May 01, 2020

துன்பமும் துணையாக நாடின்

'துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு'

படிக்கையில் திருக்குறள் என்றே தோன்றும் இவ்வரிகள் கலித்தொகையில் வருகின்றன. பாலைக் கலி.

'மரைஆ மரல் கவர மாரி வறப்ப
வரைஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்

தண்ணீர் பெறாஅத் தடுமாற் றுஅருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றால்
என்னீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்புஅறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு'

பாலை நிலத்தின் வறட்சியைக் காட்சிப்படுத்தும் இக்கலிப்பா பொருள் தேடிப் பிரியப் புறப்பட்ட தலைவனை நோக்கித் தலைவி கூறுவதாய் அமைந்துள்ளது.

"மழை பொய்த்துவிட்டது. புல்லின் நுனியைக் கூடக் காணாததால் காட்டுப் பசுவைக் கற்றாழை கூடக் கவர்கிறது. உயர்ந்த மலைகள் கொண்டதும் கடந்து செல்வதற்கு அரியதுமான பாலை நிலத்தின் வழியாகச் செல்பவர்கள், ஆறலை கள்வர் தமது முதுகில் கட்டிய சுரைக்குடுவையிலிருந்து எடுத்து எய்யும்  அம்புகளுக்குப் பலியாகிறார்கள்.

அக்கள்வரும் கூடத் தமது தொண்டைநீர் வற்றிப்போய், தாகத்தால் தவிக்கும் நாக்கை நனைக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.  அப்படி, கண்ணீர் மட்டுமே நனைக்கக் கூடிய கடுமை நிறைந்த பாலைவழி அது.

நான் இத்தனை எடுத்துச் சொல்லியும் ஏதும் அறியாதவர் போல, அவ்வழிச் செல்வதையே மீண்டும் சொல்வது என்பது பெருமை பெற்ற உமக்கு ஏற்றதல்ல. அன்பற்றவர் போல எனக்குத் துன்பம் செய்யாதீர்.

(மாறாக) அப்பாலை வழியே என்னையும் உடன் அழைத்துச் செல்க. துன்பமே வந்து சேர்ந்தாலும், நாம் இருவரும் சேர்ந்திருப்பது போன்ற இன்பம் வேறு உண்டா?"

No comments: