன். முல்லை நில மாயோன், பாலை நிலக் கொற்றவை சோதரன். குறிஞ்சி-முல்லை-பாலைக்குள்ள தொடர்பை நாமறிவோம். நிலவுடைமை வலுப்பெற்று பிற திணை வாழ்வுகளை மருத நில வாழ்வியல் உள்ளிழுக்கும் நிகழ்வும், சுடலையாண்டி கல்யாண சுந்தரனாகி உமாமகேசுவரனாகவும், சோமாஸ்கந்தனாகவும் ஆகி நிலைபெறும் நிகழ்வும், பேரரசு உருவாக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சிலப்பதிகார வேட்டுவ வரியிலேயே கலைமானின் மீதேற்றி வழிபடும் இளம்பெண் வழிபாட்டிற்கிடையிலேயும் கொற்றவையை சிவன் மனைவியாகவும், மாயன் சோதரியாகவும் போற்றும் மரபு தொடங்கிவிடுகிறது.

3. பற்பல திணை வாழ்வுகள் கலந்து மையப் பெருஞ் சமூக உருவாக்கம் நிகழ்கையில் அந்தந்த திணைமரபினர் உள்ளிழுக்கம் என்பது அந்தந்த தெய்வங்கள் அதற்கென ஒரு மதிப்புற்குடைய இடம் என்பதும் சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது. திணைக் கடவுள்கள் பெருங்கடவுள்களுள் ஒருவராகின்றனர். ஆயினும் அவர்களுக்குரிய தனிப்பட்ட வழிபாடு-படையல்களில் பழம்பண்பு தெரிகிறதுதான். குறிப்பாக இன்றும் முருகனுக்குத் தேனும் திணைமாவும் முக்கியம்தான்.

4. கொற்றவை ஒரு சோதரனுக்கு சோதரியாகவும் (அதுவும் தங்கை) ஒரு கணவனுக்கு மனைவியாகவும் ஒரு மகனுக்குத் தாயாகவும் ஆக்கப்பட்டு மையப் பெருஞ் சமூக உருவாக்கத்திற்குள் உள்ளிழுக்கப்படுவதும், பெண் தலைமை மறைந்து ஓர் ஆண் மையமாகவே சோதரன்-கணவன்-மகன் என ஏதோவொரு வகையில் ஆணோடு சேர்த்தே அடையாளம் காணப்படும் நிலையும், திணைச் சமூகம் - பெருஞ்சமூகம், அடையாள நிலம் - உடைமை நிலம் இம்மாற்றங்களோடு பெருந் தொடர்புடையது.

5. இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிடுவது போல், 'இன்றிருக்கும் முருகன் கோவில்கள் - உரையாடல்கள் எல்லாம் அதிக பட்சம் ஒரு நானூறு வருட வரலாறு உடையவை' என்பது ஏற்புடையதல்ல. பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையிலேயே அறுபடைவீடுகள் - அங்கு கோயில் கொண்டுள்ள முருகன்கள் உண்டு. ஆகவே அறுபடை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை ஆயிரம் வருட வரலாறு உண்டு. முருகன் போர்த் தெய்வம். படைவீடு என்பதற்கு போர் நிமித்தம் தற்காலிகமாகப் படைதங்கும் இடம் எனத் தனித்துச் சொல்லவேண்டியதில்லை. இன்றிருக்கும் பல கோயில்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பே பேர் பெற்றவை என்பதற்கு அருணகிரிநாதரின் திருப்புகழே சாட்சி.

6. சைவத்தால் எவ்வளவு உள்ளிழுக்கப்பட்டாலும் முருக வழிபாடும் சரி, சக்தி வழிபாடும் சரி, தனித்தும் வலுவாக இயங்கின என்பதால்தான் ஆறுமதங்களில் சைவம் மட்டுமின்றி, கௌமாரமும் சாக்தமும் தனித்துக் கூறப்படுகின்றன. (வைணவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும், சைவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும் உள்ள பெரும் வேறுபாடு குறித்து நிறைய பேசலாம். முருக வழிபாடு குறித்த இக்குறிப்பில் வேண்டியதில்லை).

7. தமிழைத் தாய்மொழி-ஆட்சிமொழி-இலக்கியமொழியாகக் கொண்ட சோழ - பாண்டியப் பேரரசுகள் அடுத்தடுத்த இரு நூற்றாண்டுகளில் வலுவிழந்து வீழ்ந்து, தெலுங்கைத் தாய்மொழி - ஆட்சி மொழி -இலக்கிய மொழியாகக் கொண்ட விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்றதற்கும், அந்த 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின், முருக வழிபாடு தமிழ் - தமிழ்க்கடவுள் என்ற அடையாளத்தோடு படிப்படியாக வேகம் கொண்டு எழுந்ததற்கும், ஆள்வோர் - ஆளப்படுவோர் என்ற முரணின் ஒரு குறியீடாக முருகன் இருந்திருக்கிறான் என்பதற்கும் வரலாறு - மொழி - அடையாள ரீதியாக நெருங்கிய தொடர்புண்டு. முருகன் தமிழ்ப் பெருங் கடவுளானான்.

8. மேலும், விஜயநகரப் பேரரசு, அதன் கிளைகளான நாயக்க மன்னர்கள் சைவம் - வைணவம் இரண்டையும் ஆதரித்தனர் என்றாலும் வைணவமே அவர்கள் சார்ந்த சமயம். திருமாலானவன் பெருமாள் எனும் பெரியவனாயும் கண்ணன் எனும் சிறுவனாகவும் இருப்பவன். சைவர்களின் சிவன் பெரியவன் மட்டுமே என்பதால் கண்ணனுக்கு இணையாக சிறுவனாகவுமுள்ள முருகனைச் சைவர்களும் அறுமுகச் சிவன் என்றனர். ஆட்சியிழந்த சைவம் தம் தரப்பில் அதிக நூல்களை எழுதியதும் அக்காலத்தில்தான். முருகன் குமரனாக மட்டுமின்றி சைவப் பெருங் கடவுளாகவும் நிலைபெற்றான்.
9. எல்லாப் பெருங்கடவுளருக்கும் தமிழில் போற்றிப் பனுவல்கள் உண்டு. ஆனால் மற்றவர்களை ஒப்பிடுகையில் மந்திரப் பனுவல்கள் தமிழில் முருகனுக்கே அதிகம். சித்தர் பாடல்களின் பேசு பொருள் சார்ந்து பரிச்சயமும், ஈடுபாடும் கொண்டவர்கள் முருகன் – தமிழ் தொடர்பை இன்னும் நெருக்கமாக உணர்வர்.

'என்னை அறிந்தால்' - குறிப்புகள்

'என்னை அறிந்தால்' திரைப்படம் நேற்று பார்த்தேன்.

வழக்கமான நாயக மையப்படம்தான் எனினும்,

1. ஹேமானிகா கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. அதை ஏற்றிருக்கும் திரிஷா சிறப்பாகவே செய்திருக்கிறார். நடிகர்-நடிகைகளைத் தேர்வு செய்தபிறகே கதையும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் உருப்பெருக்கப்படும் காலம்தான் என்பதனாலும் இருக்கும்.

2. கேள்விக்குட்படாத நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்நாயகன் மீது ஐயம் கொள்ளாத தன் நம்பிக்கைப்பிசகை எண்ணி வருந்துபவனும், தன் கணிப்பின் தோல்வியை ஏற்றுக்கொள்பவனும், குத்துவசனம் பேசாதவனுமான நாயகனாக சத்யதேவ் அஜித் நன்றாகச் செய்திருக்கிறார்.

3. நாயகன் சத்யதேவுக்கு சற்றேறக்குறைய எதிர்நாயகன் விக்டருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. நாயகன் அஜித்துக்கு எதிரான எதிர்நாயகன் கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் அருண்விஜய் என்பதாலும் இருக்கும்.

4. தேன்மொழி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நாயகிகள் இருவரில் ஒருவரேனும் முட்டாள் காதலியாக இருந்தால்தான் திரைவணிகத்திற்கு ஏற்புடையது என்பதனாலிருக்கும். எனினும் இதற்கு அனுஷ்கா போன்றவர் தேவையில்லை.

5. ராபர்ட் என்ற கதாபாத்திரத்தில் நாயகனுக்குத் தேவையற்ற ஒரு துணைப்பாத்திரத்தில் விவேக் நடித்திருப்பினும் வழக்கமான அவரது எரிச்சலூட்டும் நகைச்சுவைகள் ஏதுமில்லை என்பது ஆறுதல்.

6. பேபி இஷா கதாபாத்திரம் ஏற்றிருக்கும் குழந்தை நன்றாகவே நடித்திருக்கிறாள்.

April 15, 2014

மகாபாரதத்திலிருந்து...

(வனபருவம்)

1

கோபமும் மேலானதன்று; பொறுமையும் மேலானதன்று. 

எப்போதும் கோபமுள்ளவனை நண்பர்களும் பகைவர்களும் பொதுவானவர்களும் மட்டுமின்றி, வேலைக்காரர்களும் வெறுக்கிறார்கள். அவனுக்கு ஒரு பட்சம் அஞ்சியபடி, மறுபட்சம் கேடு நினைக்கிறார்கள்.

அதே சமயம், எப்போதும் பொறுமையுள்ளவனை நண்பர்களும் பகைவர்களும் பொதுவானவர்களும் மட்டுமின்றி, வேலைக்காரர்களும் அவமதிக்கிறார்கள். அவன் பொருட்களை அச்சமின்றி எடுத்துக் கொள்கிறார்கள். அவனை அவமதித்து அவனது மனைவியையும் விரும்புகிறார்கள். அவனது மனைவியும் அவனை அவமதிக்கிறாள்.

ஆகவே, அவ்வக்காலத்திற்கேற்ப பொறுமையுள்ளவனாகவோ கோபமுள்ளவனாகவோ ஒருவன் இருக்கவேண்டும்.

- பிரகலாதன் தன்பேரன் மகாபலியிடம் சொன்னதாக, திரௌபதி தருமபுத்திரனிடம் சொன்னது. 


2


பாண்டவர்களின் வனவாசக் காலத்திலும் அவர்களைச் சில பிரஜைகள் அண்டியிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாகத் தன் உருமறைத்து வாழ்ந்திருந்தான் ஜடாசுரன். பீமார்ஜுனர்கள் இல்லாத சமயம் பார்த்து, பாண்டவர்தம் ஆயுதங்களைக் கவர்ந்து கொண்டதுடன், திரௌபதியையும் தரும நகுல சகதேவர்களையும் கட்டித் தூக்கிக்கொண்டு விரைந்தான்.

'ஒருவன் மித்திரர்களிடத்தும் நம்பினவர்களிடத்தும் அன்னமிட்டவர்களிடத்தும் வசிக்க இடம் கொடுத்தவர்களிடத்தும்ஒருபொழுதும் துரோகம் செய்யலாகாது' என்று அங்கம் கட்டுண்ட நிலையிலும் சொன்னான் தருமபுத்திரன். ஜடாசுரன் அதைச் செவி மடுக்காமல் நகரமுயலவும் தருமபுத்திரனின் பாரம் கூடிற்று. ஜடாசுரன் தடுமாறிய நிலையில், சகதேவன் கட்டுவிடுபட்டுத் தப்பி எதிர்நின்றான்.

அதற்குள் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருந்த பீமனும் வந்துவிட்டான். 'காலமென்ற நூலுடன் தொங்கவிடப்பட்ட தூண்டிலானது உன்னால் விழுங்கப்பட்டது. வாய் கோக்கப்பட்ட மீன் எப்படி விடுபட்டுச் செல்லும்?' என்றபடி ஜடாசுரனை வீழ்த்தி, சகோதரர்களையும் திரௌபதியையும் விடுவித்தான் பீமசேனன்.

February 15, 2014

அறுந்த செருப்பு

செருப்புக்கு உயிருண்டா. பல்லாண்டு காலணிந்தார் அறியார். தானாய் எங்கும் செல்வதை மறந்த உயிர்தான் செருப்பாகும். தன்னை அணிந்தவரை மட்டும்தான் அதற்குத் தெரியும். அணிந்தவருக்காய்த் தேயும் தேயும். அறுந்தாலும் இன்னும் அணிந்து தேய தேம்பும். 

ஆனால், செருப்பு அறுந்ததுமே அணிந்தவருக்குத் தெரிந்திருக்கும் இனி பயணத்திற்கு உதவாதென. அறுந்தது வீட்டிலெனில் வீட்டு மூலையிலோ தெருவிலெனில் தெருவோரத்லோதான் கிடக்கவேண்டும் செருப்பு. 

பயணித்தேன் தேய்ந்தேன் அறுந்தேன் கிடக்கிறேன் என காலடிக்கு ஊர்ந்து வந்து கதறினாலும் அணிந்தவர் காதிலோ கவனத்திலோ புகும் வலுவற்றது அதன் குரல். சற்றே சன்னமாகக் கேட்டாலும் கதவோரம் எத்தி எறியவும் முடியும். பயணத்திற்கென அணிந்ததெல்லாம் பயணித்ததாகுமா. 

அணிந்தவர் மனிதரெனில் அவருக்குக் கேட்பதென்பது சக மனிதரின் குரலும் துயரமும் மகிழ்வும்தான். பிணக்கமும் இணக்கமும் கூட சகமனிதருக்குள்தான். தானும் மனிதனாயிருந்த நினைவெழப் புலம்பினாலும் வெகுகாலம் செருப்பு செருப்புதான். 

அதுவும் இப்போது அணிய உதவாத அறுந்த செருப்பு.

- யுவபாரதி

February 13, 2014

தமிழுக்கு அழிவில்லை

தமிழுக்கு அழிவில்லை. இன்று தமிழர்களை நம்பி மட்டும் தமிழ் இல்லை. தமிழை வைத்துத்தான் தமிழர்கள் அடையாளம் பெற்று வருகிறார்கள். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் என இலக்கணம் பெற்று, எவ்வெவற்றை எப்படி தன்வயப்படுத்தவேண்டும் என்று வகைமுறை வகுக்கப்பெற்றது தமிழ். பேரிலக்கியங்கள் கண்டு திளைத்த மொழி. 

பதினாலாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தன்னைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும் ஆட்சியாளர்கள் காலத்திலும் - திசை மொழிகள் பேரிலக்கியங்கள் கண்ட அக்காலத்திலும் -அக்காலத்திற்கேற்ப சிற்றிலக்கியங்கள் வழி தன்னைத் தொடர்ந்து இலக்கிய மொழியாகவும் தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறது தமிழ்.

இன்றைய காலத்திற்கேற்ப இணையத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வெக்காலத்திலும் அவ்வக்காலத்திற்கேற்ப பிறமொழிச் சொற்களையும் வெறுப்பற்று உள்வாங்கி, தன்வயப்படுத்தி தொடர்ந்து பேச்சு மொழியாகவும் இருந்து வந்திருக்கிறது; இருக்கிறது.

ஒரு பக்கம் தன்பேரைச் சொல்லித் தன்மைய அரசியல் செய்யவும், மறுபக்கம் தன்பேரை எதிர்த்துத் தன்மறப்பு அரசியல் செய்யவும், இன்னொரு பக்கம் திட்டமிட்டோ/திட்டமிடாமலோ தன்பேரைச் சொல்லியோ/சொல்லாமலோ ஒரு அரசியல் செய்யவும், வேறொரு பக்கம் தான் வெறும் தொடர்பு சாதனம்தான் என்று சொல்லி வேறொரு அரசியல் செய்யவும் தொடர்ந்து இடம்தந்து இன்றும் வாழ்கிறது.

தமிழர்களுக்குத் தமிழைத் தெரியாவிடினும், தமிழுக்குத் தமிழர்களைத் தெரியாதா என்ன? தமிழ் தமிழ்தான்.


- யுவபாரதி

சாசனச் செய்யுள் மஞ்சரி

சாசனம் என்றால் செப்புப் பட்டயம் என்றே பெரிதும் இன்று பொருள்கொள்ளப்படுகிறது. 1950களுக்கு முன் எழுதப்பட்ட நூல்களைக் காண்கையில் கல்வெட்டு, செப்புப் பட்டயம் இரண்டிற்குமே சாசனம் என்றே பெயர் வழங்கியிருக்கிறது. பிரித்துணர வேண்டின், சிலா சாசனம் எனில் கல்வெட்டு; தாமிர சாசனம் எனில் செப்புப் பட்டயம்.

கல்வெட்டுகளில் இதை இன்னார் இதன் பொருட்டுச் செய்தார், இவர் பெருமை இத்தகைத்து என வெட்டப்பட்ட செய்திகளாகவும், செய்திகளுக்கு இடையிலும் காணப்பட்ட செய்யுள்களைச் "சாசனச் செய்யுள் மஞ்சரி" என்ற பெயரில் தொகுத்துள்ளார் மயிலை சீனி வேங்கடசாமி. 

கல்வெட்டுச் செய்திகளை வாசிப்பது, அதிலுள்ள இடர்பாடுகள், செய்யுள்களைப் பிரித்தறிந்து இனங்காணல் என்பது குறித்த நல்ல முன்னுரையோடு கூடிய நூல். கல்வெட்டுச் செய்யுளின் காலம், பாடப்படுபவர் எவர், செய்தி என்ன, செய்யுள் விளக்கம், தென்னிந்தியச் சாசனங்கள் தொகுதியில் அதன் இடம் என்பது முதலான பல குறிப்புகளோடு கூடிய அற்புதமான தொகுப்பு இது. வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. இராயப்பேட்டையிலுள்ள இராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பல வரலாற்று நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதே போல கல்வெட்டுகளில் காணப்படும் செய்யுள்களை "பெருந்தொகை" என்ற பெயரில் மு.இராகவையங்காரும் தொகுத்து வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இன்னும் பார்க்கவில்லை.


- யுவபாரதி

June 12, 2013

நகராட்சி வாகனங்கள் - பள்ளி வாகனங்கள் : ஓர் ஒப்பீடு

1) நகராட்சி வாகனங்களில் கதவுகள் பின்பக்கம் உள்ளன. பள்ளி வாகனங்களில் கதவுகள் பக்கவாட்டில் உள்ளன.

2) நகராட்சி வாகனங்களைக் கண்டதும் நாய்கள் ஓடிப் பதுங்குகின்றன. பள்ளி வாகனங்களைக் கண்டதும் பிள்ளைகள் ஓடிப் பதுங்குகின்றன.

3) நாய் பிடிப்பதற்காக நகராட்சி வாகனங்களை தெருவாசிகள் போராடி அழைத்து வரவேண்டியிருக்கிறது. பிள்ளை பிடிப்பதற்காக பள்ளி வாகனங்கள் அவையாகவே தெருத் தெருவாக வருகின்றன.

4) நகராட்சி வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களே நாய்களைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. பள்ளி வாகனங்களைப் பொருத்தவரை பெற்றோரே பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்துவிடுகின்றனர்.

5) நகராட்சி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. பள்ளி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த பிள்ளைகளையே பிடித்துச் செல்கின்றன.

6) நகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்ட நாய்களில் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வள் வள்என்று கத்திக் கொண்டே இருக்கின்றன சில. பள்ளி வாகனங்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகளிலும் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வீல் வீல்என்று கதறிக் கொண்டே இருக்கின்றன சில.

7) நகராட்சி வாகனங்கள் நாய்களை அவை வாழும் பகுதியிலிருந்து ஒரே நாளில் அன்னியப்படுத்துகின்றன. பள்ளி வாகனங்கள் பிள்ளைகளை அவை வாழும் பகுதியிலிருந்து வருடக்கணக்கில் படிப்படியாக அன்னியப்படுத்துகின்றன.

- யுவபாரதி

February 02, 2012

ஓரெழுத்தால் பொருள் திரிந்த பழமொழிகள்


1.கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
2.அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாயில்ல இருக்கு?

என்ற கேள்வி வடிவிலான இரு பழமொழிகளும் நாம் அடிக்கடி கேட்பதுதான். வெறும் கிண்டல் என்பதாய்தான் பெரும்பாலோர் நினைப்பர். ஆனால், உண்மை வடிவில் சொல்லிச் சொல்லி, பேச்சு வழக்கில் ஓர் எழுத்துத் திரிந்து, சொல் திரிந்து, நாளடைவில் பொருளே திரிந்து போன பழமொழிகள் இவை.

இவற்றின் உண்மை வடிவங்கள் :

1.கழுதுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
2.அரசை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாயில்ல இருக்கு?

என்பவையே.

கழுது என்றால் பேய். சான்றாக, 
(அ) பேயும் வண்டும் பரணும் கழுதே என்பது பிங்கல நிகண்டு (பா.3323). 
(ஆ) முத்தைத் தரு பத்தித் திருநகை எனத் தொடங்கும் புகழ்பெற்ற திருப்புகழ்ப் பாடலில் வரும் ஒரு வரி திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாட என்பது.

பேய்-பிசாசுகள் கற்பூர வாசனை எழுந்தால் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. அதனால் எழுந்த பழமொழி “கழுதுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்பது.

அரசமரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது இன்றும் சிலரது நம்பிக்கை. கணவனோடு சேராமல் அரச மரத்தை மற்றும் சுற்றினால்… என்ற கேள்வியோடு எழுந்ததுதான் “அரசை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாயில்ல இருக்கு?”

ஓரெழுத்துப் பிசகினாலும் பொருள் திரிந்துவிடுகிறது. சொற்குற்றம் பொருட்குற்றமாகிவிடுகிறது. பிழையின்றித் தமிழ் பேசுவோம்.

-    யுவபாரதி

December 23, 2011

சிலம்பு காட்டும் பெரியாறு


"   கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை 
   நாகம் திலகம் நறுங் காழ் ஆரம் 
   உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து 
   மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட
   நெடியோன் மார்பில் ஆரம் போன்று 
   பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை 
   இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப..."

   (காட்சிக் காதை : வரி18-23)

[மலைவளம் காணத் தம் வஞ்சி நகர் விட்டுப் புறப்படுகின்றனர் அரசன் சேரன் செங்குட்டுவனும், அரசி இளங்கோ வேண்மாளும்...]

" கோங்கு, வேங்கை, பூங்கொத்துகள் தொங்கும் கொன்றை, சுரபுன்னை, மஞ்சாடி, நறுமணம் கமழும் சந்தனம் ஆகிய மரங்கள் உதிர்க்கும் பூக்களால் நிரம்பிய தனது பெரும் நீர்ப்பரப்பினை மறைத்துக்கொண்டு, தேனீக்களும் வண்டினங்களும் கள்ளுண்டு இசைபாட, நெடிய திருமாலின் மார்பில் தவழும் மாலை போல, பெரிய மலையினிடையே குறுக்கிட்டுச் சென்றது பேரியாறு. அதன் கரையிலே, அது குவித்துச் சென்ற மணற் பரப்பிலே ஒன்றாய் இருந்தனர் (செங்குட்டுவனும், வேண்மாளும்)." 

சிலம்பின் வஞ்சிக் காண்டம் காட்டும் அழகிய காட்சி இது. இங்கு பேரியாறு என்று குறிப்பிடப்படுவது இன்றைய பெரியாறேயாகும். சேரமன்னர்களின் புகழ்பாடும் பதிற்றுப்பத்திலும் பேரியாறு குறிப்பிடப்படுகிறது (பாடல் 28 : வரி 10).

மதுரையை விட்டு நீங்கிய கண்ணகி சென்று ஏறும் இடமாகச் சிலம்பில் குறிப்பிடப்படும் நெடுவேள் குன்றம், தமிழகத்தை ஒட்டிய கேரளப் பகுதியில் நெடுங்குன்றம் என்ற பெயரில் இன்றும் உள்ளது.தமிழர்களே பெரும்பான்மையினராக வாழும் இடுக்கி மாவட்டப் பகுதி இது. மலைத்தொடர் கடந்து இந்தப் பக்கம் இறங்கினால் தேனி மாவட்டம் கோம்பைப் பகுதி. 

கண்ணகி கோவில்
செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோவில் தேனி மாவட்டம் வண்ணாத்திப் பாறை பக்கம் தமிழகப் பகுதியில் உள்ளது. பற்பல அளவீடுகள், ஆதாரங்களுக்குப் பின்னும் கேரள அரசு அதற்கு உரிமை கொண்டாடி வருவதுடன், ஒவ்வொரு சித்திராப் பௌர்னமிக்கும் அங்கு வழிபடச் செல்லும் தமிழர்களுக்குக் கேரள அரசு தரும் இடைஞ்சல் கொஞ்ச நஞ்சமில்லை.

தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான பிரச்சினை பெரியாறு மட்டுமில்லை.

- யுவபாரதி

December 19, 2011

தமிழ்த் தோழர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

நண்பர்களே!


கடந்த 1990-களில் கருநாடகத்தில் தமிழர்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தற்போது கேரளத்தில். இவ்வன்முறைகள் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட பெங்களூர் தண்டுப்பகுதியும் சரி, கேரளத்தின் தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வனப்பகுதியும் சரி. மாநில மறுசீரமைப்புக் கமிஷனால் வஞ்சிக்கப்பட்டு தமிழகம் இழந்த பகுதிகள். இவ்வரலாறே நமக்குத் தெரிவதில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.


1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க. காட்டிய முனைப்பு தமிழக எல்லைக் காப்புப் போராட்டங்களில் இல்லை என்பது முக்கியக் காரணம். தமிழரசுக் கழகம், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பிற அமைப்புகள் முன்னெடுத்த வடக்கெல்லை, தென்மேற்கு எல்லைப் போராட்டங்களில் அண்ணாவின் அனுமதியோடு / அவரவர் உணர்வால் அந்தந்த பகுதியின் தி.மு.க.வினர் சிலர் பங்கெடுத்தனர். அவ்வளவுதான். தி.மு.க.வின் தலைவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிற்காலத்தில் என்ன நேர்ந்தது?


பிற்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளே ஆட்சிக்கு வந்ததால், பிற அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்த வரலாறு நமக்குப் புகட்டப்படவேயில்லை. இப்போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் துறந்தோர் குறித்தும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.


வடக்கெல்லைப் போராட்டத்தில் (திருத்தணி) சிறையிலேயே உயிர் துறந்தவர்கள் இருவர். தெற்கெல்லைப் போராட்டத்தில் (குமரி) துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோர் 11 பேர். சிறைப் பட்டவர்களும், அடியுதைப் பட்டவர்களும் ஏராளம்.


தமிழ், தமிழகத்தின் உரிமை காக்கப் போராடியவர்கள் எந்த கட்சியினர் ஆயினும் சரி. அவர்கள் யாவரும் நம் முன்னோர். அவர்களது போராட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. அவ்வரலாற்றை நாம் அறியத் துணை செய்யும் பல நூல்கள் உள்ளன. முக்கியமான இரு நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.


1) புதிய தமிழகம் படைத்த வரலாறு 

    - ம.பொ.சிவஞானம்
    
    விலை ரூ.150/-

    பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர்,
    சென்னை-4. பேச: 24943074


2) தமிழன் இழந்த மண்

    - பழ.நெடுமாறன்

    விலை ரூ.60/-

    தமிழ்க்குலம் பதிப்பாலயம், 48, மேலமாசி வீதி, மதுரை-1.


விருப்பம் இருப்போர் வாசியுங்கள் !


 - யுவபாரதி 

December 16, 2011

பணிக்கர் என்றொரு நடுவர்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

சர்தார் கே.எம்.பணிக்கர்
தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.
ம.பொ.சி.
அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார்.

அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "

- யுவபாரதி

December 15, 2011

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...


மூணாறு
மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம். 

நடத்தியவர்கள் : 

(இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும், தானி ஓட்டுநர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை :

பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் : 

கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

(1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி. குரல்கொடுத்தார். ஆனால்,  'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர். 'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார். பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.) 

- யுவபாரதி 

December 14, 2011

நிதானமாய் எப்படி யோசிப்பது?

'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
          ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை...'

என்ற பழம் பாடல் ஒன்றின் வரி அடிக்கடி நினைவுக்கு வரும். எப்படி இருந்த மண் என்று வியப்பையும், இன்று எம் மக்களைத் திருப்பூருக்கு விரட்டியடிக்கிறதே என்று கரிப்பையும் ஒருங்கே தரும். திருப்பூரும் இப்போது பொய்த்துக் கொண்டே வருகிறது என்பது வேறு விஷயம்.

மதுரை நகர் கடந்து ஊருக்குப் போகும்போதெல்லாம் பாலத்துக்குக் கீழ் வறண்டேகிடக்கும் வைகை கண்ணில்படும்.வையை என்னும் பொய்யாக் குலக்கொடி? ) வெள்ளங் கெட்டு வாய்க்காலானாலும் சரி என்று பழக்க தோஷத்தில் அழகர் மட்டும் சித்திரைக்குச் சித்திரை தவறாமல் இறங்கிவருகிறார். இப்போது மழை பெய்திருக்கிறது. கொஞ்ச நாள் ஓடும், நீரும் வாழ்வும்.

எங்கள் உசிலம்பட்டிக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது வைகை அணை. என் பாட்டன், பாட்டியின் சாம்பல் கரைத்ததெல்லாம் அங்குதான். வைகையை மட்டும் வைகை அணை நம்பி இருந்தால் எங்கள் மக்களின் சிறு உழவும் அவ்வளவுதான்.

எம் குடும்பத்திற்கு காற்காணி நிலமும் இல்லைதான். என் பாட்டனார் ஒருஉணவகத்தில் சமையலராக வேலை பார்த்தவர். ஆனால், உழவை நம்பித்தானே எல்லாம் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை 
நான் பிறந்தது சின்னமனூரில். கம்பம், சின்னமனூர், (உத்தம)பாளையம் பகுதிகளில் முல்லைப் பெரியாற்றுப் பாசனம் இல்லையெனில் ஒன்றுமேயில்லை. வேறு பெரும் தொழில் வாய்ப்புகளும் இல்லை. தேனி மாவட்டத்திற்குக் குடிநீரும் பெரியாற்று நீர்தான்.

அதனால்தான் அரசியல் நடிப்புச் சுதேசிகளை நம்பாமல், குமுளி லோயர் கேம்பையும் கடந்து, ஒவ்வொரு நாளும், எல்லை நோக்கி எம் மக்களே சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள்.

எல்லை கடந்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுவீழ்த்தக் கேரளப் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆவேசம் வருகிறது.எனினும் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலையும் பற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் தேனி நண்பர்கள் சொல்லும்பொழுது பதற்றமாக இருக்கிறது. வழக்கம் போல் 'பரபரப்பு... பரபரப்பு...' என்று காட்டும் தொலைக்காட்சியைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.

நிதானமாய் எப்படி யோசிப்பது?

- யுவபாரதி