பொதுவாகவே
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் உந்துதல் அதிகம் உள்ளவர்கள் என்பதாலேயே
வளர்ந்தவர்களை விடவும் விரைவாகத் தகவமைத்துக்
கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். இங்கு கற்றல் என்றது படித்ததை மனதின் ஏதோவொரு
இடத்தில் சேமிக்க மட்டும் முடிகிற நினைவாற்றலையல்ல, அறியும் முனைப்புடன் கூடிய திறனைக் குறிப்பிடுவது.
பெற்றோரிடமிருந்தும்
வளரும் சூழலிலிருந்தும் கையாளப்படுகிற விதத்திலிருந்துமே கற்றல் தொடங்குகிறது. பல்வேறு
தற்செயல் நிகழ்வுகளும், இடம் பொருள் இயக்கம் சார்ந்த கவனத்தை ஈர்க்கும் சிறிய அளவிலான
மாற்றங்களும் கூட குழந்தைகளின் அறிதிறனைத் தூண்டி வளர்க்கின்றன. மாறாக, அதே சூழல் மற்றும்
கையாளப்படுகிற விதத்திலான எதிர்மறைகள், அதிர்ச்சி நிகழ்வுகள், இடம் பொருள் இயக்கம்
சார்ந்த தீவிர மாற்றங்கள் ஆகியவை அவர்களின் அறிதிறனைக் குலைத்து முடக்குகின்றன.
தமது
முன்மாதிரி வடிவங்களைக் கண்டுணர்ந்து போலச் செய்யும் தொடக்கநிலை தன்னடையாளம் உருக்கொள்ளும்
பருவமாகிய மூன்று முதல் ஆறு வரையிலான வயதிலிருந்து வளரிளம் பருவம் நிறைவை எட்டும் வரைக்கும்
குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கழிக்கும் காலம் இது. இதனால் குழந்தையின் அறிதிறனும் அதன்வழியான
ஆளுமையாக்கமும் அமைப்பு என்ற வகையில் பள்ளிக்கூடத்தையும் தனிமனிதர்கள் என்ற வகையில்
ஆசிரியர்களையும் சார்ந்ததாகவே பெரும்பாலும் ஆகிவிடுகிறது. நவீனகால பொருள்தேடல் நோக்கிலான
நெருக்கடிகளால் இயங்கநேரும் பெற்றோர்களிடம் குழந்தைகளின் மனநிலை மற்றும் அறிதிறன் வளர்ச்சி
சார்ந்த கவனமின்மை இயல்பாகவே நேர்ந்துவிடுகிறது.
அண்மையில்
வாசித்த ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்ற நூல் மலேசியாவில் தம்மிடம் பயின்ற தொடக்கநிலை
மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுடனான ஆசிரியர் ஒருவரின் வகுப்பறை அனுபவங்களைப் பேசுகிறது.
நூலாசிரியர் ம.நவீன் சிறு சிறு கட்டுரைகள் வடிவிலேயே தமது அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.
படிப்பில்
கெட்டிக்காரர்கள் என நம்பப்படும் மாணவர்களை ஒரே அறையில் முதலிரு வரிசைகளிலும் படிப்பில்
சற்றே பின்தங்கியவர்கள் படிக்காதவர்கள் என நம்பப்படும் மாணவர்களை முறையே நடுவரிசை கடைசி வரிசை என அமரச்செய்வது நம் நாட்டுப் பள்ளிக்கூட முறையியல். மலேசியாவில்
ஒரே வகுப்பைச் சார்ந்த மாணவர்களில் படிப்பில் கெட்டிக்காரர்கள் என நம்பப்படுபவர்களுக்குத்
தனி அறை மற்றும் பின்தங்கியவர்களுக்கு மெதுநிலை மாணவர்கள் என்ற பெயரில் தனி அறை என்பது
நடைமுறையில் இருக்கிறது.
மாணவர்களின்
தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துகிற இயல்புடைய தாம் பிற ஆசிரியர்களால் நகையாடப்படுவதைக்
கொண்டு தம்மைப் பின்தங்கிய ஆசிரியன் என்றே சொல்லிக்கொண்டு தம் வகுப்பறை அனுபவங்களைச்
சொல்லிச் செல்கிறார் நவீன். கல்வித் துறையின் நெருக்கடியானது எப்படிப்பட்ட வழிமுறைகளினாலும்
சரி, தேறிவிட்டால் போதும் என்ற நெருக்கடிக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் தள்ளிவிடுவதையும்
இன்றைய தேர்வு முறையின் அவலத்தையும் ‘எப்படியாவது தேறிவிடு’ கட்டுரை குறிப்பிடுகிறது.
ஆசிரியரின்
தட்டிக் கொடுத்தல் என்பது மாணவரைப் பொருத்தவரையில் அங்கீகாரம். மெதுநிலை மாணவர்கள்
அந்தத் தீண்டலை ஓர் ஆசீர்வாதம் போல் உள்வாங்கினர் என்கிறது ‘தொடுதல்’ என்ற கட்டுரை.
படிப்பு என நம்பப்படுவதன் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளில் அடைப்பதால்,
மெதுநிலை மாணவர்களுக்கு இயல்பாக விளைந்துவிடும் தாழ்வு மனப்பாங்கைச் சுட்டிக்காட்டுகிறது.
மெதுநிலை மாணவர்களில் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகவும் ஏழ்மை நிலையிலிருந்து
வந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் ஆசிரியர்களிடம் தீண்டாமை நவீனமுறையில் செயலாற்றுகிறது
என்பதையும் சொல்கிறது.
மாணவர்களின்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு கூட அவர்களது தனித்திறனை செயலாற்றலை ஊக்குவிக்கக் கூடியது
விளையாட்டு. அதனாலேயே விளையாட்டு என்பதும் பாடத்திட்டத்தில் ஓர் அங்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
நம் நாட்டில் விளையாட்டு வகுப்பு என்றிருந்தது மலேசியாவில் புறப்பாட நடவடிக்கை என்ற
பேரில் இருக்கிறது. இங்கு பல பள்ளிகளைப் போலவே அங்கும் அந்தப் பாடவேளையும் நடைமுறையில்
பாடநூல் படிப்பதற்கானதாகவே ஆக்கப்பட்டிருப்பது பற்றி ‘உயரப் பறக்கும் பந்துகள்’ எனும்
கட்டுரை பேசுகிறது. செயல்முறைப் பயிற்சியற்ற கல்விக்கூடங்கள் மாணவர்களைக் கற்பனையற்ற,
சாகசங்களை அணுகாத இயந்திரங்களாக மட்டுமே உருவாக்கும் என்கிறது.
ஓவியம்
வரைவதன் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு மாணவி உயர்வகுப்பில் அதற்கான வாய்ப்பேயில்லை என்ற
நிலையில் பள்ளியிலிருந்து இடைநிற்கிறாள். அவளைத் தேடிச்சென்று விசாரிக்கும் ஆசிரியரிடம்
இதை வெகு இயல்பாகச் சொல்லி தன் வேலையைக் கவனிக்கிறாள் என்பதைத் ‘தூரிகை ஏந்தும் கரங்கள்’
என்ற கட்டுரை பதிவு செய்வதோடு, அங்கீகாரத்திற்கு இடமற்ற இடங்களைக் குழந்தைகள் மறுப்பதையும்
வருத்தத்தோடு குறிப்பிடுகிறது.
தன்னைப்
பெண்ணாக உணரும் ஆண்குழந்தை, டிஸ்லெக்சியா தாக்கமுள்ள குழந்தை, திக்கித் திக்கிப் பேசுகிற
குழந்தை முதலியவர்கள் மீது செலுத்த வேண்டிய கவனம், கொள்ளவேண்டிய புரிதல் குறித்த பிரக்ஞையின்றி
பள்ளி ஒதுக்குத் தள்ளும் விதம், குழந்தையின் மனநிலைப் பிறழ்வு சார்ந்த குறையை மறைப்பதோடு
மாற்றுவழி சொன்னாலும் ஆதங்கத்தோடு சண்டைக்கு வரும் பெற்றோர், தம் பிரிவினால் உறவினர்
வீட்டில் வளரும் பத்துவயதுப் பெண்குழந்தை உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்குத் தொடரந்து
ஆளாகி மனக்குழப்பத்துக்கு ஆளானதை ஆசிரியர் மூலம் அறிந்து துடிக்கும் பெற்றோர் என மாணவர்கள்
பற்றிய பல்வேறு சிக்கல்களை பேசுகிறார் நவீன்.
உன்னிப்பு
வழியும் மறைமுக வழியும் உட்காட்சி வழியும் கூட கற்றலுக்கான முறைகள்தான் என்பதை உணராத
பள்ளிகள், ஆசிரியரின் கடமையாக ஆகிவிட்டதும் மாணவர் மையம் கொள்ளாததுமான கல்வித்திட்டம்-பாடத்திட்டம்-தேர்வுமுறை,
பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு வேறெதையும் கற்க முனையாத பெரும்பாலான ஆசிரியர்கள்,
அணுக்கமற்ற சூழலில் சிக்குண்டு தவிக்கும் மாணவர்கள் என்ற அபாயச்சுழலை ஆதங்கத்தோடு பதிவு
செய்திருக்கிறது புலம் வெளியீடாக வந்திருக்கும் ம.நவீனின் ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’.
02/10/2016