" கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங் காழ் ஆரம்
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப..."
(காட்சிக் காதை : வரி18-23)
[மலைவளம் காணத் தம் வஞ்சி நகர் விட்டுப் புறப்படுகின்றனர் அரசன் சேரன் செங்குட்டுவனும், அரசி இளங்கோ வேண்மாளும்...]
" கோங்கு, வேங்கை, பூங்கொத்துகள் தொங்கும் கொன்றை, சுரபுன்னை, மஞ்சாடி, நறுமணம் கமழும் சந்தனம் ஆகிய மரங்கள் உதிர்க்கும் பூக்களால் நிரம்பிய தனது பெரும் நீர்ப்பரப்பினை மறைத்துக்கொண்டு, தேனீக்களும் வண்டினங்களும் கள்ளுண்டு இசைபாட, நெடிய திருமாலின் மார்பில் தவழும் மாலை போல, பெரிய மலையினிடையே குறுக்கிட்டுச் சென்றது பேரியாறு. அதன் கரையிலே, அது குவித்துச் சென்ற மணற் பரப்பிலே ஒன்றாய் இருந்தனர் (செங்குட்டுவனும், வேண்மாளும்)."
சிலம்பின் வஞ்சிக் காண்டம் காட்டும் அழகிய காட்சி இது. இங்கு பேரியாறு என்று குறிப்பிடப்படுவது இன்றைய பெரியாறேயாகும். சேரமன்னர்களின் புகழ்பாடும் பதிற்றுப்பத்திலும் பேரியாறு குறிப்பிடப்படுகிறது (பாடல் 28 : வரி 10).
மதுரையை விட்டு நீங்கிய கண்ணகி சென்று ஏறும் இடமாகச் சிலம்பில் குறிப்பிடப்படும் நெடுவேள் குன்றம், தமிழகத்தை ஒட்டிய கேரளப் பகுதியில் நெடுங்குன்றம் என்ற பெயரில் இன்றும் உள்ளது.தமிழர்களே பெரும்பான்மையினராக வாழும் இடுக்கி மாவட்டப் பகுதி இது. மலைத்தொடர் கடந்து இந்தப் பக்கம் இறங்கினால் தேனி மாவட்டம் கோம்பைப் பகுதி.
கண்ணகி கோவில் |
செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோவில் தேனி மாவட்டம் வண்ணாத்திப் பாறை பக்கம் தமிழகப் பகுதியில் உள்ளது. பற்பல அளவீடுகள், ஆதாரங்களுக்குப் பின்னும் கேரள அரசு அதற்கு உரிமை கொண்டாடி வருவதுடன், ஒவ்வொரு சித்திராப் பௌர்னமிக்கும் அங்கு வழிபடச் செல்லும் தமிழர்களுக்குக் கேரள அரசு தரும் இடைஞ்சல் கொஞ்ச நஞ்சமில்லை.
தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான பிரச்சினை பெரியாறு மட்டுமில்லை.
- யுவபாரதி
No comments:
Post a Comment